பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!


வரும் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்யும் சினிமா என்று எழுதுமாறு சாம்பார்வடை கேட்டுக் கொள்ளார். இவர் என்னைத் தெரிவு செய்ததற்குக் காரணம் எனக்கு சினிமா பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் எனது தலைமுறைதான் சினிமாவை தமிழ் வாழ்வின் முக்கிய குறியீடாக எந்த மறுதலிப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டது. பள்ளிப் பருவத்தில் பார்பர் ஷாப்பிற்குப் போனால் சினிமா, பள்ளிக்குப் போகும் வழியில் எம்.ஜி.ஆர்/சிவாஜி ரசிகர் மன்றங்கள், பள்ளி மாணவர்களும் சினிமா பற்றியே நிறையப் பேசுவர். அப்போதுதான் சினிமா எனும் ஊடகம் ஒரு அரசியல் தன்மை பெறுகிறது. முதன் முறையாக இந்திய சரித்திரத்தில் கொள்கை என்று ஏதுமில்லாமல் வெறும் ஊடகம் காட்டும் பிம்பத்தை நம்பி தமிழகம் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தது. சினிமா அரசியல் பிரச்சார ஊடகமாகிப் போனது 60 களிலிருந்துதான்.

இப்போது சினிமா என்பது முற்றும் முழுக்க தமிழன் வாழ்வை ஆக்கிரமித்து விட்டது. சினிமா இல்லாமல் இனிமேல் தமிழனால் வாழ முடியாது எனும் நிலை. தமிழனின் உச்ச கட்ட கலை வெளிப்பாடாக சினிமா மாறிப்போனது. காரணம் சினிமா பொது ஊடகம். யார்
வேண்டுமானாலும் பார்க்கலாம். சினிமாப் பார்க்க ஆகும் செலவு குறைவு. இது இவ்வளவு பிரபலமடையுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சினிமா நடிகர்ளை கூத்தாடி, வேசிகள் என்றெல்லாம் சொல்லி ஓரங்கட்டப் பார்த்து கடைசியில் உயர்குலப் பெண்கள்/ஆண்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இந்தத் தொழிலில் இணைய வேண்டிய கட்டாயம். கர்நாடக சங்கீதம் கூட இப்போது சினிமா பாணிக்கு மாறிக்கொண்டு வருகிறது. நாடகம், கூத்து என்பதையும் சினிமா கபளீகரம் பண்ணிவிட்டது. இதன் தொழில்திறன் செல்லும் போக்கில் தமிழே தெரியாமல் தமிழ் படங்களில் நடிக்கலாம் எனும் அளவிற்கு வந்துவிட்டது.


சினிமா வெறும் பணத்தை நம்பும் தொழில். காசு பண்ணுவதற்காக எந்தவிதமான சமரசமும் அது செய்து கொள்ளும். அங்கு தமிழ் விழுமியங்களுக்கு இடமில்லை. ஆனால் தமிழ்க் கலாச்சாரத்தைக் காட்டுவது போல் அது ஏமாற்றும். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்தினம் இவர்கள் வந்த பிறகு ஒருவகையான இந்தியப் பொதுத்தன்மை சினிமாவிற்கு வந்துவிட்டது. இந்தியப் பிரச்சனைகள் கதைக்கரு ஆகின்றன. திரை இசை என்பது ஒரு Pan Indian Flavour கொண்டு இயங்குகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசையை எந்த ஒரு பிரதேச இசை என்றும் சொல்லமுடியாது. கர்நாடக மெட்டில் ஆரம்பித்து ஹிந்துஸ்தானியில் முடியும். இடை, இடையே ராஜஸ்தான், குஜராத்தி மெட்டுகள் பாட்டில் நிரவி இருக்கும்! எனவே அவரது Pan Indian மெட்டை வைத்துக் கொண்டு இந்தி இசை அமைக்கலாம் அல்லது தமிழ்/தெலுங்கு இசை அமைக்கலாம். நான் இது நல்லது, இது கெட்டது என்றெல்லாம் பேசப்போவதில்லை. நிதர்சனத்தைப் பேசிச் செல்கிறேன்.

இந்தப் பின்னணியில், வரும் சந்ததியினர் பார்க்க வேண்டிய படங்கள் என்று எந்த அளவுகோலை வைத்துச் சிபாரிசு செய்வது?

கலை வடிவம் என்று பார்த்தால் முன்பு போல் பரத நாட்டியத்தைத் தூக்கிப்பிடிக்கும் பழக்கம் போய்விட்டது. சம்பிரதாயம் என்ற சொல்லே சினிமா உலகில் வழக்கொழிந்து போய்விட்டது. மைக்கேல் ஜாக்சன் பிரபலப்படுத்திய கருப்புக் கலாச்சார நடனம், அமெரிக்கா உருவாக்கிய ராப் இவையெல்லாம் தமிழ்க் கலையுடன் ஒன்றிவிட்டன. தமிழ் நடனம் என்று சொல்ல ஏதுமில்லை.

