பேசும் படம் - 03

50 தொடங்கி 60வரையிலான இந்த ஐந்தாம் பத்தில் (50s) வருடத்திற்கு குறைந்தது 15 படங்களென்று வந்திருக்கின்றன! தொழில்நுட்பம் சிறந்துள்ள இந்த நூற்றாண்டில் இந்த ஆக்கத்தை மீண்டும் தமிழ் சினிமா எட்டுமா? என்பது கேள்விக்குறியே! காரணமென்ன?

1. அப்போது சொல்ல நிறையக் கதை இருந்தது. இப்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு, நினைத்தால் அருவாளை எடுடா! வெட்டுடா! தலையை என்று படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் (இதில் remix வேறு). கதாநாயகன் வெட்டினால் கேள்வி கேட்பாரே இல்லை, தமிழ்நாட்டில் :-) ஆனால் அப்போது சொல்லப் புராணக் கதைகள் இருந்தன, நாட்டுப்புரப் பழமொழிகள், வழக்குகள் இருந்தன, சரித்திர புருஷர்களின் கதைகள் இருந்தன, போதாதற்கு குடும்பக்கதைகள் நிறைய இருந்தன. இப்போது சீரியல் போடுவதற்குக் கூட கதையில்லாமல் சவ்வாக இழுக்கிறார்கள்.

2. 50கள் இந்தியா சுதந்திரமடைந்து சில காலங்களே ஆகியிருந்த காலக்கட்டம். மக்களிடம் ஒரு தாகம், நேர்மை, சத்தியம் இவையெல்லாம் இருந்தன. எனவே சிவகங்கைச் சீமை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை வெற்றிகரமாக எடுக்க முடிந்தது!
ஆனால் இன்று நாம் அத்தகைய சுத்த உணர்வுகளிலிருந்து தூர வந்துவிட்டோம். முதலாளித்துவம் விரித்திருக்கும் 'நுகர்வலையில்' மயங்கிக் கிடக்கிறோம். நுகர்வு என்பது அக்னி போன்றது. எரித்து சாம்பலாக்கிவிடும், பேதமையின்றி! அதில் விழுவது நமது மொழியாக இருக்கலாம், பண்பாடாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், சிறப்பு தனி விழுமியங்களாக இருக்கலாம்! எல்லாம் அவுட்!

3. அப்போது அதிக செலவில்லை. ஜெமினி வாசன் போல் ஒரு சிலரே பிரம்மாண்டமாக யோசித்தனர். மாடர்ன் தியேட்டர்ஸ் போல் பட்ஜெட் படங்கள் நிறைய நல்ல தரத்தில் வந்திருக்கின்றன. ஆகும் அதிகச் செலவு கச்சா பிலிம்தான். அதற்குத்தான் டிமாண்டு அப்போது. அதுவும் கருப்பு வெள்ளைப் படங்கள்தான். நடிக, நடிகையரெல்லாம் 'காண்டிராக்ட்' போட்டு பல வருடங்கள் ஒரே படத்தில் நடித்தனர். அப்போது இன்னும் தமிழ் சினிமா இருமுனைப்படவில்லை (சிவாஜி-எம்.ஜி.ஆர்).

அப்படி வந்த நூற்றுக்கணக்கான படங்களை இங்கு பட்டியலிட்டால் இது வலைப்பதிவு எனும் குணம் தாண்டி, ஆராய்ச்சி வெளியீடு எனும் குணம் பெறும். வலைப்பதிவின் அழகே அதன் தனித்தன்மைதான். அவரவர் 'குட்டி உலகம்'. விக்கிபீடியாவில் எழுதுவதைவிட வலைப்பதிவு இன்னும் சுகம். நமக்குப் பிடித்ததைச் சொல்லலாம். கையைப் பிடிக்க ஆளில்லை (பொது மரியாதை கடைபிடித்தால்).

மேலும் இப்படங்கள் அப்போது என்மீது ஏற்படுத்திய தாக்கம் என்று புருடா விடமுடியாது, ஏனெனில் அப்போது நான் மழலை மாறாச் சிறுவன். ஆனால், இப்படங்கள் 60களிலும் ஓடிக்கொண்டிருந்தன. மேலும் எங்களூர் அரங்கு நகர் அரங்கு (டூரிங் டாக்கீஸ்)ஆனதால் புதிய படமெல்லாம் வெளியிட முடியாது. பழசைத்தான் வாங்கிப் போட வேண்டும். அது ஒருவகையில் எனக்கு நல்லதாகப் போய்விட்டது!

