பேசும் படம் - 05

இலக்கியம் எப்படி வாழும் சூழலைப் பிரதிபலிக்கிறதோ அதே போல்தான் சினிமாவும். இலக்கியத்தின் மொழி எழுத்து என்றால் திரைப்படத்தின் மொழி பேசும் படம்! எனவே திறமையான இயக்குநருக்கு நல்ல காட்சி அமைப்பின் மூலம் பல விஷயங்களைச் சொல்லிவிட முடியும். கொரியாவில் உட்கார்ந்து கொண்டு எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது போல் ரசித்துப் பார்க்க அதனால்தான் முடிகிறது. 50களில் வெளிவந்த பல படங்களில் பாம்பு பற்றிய தொன்மங்கள் உருக்கொள்கின்றன. பல படங்களில் சாமியும், தேவர்களும், மனிதர்களும் ஒரே அடுக்கில் வந்து போகின்றனர். ஒரு கனவுத் தன்மை. ஆனால் இது 60களை ஒட்டி மெல்ல மாறுகிறது (1952-ல் பராசக்தி என்பது இன்னும் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை). மெல்ல, மெல்ல நம் கதாநாயகர்கள் பாவடை போட்டுக்கொண்டு, கத்திச் சண்டை போடாமல் நடைமுறை சகஜ வாழ்விற்கு வருகின்றனர். தமிழ்நாட்டின் நீண்ட நெடிய தூக்கம் சுதந்திரத்திற்குப் பின் மெல்லக் கலைந்து பிரச்சனைகள் உறைக்க ஆரம்பிக்கின்றன. இந்த உணர்வை 60கள் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. சமகால சமூகக் கதைகள் திரைப்படக் கதைக்கரு ஆகிறது.

50களில் வந்த ஒரு படக்கதையில் என்.எஸ்.கிருஷ்ணன் 60 களில் இந்தியா எப்படி சுபீட்சமாக இருக்கும் என்று ஒரு காலப்பொறி கொண்டு போய்ப் பார்க்கிறார். அவர் கண்ட கனவில் 50%தான் இந்த நூற்றாண்டில் கூட நிறைவேறி இருக்கிறது என்பதைக் குமுதம்.காம் போய் பாருங்கள் (பதிவு செய்ய வேண்டியிருக்கும்)

பேசும் படம் 04

பராசக்தி 1952

கா! கா! சி.எஸ்.ஜெயராமனின் குரலுக்கு சிவாஜி வாயசைப்பு:மனோகரா 1954

சிவாஜி கணேசன், கண்ணாம்பா வசனம்!


மிஸ்ஸியம்மா 1955

ஜெமினி கணேசன், சாவித்திரி: வாராயோ வெண்ணிலாவே!


அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 (மாடர்ன் தியேட்டர்ஸ்)

எம்.ஜி.ஆர், பானுமதி: மாசிலா உண்மைக் காதலே!


மாயாபஜார் 1957

கல்யாண சமையல்சாதம்


நாடோடி மன்னன் 1958

எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில்


கல்யாணப்பரிசு 1959

ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி

துள்ளாத மனமும் துள்ளும்!

வீரபாண்டிய கட்டபொம்மன் 1959

வானம் பொழிகிறது! பூமி விளைகிறது!

பேசும் படம் - 03

50 தொடங்கி 60வரையிலான இந்த ஐந்தாம் பத்தில் (50s) வருடத்திற்கு குறைந்தது 15 படங்களென்று வந்திருக்கின்றன! தொழில்நுட்பம் சிறந்துள்ள இந்த நூற்றாண்டில் இந்த ஆக்கத்தை மீண்டும் தமிழ் சினிமா எட்டுமா? என்பது கேள்விக்குறியே! காரணமென்ன?

1. அப்போது சொல்ல நிறையக் கதை இருந்தது. இப்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, நினைத்தால் அருவாளை எடுடா! வெட்டுடா! தலையை என்று படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (இதில் remix வேறு). கதாநாயகன் வெட்டினால் கேள்வி கேட்பாரே இல்லை, தமிழ்நாட்டில் :-) ஆனால் அப்போது சொல்லப் புராணக் கதைகள் இருந்தன, நாட்டுப்புரப் பழமொழிகள், வழக்குகள் இருந்தன, சரித்திர புருஷர்களின் கதைகள் இருந்தன, போதாதற்கு குடும்பக்கதைகள் நிறைய இருந்தன. இப்போது சீரியல் போடுவதற்குக் கூட கதையில்லாமல் சவ்வாக இழுக்கிறார்கள்.

2. 50கள் இந்தியா சுதந்திரமடைந்து சில காலங்களே ஆகியிருந்த காலக்கட்டம். மக்களிடம் ஒரு தாகம், நேர்மை, சத்தியம் இவையெல்லாம் இருந்தன. எனவே சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை வெற்றிகரமாக எடுக்க முடிந்தது!
ஆனால் இன்று நாம் அத்தகைய சுத்த உணர்வுகளிலிருந்து தூர வந்துவிட்டோம். முதலாளித்துவம் விரித்திருக்கும் 'நுகர்வலையில்' மயங்கிக் கிடக்கிறோம். நுகர்வு என்பது அக்னி போன்றது. எரித்து சாம்பலாக்கிவிடும், பேதமையின்றி! அதில் விழுவது நமது மொழியாக இருக்கலாம், பண்பாடாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், சிறப்பு தனி விழுமியங்களாக இருக்கலாம்! எல்லாம் அவுட்!

