காமராஜர் - சூத்திரதாரி (பட விமர்சனம்)

நேற்றுதான் காமராஜ் படம் பார்த்தேன். இது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஆனால் நல்லவேளையாகப் பார்த்துவிட்டேன். நான் காமராஜர் காலத்தில் வாழ்ந்தவன். அவர் வந்து சிறப்பித்த நிகழ்ச்சிகளில் என் சகோதரிகள் பாடிய படம் வீட்டில் தொங்குகிறது! அவரது சரிதம் நிச்சயம் படிக்க வேண்டிய பாடம், பார்க்க வேண்டிய ஆவணப்படம். படத்தைச் சிறப்பாக எடுத்துள்ளனர். முதல் முறையாக காதல் டூயெட், பின்னால் பத்து பேர் ஓடி ஆடாமல், இசை என்பது படத்துடன் இயைந்து போவது இதமாக உள்ளது. இளையராஜா சாத்வீகமாகவே இசைத்திருக்கிறார். காமராஜாக நடித்தவர் கனப்பொருத்தம். அதே முகவெட்டு, அதே அங்கலட்சணம் (காமராஜருக்கு கைகள் நீளம்). எல்லோருமே இயைந்து நடித்துள்ளனர். காமராஜர் காலம் சமீபம் என்பதால் நாம் அவரை அலட்சியப்படுத்த முடியாது. காந்தியம் சுடர் விட்டுப் பிரகாசித்த காலங்களில் பல நட்சத்திரங்கள் தோன்றின. இவர்தான் அக்காலக்கட்டத்தின் கடைசி நட்சத்திரம் என்பதை அழகாகக் காட்டுகின்றனர்.

மேலும் இவர் வாழ்ந்த போது அரசியல் விழுமியங்கள் வெகு விரைவில் மாறி காந்தியம் முற்றும் அழிந்துவிட்டது என்பதையும் அதை இவர் காணாமல் நாணயமாக வாழ்ந்து, பிறருக்கு விட்டுக் கொடுத்து அரசியல் தவறுக்குக் காரணமாகிறார் என்பதையும் படம் சுட்டுகிறது. காமராஜர் எளிதாகப் பாரதப் பிரதமராகி இருக்கலாம். தோலான், துருத்தியெல்லாம் அந்த நாற்காலியைப் பிடித்து ஆண்டுவிட்டனர். ஒரு தமிழன் பாரதத்தை ஆண்டான் என்று சரிதம் படைத்திருக்கலாம். ஏன் இந்த சந்தர்பத்தை விட்டார்? காந்தியமா? இல்லை, தமிழனுக்கே உரிய தாழ்வுணர்ச்சியா? மொரார்ஜி தேசாயை விட இவர் என்ன குறைந்துவிட்டார்?

காமராஜ் படம் இளைய சமுதாயத்திற்கு ஆதர்சமாக அமையும். இதுவொரு மிக நல்ல படம்.

2 பின்னூட்டங்கள்:

காமராஜ் தாசன் 12/07/2007 01:15:00 AM

//காமராஜர் எளிதாகப் பாரதப் பிரதமராகி இருக்கலாம். தோலான், துருத்தியெல்லாம் அந்த நாற்காலியைப் பிடித்து ஆண்டுவிட்டனர். ஒரு தமிழன் பாரதத்தை ஆண்டான் என்று சரிதம் படைத்திருக்கலாம். ஏன் இந்த சந்தர்பத்தை விட்டார்? காந்தியமா? இல்லை, தமிழனுக்கே உரிய தாழ்வுணர்ச்சியா? //
இந்த வரிகள் என்னை காயப்படுத்துகின்றன

N.Kannan 12/13/2007 02:08:00 PM

மன்னிக்கவும்! என் ஆதங்கத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.