யார் பிழை?

கொரிய இந்தியர்கள் எனும் மடலாடற்குழுவில் ஒரு தமிழர் கலைஞரைக் கன்னாபின்னாவென்று திட்டி எழுத, அதற்கெழுந்த எதிர்வினையில் கழக அரசியல் பேசப்பட்டு தமிழின் முதன்மைத்துவம் சந்திக்கு வந்தது. தமிழ் என்றால்தான் உடனே தோள் தட்டிக் கொண்டு வந்துவிடுவேனே (இது பதப்படுத்தலா? இயல்பா? ஏன் இந்தப் பதட்டம்?)! அப்போது பல விஷயங்கள் பிடிபட்டன.

1. வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு இந்தி தெரியவில்லை என்று சொல்லும் போது "உங்கள் தேசிய பாஷை" தெரியவில்லையா?" என வெளிநாட்டார் கேட்கும் போது வரும் அவமானம். (இந்தியாவின் சரித்திரம் தெரியாமல் இருப்பது இதற்கு உட்காரணம்!)

2. வெளிநாட்டில் ஒரு விசேஷம், வைபவம் என்றால் தமிழனைத் தவிர மற்ற எல்லோரும் கொஞ்சமாவது ஹிந்தியில் கதைக்கும் போது வரும் தாழ்வு மனப்பான்மை. குழந்தைகள் அம்மாவைக் கோபித்துக் கொள்வதுபோல் இளம் தமிழர்கள் தமிழக அரசியல்வாதிகளைக் கோபித்துக் கொள்கின்றனர்.

3. தமிழ் என்பது செம்மொழி என்று நாம் காட்டுக் கூச்சல் போட்டாலும் மற்ற இந்தியர்களுக்கு அது "வெறும்" இன்னொரு இந்திய மொழி. வேடிக்கை என்னவெனில் எவ்வளவு ஆதாரம் காட்டினாலும் அது அரசியல்வாதிகளின் கூலிக்கு மாறடித்த அறிஞர்கள் கண்ட முடிவு அதை நம்ப வேண்டிய அவசியமில்லை எனும் துணிபு.

4. சமிஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்பதில் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை.

5. தமிழ் எளிய மொழி, அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னாலும் தெலுங்கர்கள் கூட, "அட! அதை இப்போது கற்றுக் கொண்டு என்ன ஆகப்போகிறது?" அதற்குப் பதில் சமிஸ்கிருதம் கற்றுக் கொள்ளலாமே? எனும் முடிவு! தமிழின் அரிய வளம், சமிஸ்கிருதத்தின் வளத்தின் முன் கூலிக்காரன் நிலையிலேயே நிற்கும் அவலம்.

இவை என்னைக் கொஞ்சம் ஆட வைத்துவிட்டன.

1.தமிழ் மொழி பற்றிய சரியான புரிதல். அதன் தோற்றம், அதன் வளமை, அதன் முக்கியம் ஏன் இந்திய உபகண்டத்தில் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாகவே தெரியாமல் போய்விட்டது? உண்மையில் நாம் பீடுகொள்ளும் தமிழ் அரியதா? இல்லை நாமே உருவாக்கிக்கொண்ட பிரமையா?

2. சுதந்திர இந்தியாவில் தமிழின் கேடு கெட்ட நிலைக்கு யார் காரணம்? தமிழ் மொழி பற்றிய இந்திய சரித்திரம் ஏன் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் போதிக்கப்படவில்லை. தமிழின் பெயரில் நாம் வஞ்சிக்கப்பட்டுள்ளோமா?

3. தமிழ் மொழி சார்ந்த அரசியல் ஒரு காலக்கட்டத்தின் அவசியத் தேவை. ஆனால், அதுவே தமிழைப் பற்றிய அவதூறுக்கும் வித்திட்டுவிட்டதே. இனி எவ்வளவுதான் தமிழ் உயர்வு பற்றிப் பேசினாலும் அதில் அரசியல் பூச்சைக் காண்பதால் தமிழ் பற்றி இந்திய அரங்கில் பேசவே முடியாது உள்ளதே!