3. அப்போது அதிக செலவில்லை. ஜெமினி வாசன் போல் ஒரு சிலரே பிரம்மாண்டமாக யோசித்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் போல் பட்ஜெட் படங்கள் நிறைய நல்ல தரத்தில் வந்திருக்கின்றன. ஆகும் அதிகச் செலவு கச்சா பிலிம்தான். அதற்குத்தான் டிமாண்டு அப்போது. அதுவும் கருப்பு வெள்ளைப் படங்கள்தான். நடிக, நடிகையரெல்லாம் 'காண்டிராக்ட்' போட்டு பல வருடங்கள் ஒரே படத்தில் நடித்தனர். அப்போது இன்னும் தமிழ் சினிமா இருமுனைப்படவில்லை (சிவாஜி-எம்.ஜி.ஆர்).

அப்படி வந்த நூற்றுக்கணக்கான படங்களை இங்கு பட்டியலிட்டால் இது வலைப்பதிவு எனும் குணம் தாண்டி, ஆராய்ச்சி வெளியீடு எனும் குணம் பெறும். வலைப்பதிவின் அழகே அதன் தனித்தன்மைதான். அவரவர் 'குட்டி உலகம்'. விக்கிபீடியாவில் எழுதுவதைவிட வலைப்பதிவு இன்னும் சுகம். நமக்குப் பிடித்ததைச் சொல்லலாம். கையைப் பிடிக்க ஆளில்லை (பொது மரியாதை கடைபிடித்தால்).

மேலும் இப்படங்கள் அப்போது என்மீது ஏற்படுத்திய தாக்கம் என்று புருடா விடமுடியாது, ஏனெனில் அப்போது நான் மழலை மாறாச் சிறுவன். ஆனால், இப்படங்கள் 60களிலும் ஓடிக்கொண்டிருந்தன. மேலும் எங்களூர் அரங்கு நகர் அரங்கு (டூரிங் டாக்கீஸ்)ஆனதால் புதிய படமெல்லாம் வெளியிட முடியாது. பழசைத்தான் வாங்கிப் போட வேண்டும். அது ஒருவகையில் எனக்கு நல்லதாகப் போய்விட்டது!

1953-ல் ஜெமினியின் ஒளையார் வருகிறது! பல நூறு யானைகள் ஒன்றாக வந்து கோட்டையை இடிக்கும் காட்சியை 'lord of the ring' போன்ற கிராபிக்ஸ் இல்லாமல் ஜெமினி வாசன் எடுத்திருப்பார். கே.பி.சுந்தராம்பாளை தமிழ் உலகிற்கு இனம் காட்டிய படம். அதன்பின் எப்படி வள்ளுவர் என்றால் 'சாலமன் பாப்பையாவோ' அதுபோல் ஒளையார் என்றால் கே.பி.எஸ் என்றாகிவிட்டது!

1954- மனோகரா. சிவாஜியின் அற்புதமான உரையாடல் வெளிப்பாடு. எம்.ஆர்.ராதாவை இனம் காட்டிய "ரத்தக் கண்ணீர்".

1955- கணவனே கண்கண்ட தெய்வம். ஜெமினி பல அற்புதமான படங்களை வழங்கியுள்ளார். சிவாஜியைவிட ஜெமினியே பரிசோதனை முயற்சிகள் பல செய்தவர். மிஸ்ஸியம்மா, இது 'நடிகையர் திலகம்' சாவித்திரியை இனம் காட்டிய படம். அந்தக் காலப் படங்களின் அழகு என்னவென்றால் நடிகைகள் கண்ணசைவில், உதட்டசைவில் பேசுவர். "பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?" என்பது ஒரு ரசனை. இப்போது எடுத்தவுடன் தொப்புளில் பம்பரமாட வந்துவிடுகிறார்கள். Sexual perversion என்பதைக் காண வேண்டுமெனில் தற்போதைய தமிழ் சினிமா, சீரியல் பார்த்தால் போதும்.

1956- அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது அரபீய சரக்கு. எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் அல்வா சப்ஜெக்ட். புகுந்து விளையாண்டு இருப்பார். எம்.ஜி.ஆர் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகலாம், பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்! மதுரை வீரன். இதில் எம்ஜிஆரை மாறுகால், மாறுகை வாங்கிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டமான தமிழ் சினிமா பிம்பம் உருவாகிவருகிற காலம். பின்னால் ஒரு படத்தில் அவர் செத்துப்போவதாகக் காட்ட, படம் படுத்துவிட்டது. இந்தப் படத்தில் கூட, தண்டனைக்குப் பிறகு அவர் இருதேவிகளுடன் தெய்வமாக மீண்டும் வந்துவிடுவார். "சுபம்" என்று கடைசியில் போடுவார்கள். அதனால் செத்துப் போனாலும், ஆவியாக வந்து சுபம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். இல்லையெனில் சிவன் வந்து உயிர் கொடுப்பார். இப்படி..

1957-ல் மாயாபஜார் வருகிறது. சூப்பர்படம்! பீமனின் மகனான கடோத்கஜனாக 'சாவித்திரி' ஆகா! அவங்க எல்லாம் செய்வாங்க!

