மாற்றம் எப்போது நிகழும்?

இலக்கியவாதியாக இருப்பதொரு அவஸ்தை :-) உலகின் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக் கவிதையாகின்ற அதே பொழுதில் உலகின் துன்பம், சமனற்ற தன்மை, பாசாங்குத்தனம், ஏழ்மை, கீழ்மை இவையெல்லாம் துன்புறுத்தும். தாங்கிக் கொள்வது கூட அவ்வளவு பிரச்சனையில்லை, ஆனால் அதை மாற்ற மனது துடிக்கும். இலக்கியத்தில் என்று புகுந்தேனே அன்றிலிருந்து இது அழியாத ஒரு அவஸ்தையாகத் தொடர்கிறது!

இலக்கியம் முதலில் இரசனையை வளர்க்கிறது. மானுட ஈடுபாட்டை அளிக்கிறது. தத்துவ தரிசனங்களை நோக்கி இட்டுச் செல்கிறது. இச்செயல்பாடுகளில் மனது ஈடுபடும் போது மெல்ல, மெல்ல ஒரு உளவியல் மாறுதல் நிகழ்வது காணக்கூடியதாக இருக்கிறது. எனவே இலக்கியம் மனிதர்களை மாற்றுகிறது. மனதை மாற்றுகிறது. செயற்பாட்டை மாற்றுகிறது. ஒரு தனிமனிதன் மாறும் போது சமூகத்தின் அழுக்குக் கிட்டங்கியில் ஒரு துளி குறைகிறது. கிட்டங்கி எப்போது சுத்தமாகும் என்பது பெரிய கேள்வியாக இருந்தாலும், நாம் அக்குப்பைக் கிட்டங்கியில் இல்லை என்பதே ஜீவிதத்தின் பெரிய ஆறுதல், இல்லையா?

20-21ம் நூற்றாண்டில் வாழ்வதில் நான் பேருவகை கொள்கிறேன். எத்தனையோ சமூக மாற்றங்களைக் கண்ட நூற்றாண்டுகள் இவை! அடிமை வியாபாரம் நிற்கிறது, காலனித்துவம் நிற்கிறது, தேசங்கள் விடுதலை அடைகின்றன, பெண் விடுதலை பேசப்படுகிறது, பாலியல் சுதந்திர விழிப்பு உருவாகிறது!

இந்த எல்லாவற்றிலும் சினிமாவின் பங்கு அளப்பரியதாக உள்ளது. பொழுதுபோக்கு என்பது முக்கியமாக இருந்தாலும், கல்யாண விருந்தில் ஊறுகாய்க்கும் இடமுண்டு என்பது போல் விழிப்புணர்வுச் சேதிகள் அவ்வப்போது கலந்து வருவதுண்டு. நேற்றிரவு Pretty Woman என்ற படம் பார்த்தேன். 1990-ல் வெளிவந்த ஹாலிவுட் படம். நானுமே இதை இப்போது இரண்டாவது முறை பார்க்கிறேன். முன்பு போலவே இப்போதும் பிடித்திருந்தது. கதை என்ன?

எட்வர்ட் லுயிஸ் எனும் பெரும் பணக்காரன் பொழுது போகாமல் தெரிவில் நிற்கும் விபசாரியை ரூமிற்கு அழைக்க, அங்கொரு மாற்றத்தின் கதை ஆரம்பமாகிறது. மிக, மிக அழகான இப்பெண் ஒரு வாரத்திற்கு 3000 டாலர் என்று விலை பேசப்படுகிறாள். அவளுக்கு இது மிகப்பெரிய தொகை. அவனுக்கோ இது பொறிகடலைக் காசு. அந்த வாரத்தில் அவனுடன், அவன் சந்திக்கும் பெரும் புள்ளிகளுடன், அவனது உயர் மட்ட சமூகத்துடன் பழகின்ற வாய்ப்பு இவளுக்கு நேர்கிறது. அது அவளுள் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், அவளுள் நீண்ட நாட்களாக அடங்கிக் கிடந்த 'ஒரு நல்ல வாழ்வை' நோக்கிய கனவை மீண்டும் உயிரூட்டுகிறது. அவள் அந்த வாரத்தை ஒரு குடும்பப்பெண் போலவே கழிக்கிறாள். அவனை நேசிக்கிறாள், பின் காதலிக்கத் தொடங்குகிறாள். ஒரு வாரம் முடிந்துவிடுகிறது. தனது சாதாரண வாழ்விற்குத் திரும்புகிறாள். எப்போதும் அவள் காணும் கனவு, தன்னை ஒரு அரசிளங்குமரன் வந்து காப்பாற்றுவான் என்பது. அது இறுதியில் நடந்துவிடுகிறது.