1953-ல் ஜெமினியின் ஒளையார் வருகிறது! பல நூறு யானைகள் ஒன்றாக வந்து கோட்டையை இடிக்கும் காட்சியை 'lord of the ring' போன்ற கிராபிக்ஸ் இல்லாமல் ஜெமினி வாசன் எடுத்திருப்பார். கே.பி.சுந்தராம்பாளை தமிழ் உலகிற்கு இனம் காட்டிய படம். அதன்பின் எப்படி வள்ளுவர் என்றால் 'சாலமன் பாப்பையாவோ' அதுபோல் ஒளையார் என்றால் கே.பி.எஸ் என்றாகிவிட்டது!

1954- மனோகரா. சிவாஜியின் அற்புதமான உரையாடல் வெளிப்பாடு. எம்.ஆர்.ராதாவை இனம் காட்டிய "ரத்தக் கண்ணீர்".

1955- கணவனே கண்கண்ட தெய்வம். ஜெமினி பல அற்புதமான படங்களை வழங்கியுள்ளார். சிவாஜியைவிட ஜெமினியே பரிசோதனை முயற்சிகள் பல செய்தவர். மிஸ்ஸியம்மா, இது 'நடிகையர் திலகம்' சாவித்திரியை இனம் காட்டிய படம். அந்தக் காலப் படங்களின் அழகு என்னவென்றால் நடிகைகள் கண்ணசைவில், உதட்டசைவில் பேசுவர். "பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா?" என்பது ஒரு ரசனை. இப்போது எடுத்தவுடன் தொப்புளில் பம்பரமாட வந்துவிடுகிறார்கள். Sexual perversion என்பதைக் காண வேண்டுமெனில் தற்போதைய தமிழ் சினிமா, சீரியல் பார்த்தால் போதும்.

1956- அலிபாபாவும் நாற்பது திருடர்களும். இது அரபீய சரக்கு. எம்.ஜி.ஆருக்கு இதெல்லாம் அல்வா சப்ஜெக்ட். புகுந்து விளையாண்டு இருப்பார். எம்.ஜி.ஆர் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகலாம், பொழுதைப் போக்கிவிட்டு வரலாம்! மதுரை வீரன். இதில் எம்ஜிஆரை மாறுகால், மாறுகை வாங்கிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் என்ற பிரம்மாண்டமான தமிழ் சினிமா பிம்பம் உருவாகிவருகிற காலம். பின்னால் ஒரு படத்தில் அவர் செத்துப்போவதாகக் காட்ட, படம் படுத்துவிட்டது. இந்தப் படத்தில் கூட, தண்டனைக்குப் பிறகு அவர் இருதேவிகளுடன் தெய்வமாக மீண்டும் வந்துவிடுவார். "சுபம்" என்று கடைசியில் போடுவார்கள். அதனால் செத்துப் போனாலும், ஆவியாக வந்து சுபம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். இல்லையெனில் சிவன் வந்து உயிர் கொடுப்பார். இப்படி..

1957-ல் மாயாபஜார் வருகிறது. சூப்பர்படம்! பீமனின் மகனான கடோத்கஜனாக 'சாவித்திரி' ஆகா! அவங்க எல்லாம் செய்வாங்க!

1958-ல் காத்தவராயன். சிவாஜி-கண்ணாம்மா போட்டி போட்டு நடிக்கும் படம். கடைசி வசனம் சூப்பர். இதே வருடம் நாடோடி மன்னன். எம்.ஜி.ஆர் திரு உரு (icon) உருவாகிவிடுகிறது. சம்பூர்ண ராமாயணம். எப்படியும் தமிழனாகப் பிறந்த ஒருவன் கடைசி பட்சமாகவேணும் தெரிந்திருக்க வேண்டிய கதை, பார்க்க வேண்டிய படம் (கற்பார் இராமபிரானை அன்றி மற்றும் கற்பரோ! இது திருவாய்மொழி). இப்போது பார்த்தாலும் கூட "ஏன் பிரிந்தீர், என்னை ஏன் பிரிந்தீரோ" என்று சிவாஜி கையை தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு பரதாழ்வானாக வருவது நெஞ்சை உருக்கிவிடுகிறது. விஷ்ணு என்றால் அது என்.டி.ஆர், பாவமென்றால் அது சிவாஜி. அதே வருடம் ஜெமினிக்கும் ஒரு வெற்றிப்படம் வருகிறது, அதுவே "வஞ்சிக்கோட்டை வாலிபன்". ஜெமினி மெல்ல, மெல்ல "காதல் மன்னனாக" மாறி, மாற்றுக் கதாநாயகனைத் தமிழ் சினிமாவிற்குத் தருகிறார்.