1958-ல் காத்தவராயன். சிவாஜி-கண்ணாம்மா போட்டி போட்டு நடிக்கும் படம். கடைசி வசனம் சூப்பர். இதே வருடம் நாடோடி மன்னன். எம்.ஜி.ஆர் திரு உரு (icon) உருவாகிவிடுகிறது. சம்பூர்ண ராமாயணம். எப்படியும் தமிழனாகப் பிறந்த ஒருவன் கடைசி பட்சமாகவேணும் தெரிந்திருக்க வேண்டிய கதை, பார்க்க வேண்டிய படம் (கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ! இது திருவாய்மொழி). இப்போது பார்த்தாலும் கூட "ஏன் பிரிந்தீர், என்னை ஏன் பிரிந்தீரோ" என்று சிவாஜி கையை தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு பரதாழ்வானாக வருவது நெஞ்சை உருக்கிவிடுகிறது. விஷ்ணு என்றால் அது என்.டி.ஆர், பாவமென்றால் அது சிவாஜி. அதே வருடம் ஜெமினிக்கும் ஒரு வெற்றிப்படம் வருகிறது, அதுவே "வஞ்சிக்கோட்டை வாலிபன்". ஜெமினி மெல்ல, மெல்ல "காதல் மன்னனாக" மாறி, மாற்றுக் கதாநாயகனைத் தமிழ் சினிமாவிற்குத் தருகிறார்.

1959-சிவாஜி வருடம்! நிச்சயமாக. பாகப்பிரிவினை, வீரபாண்டியக் கட்டபொம்மன். தமிழ் உச்சரிப்பு என்றால் அது சிவாஜி என்று நிலையாக்கிய படம். பள்ளி நாட்கள் முழுவதும் எங்கு பார்த்தாலும் "ம்..நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ" வசனம்தான். எல்லோருக்கும் இது மனப்பாடமாகியிருந்தது. ஜெமினியின் திரை ஓவியம் "கல்யாணப்பரிசு". ஸ்ரீதர் என்ற மெல்லினத்தைக் இனம் காட்டிய படம். இதே வருடம் இன்னொரு முக்கிய சரித்திரப்படம் வருகிறது. அது சிவகங்கைச் சீமை! இந்த இரண்டு படங்களையும் தமிழனாய் உள்ளவன் பார்க்க வேண்டும்.

1960-க்குள் தமிழ் சினிமா காமெடி சப்ஜெக்டை நாசுக்காகக் கையாளத்தொடங்கி விட்டது. நல்ல உதாரணம் டணால் தங்கவேலு, ராமாச்சந்திரன் கலக்கும் "அடுத்த வீட்டுப் பெண்"

இரும்புத்திரை (படிப்பிற்கும் ஒரு கும்பிடு! பட்டத்திற்கும் ஒரு கும்பிடு! பாசா, பெயிலா போடும் இந்த வழக்கத்திற்கும் ஒரு கும்பிடு). படிக்காத மேதை. பாவை விளக்கு. சிவாஜிக்கு வெற்றி மேல் வெற்றி. அகிலனின் நாவலை படமாக்கி தேசிய விருதும் இப்படம் பெறுகிறது.மாடர்ன் தியேட்டர்ஸ் "கைதி கண்ணாயிரம்" என்றொரு படமெடுத்து "alternative cinema" ஒன்றை இனம் காட்டுகிறது. எப்போதும் புது முகங்கள். விரு, விருப்பான கதை, காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகள், ஹிட் பாடல்கள் இப்படியொரு ஆச்சர்யமான பார்முலா. I really miss Modern Theaters. மனோகர் என்ற நாடகக் கலைஞனை தமிழ்நாட்டிற்கு இனம் காட்டிய படம்.

பேசும்படம்-02

ஒரு வகையில் பார்த்தால் 60-70கள் தமிழ் உணர்ச்சியின் பொற்காலம் எனலாம். இதைத் திரையுலகம் நன்கு பயன்படுத்திக் கொண்டது அல்லது திரையை தமிழர்கள் இந்த உணர்விற்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். 60 களில் வெளி வந்து தாக்கத்தை ஏற்படுத்திய படங்களென்று சிலவற்றை விக்கி சொல்கிறது. அந்த அட்டவணைக்குள் போவதற்குள் சில எண்ணங்கள்.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் பார்க்கக்கூடியவையே. அவர் பாவடை கட்டி நடித்த காலத்திலிருந்து :-) ஏனெனில், அவர் படங்கள் இதமானவை. ஒரே பார்முலா. எந்த மாற்றமும் கிடையாது. ஹீரோ நல்லவர். பரோபகாரி பழனி (அம்புலிமாமா!).வீரம் மிக்கவர். சங்க வாழ்வை பிரதிபலிப்பவர். காதல், வீரம் இவை ரெண்டுதான் அவர் படங்களின் அடிக்கோடு.

சிவாஜி மிக, மிக வித்தியாசமான படங்களைத் தந்தவர். அவரது முழுத்திறமையையும் தமிழ் சினிமா கொண்டு வந்ததா? என்பது இன்னும் ஒரு கேள்விக்குறிதான். கமலே ஆச்சர்யப்படும்படி, அவர் டான்ஸ் செய்திருக்கிறார் (யாரடி நீ மோகினி); என் தம்பி என்ற படத்தில் எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் கத்திச் சண்டை செய்திருக்கிறார். அவர் ஒரு பூரணக் கலைஞர். அவருக்கு இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டால் செய்து விடுவார். முதல் படமான பராசக்தியில் மார்கழிக் குரலோன் சி.எஸ்.ஜெயராமன் பின்னணி பாட வாயசைப்பார் பாருங்கள். அது நடிப்பு.