ஏனெனில், நண்பர்களற்ற தனி மனிதனான் எட்வர்ட் விவியன் எனும் இவ்வழகியின் பழக்கத்தால் மாற்றமுறுகிறான். மனித நேயம் தலை தட்டுகிறது. உள்ளார்ந்த அன்பு மேலெழும்புகிறது.

இதை எடுத்திருக்கும் விதம் அருமை. அமெரிக்காவில், வெள்ளைக் கலாச்சாரத்தில் விபச்சாரத்தனம் கண்டிக்கப்பட்டாலும், அவர்களையும் மனிதர்களாகப் பார்த்து, அவர்களும் மேம்பட்டு உயர் வாழ்வு வாழ முடியும் என்ற கருத்துக்களை மறுதலிப்பதில்லை. ஆனால் தமிழக சூழலில், அதுவும் கே.பாலச்சந்தரின் படங்களில் விபச்சாரிகளின் முடிவு மரணம் அல்லது ஓலைக்குடிசை என்று முடியும்! வெள்ளையர்கள் இல்லையெனில் நம் சமூகத்தில் இது போன்ற கருத்துக்களை முன்வைக்கக்கூட முடியாது என்று தோன்றுகிறது. வெள்ளையர்களின் வரவால் இந்தியா எவ்வளவோ முன்னேறி இருக்கிறது. பாரதியின் பெண் விடுதலைக் கருத்துக்கள், பெரியாரின் சுயமரியாதை, வங்காளத்தின் சமூக மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் ஆங்கிலத்தாக்கமே காரணம். இப்படத்தை ஒருவரால் இரசித்து, மாற முடிந்தால் அது ஹாலிவுட்டின் சமூகப்பயன்பட்டைச் சுட்டும்!விபசாரி என்பவள் யார்? நம்முள் ஒருவர்தானே! அவளை இந்த அவல நிலைக்குத் தள்ளுவது எது? சமூகக்காரணிகள்தானே! சமூகம் யார்? நாம்தானே! எனவே நாம் மாறும் போது சமூகம் மாறிவிடுவதில்லையா?

பெண் விடுதலை குறித்த உங்கள் வாக்குறுதியை கீழ்காணும் தளத்தில் பதிவு செய்யுங்கள்:பெண் விடுதலை என்பது நம் விடுதலை.

கும்பல் நடனம்

தென்கொரியாவை 60களில் பார்த்திருந்தால் இது உலகின் 11வது சிறந்த பொருளாதாரமாக 40 வருடங்களில் உயரும் என்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அந்த அதிசயத்தை நடத்திக் காட்டியுள்ளனர் கொரியர்கள். இதற்குக் காரணம் கடின உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி. சும்மாப் பேசிக்கொண்டே இல்லாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பது மேல் என்பது இங்கு நடைமுறை! இதோ பாருங்கள், இந்த நடனத்தை!! இதை எப்படி இயக்கியிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!!

Mr. and Mrs. Iyer - திரைப்படம்

சினிமா என்பது நம்ப வைக்கும் கலை. ஒரு பிம்பத்தைக் காட்டி, பெயர் வைத்து, பெயருக்குப் பின்னால் ஒரு கதை சொல்லிவிட்டால் போதும். நாம் நம்பி சினிமாவில் ஊறிப்போய்விடுவோம். காட்சியில் மயங்கி கண் கலங்குவோரும் உண்டு. இந்தக் கலை சினிமாப் பார்க்கும் போது மட்டும் நடப்பதல்ல. நிஜ வாழ்வும் மிகச் சரியாக சினிமா போலவே நடப்பதுதான் அதிசயம்!

