பேசும் படம் - 01

சினிமா என்பதற்கு மிகவும் அழகான தமிழ்ச்சொல் பேசும்படம். நான் பேசும் படம் காலத்தில் பிறந்தவன். அதற்கு முன் பேசாப்படங்கள் ஓடியிருக்கின்றன. பின்னால் சார்லி சாப்ளின் படங்களின் மூலம் அறிந்து கொண்டேன். எங்களூரில் எவரெஸ்ட் டூரிங் டாக்கீஸ் என்று ஒரு பேசும் படம் அரங்கமுண்டு. அது தென்னங்கூரைத் தியேட்டர். ஏனெனில் சட்டத்தின் படி அது 'நடமாடும் திரையரங்கம்'. அங்கு மதியக் காட்சியெல்லாம் கூடாது. ஆனாலும் எம்.ஜி.ஆர் படங்கள் பிரபலமான அக்காலக்கட்டத்தில் தீபாவளி, பொங்கலென்றால் மேட்னி ஷோ உண்டு. கேபினிலிருந்து சினிமா ஒளிக்கீற்று, தென்னைக்கூரையிலிருந்து சூரிய ஒளி என்று ஒரே நேரத்தில் பல காட்சிகள் ஓடும். எம்.ஜி.ஆர் ரசிகர்களான 'விசிலடிச்சான் குஞ்சுகள்' விடும் புகைச் சுருள் சூரிய ஒளியில் வளைந்து, வளைந்து ஓடும் காட்சி அழகாகவே இருக்கும். இப்போதுள்ள சுகாதார விழிப்புணர்வில் அம்மாதிரி இடங்களுக்கு காசு கொடுத்துக் கூப்பிட்டாலும் போக மாட்டேன். ஆனால் அப்போது சினிமா என்ற மாயாவியின் பிடிக்குள் இருந்தோம். இப்போதும் விடுபட்டோம் என்று சொல்வதற்கில்லை.

நான் வளர்ந்த காலம் பாகவதர், கிட்டப்பா போன்ற சங்கீத சாம்ராட்டுகள் போக்கொழிந்த காலம். பாடலெக்கென்றே படங்கள் ஓடியிருக்கின்றன அப்போதெல்லாம். டி.எம்.எஸ், சுசீலா என்று கொடிகட்டிப் பறந்த காலம். தெலுங்கர்களாக இருந்தாலும் தெளிவாகத் தமிழ்ப் பேசிய நடிகைகளான சாவித்திரி, கண்ணாம்பா, சரோஜாதேவி (கன்னடா), மற்றும் நாகேஸ்வரராவ், ரங்காராவ், பாலய்யா (மலையாளம்?)போன்றோர் நடித்த காலம். அப்போது தமிழ் மொழி மீது எல்லோருக்கும் ஒரு பற்று இருந்தது. 'டணால்' தங்கவேலு, சந்திரபாபு (தெலுங்கு), பின்னால் நாகேஷ் (தெலுங்கு) என்று 'கலக்கிய காலம்'. நகைச்சுவையில் ஒரு நிதானம் இருக்கும். கொச்சைத்தனம் இருக்காது. சினிமாவும் தமிழ் விழுமியங்கள் மீது மரியாதை வைத்திருந்த காலம். தமிழ் வசனங்களுக்காகவே பிரபலமான ஒரு கதாநாயகன் உருவான காலம். நாட்டியமென்றால் அது பரதம் என்று இருந்தது. பரதத்தின் உருப்படிகளை மேலாக தொட்டுச் சென்றாலும் அதைக் காட்டவேண்டுமென்ற ஒரு முனைப்பு இருந்தது. இல்லையெனில் சினிமா நடிகையுடன் இசைக்க மாட்டேன் என்று சொன்னாலும் விடாப்பிடியாக உட்காரவைத்து காரக்குறிச்சியை (சரிதானே?) நாதஸ்வரம் இசைக்க வைத்திருக்காது அன்றைய சினிமா. (வளரும்)

1 பின்னூட்டங்கள்:

Anonymous 11/22/2007 02:24:00 PM

Dear Friend,

Please note the word. "சந்திரபாபு (தெலுங்கு)" His pet name is Chandrababu. His native place is Tuticorin(Tamil nadu) He is a fisher man Community.

Thomas
Tuticorin