ஆனால் சிவாஜி படத்தை ரசிக்க ஒரு அனுபவ முதிர்ச்சி வேண்டும். 60 களில் சுத்தமாக அது எனக்குக் கிடையாது. பள்ளிச் சிறார்களுக்கு பிடித்தவர் எம்.ஜி.ஆர். எனக்கும்தான்.

50 களில் வெளிவந்த படங்களும் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. உம்.பாகப்பிரிவினை, அந்த நாள் போன்றவை. பாட்டிற்காக படங்கள் எடுத்தார்கள் என்றால், பாட்டே இல்லாமல் படம் எடுத்தார்கள் 'அந்த நாளில்'. அதை மீண்டும் பார்க்க வேண்டுமென ஆசை. நிச்சயம் இப்போது பிடிக்கும். பாகப்பிரிவினையில் சிவாஜி, சரோஜாதேவி, ராதா என்று போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். எம்.ஆர்.ராதாவை ரசிக்கவும் முதிர்ச்சி வேண்டும். அது அப்போது இல்லாததால் அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது! இரும்புத்திரை என்றொரு படம். அதில் வரும் பாடல் என் நெஞ்சை விட்டு என்றுமே அகன்றதில்லை. அதுதான் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு, நானிருக்கும் நிலமை என்னவென்று புரியுமா?" என்ற பாடல். இந்தப் பாடலுக்காகவேணும் இப்படத்தை மீண்டும் காண வேண்டும். இருப்புத்திரை கதாநாயகி வைஜயந்திமாலா. இவரை எனக்குப் பிடிக்கும். காரணம் பள்ளிப் பருவத்தில் என்னைக் காதலித்த (?) லதா வைஜயந்திமாலா போலவே இருப்பாள். சினிமாவின் தாக்கத்தால் காதல் உணர்வு இளமையிலேயே வந்து விட்டதா? இல்லை, இருக்கின்ற உணர்வுகளைத்தான் திரை காட்டுகிறதா? என்பது குஞ்சு முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போன்றதோர் கேள்வி. திரை இல்லாமலும் காதல் மலர்ந்திருக்கும். ஆனால், திரை அதற்கு மிகவும் உதவியாக இருந்தது. சினிமாப் பாடல்கள் மூலம் கவி அல்லாதவன் கூட தன் உணர்வினைச் சொல்ல முடிந்தது! ஆனால், அந்தக் காலத்தில் வீட்டில் சினிமாப் பாடலெல்லாம் பாட முடியாது. எப்போதாவது அக்கா, அப்படியே போய் வரும் போது முணு, முணுப்பாள். அதுவே சுகந்தமாக இருக்கும்.

50 வரைத் தமிழ்க் குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தன. எங்கள் குடும்பமும் அப்படியே. இப்படி ஒற்றுமையாக வாழும் குடும்பங்களில் பிரிவினை வருவது கொடுமையானது. இதைக் காட்டும் படம் பாகப்பிரிவினை. எனவே 50-ல் வெற்றி கண்ட பாகப்பிரிவினையும், அந்தநாளும் சிபாரிசு செய்யத் தக்கவையே! முதல் படம், ஒரு காலக் கண்ணாடி என்ற அளவில். அந்த நாள் தமிழில் பாடல் இல்லாமல் வந்த ஒரே படம் என்ற காரணத்திற்காக. இப்போது, எல்லோரும் ஏன் தமிழ் நாயகனும், நாயகியும் ஒரு கோஷ்டியுடன் பாடல் பாடிக்கொண்டு காதல் செய்கின்றனர் எனக் கேட்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கு காட்டவாவது, ஒரே ஒரு படமாவது தமிழில் வந்திருக்கிறதே! வாழ்க!

பேசும் படம் - 01

சினிமா என்பதற்கு மிகவும் அழகான தமிழ்ச்சொல் பேசும்படம். நான் பேசும் படம் காலத்தில் பிறந்தவன். அதற்கு முன் பேசாப்படங்கள் ஓடியிருக்கின்றன. பின்னால் சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அறிந்து கொண்டேன். எங்களூரில் எவரெஸ்ட் டூரிங் டாக்கீஸ் என்று ஒரு பேசும் படம் அரங்கமுண்டு. அது தென்னங்கூரைத் தியேட்டர். ஏனெனில் சட்டத்தின் படி அது 'நடமாடும் திரையரங்கம்'. அங்கு மதியக் காட்சியெல்லாம் கூடாது. ஆனாலும் எம்.ஜி.ஆர் படங்கள் பிரபலமான அக்காலக்கட்டத்தில் தீபாவளி, பொங்கலென்றால் மேட்னி ஷோ உண்டு. கேபினிலிருந்து சினிமா ஒளிக்கீற்று, தென்னைக்கூரையிலிருந்து சூரிய ஒளி என்று ஒரே நேரத்தில் பல காட்சிகள் ஓடும். எம்.ஜி.ஆர் ரசிகர்களான 'விசிலடிச்சான் குஞ்சுகள்' விடும் புகைச் சுருள் சூரிய ஒளியில் வளைந்து, வளைந்து ஓடும் காட்சி அழகாகவே இருக்கும். இப்போதுள்ள சுகாதார விழிப்புணர்வில் அம்மாதிரி இடங்களுக்கு காசு கொடுத்துக் கூப்பிட்டாலும் போக மாட்டேன். ஆனால் அப்போது சினிமா என்ற மாயாவியின் பிடிக்குள் இருந்தோம். இப்போதும் விடுபட்டோம் என்று சொல்வதற்கில்லை.