தமிழ் மொழி என்ற அளவுகோலை எடுக்கவே கூடாது. ஏனெனில் சினிமாவின் முதல் பலி மொழிதான். சினிமாவும், சின்னத்திரையும் தமிழ் மொழிச் சுத்தம் பற்றி கண்டு கொள்வதில்லை. எல்லா நடிகைகளுக்கும் இரண்டு பேர்தான் மாற்றி, மாற்றி பின்குரல் கொடுக்கின்றனர். நடிகைகளுக்கு தமிழ் தெரிவதில்லை. தமிழ் பேசக்கூடிய நடிக, நடிகைகளும் ஒரு சொதப்பல் மொழியில் பேசுகின்றனர். அதுதான் ஸ்டைல்.

இந்த வயதினர்தான் பார்க்க வேண்டும் எனும் அளவுகோல் சினிமாவிற்குக் கிடையாது. அதுவொரு கலவை (மசாலா). எனவே எல்லோரும் எல்லாப்படத்திற்கும் போகலாம். முன்பெல்லாம் "ஏ" சர்ட்டிபிகேட் கொடுப்பார்கள். இப்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டனர். ஏனெனில் எல்லாப்படத்திலும் ஏதாவதொரு காட்சி வரம்பு மீறுகிறது. பாட்டுக்கள் எல்லாம் semi-porno வகையைச் சார்ந்தவை. காமெடி வசனம் என்ற பேரில் எவ்வளவு கொச்சையாகப் பேசமுடியுமோ அவ்வளவு கொச்சைத்தனம் வந்துவிட்டது.

இப்படியெல்லாம் எவ்வளவுதான் சொன்னாலும் எல்லோரும் சினிமாவிற்கு போய்க்கொண்டுதான் இருக்கிறோம். ஏன்?

அ. செலவழிக்க நேரம் இருக்கிறது. வருகின்ற காலங்களில் இது இன்னும் கூடும் என்பதொரு கணிப்பு.

ஆ. சினிமாவின் கவர்ச்சி எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. நாலு பேர் இருக்கும் போது "சீ!சீ" என்று சொன்னாலும் உள்ளுக்குள் அது எல்லோரையும் ஈர்க்கிறது. எல்லோருடைய ஈரக்கனவுகளுக்கும் அது தீனி போடுகிறது.

இ. எல்லாப் படங்களும் இப்படித்தான் என்று முத்திரை குத்திவிட முடியாது. ஏனெனில் தொழில் நுணுக்கம் தெரிந்த சிலர் மடை மாற்றம் செய்ய அவ்வப்போது முயன்று கொண்டேதான் இருக்கின்றனர். எனவே "நல்ல" படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் எவை "நல்ல" படம் என்று யார் சொல்வது? சினிமா ஒரு பொதுஜன ஊடகம். அதில் ஆயிரம் வேறுபட்ட ருசி உடையவர்கள் இருப்பார்கள். நான் கொச்சை என்பது பலருக்கு 'அல்வா' சாப்பிடுவது போலிருக்கலாம். சினிமா ஒன்றுதான் நட்டுக் குத்தாக தமிழ் சமூக அடுக்குகளை தகர்த்திருக்கிறது. அதன் பரிணானம் கண்காணிக்கத் தக்கது. தமிழ்நாடு போன்ற இறுகிய சமூக அடுக்குகள் கொண்ட நாட்டில் சினிமா எல்லா சமூக ருசிகளுக்கும் தீனி போடுகிறது. எல்லா சமூகங்களும் தன் ஆளுமையை இவ்வூடகத்தில் செலுத்துகின்றன. அதே போல் எல்லா சமூகங்களையும் சினிமா பாதிக்கிறது.

என்னென்ன படங்களைச் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? சரி, யாராவது சும்மா ஒரு லிஸ்டு போடுங்கள். அதிலிருந்து நான் எனக்குப் பிடிச்சதைச் சொல்கிறேன்.

3 பின்னூட்டங்கள்:

Anonymous 11/21/2007 03:16:00 PM

அன்பின் கண்ணன்

படம் பத்தி எழுதுறீங்களோ இல்லையோ, நல்லா "படம்" காட்டுவீங்கன்னு நல்லாவே தெரியுது :-) நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Dr.N.Kannan 11/21/2007 03:22:00 PM

//நல்லா இருங்கடே!!//

வாங்க ஆசீப்! இது என்ன ம்லையாளமா? இல்லை மரியாதைச் சொல்லா :-))?

சினிமாவின் சாரம் முதலில் வந்திருக்கிறது...:-)

enRenRum-anbudan.BALA 11/21/2007 04:20:00 PM

கண்ணன் சார்,
நல்லதொரு அலசல், ஒரு வித ஆதங்கத்தில் எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது :)

நீங்கள் உங்கள் 15 வயது முதல் 40வயது வரை பார்த்த திரைப்படங்களிலிருந்து உங்களுக்குப் பிடித்தது (ஏதாவது ஒரு காரணத்துக்காக) என்று ஒரு பட்டியல் நிச்சயம் தர வேண்டும்,
இது எனது வேண்டுகோள்!

என்றென்றும் அன்புடன்
பாலா