பிறந்தவுடன் நமக்கொரு பெயர் சூட்டுகின்றனர். சாகும்வரை அப்பெயரை நம்பி அதாகவே வாழ்ந்து முடித்துவிடுகிறோம். தாய் பாலூட்டும் போது உறவுகளைச் சுட்டுகிறாள். அது நெஞ்சில் அப்படியே பதிந்து விடுகிறது. நம்மைப் பற்றிய பிம்பம் உருவாகும் போதே மற்றவரைப் பற்றிய பிம்பமும் கூடவே உருவாகிறது. பிம்பங்களுக்கு அபிப்ராயம் ஆதாரம். முஸ்லிம் என்றால் நமக்கொரு பிம்பம். கிருஸ்தவன் என்றால் ஒரு பிம்பம். பின் ஜாதிகள் பற்றிய பிம்பங்கள். இப்படி நாம் அபிப்பிராயங்களினால் கட்டிய உலகில் அதை அப்படியே நம்பி வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

சினிமா நம்மைக் கவர்வதற்குக் காரணமே அது ஒரு நிழல் உலகை நம் கண் முன்னே வைப்பதுதான். நாம் கனவுகள் அற்றவர்களாக இருந்திருந்தால் சினிமாகூட இவ்வளவு ருசிக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கனவில் ஒரு சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது. சினிமா ஒரு பிரம்மாண்டமான பிரம்மலோகம். அங்கு எதை, எது வேண்டுமானாலும் மாற்றுவார்கள். ஆக்குவார்கள், சினிமா எடுக்கும் வரை காப்பர், பின் அழிப்பர். முத்தொழிலும் நடைபெறும் உலகமது.

Mr. and Mrs. Iyer என்ற படம் பார்த்தேன். 2002 வந்து பல பரிசுகளைத் தட்டிச் சென்ற படம். இதுவொரு தமிழ்ப்படம்தான்! ஏனெனில் இதன் தாய்மொழி தமிழ் :-) ஆனால் வங்காள தேசத்தில் நடக்கிறது. பல இந்திய மொழிகள் கலந்து, இந்திய ஆங்கிலம் துணை புரிய கதை நகர்கிறது. எனவே இதுவொரு இந்தியப்படம். ஆனால், படம் அதையும் தாண்டி "மானுடம்" எனும் புனிதம் பற்றிப் பேசுவதால் இதுவொரு உலகப்படம்.

கதைக்கரு ஒரு பயணம். ஒரு குழந்தையுடன் ஒரு தமிழ்ப் பெண் தன் பெற்றோர் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குப் போகிறாள். பயணத்தில் எல்லா ரக இந்தியர்களும் உள்ளனர். சீக்கியர், பெங்காலி, முஸ்லிம், யூதர், ஐயர் (தமிழ்நாடு மற்றும் வடநாடு) இப்படி. பஸ் போகும் வழியில் முஸ்லிம்-இந்துக் கலவரம் வந்துவிடுகிறது. இவளுக்குத் துணையாக கொல்கொத்தா வரை வரும் 'ராஜா' உண்மையில் சௌளத்திரி என்ற பெயர் கொண்ட முஸ்லிம். பஸ் கலவரத்தில் மாட்டிக் கொள்ள பஸ்ஸில் இருக்கும் முஸ்லிம்கள் வேட்டையாடப் படுகின்றனர். ஒரு ஆண் துணை வேண்டுமே என்ற முதல் எண்ணத்தில் சமஜோதிமாக மீனாட்சி எனும் நம் கதாநாயகி, சௌளத்திரி கையில் கைக்குழந்தையைக் கொடுத்து Mr.Iyer ஆக்கிவிடுகிறாள். கடைசிக் காட்சிவரை சௌளத்திரி ஐயராக நடிக்க வேண்டி வந்துவிடுகிறது.

ஆனால் கதை அதுவல்ல. எப்படி மீனாட்சி என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கு தன் ஜாதி பற்றிய அபிப்பிராயங்கள், முஸ்லிம் பற்றிய அபிப்பிராயங்கள், வாழ்வு பற்றிய அபிப்பிராயங்கள் இந்தப் பயணத்தில் மாறுகின்றன என்பதுதான் கதை.