நான் வளர்ந்த காலம் பாகவதர், கிட்டப்பா போன்ற சங்கீத சாம்ராட்டுகள் போக்கொழிந்த காலம். பாடலெக்கென்றே படங்கள் ஓடியிருக்கின்றன அப்போதெல்லாம். டி.எம்.எஸ், சுசீலா என்று கொடிகட்டிப் பறந்த காலம். தெலுங்கர்களாக இருந்தாலும் தெளிவாகத் தமிழ்ப் பேசிய நடிகைகளான சாவித்திரி, கண்ணாம்பா, சரோஜாதேவி (கன்னடா), மற்றும் நாகேஸ்வரராவ், ரங்காராவ், பாலய்யா (மலையாளம்?)போன்றோர் நடித்த காலம். அப்போது தமிழ் மொழி மீது எல்லோருக்கும் ஒரு பற்று இருந்தது. 'டணால்' தங்கவேலு, சந்திரபாபு (தெலுங்கு), பின்னால் நாகேஷ் (தெலுங்கு) என்று 'கலக்கிய காலம்'. நகைச்சுவையில் ஒரு நிதானம் இருக்கும். கொச்சைத்தனம் இருக்காது. சினிமாவும் தமிழ் விழுமியங்கள் மீது மரியாதை வைத்திருந்த காலம். தமிழ் வசனங்களுக்காகவே பிரபலமான ஒரு கதாநாயகன் உருவான காலம். நாட்டியமென்றால் அது பரதம் என்று இருந்தது. பரதத்தின் உருப்படிகளை மேலாக தொட்டுச் சென்றாலும் அதைக் காட்டவேண்டுமென்ற ஒரு முனைப்பு இருந்தது. இல்லையெனில் சினிமா நடிகையுடன் இசைக்க மாட்டேன் என்று சொன்னாலும் விடாப்பிடியாக உட்காரவைத்து காரக்குறிச்சியை (சரிதானே?) நாதஸ்வரம் இசைக்க வைத்திருக்காது அன்றைய சினிமா. (வளரும்)

பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!


வரும் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்யும் சினிமா என்று எழுதுமாறு சாம்பார்வடை கேட்டுக் கொள்ளார். இவர் என்னைத் தெரிவு செய்ததற்குக் காரணம் எனக்கு சினிமா பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் எனது தலைமுறைதான் சினிமாவை தமிழ் வாழ்வின் முக்கிய குறியீடாக எந்த மறுதலிப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டது. பள்ளிப் பருவத்தில் பார்பர் ஷாப்பிற்குப் போனால் சினிமா, பள்ளிக்குப் போகும் வழியில் எம்.ஜி.ஆர்/சிவாஜி ரசிகர் மன்றங்கள், பள்ளி மாணவர்களும் சினிமா பற்றியே நிறையப் பேசுவர். அப்போதுதான் சினிமா எனும் ஊடகம் ஒரு அரசியல் தன்மை பெறுகிறது. முதன் முறையாக இந்திய சரித்திரத்தில் கொள்கை என்று ஏதுமில்லாமல் வெறும் ஊடகம் காட்டும் பிம்பத்தை நம்பி தமிழகம் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது. சினிமா அரசியல் பிரச்சார ஊடகமாகிப் போனது 60 களிலிருந்துதான்.

இப்போது சினிமா என்பது முற்றும் முழுக்க தமிழன் வாழ்வை ஆக்கிரமித்து விட்டது. சினிமா இல்லாமல் இனிமேல் தமிழனால் வாழ முடியாது எனும் நிலை. தமிழனின் உச்ச கட்ட கலை வெளிப்பாடாக சினிமா மாறிப்போனது. காரணம் சினிமா பொது ஊடகம். யார்
வேண்டுமானாலும் பார்க்கலாம். சினிமாப் பார்க்க ஆகும் செலவு குறைவு. இது இவ்வளவு பிரபலமடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சினிமா நடிகர்ளை கூத்தாடி, வேசிகள் என்றெல்லாம் சொல்லி ஓரங்கட்டப் பார்த்து கடைசியில் உயர்குலப் பெண்கள்/ஆண்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இந்தத் தொழிலில் இணைய வேண்டிய கட்டாயம். கர்நாடக சங்கீதம் கூட இப்போது சினிமா பாணிக்கு மாறிக்கொண்டு வருகிறது. நாடகம், கூத்து என்பதையும் சினிமா கபளீகரம் பண்ணிவிட்டது. இதன் தொழில்திறன் செல்லும் போக்கில் தமிழே தெரியாமல் தமிழ் படங்களில் நடிக்கலாம் எனும் அளவிற்கு வந்துவிட்டது.