4. செம்மொழி என்றால் என்ன? என்பது பற்றிய தெளிவின்மை. இது தமிழர்களுக்கும்-இந்தியர்களுக்கும் பொது. ஒரு இந்தியர் எழுதுகிறார். இந்தியாவில் ஹிந்திதான் அதிகம் பேசப்படுகிறது (இந்தக் கணக்கு உண்மையா? இல்லை போஜ்புரி, குஜராத்தி என்று மானாவாரியாக ஹிந்தி போல் பேசப்படும் மொழிகள் அனைத்தும் சேர்த்து கணக்கிடுகிறார்களா?), அடுத்து பெங்காலி, அடுத்து தெலுங்கு, அடுத்து மராத்தி, பின் தமிழ் என்று இருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் செம்மொழி என்ற பட்டம்? இது "மைனாரிட்டி ரைட்" எனும் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறதோ? என்று. இதற்கு நான் பதில் சொல்லும் முன் இந்தத் தொடர் நிறைவுற்று என் கடிதம் வெளிவரவில்லை.

ஒட்டு மொத்தத்தில் இந்திய உபகண்டத்தில் தமிழ் பற்றிய புரிதல் மிகக் கேவலமாக உள்ளது. தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று சொல்லி நாங்கள் ஒரு தலைமுறை பாழாய் போனோம்!


Statement on the Status of Tamil as a Classical Language


The classical status of Tamil


Statement on the Status of Tamil as a Living Classical Language

3 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 9/20/2007 10:42:00 AM

யார் பிழை?
தெரியவில்லை. :-(

ரவிசங்கர் 9/21/2007 03:38:00 AM

நீங்கள் சொல்லி இருக்கும் முதல் ஐந்து விசயங்கள் உண்மை தான்.

1. இந்தத் தேவையற்ற அவமானம் இந்தி தெரியாத பிற தென்மாநிலத்தவருக்கும் வருவதுண்டு. இந்தியாவுக்கு தேசிய மொழி என்று எதுவுமில்லை என்ற அரசியல் சாசன உண்மை குறித்த விழிப்புணர்வு பரப்புவது தான் தீர்வு.

2. எனக்கு இந்தி அரைகுறையாகத் தெரிந்தாலும், இந்தியில் பேச வராது என்று ஒரு வித மிதப்பு, திமரோடு சொல்வது தான் என் வழக்கம். இதில் தாழ்வு மனப்பான்மை கொள்பவர்கள் பிற விசயங்களிலும் ஒப்பிட்டுத் தாழ்வு மனப்பான்மை கொள்ள ஏராளமான விசயங்களை வைத்திருப்பார்கள். பள்ளியில் தமிழ் சொல்லித் தரும்போதே தேசியத்துக்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை என்பதையும் இந்தி இன்னொரு மொழியே என்ற அளவிலும் உணர்வு ஊட்ட வேண்டும்.

3.4 - முன்முடிவுகளுடன் உள்ள முட்டாள்களுடன் உரையாடுவதை நான் தவிர்த்து விடுகிறேன்.

5. சும்மா, சமசுகிரதம் கற்கிறேன் என்று உதார் விடுவார்கள். ஆனால், கற்றுக் கொள்பவர்கள் குறைவு. இதை வேறு விதமாகவும் பார்க்கலாம். எத்தனை தமிழர்கள் தெலுங்கு கற்றுக் கொள்ள முன்வருவர்? பிற மொழி செம்மொழி என்பதற்காக யாரும் கற்றுக் கொள்ள முடியாது. தேவை இருந்தால் கற்றுக் கொள்வார்கள்.