விமர்சனகர்த்தாக்கள் அடிக்கடி "poetry in celluloid" என்ற பதத்தைப் பயன்படுத்துவர். புரியாவிடில் இப்படம் பாருங்கள். பொருள் புரிந்துவிடும். ஒரு எழுத்தாளன் என்ற அளவில் இப்படம் என்னுள் பெரும் பொறாமையைக் கிளப்பிவிட்டது. ஒரு ஆக்கம் செய்ய வேண்டுமெனில் இப்படியொரு ஆக்கம் செய்ய வேண்டும் என்று. கதை சிருஷ்டிகர்த்தா ஒருவர்தான். ஆனால் சினிமா ஒரு தொழிற்சாலை. இத்தனை பேர் இயக்கத்தில் பங்கு பெரும் போதும் இத்தகைய அழகு படைக்கப்படுகிறது என்னும் போது யார் மீது பொறாமைப்படுவது என்று தெரியவில்லை. படத்தின் இயக்குநர் அபர்னாசென். 100% வெற்றி இவருக்கு. இசை தபேலாப் பேரரசர் ஜாகிர் உசேன். அவர் இதில் பாடிவேறு இருக்கிறார். 90% மேல் மார்க்கு. படத்தின் ஆணிவேர் மீனாட்சியாக நடித்திருக்கும் கொன்கொனா சென் ஷர்மா. பெயர் தெரியாமல் படத்தைப் பார்த்தால் இது நம்ம ஊரு சாம்பாரு என்றுதான் நம்பிவிடுவோம். அப்படியொரு தமிழ் முகவெட்டு (பெங்காலிகளும், தமிழர்களும் ஓரினம் என்பது எனக்கொரு சம்சயம்). பேச்சோ..கேட்கவே வேண்டாம். அப்படியே தமிழ்ப்பெண் பேச்சு. இந்தப் பெங்காலிகள் என்னவேண்டுமானும் செய்வர். இளையராஜா இசையில் "உன்னைவிட இந்த உலகில் ஒசந்தது ஒண்ணுமில்ல" எனும் பாட்டைப் பாடியது ஒரு பெங்காலி. இன்னும் நம்பவே முடியவில்லை! நூத்துக்கு நூறு மார்க்கு. ராஜாவாக நடித்திருக்கும் ராகுல் போஸ் வெளுத்து வாங்குகிறார். Successful combination.படம் கவிதையாவது ஒரு நெகிழ்வான பொழுதில். இவள் மணமானவள்தான். மிகவும் conservative குடும்ப சூழலில் வளர்ந்தவள்தான். ஆனால், தான் முதலில் வெறுக்கும் ஒரு முஸ்லிம், போகப் போக தன் மனிதாபிமானத்தால், தன் மென்மையால், கனிவால் இவளைக் கவர இவள் கொஞ்சப் பொழுதேனும் Mrs.Iyer (அதாவது இப்போது வரித்துக் கொண்டிருக்கும் Mr.Iyer-ன் மனைவியாக) வாழமுற்படுவதுதான். அங்குதான் ஒரு ஊடுபாய்தல் நடக்கிறது. இதை ஒரு பெங்காலியால் மட்டுமே இவ்வளவு நளினமாக எடுக்கமுடியும். கொஞ்சம் கூட விரசமில்லாமல், மிக இயல்பாக அவள் காதலை வெளிப்படுத்துவது கவிதை. பேசும் கண்கள். இக்கதையில் கவிதையைக் காண்பது நாம் கடவுளைக் காண்பது போல்தான். நாம் வெறும் சநாதானிகளாக இருந்தால். அபிப்பிராய மூட்டையாக இருந்தால் கவிதையைக் காணவியலாது. [கமல் வசனம்தான் நினைவிற்கு வருகிறது: இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது]. உண்மையில் அவள் இப்படத்தில் தன்னுள் உள்ள 'மானுடம்' காணும் தரிசனமே அவளை உருக்கி காதலாக வெளிப்படுத்துகிறது. அது உடலுறவுக் காதல் அல்ல. அவ்வுணர்வின் அழகிய வெளிப்பாடு மட்டுமே. வார்த்தைகளில், கண்களில் உள்ளே குமுறும் காதல் ஒரு நீரோடை போல் தவழ்கிறது. ஆச்சர்யமில்லை, இப்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வாங்கித் தந்தது!