சினிமா வெறும் பணத்தை நம்பும் தொழில். காசு பண்ணுவதற்காக எந்தவிதமான சமரசமும் அது செய்து கொள்ளும். அங்கு தமிழ் விழுமியங்களுக்கு இடமில்லை. ஆனால் தமிழ்க் கலாச்சாரத்தைக் காட்டுவது போல் அது ஏமாற்றும். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்தினம் இவர்கள் வந்த பிறகு ஒருவகையான இந்தியப் பொதுத்தன்மை சினிமாவிற்கு வந்துவிட்டது. இந்தியப் பிரச்சனைகள் கதைக்கரு ஆகின்றன. திரை இசை என்பது ஒரு Pan Indian Flavour கொண்டு இயங்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசையை எந்த ஒரு பிரதேச இசை என்றும் சொல்லமுடியாது. கர்நாடக மெட்டில் ஆரம்பித்து ஹிந்துஸ்தானியில் முடியும். இடை, இடையே ராஜஸ்தான், குஜராத்தி மெட்டுகள் பாட்டில் நிரவி இருக்கும்! எனவே அவரது Pan Indian மெட்டை வைத்துக் கொண்டு இந்தி இசை அமைக்கலாம் அல்லது தமிழ்/தெலுங்கு இசை அமைக்கலாம். நான் இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் பேசப்போவதில்லை. நிதர்சனத்தைப் பேசிச் செல்கிறேன்.

இந்தப் பின்னணியில், வரும் சந்ததியினர் பார்க்க வேண்டிய படங்கள் என்று எந்த அளவுகோலை வைத்துச் சிபாரிசு செய்வது?

கலை வடிவம் என்று பார்த்தால் முன்பு போல் பரத நாட்டியத்தைத் தூக்கிப்பிடிக்கும் பழக்கம் போய்விட்டது. சம்பிரதாயம் என்ற சொல்லே சினிமா உலகில் வழக்கொழிந்து போய்விட்டது. மைக்கேல் ஜாக்சன் பிரபலப்படுத்திய கருப்புக் கலாச்சார நடனம், அமெரிக்கா உருவாக்கிய ராப் இவையெல்லாம் தமிழ்க் கலையுடன் ஒன்றிவிட்டன. தமிழ் நடனம் என்று சொல்ல ஏதுமில்லை.

தமிழ் மொழி என்ற அளவுகோலை எடுக்கவே கூடாது. ஏனெனில் சினிமாவின் முதல் பலி மொழிதான். சினிமாவும், சின்னத்திரையும் தமிழ் மொழிச் சுத்தம் பற்றி கண்டு கொள்வதில்லை. எல்லா நடிகைகளுக்கும் இரண்டு பேர்தான் மாற்றி, மாற்றி பின்குரல் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கு தமிழ் தெரிவதில்லை. தமிழ் பேசக்கூடிய நடிக, நடிகைகளும் ஒரு சொதப்பல் மொழியில் பேசுகின்றனர். அதுதான் ஸ்டைல்.

இந்த வயதினர்தான் பார்க்க வேண்டும் எனும் அளவுகோல் சினிமாவிற்குக் கிடையாது. அதுவொரு கலவை (மசாலா). எனவே எல்லோரும் எல்லாப்படத்திற்கும் போகலாம். முன்பெல்லாம் "ஏ" சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். இப்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டனர். ஏனெனில் எல்லாப்படத்திலும் ஏதாவதொரு காட்சி வரம்பு மீறுகிறது. பாட்டுக்கள் எல்லாம் semi-porno வகையைச் சார்ந்தவை. காமெடி வசனம் என்ற பேரில் எவ்வளவு கொச்சையாகப் பேசமுடியுமோ அவ்வளவு கொச்சைத்தனம் வந்துவிட்டது.

இப்படியெல்லாம் எவ்வளவுதான் சொன்னாலும் எல்லோரும் சினிமாவிற்கு போய்க்கொண்டுதான் இருக்கிறோம். ஏன்?

அ. செலவழிக்க நேரம் இருக்கிறது. வருகின்ற காலங்களில் இது இன்னும் கூடும் என்பதொரு கணிப்பு.

ஆ. சினிமாவின் கவர்ச்சி எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. நாலு பேர் இருக்கும் போது "சீ!சீ" என்று சொன்னாலும் உள்ளுக்குள் அது எல்லோரையும் ஈர்க்கிறது. எல்லோருடைய ஈரக்கனவுகளுக்கும் அது தீனி போடுகிறது.

இ. எல்லாப் படங்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏனெனில் தொழில் நுணுக்கம் தெரிந்த சிலர் மடை மாற்றம் செய்ய அவ்வப்போது முயன்று கொண்டேதான் இருக்கின்றனர். எனவே "நல்ல" படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் எவை "நல்ல" படம் என்று யார் சொல்வது? சினிமா ஒரு பொதுஜன ஊடகம். அதில் ஆயிரம் வேறுபட்ட ருசி உடையவர்கள் இருப்பார்கள். நான் கொச்சை என்பது பலருக்கு 'அல்வா' சாப்பிடுவது போலிருக்கலாம். சினிமா ஒன்றுதான் நட்டுக் குத்தாக தமிழ் சமூக அடுக்குகளை தகர்த்திருக்கிறது. அதன் பரிணானம் கண்காணிக்கத் தக்கது. தமிழ்நாடு போன்ற இறுகிய சமூக அடுக்குகள் கொண்ட நாட்டில் சினிமா எல்லா சமூக ருசிகளுக்கும் தீனி போடுகிறது. எல்லா சமூகங்களும் தன் ஆளுமையை இவ்வூடகத்தில் செலுத்துகின்றன. அதே போல் எல்லா சமூகங்களையும் சினிமா பாதிக்கிறது.

