பேசும்படம்-02

ஒரு வகையில் பார்த்தால் 60-70கள் தமிழ் உணர்ச்சியின் பொற்காலம் எனலாம். இதைத் திரையுலகம் நன்கு பயன்படுத்திக் கொண்டது அல்லது திரையை தமிழர்கள் இந்த உணர்விற்குப் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். 60 களில் வெளி வந்து தாக்கத்தை ஏற்படுத்திய படங்களென்று சிலவற்றை விக்கி சொல்கிறது. அந்த அட்டவணைக்குள் போவதற்குள் சில எண்ணங்கள்.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் பார்க்கக்கூடியவையே. அவர் பாவடை கட்டி நடித்த காலத்திலிருந்து :-) ஏனெனில், அவர் படங்கள் இதமானவை. ஒரே பார்முலா. எந்த மாற்றமும் கிடையாது. ஹீரோ நல்லவர். பரோபகாரி பழனி (அம்புலிமாமா!).வீரம் மிக்கவர். சங்க வாழ்வை பிரதிபலிப்பவர். காதல், வீரம் இவை ரெண்டுதான் அவர் படங்களின் அடிக்கோடு.

சிவாஜி மிக, மிக வித்தியாசமான படங்களைத் தந்தவர். அவரது முழுத்திறமையையும் தமிழ் சினிமா கொண்டு வந்ததா? என்பது இன்னும் ஒரு கேள்விக்குறிதான். கமலே ஆச்சர்யப்படும்படி, அவர் டான்ஸ் செய்திருக்கிறார் (யாரடி நீ மோகினி); என் தம்பி என்ற படத்தில் எல்லோரும் மூக்கில் விரலை வைக்கும் வண்ணம் கத்திச் சண்டை செய்திருக்கிறார். அவர் ஒரு பூரணக் கலைஞர். அவருக்கு இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டால் செய்து விடுவார். முதல் படமான பராசக்தியில் மார்கழிக் குரலோன் சி.எஸ்.ஜெயராமன் பின்னணி பாட வாயசைப்பார் பாருங்கள். அது நடிப்பு.

ஆனால் சிவாஜி படத்தை ரசிக்க ஒரு அனுபவ முதிர்ச்சி வேண்டும். 60 களில் சுத்தமாக அது எனக்குக் கிடையாது. பள்ளிச் சிறார்களுக்கு பிடித்தவர் எம்.ஜி.ஆர். எனக்கும்தான்.

50 களில் வெளிவந்த படங்களும் அப்போது ஓடிக்கொண்டிருந்தன. உம்.பாகப்பிரிவினை, அந்த நாள் போன்றவை. பாட்டிற்காக படங்கள் எடுத்தார்கள் என்றால், பாட்டே இல்லாமல் படம் எடுத்தார்கள் 'அந்த நாளில்'. அதை மீண்டும் பார்க்க வேண்டுமென ஆசை. நிச்சயம் இப்போது பிடிக்கும். பாகப்பிரிவினையில் சிவாஜி, சரோஜாதேவி, ராதா என்று போட்டி போட்டுக் கொண்டு நடிப்பார்கள். எம்.ஆர்.ராதாவை ரசிக்கவும் முதிர்ச்சி வேண்டும். அது அப்போது இல்லாததால் அவரை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது! இரும்புத்திரை என்றொரு படம். அதில் வரும் பாடல் என் நெஞ்சை விட்டு என்றுமே அகன்றதில்லை. அதுதான் "நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு, நானிருக்கும் நிலமை என்னவென்று புரியுமா?" என்ற பாடல். இந்தப் பாடலுக்காகவேணும் இப்படத்தை மீண்டும் காண வேண்டும். இருப்புத்திரை கதாநாயகி வைஜயந்திமாலா. இவரை எனக்குப் பிடிக்கும். காரணம் பள்ளிப் பருவத்தில் என்னைக் காதலித்த (?) லதா வைஜயந்திமாலா போலவே இருப்பாள். சினிமாவின் தாக்கத்தால் காதல் உணர்வு இளமையிலேயே வந்து விட்டதா? இல்லை, இருக்கின்ற உணர்வுகளைத்தான் திரை காட்டுகிறதா? என்பது குஞ்சு முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்பது போன்றதோர் கேள்வி. திரை இல்லாமலும் காதல் மலர்ந்திருக்கும். ஆனால், திரை அதற்கு மிகவும் உதவியாக இருந்தது. சினிமாப் பாடல்கள் மூலம் கவி அல்லாதவன் கூட தன் உணர்வினைச் சொல்ல முடிந்தது! ஆனால், அந்தக் காலத்தில் வீட்டில் சினிமாப் பாடலெல்லாம் பாட முடியாது. எப்போதாவது அக்கா, அப்படியே போய் வரும் போது முணு, முணுப்பாள். அதுவே சுகந்தமாக இருக்கும்.

