மணிக்கொடியின் கடைசி ஓசை!

லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் எனும் அவதார தோற்றம் இந்தத் திங்கள் (29.10.2007) அன்று முடிவடைந்திருக்கிறது. என்ன இருந்தாலும் இது கொஞ்சம் "டூ மச்" அப்படின்னு சொல்லறீங்களா? அப்படி இல்லை. அவரது கருத்துப்படி நாம் எல்லோருமே ஒவ்வொரு அவதாரங்கள். வானில் மின்னும் வண்ண தாரகைகள். இந்திய சமயக் குறியீடுகளுக்கு பாரதி வழியில் புத்துயிர் அளித்தவர் லா.ச.ரா. அவர் எழுத்தை வாசிக்கவில்லையெனில் நானும் இன்னொரு அறிவியல் மாணவன் போல் அறிவியலோடு இருந்திருப்பேன். என்ன உயிருள்ள எழுத்து! அவர் ஒரு சொற்சிற்பி. செதுக்கிக்கொண்டே இருப்பார். சில கதைகளை 6 மாதம் ஒரு வருடமென்று செதுக்குவார். இப்படி செதுக்கியதை "சிறு" கதை என்று எப்படி சொல்ல முடியும்? சுண்டக்காய்ச்சிய பால் போல் இனிப்பவை அவர் கதைகள். மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேசிய அவர் இன்னும் ஒரு படி போய், "நான் வெறும் முற்றுப் புள்ளி வைத்தால் அதில் என் வாசகன் ஓர் உலகைக் காண வேண்டும்" என்று வேறு சொல்லிவிட்டார்!

இவரை எப்படியும் பார்த்துவிட வேண்டுமென்று ஒருமுறை கடிதம் போட்டுவிட்டு சென்று பார்த்தேன். இனிமையாக வரவேற்று உபசரித்த கையோடு "நீ வைஷ்ணவனா?" என்றார். இவர் எப்படி இதைத் துப்புத் துலக்கினார்? என்ற ஆச்சர்யத்துடன் பார்க்க! "உன் கடிதத்தில் "இந்தத் தேதி தோதுப்பட்டு வருமா?" என்று கேட்டிருந்தாய். இந்தப் பயன்பாடு அவர்களிடம்தான் உண்டு. அதுதான் கேட்டேன்" என்றார். தீர்க்கமான பார்வை. ஒரு மதியம் பூரா பேசி விட்டுக் கிளம்பும் போது, "மாமா சேவிக்கிறேன்!" என்றேன். மாமியையும் உடன் அழைத்து விபூதித் தட்டுடன் நின்றபோது 'சிவ தரிசனம்' ஆன உணர்வு! வாசல்கதவைத் திறந்துவிட்டபடியே "கண்ணா! இது இந்த ஜென்மத் தொடர்பல்ல. நாம் நம்மை முன்பே அறிவோம்!" என்று வேறு சொல்லி அந்த மாலைப் பொழுதிற்கு மேலும் மயக்கத்தை ஊட்டினார். அவர் ஒரு அவதாரம். அவர் அறிந்த நானொரு அவதாரம்! ராமனும், பரசுராமனும் சந்தித்தது போல் இரண்டு அவதாரங்கள் சந்தித்துக் கொண்டன. ஒரு அவதார காலம் திங்களோடு முடிந்து விட்டது. அவர் மறைந்த நாளில்தான் அவர் முன்பு தோன்றினார் என்பது இன்னொரு மயக்கமளிக்கும் விஷயம்!

2 பின்னூட்டங்கள்:

Ram 11/01/2007 04:43:00 PM

அய்யா,

லா ச ரா அவர்களின் எழுத்தை படிக்க ஆவலாக உள்ளேன்.

இணையத்தில் இருந்தால் இணைய முகவரி பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி,
ராம்

நா.கண்ணன் 11/01/2007 04:48:00 PM

அன்பின் ராம்: லா.ச.ராவின் எழுத்து காப்புரிமை கொண்டது. எனவே இணையத்தில் காணவியலாது. தமிழகக் கடைகள் அனைத்திலும், இணையப் புத்தக வியாபாரிகளிடமும் எளிதாகக் கிடைக்கும் எழுத்து அது. கட்டாயம் வாசியுங்கள். எழுத்தாளர்களையே மயக்கும் எழுத்து அது!