என்னென்ன படங்களைச் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? சரி, யாராவது சும்மா ஒரு லிஸ்டு போடுங்கள். அதிலிருந்து நான் எனக்குப் பிடிச்சதைச் சொல்கிறேன்.

இந்திய எஞ்சினியர்களே! கொரியாவில் தங்குங்கள்!

சனிக்கிழமை இரவு உல்சான் எனும் நகரத்திற்கு தீபாவளி விழாக் காண நண்பர் அனந்தகிருஷ்ணன் அழைத்துச் சென்றார் (போகவர 8 மணி நேரக் கார்ப் பயணம்). உல்சான் நகர் கொரியாவில் பிரபலமாக இருப்பதற்குக் காரணம் அங்குள்ள ஹூந்தே (현대 - Hundai) கார் தொழிற்சாலையும், உலகின் ஆகப்ப்பெரிய (நம்பர் ஒன்)கப்பல் கட்டும் தொழிற்சாலையும்தான். உல்சான் வளைகுடாவை அப்படியே ஹுந்தே நிறுவனம் வளைத்துப் போட்டுவிட்டது. சுமார் 5000 கார்களை அள்ளிச் செல்லும் பெரிய கப்பலை இவர்களே செய்து கொள்கிறார்கள். இங்கு வேலை பார்க்கும் இந்திய எஞ்சினியர்களுக்கு தீபாவளி வாழ்த்துச் சொல்ல, Oh Suk Koh, Chief Executive of U S Division and President of U S Division வந்திருந்தார்.

தீபாவளி வாழ்த்துக்களுடன், "இந்திய எஞ்சினீயர்கள் கொரியாவிலே தங்கி விட வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். கொரியாவிற்கும், இந்தியாவிற்குமுள்ள கலாச்சாரத்தொடர்பு என்பது தொன்மையானது; வேற்றுமைகள் இருப்பினும் ஒற்றுமை கண்டு, மகிழ்ந்து இங்கேயே தங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

கொரியா இந்திய தொழில் வல்லுநர்களுக்கு புதிய அமீரகமாக (வளைகுடா) மாறி வருவதை இங்கு சாரி, சாரியாக வந்து சேரும் இந்தியர்களைக் கண்டால் புரிந்து கொள்ளலாம். இங்குள்ள இந்தியர்கள் இரண்டு யாகூ மடலாடற்குழுக்கள் நடத்துகின்றனர். இங்குள்ள தமிழர்களை தமிழ்ப்பணிக்கு இழுக்க நானும் ஒரு மடலாடற்குழைவை ஜனவரி 8, 2004 தொடங்கி நடத்தி வருகிறேன். பொதுவாக இது மாதிரி சமூகத் தொண்டு செய்யும் குழுக்களில் அதிக அலசல்கள் இருப்பதில்லை. இருப்பினும் இக்குழுவிற்கு மீண்டும் உயிர் தரவேண்டும். இவர்களுடன் பேசிய போது நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடிகிறது!

ஆங்கிலம் பேசுங்கள்! தவறில்லாமல்....

ஆங்கிலம் என்பது மற்ற மொழிகள் போல் அழகானது, வளமானது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அதுவொரு உலக மொழி எனும் நிலையை அடைந்துள்ளது. இதனால் ஆங்கிலம் அறிந்த இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. ஆனால் ஆங்கிலக் கல்வி என்பது இந்தியாவில் இன்னும் சீராக முறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆங்கிலம் தெரியும் என்ற தைர்யத்தில் வெளிநாடு வரும் பலர் சில ஆண்டுகளில் ததிகினதோம் ஆடுகின்றனர். அதுவும் சமகாலத் தமிழர்களுக்கு சீரானத் தமிழ் அறிவும் இல்லை, ஆங்கில அறிவுமில்லை. சமீபத்தில் என் ஆய்வகத்திற்கு பயிற்சிக்காக வந்திருந்த ஒருவர் பேசிய தமிழ் வருத்தமளித்தது. ஒரு உதட்டள்ளவு தமிழ், உதட்டளவு ஆங்கிலம் என்று இருக்கிறது. 'பில்லையார் எனக்குப் பிடிக்கும்' 'தமில் வரும், ஆனா..' என்பது போல். கேட்டால் தமிழ்ப் பற்று அதிகம் உண்டு என்கிறார். பற்று வைத்து என்ன பயன்? பயில வேண்டாமா?

நம் தமிழருக்கு ஒரே ஒரு வார்த்தை:

தமிழ்ப் பேச வேண்டுமென்று விரும்பினால் தமிழில் பேசுங்கள். அது கேவலமில்லை. தமிழும் ஆங்கிலம் போல் ஒரு மொழிதான்.