1959-சிவாஜி வருடம்! நிச்சயமாக. பாகப்பிரிவினை, வீரபாண்டியக் கட்டபொம்மன். தமிழ் உச்சரிப்பு என்றால் அது சிவாஜி என்று நிலையாக்கிய படம். பள்ளி நாட்கள் முழுவதும் எங்கு பார்த்தாலும் "ம்..நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ" வசனம்தான். எல்லோருக்கும் இது மனப்பாடமாகியிருந்தது. ஜெமினியின் திரை ஓவியம் "கல்யாணப்பரிசு". ஸ்ரீதர் என்ற மெல்லினத்தைக் இனம் காட்டிய படம். இதே வருடம் இன்னொரு முக்கிய சரித்திரப்படம் வருகிறது. அது சிவகங்கைச் சீமை! இந்த இரண்டு படங்களையும் தமிழனாய் உள்ளவன் பார்க்க வேண்டும்.

1960-க்குள் தமிழ் சினிமா காமெடி சப்ஜெக்டை நாசுக்காகக் கையாளத்தொடங்கி விட்டது. நல்ல உதாரணம் டணால் தங்கவேலு, ராமாச்சந்திரன் கலக்கும் "அடுத்த வீட்டுப் பெண்"

இரும்புத்திரை (படிப்பிற்கும் ஒரு கும்பிடு! பட்டத்திற்கும் ஒரு கும்பிடு! பாசா, பெயிலா போடும் இந்த வழக்கத்திற்கும் ஒரு கும்பிடு). படிக்காத மேதை. பாவை விளக்கு. சிவாஜிக்கு வெற்றி மேல் வெற்றி. அகிலனின் நாவலை படமாக்கி தேசிய விருதும் இப்படம் பெறுகிறது.மாடர்ன் தியேட்டர்ஸ் "கைதி கண்ணாயிரம்" என்றொரு படமெடுத்து "alternative cinema" ஒன்றை இனம் காட்டுகிறது. எப்போதும் புது முகங்கள். விரு, விருப்பான கதை, காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகள், ஹிட் பாடல்கள் இப்படியொரு ஆச்சர்யமான பார்முலா. I really miss Modern Theaters. மனோகர் என்ற நாடகக் கலைஞனை தமிழ்நாட்டிற்கு இனம் காட்டிய படம்.

6 பின்னூட்டங்கள்:

Thamizth Thenee 11/24/2007 01:01:00 AM

திரு நாராயணன் கண்ணன் அவர்களே
நீங்கள் சொல்வது போல் நான் என் சிறு வயதில் திரைப்படங்கள் பார்க்கும் பொழுதில்,கதாநாயகன் ,,கதாநாயகி இருவரையும் பிரிக்கும் வில்லனைப் பார்த்தாலே கோபம் வரும் ,
அவர்கள் இருவரையும் பிரித்து விடக் கூடாதே என்று இறைவனை வேண்டிக் கொள்ளும் பலரைப் பார்த்து வியந்திருக்கிறேன் நான்
அப்படிப்பட்ட திரைப் படங்களில்
முக்கியமாக கதை இருக்கும் ,ஒவ்வொரு சம்பவங்களிலும்
ஒரு நியாயம் இருக்கும்,அந்தக் கால இயக்குனர்கள் அவர்களுக்கு கிடைத்த கருவை வைத்துக் கொண்டு அந்தக் கதையை பின்னிக் கொண்டு போகும் முறையில் நம்மை சுமார் இரண்டரை மணி நேரம் ந்ம்முடைய நினைவே இல்லாமல்,அந்த திரைப்படத்தோடு ஒன்றிப் போக வைத்து விடுவார்கள்
அதுதான் அவர்களின் வெற்றி என்று நினைத்தனர்
தங்கள் திறமைகளை வெகு நுணுக்கமாகப் நியாயமான முறையில் பயன் படுத்தி நம்மைக் கட்டி போட அவர்களால் முடிந்தது,என்னதான் அது திரைப்படமாக இருந்தாலும் அதை ந்ம் உணர்வுகளோடு ஒன்றிப் போக வைத்து
நிஜமாக நடப்பதைப் போன்று நம்மைப்
ப்ரமிக்க வைக்க அவர்களால் முடிந்தது
எப்பொழுதுமே தன்னை அவருடைய திறமையால் கட்டிப் போடும் இயக்குனரிடம் ஏமாறுவதையே மகிழ்வோடு ஏற்றுக் கொண்ட கலாரசிகர்கள்,மகிழ்வோடு அதில் மனமொப்பி லயித்தனர்
ஹூம் அது ஒரு காலம்,தற்போது
அப்போது தொழில் நுட்பம் அவ்வளவாக வளராத காலத்திலேயே ஔவ்வையார் திரைப்படத்தில் பூமி இரண்டாகப் பிளப்பதை மிக நுணுக்கமாக எடுத்தனர்,
மர்மயோகி என்னும் திரைப்படத்தில் ஒருவருடைய தலை மட்டும் தனியாகப் போவதை காட்டினர்,மேலும் மாய மனிதன் என்னும் திரைப்படத்தில்
அந்த மனிதன் மாயமாக இருக்கிறான் ,அவன் உருவமே தெரியாமல் அவனை காவல் துறை எப்படிக் கண்டு பிடிக்கிறது என்பதைக் காட்டுவர்,அது மட்டுமலா மாயா பஜாரில் கடோற்கஜன் உண்ணும் உண்வுகள் தாமாக எழும்பி கடோற்கஜன் வாயில் போகும் காட்சிகள் எல்லாமே தொழில் நுட்பம் வளராத அந்தக் காலத்திலேயே காட்டிவிட்டனர்
ஆனால் இப்போது கதை என்பதே இல்லை, இருப்பது வெறும் சதைதான்
இயக்குனரிலிருந்து, புகைப்பட தொழில் நுட்பாளர் வரை அதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்னும் மாயையை ஏற்படுத்தி மக்களை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை ,ஆயினும் சில படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படி வருகிறது என்பதும் உண்மை

காதலுக்கு மரியாதை ,இயக்குனர் பாஸில்,மொழி திரைப்படம் போன்றவை
இருக்கத்தான் செய்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

surya 11/24/2007 03:47:00 AM

Xlent... Great...

Plz continue..

Super...

Surya
Chennai

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/24/2007 05:49:00 AM

//பீமனின் மகனான கடோத்கஜனாக 'சாவித்திரி' ஆகா! அவங்க எல்லாம் செய்வாங்க!//

ஹூம்
நடிகர் திலகத்தைக் கொண்டாடும் தமிழகம்
நடிகையர் திலகத்தை மட்டும் பெரிய அளவில் கன்டு கொள்ளாதது என் நெடுநாள் வருத்தம்!

குறைந்த பட்சம் அரசு ஒரு விழா எடுத்து, அவர்களின் நடிப்பு ஆவணங்களைச் சேகரிக்க ஒரு முயற்சி எடுக்கலாம்!

N.Kannan 11/24/2007 07:51:00 AM

நன்றி தமிழ்த்தேனீ:

நீங்கள் அந்தத்துறையில் இருப்பவர். என்னைவிட நேரடி அனுபவம் உங்களுக்குண்டு. 50களில் நான் சொல்ல விட்டுப்போன முக்கிய திரைப்படமிருந்தால் சொல்லுங்கள்.

N.Kannan 11/24/2007 07:52:00 AM

சூர்யா: நன்றி.

N.Kannan 11/24/2007 07:56:00 AM

கண்ணபிரான்:

உண்மை! சாவித்திரி ஒரு அற்புதமான நடிகை. சிவாஜியால் என்னென்ன செய்யமுடியுமோ அதெல்லாம் செய்வார்கள். உதடு துடிப்பது, கண்களில் கசிவு, சிரிப்பு இப்படி. அவருக்கு "நடிகையர் திலகம்" என்று பெயர் கொடுத்ததே பெரிய காரியம். ஏனெனில் இறுக்கமான ஆணாதிக்கத் துறை சினிமா!