பேசும் படம் - 06

50 களின் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் தொலைந்து போன சினிமா சரித்திரம்! எனும் பதிவிலிருந்து கிடைத்தது. அதன்படி, "சாமிக்கண்ணு வின்சென்ட். ரயில்வே பொறியாளரான அவர், படத் தயாரிப்புக்கு முன்பே "லைஃப் ஆஃப் ஜீஸஸ் கிரைஸ்ட்' என்ற படத்தை வெளியிட்டார். தொடர்ந்து லூமி சகோதரர்கள்
தயாரித்த "ரயிலின் வருகை' (ரயில் ஒன்று நிலையத்தில் வந்து நிற்பதுதான் மொத்த படமே. ஆரம்பத்தில் அதைப் பார்த்த மக்கள் ரயில் தம் மீது மோதிவிடும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினராம்.) உள்ளிட்ட துண்டுப் படங்களைத் தமிழகம் முழுதும் சுற்றித் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். இவர் தயாரித்த படங்களும் சேர்த்து, மொத்தம் 136 திரைப்படங்கள் இங்குத் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்புகள் காணப்படுகின்றன".

ஆக தமிழனுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு ஆதித்தொடர்பு என்று தெரிகிறது! ஆச்சர்யமில்லை, பின் ஏன் சினிமா நம் வாழ்வில் இத்தனை ஆளுமை கொள்ளாது? நான் குட்டிப் பையனாக இருக்கும் போது மத்திய செய்தி நிருவனம் ஊர், ஊராக ஒரு வேனில் வந்து படம் காட்டுவார்கள், பேசும் படம்தான். அப்போது மின்சாரம் தமிழக கிராமங்களில் நுழைந்த சமயம். மின்சாரம் என்பது எப்படிப் பத்திரமாகக் கையாள வேண்டிய சமாச்சாரம் என்பதைக் காட்டுவார்கள். இலவச சினிமா என்பதால் கட்டாந்தரை என்றாலும் உட்கார்ந்து பார்த்த வயசு!

ஆனாலும் என் கதை 50களிலிருந்துதான் தொடங்குகிறது. எனவே 50களில் வெளிவந்து கட்டாயம் காண வேண்டிய திரைப்படம் எவை என என்னைக் கேட்டால்:

1. பராசக்தி -1952
2. ஒளவையார் -1953
3. மாயாபஜார் - 1957
4. சம்பூர்ணராமாயணம் -1958
5. சிவகங்கைச் சீமை -1959
6. வீரபாண்டியக் கட்டபொம்மன் 1959

பராசக்தி தவிர மற்றவை பழங்கதைகள். மாயாபஜார் படமெல்லாம் 21ம் நூற்றாண்டுத் தொழில் நுட்பத்திற்கு சவால் விடும் படம். சினிமாவின் பிரம்மிப்பை ஆரம்பித்து வைத்தது ஜெமினி ஸ்டூடியோ. இன்றைய மெகா ரஜனி/கமல் படங்களுக்கு ஆதர்சம் அங்கிருந்துதான் வருகிறது. சரித்திரக் கதைகள் என்றளவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளின் கதை மருத பாண்டியர், கட்டபொம்பு கதைகள். மாயாபஜார் மகாபாரதக் காவியத்தின் ஒரு துணுக்கு. பாரதத்தை முழுமையாக என்றேனும் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. அது 8 நாட்கள் ஓடும் ஒரு பெரும் திரைப்படமாக ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. டேனிஸ் டெலிவிஷனில் வந்தபோது உட்கார்ந்து, உட்கார்ந்து பார்த்தேன். ஆயினும் எ.டி.ஆர் கிருஷ்ணனாக நடிப்பது போல் வருமா? சாவித்திரியின் திறமைக்கு சவால் விடும் படம் மயாபஜார். ராமாயணம் நாம் எல்லோரும் குடும்பத்துடன் காண வேண்டிய படம். எனக்குப் பிடித்த பல படங்களை முன்னமே கூறிவிட்டேன்.

இனிமேல் 60க்குள் நுழைவோம்.

2 பின்னூட்டங்கள்:

T.V.Radhakrishnan 12/01/2007 09:00:00 PM

Thhookku Thhookkiyai vittuvitteergale

N.Kannan 12/02/2007 07:22:00 PM

தூக்குத்தூக்கி! ஹாங்...குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்! கொம்பேறித்தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!!

சார்! சிவாஜிக்கென்றே தனியே பட்டியல் போட வேண்டும். அந்தக் காலத்து சிவாஜி பார்க்கவே குறு, குறு என்று அழகாக இருப்பார்..ம்ம்ம்..சிவாஜி, பத்மினி படங்கள் என்று வேறு ஒரு லிஸ்டு உண்டு!!