ஆங்கிலம் பேச வேண்டுமெனில், தெளிவாக ஆங்கிலம் பேசுங்கள். தமிழைக் கலக்காதீர்கள். ஒரு கலவை மொழியால் யாருக்கும் பிரயோசனமில்லை என்பது மட்டுமல்ல, உங்கள் எண்ணத்தைச் சீராக எந்தவொரு மொழியிலும் சொல்லத் தெரியாமல் போய்விடும். ஒரு நாகரீகத்திற்காக இப்படியொரு கலவை மொழியில் பேசப் போக, அதுவே பழக்கமாகிவிடும். நமது தொலைக்காட்சிப் பேட்டிகளில் 99% இப்படிக் கலவை மொழியிலேயே நடைபெறுகிறது. இது எவ்வளவு பெரிய நஷ்டம் என்பது நம்மவர் வெளிநாடு வரும் போது தெரிகிறது. இந்தியாவிலேயே இம்மொழிகளைத் தனித்தனியாகப் பேசி பயிற்சி பெறுங்கள்.

இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர்.

அலையெனப் புரளும் பாவம்!தீபாவளிச் சாப்பாடு, பட்டாசு என்பது மட்டுமல்ல. தீபாவளி நிகழ்ச்சிகள் என்றொன்றுண்டு! நம்ம ஊரில் எப்படியோ? வெளியூரில் இதுதான் தீபாவளியே. சமீபத்தில் எங்க ஊரிலும் இப்படியொரு தீபாவளி பார்ட்டி இருந்தது. அது போது எடுத்த வீடியோ இது. இதில் என்ன அழகு என்றால், அந்தப் பெரிய பெண்தான் முழுக்கக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறாள். இந்த மிச்ச வாண்டூஸ் அப்படியே மேடையிலேறி அந்தப் பெண் செய்வதை அவ்வப்போது பார்த்து நடிப்பது! ஒரே வேடிக்கை போங்கள்! பின்னாலிருக்கும் சிறுவனைப் பாருங்கள். அது பாட்டுக்கு இடுப்பை, இடுப்பை ஆட்டிக் கொண்டு...குழந்தை என்றாலே எல்லாமே அழகுதான். ஆனால் பாவம் சொல்லிக் கொடுத்த பெரியம்மா படற பாடு! அதுதான் பரிதாபம்!!

மணிக்கொடியின் கடைசி ஓசை!

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் எனும் அவதார தோற்றம் இந்தத் திங்கள் (29.10.2007) அன்று முடிவடைந்திருக்கிறது. என்ன இருந்தாலும் இது கொஞ்சம் "டூ மச்" அப்படின்னு சொல்லறீங்களா? அப்படி இல்லை. அவரது கருத்துப்படி நாம் எல்லோருமே ஒவ்வொரு அவதாரங்கள். வானில் மின்னும் வண்ண தாரகைகள். இந்திய சமயக் குறியீடுகளுக்கு பாரதி வழியில் புத்துயிர் அளித்தவர் லா.ச.ரா. அவர் எழுத்தை வாசிக்கவில்லையெனில் நானும் இன்னொரு அறிவியல் மாணவன் போல் அறிவியலோடு இருந்திருப்பேன். என்ன உயிருள்ள எழுத்து! அவர் ஒரு சொற்சிற்பி. செதுக்கிக்கொண்டே இருப்பார். சில கதைகளை 6 மாதம் ஒரு வருடமென்று செதுக்குவார். இப்படி செதுக்கியதை "சிறு" கதை என்று எப்படி சொல்ல முடியும்? சுண்டக்காய்ச்சிய பால் போல் இனிப்பவை அவர் கதைகள். மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேசிய அவர் இன்னும் ஒரு படி போய், "நான் வெறும் முற்றுப் புள்ளி வைத்தால் அதில் என் வாசகன் ஓர் உலகைக் காண வேண்டும்" என்று வேறு சொல்லிவிட்டார்!

இவரை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று ஒருமுறை கடிதம் போட்டுவிட்டு சென்று பார்த்தேன். இனிமையாக வரவேற்று உபசரித்த கையோடு "நீ வைஷ்ணவனா?" என்றார். இவர் எப்படி இதைத் துப்புத் துலக்கினார்? என்ற ஆச்சர்யத்துடன் பார்க்க! "உன் கடிதத்தில் "இந்தத் தேதி தோதுப்பட்டு வருமா?" என்று கேட்டிருந்தாய். இந்தப் பயன்பாடு அவர்களிடம்தான் உண்டு. அதுதான் கேட்டேன்" என்றார். தீர்க்கமான பார்வை. ஒரு மதியம் பூரா பேசி விட்டுக் கிளம்பும் போது, "மாமா சேவிக்கிறேன்!" என்றேன். மாமியையும் உடன் அழைத்து விபூதித் தட்டுடன் நின்றபோது 'சிவ தரிசனம்' ஆன உணர்வு! வாசல்கதவைத் திறந்துவிட்டபடியே "கண்ணா! இது இந்த ஜென்மத் தொடர்பல்ல. நாம் நம்மை முன்பே அறிவோம்!" என்று வேறு சொல்லி அந்த மாலைப் பொழுதிற்கு மேலும் மயக்கத்தை ஊட்டினார். அவர் ஒரு அவதாரம். அவர் அறிந்த நானொரு அவதாரம்! ராமனும், பரசுராமனும் சந்தித்தது போல் இரண்டு அவதாரங்கள் சந்தித்துக் கொண்டன. ஒரு அவதார காலம் திங்களோடு முடிந்து விட்டது. அவர் மறைந்த நாளில்தான் அவர் முன்பு தோன்றினார் என்பது இன்னொரு மயக்கமளிக்கும் விஷயம்!