அடுத்த எண்ண வரிசையில்,

1. அரசியல் வாதிகளால் நமக்கு ஊட்டப்பட்டிருக்கும் மேம்போக்கான தமிழுணர்வைக் காட்டிலும் பெருமிதம் கொள்ளத் தக்க அளவுக்குத் தமிழிடம் வளம் உண்டு. கற்கக் கற்க அதன் சுவை, ஆழம், வளம் புரிபடும். தமிழின் பெருமை இந்தியக் கண்டத்தில் பரவாமல் இருந்ததற்கு அந்தப் பகுதிகளில் இருந்த வடமொழி ஆதிக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.

2. //சுதந்திர இந்தியாவில் தமிழின் கேடு கெட்ட நிலைக்கு யார் காரணம்?//

அவர் காரணம், அந்தக் கழகம் காரணம் என்று கைக்காட்டுவதை விட இதற்குத் தீர்வாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைப்பது தான் ஆக்கப்பூர்வ அணுகுமுறையாக இருக்கும்.

//தமிழ் மொழி பற்றிய இந்திய சரித்திரம் ஏன் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் போதிக்கப்படவில்லை.//

தமிழ் மொழி பற்றிய இந்திய சரித்திரம்????

தமிழ் மொழி பற்றி எல்லா இந்தியர்களுக்கும் போதிக்கப்பட வேண்டும் என்று எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது.

மற்றபடி, தமிழின் தொன்மை குறித்து தமிழ்ப் பள்ளிகளில் போதுமான சொல்லித் தரப்படுவதாகவே நினைக்கிறேன்.

//தமிழின் பெயரில் நாம் வஞ்சிக்கப்பட்டுள்ளோமா?//

நான் அப்படி நினைக்கவில்லை.

//தமிழ் மொழி சார்ந்த அரசியல் ஒரு காலக்கட்டத்தின் அவசியத் தேவை. ஆனால், அதுவே தமிழைப் பற்றிய அவதூறுக்கும் வித்திட்டுவிட்டதே. இனி எவ்வளவுதான் தமிழ் உயர்வு பற்றிப் பேசினாலும் அதில் அரசியல் பூச்சைக் காண்பதால் தமிழ் பற்றி இந்திய அரங்கில் பேசவே முடியாது உள்ளதே!//

உங்கள் பதிவு முழுக்க இந்திய அரங்கில் தமிழுக்கு ஏற்பு வேண்டும் என்ற ஏக்கமே தெரிகிறது..இது தேவையற்றது என்றே தோன்றுகிறது? தமிழுக்கு ஏற்பு தர இந்தியா என்ற அமைப்பு தேவை இல்லை. மூளை உள்ளவர்கள் தானாக உணர்ந்து கொள்வார்கள். முன்முடிவுகள் உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்திய அரங்கில் தமிழுக்கு ஏற்பு பெறும் முன்னர், அதை நிகழ்காலத் தேவைக்கு ஏற்ப எப்படி வளர்த்து எடுப்பது என்று முயல்வோம். இந்தியா என்ன உலக அரங்கிலும் சத்தமில்லாமல் தமிழ் முரசு கொட்டும்.

செம்மொழித் தகுதி என்ன என்று நீங்கள் கொடுத்து இருக்கும் இணைப்புகளிலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்.

1. தொன்மை
2. இலக்கிய வளமை
3. வேறு எம்மொழிச் சார்பும் இன்மை

இம்மூன்றும் செம்மொழித் தகுதிக்கு முக்கியமானவையாகக் கருதலாம்.

மற்ற பல செம்மொழிகளைக் காட்டிலும் தொன்மையில் மட்டுமல்ல தொடர்ச்சியிலும் இருப்பது தமிழ் என்று தாராளமாக பெருமை கொள்ளலாம்.

நா.கண்ணன் 9/21/2007 01:51:00 PM

உங்கள் இருவருக்கும் நன்றி. இவ்விவாதம் சுவாரசியமான கோணங்களில் மின் தமிழ் மடலாடற்குழுவில் நடைபெறுகிறது. பங்களித்து பயன்பெறவும்.