உன்னாலே-உன்னாலே

கொரிய நாட்டின் தேசியக் குறியீட்டுடன் (யின்-யான்) படம் ஆரம்பிப்பதால் மட்டும் இந்தப்படம் எனக்குப் பிடிக்கிறது என்றில்லை. மேலும் பல காரணங்களுண்டு. முதற் காரணம். படப்பிடிப்பு. என்ன இது? தமிழ் சினிமாதான் பார்க்கிறேனா இல்லை ஹாலிவுட் படம் பார்க்கிறேனா என்ற பிரம்மிப்பு. இந்த பிரம்மிப்பை கமல் தனது வேட்டையாடு விளையாடுவில் ஏற்படுத்தினார். ஆனால் அதில் சில சீன்கள் மட்டும். இதில் படம் முழுவதும். இதுவொன்னும் மெகா ஸ்டார்ஸ் நடிக்கும், கிகா படமில்லை. புது முகங்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம். இதுவே இப்படியென்றால், தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை மீண்டும் துளிர்க்கிறது.

அடுத்த காரணம், தமிழ் சினிமா இந்த கோரமான முகங்களைக் கொண்டு, கோரமான வன்முறை காட்டி, காட்டுக் கூச்சல் போட்டு, கொச்சை வசனம் பேசி, காமெடி என்ற பேரில் இந்துநேசன் வசனம் பேசும் காலக்கட்டத்தைத் தாண்டி விட்டது என்பதற்கு அச்சாரம் போல் இந்தப் படம் அமைந்துள்ளது. இளமை உண்மையிலேயே துள்ளுகிறது. சிக்கென்ற கதாநாயகிகள். சுமாரான கதாநாயகன். மோசமில்லை. ஆனாலும் அவனது சகாக்களாக பழைய 40 வயசு ஆட்கள்தான் மீண்டும். இது தமிழகத் தலைவிதி போலும். ஆனாலும், செந்தில், கவுண்டமணி முகங்களைப் பார்த்து புண்ணாகிப் போன கண்களுக்கு இந்தப்படம் விருந்தே!

கதை! அடடே! தமிழ் சினிமாவால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதா? படக்கதை சொல்லப் போவதில்லை. ஒருமுறை கட்டாயம் பாருங்கள். இரண்டாம் முறை கூடப் பார்க்கலாம்.

விமர்சனம் படித்த போதுதான் தெரிந்தது, எனக்குப் பிடித்த 12B பட இயக்குநர்தான் இதையும் இயக்கி இருக்கிறாரென்று. ஜீவா! உமக்கு ஜீவன் இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜீவனைக் காக்கும் ஜீவ சக்தியும் இருக்கிறது!

படப்பாடல்கள் சுமார்தான் (ஹரீஸ் ஜெயராஜ்). அசல் அசின் போல் கதாநாயகி. பேர் சாதாவாம் இல்லை, சதாவாம்! அந்தக் காலத்தில் ஸ்ரீதர் காஞ்சனாவை அறிமுகப்படுத்தினார். அது போல் ஜீவா, தனிஷா என்பவரை அறிமுகப்படுத்துகிறார் (மாற்றிச் சொல்லியிருந்தால் மன்னிக்கவும், யார் தனிஷா, யார் சதா என்று இன்னும் பிடிபடவில்லை). வினய் தேறுவார் என்று தோன்றவில்லை. இந்தப்படத்தில் குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஒரு காலத்தில், சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று பார்த்துவிட்டு இடையில் பல கலக்கல்கள் வந்து தமிழ் சினிமாவின் அழகியலை மாற்றிவிட்டன. மீண்டும் தமிழ் சினிமாவின் அழகியல் சரியான பாதையில் ஓடுவது போலுள்ளது. ஆனாலும் இந்த டப்பிங் வந்த பிறகு, எல்லாக் கதாநாயகிகளும் ஜோதிகா-சிம்ரன் பேசுவது போலவே உள்ளது :-)) இறைவா! இறைவா! இந்தத் தமிழை மட்டும் சினிமா உலகில் என்ன செய்வதாய் உத்தேசித்துள்ளாய்?

6 பின்னூட்டங்கள்:

தருமி 9/18/2007 12:51:00 AM

//ஜீவா! உமக்கு ஜீவன் இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜீவனைக் காக்கும் ஜீவ சக்தியும் இருக்கிறது!//

ஜீவாவின் அகால மரணம் பற்றி தெரியுமா?