50 வரைத் தமிழ்க் குடும்பங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தன. எங்கள் குடும்பமும் அப்படியே. இப்படி ஒற்றுமையாக வாழும் குடும்பங்களில் பிரிவினை வருவது கொடுமையானது. இதைக் காட்டும் படம் பாகப்பிரிவினை. எனவே 50-ல் வெற்றி கண்ட பாகப்பிரிவினையும், அந்தநாளும் சிபாரிசு செய்யத் தக்கவையே! முதல் படம், ஒரு காலக் கண்ணாடி என்ற அளவில். அந்த நாள் தமிழில் பாடல் இல்லாமல் வந்த ஒரே படம் என்ற காரணத்திற்காக. இப்போது, எல்லோரும் ஏன் தமிழ் நாயகனும், நாயகியும் ஒரு கோஷ்டியுடன் பாடல் பாடிக்கொண்டு காதல் செய்கின்றனர் எனக் கேட்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கு காட்டவாவது, ஒரே ஒரு படமாவது தமிழில் வந்திருக்கிறதே! வாழ்க!

2 பின்னூட்டங்கள்:

Sambar Vadai 11/22/2007 04:33:00 PM

கண்ணன்,

பதிவுகளும் உங்கள் படங்கள் மற்றும் விளக்கங்கள் அருமை. சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. பேசும் படம் தொடர் தொடரட்டும். பாகப் பிரிவினை என்னுடைய லிஸ்ட்லும் உண்டு. இரும்புத்திரை ? பார்க்கவேண்டும். இது மாதிரி பெரியவர்கள் லிஸ்ட் கொடுத்தால் எங்களுக்குப் பயனாய் இருக்கும். எங்கள் லிஸ்ட் அடுத்த சந்ததியினருக்கு பலனளிக்கலாம்.

பொதுவாக பீம்சிங்கின் 'பா' வரிசைப் படங்கள் என்னதான் ஓவர் செண்டிமென்ட், எமோஷன், அழுகை என சிலர் வகைப் படுத்தியிருந்தாலும், சில கதை/காட்சி/பாடல் அமைப்புகள் நிச்சயம் பலருக்கும் பாடமே. நீங்கள் சொன்ன - கூட்டுக்குடும்பம் , பிரிவினை போன்ற விஷயங்களின் தாக்கங்களை வாரிசுகள் திரைப்படம் மூலம் தெரிந்து வைப்பது நன்றே. (தற்போதைய இம்மாரல் தமிழ் சீரியல்களைப் பார்ப்பதைவிட)

ஆட்டத்தில் பங்கெடுத்துள்ளமைக்கு நன்றி.

Dr.N.Kannan 11/22/2007 04:44:00 PM

பாலா!
நன்றி. இத்தொடரைத் தொடர ஊக்குவிப்பது குறித்து நன்றி.

சினிமா பற்றி எனக்கு தீவிர விமர்சனமுண்டு. ஏனெனில் அது ஆராயத்தக்க ஒரு விஷயம். மற்றவர் போல் எள்ளி நகையாடும் விஷயமல்ல அது. எனவே நமது கட்டுரைகள் ஒரு காலத்தில் ஆராயப்படலாம்.