ஆயிரத்தில் ஒருவன்... 9/18/2007 01:12:00 AM

சினிமா கம்பெனிகள்...ஒரு மெகா வெற்றிக்குப் பின்னர் இது மாதிரி ஒரு மிகச்சாதாரண படமொன்றை எடுப்பது தொன்றுதொட்டு நடப்பது. அன்னியன் வெற்றியின் லாபத்தை கணக்கு காட்டுவதற்காக ஒரு டப்பா படத்தை எடுத்து அந்த லாபமெல்லாம் இந்த படத்தில் போய்விட்டதாக நேர் செய்வர்.அந்த ரகத்தினை சேர்ந்ததே இப்படம்.

சந்திரமுகி வெற்றிக்குப் பின்னர் சிவாஜி பிலிம்ஸ் ஒரு ஹிந்தி படத்தை தயாரித்து பனால் ஆக்கியது எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

இந்த படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும் ஏன் அதை செய்யவில்லை என்பது எனக்கு புதிராக உள்ளது. ஆஸதிரேலியாவை விட பெங்களூருவை கதைக் களமாக வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க கூடிய படம்.

ரவிசங்கர் 9/18/2007 03:37:00 AM

இயக்குனர் ஜீவா இறந்து விட்டது தெரியுமா?

உன்னாலே உன்னாலே பாடல்கள் இந்த ஆண்டு வந்ததிலேயே சக்கைப் போடு போடும் பாடல்கள்..அதை சுமாருன்னு சொல்லிட்டீங்களே?

இந்த இடுகையில் நீங்கள் இணைத்துள்ள படத்தில் இருப்பவர் தான் தனிஷா..

டப்பிங் குரல் பத்தி நீங்க சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை..ஆண் நாயகர்கள் குரலுக்கு ஒரு தனித்துவம் இருப்பது போல் நடிகைகளுக்கு இல்லாமல் போனது வருத்தமே..தெலுங்கு படம் பார்த்தாலும் அதிலும் இதே குரல் போலத் தான் இருக்கு..

நா.கண்ணன் 9/18/2007 09:24:00 AM

தருமி சார்: ஷாக்கிங்! நீங்கள் சொன்ன பிறகுதான் சேதி படித்தேன். இருந்திருந்தால் தமிழ் சினிமா வளம் பெற்றிருக்கும்!

நா.கண்ணன் 9/18/2007 09:29:00 AM

//ஒரு மெகா வெற்றிக்குப் பின்னர் இது மாதிரி ஒரு மிகச்சாதாரண படமொன்றை எடுப்பது தொன்றுதொட்டு நடப்பது//

ஜீவா இதுவரை மூன்று படம்தானே எடுத்திருக்கிறார். இதில் எதை மெகா வெற்றி என்கிறீர்கள்?

//ஆஸதிரேலியாவை விட பெங்களூருவை கதைக் களமாக வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக //

இந்தியாவில் படமாக்கப்படும் படங்களையே நானும் விரும்புகிறேன். ஆயினும் இப்போதெல்லாம் வெளிநாடு போவது என்பது புழக்கடைக்குப் போவது போல் ஆகிவிட்ட நிலையில் இது இயல்பாகப் படுகிறது. இரண்டாவது, இந்தியாவில் எடுப்பதைவிட வெளிநாட்டில் எடுப்பது சிக்கனமாக இருக்கிறது என்கின்ற வகையில் இந்தியப் பொருளாதாரம் உள்ளது!

படத்தின் கதை சின்னதுதான், அதைக் கொஞ்சம் ரப்பர் போல இழுத்திருக்கிறார். சில காட்சிகளை வெட்டி ஒட்டி சுருக்கி இருக்கலாம்.

நா.கண்ணன் 9/18/2007 10:11:00 AM

ரவிசங்கர்: படப்பாடல்கள் சக்கை போடு போடுகின்றனவா? சரி, இன்னொருமுறை கேட்டுவிட்டுப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் தெலுங்கு/கன்னட நடிகைகள் சுத்தத்தமிழ் பேசி சக்கைப் போடு போட்டனர். உம். கண்ணாம்பாள், சாவித்ரி, சரோஜாதேவி இப்படி. முகத்திற்கும் குரலுக்கும் தொடர்பு இருந்தது. இப்போது, குரல் மட்டும் கேட்டால் அது சிம்ரனா? ஜோதிகாவா? தனிஷாவா, சதாவா? ஒண்ணும் புரியலை! ஆனாலும் சில விதிவிலக்குகள் உண்டு. ரம்யா கிருஷ்ணா. என்ன வித்தியாசமான குரல்? பஞ்ச தந்திரம் படத்தில்! சூப்பர்!!