கவிதையைக் கொச்சைப் படுத்தவில்லை. கொல்கொத்தா வந்து மீனாட்சியையும், அவள் குழந்தையையும் அவள் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு ராஜா போகிறான். அவர்களுக்குள் ஏற்படும் சபலங்களைக் கூட சமூக இடைஞ்சல் முன்னமே தடுத்துவிடுகிறது. அதே போல், கடைசியிலும் 'திருமணம்' எனும் ஸ்தாபனம், அதற்கு மேல் ஒரு இஞ்ச் கூடப் போகவிடாமல் தடுத்துவிடுகிறது!

ஆனால், அத்தருணங்கள். அவை அரியவை. எப்போதாவதுதான் நிகழக்கூடியது. கண்ணனிடம் கோபியர் கொண்ட காதல் போல். வரம்புகள் மேவிய பொழுதுகள். ஒரு ஆன்மாவிற்கும், இன்னொரு ஆன்மாவிற்கும் பரஸ்பரம் நடக்கும் காதல். ஏனெனில் ஆன்மாவிற்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, சமூக நிர்பந்தம் கிடையாது.

இது இந்து-முஸ்லிம் ஒருங்கிணைப்பு முயற்சி அல்ல. அக்கலவரம் ஒரு புறச்சூழலை உருவாக்கும் உத்தி மட்டுமே. இல்லையெனில் நெகிழ்வான பல பொழுதுகள் இத்தம்பதியினருக்குக் கிடைத்திருக்காது.

வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அத்தருணங்களுக்குப் பயணப்பட சரியான சமயம்!

ஒன்பது ரூபாய் நோட்டு - படம்

நண்பர் மலைநாடன் இரண்டு படங்கள் சிபாரிசு செய்து மாதமாகிறது. இப்போதுதான் பார்க்க முடிந்தது. இரண்டாவது படம் ஒன்பது ரூபாய் நோட்டு.

தங்கர்பாச்சான் தேர்ந்த சிற்பியின் நுணுக்கத்துடன் படத்தை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் அற்புதம். 100% மண்ணின் மணம் வீசும் படம். இப்படியெல்லாம் கூட நிறைவான படங்களை நம்மால் எடுக்கமுடிகிறது!

பெரியாருக்குப் பிறகு சத்யராஜுக்கு இன்னொரு நிறைவான படம். எந்த சவுடாலும் இல்லாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் (ஆனாலும் ஒரு பிரேமில் பின்னால் எம்.ஜி.ஆர் படம் இருக்கிறது :-) அர்ச்சனா எங்கோ போய் விட்டார் நடிப்பில். கோபம் வருகிறது பாருங்கள் அவருக்கு. நாம வேட்டியை மடக்குவது போல் ஒரு ஆக்ரோஷத்தோடு முடியை சுருட்டுகிறாரே பார்ப்போம். கும்மென்று தமிழ் மணம்!!வைரமுத்துவின் ஒரு பாடல் நிறைவாக நிற்கிறது. இசை அருமை.

நிறைவான படம். நம் சந்ததியினருக்கு சிபாரிசு செய்ய வேண்டிய படம்!

கல்லூரி - சினிமாஇத்திரைப்படம் பார்த்த கையோடு எழுதுகிறேன்.

அருமையான படம். திறமையான இயக்கம். மிகவும் இயல்பான நடிப்பு. கிராமம் மெல்ல, மெல்ல கல்லூரிக்கு வரும் அவஸ்தை கதைக்கரு. 'அசால்டான' வசனம். ஒரே கிளப்பல், கலக்கல். நல்ல பாடல்கள்.

ஆனாலும் இரண்டு விஷயங்கள் நெருடுகின்றன.

1. தமிழ்க் கதாநாயகி என்பவள் "கட்டாயம்" சிவப்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியா? (அந்தப் பெண் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது வேறு விஷயம்).

2. படத்தின் முடிவு, தண்ணி அடித்தால் ஊறுகாயை "சுருக்கென்று" கடிக்க வேண்டும் என்று இருப்பது போல் ஒரு செயற்கைத் திணிப்பு. காதல் வென்று விடுகிறது! "சுபம்" என்று போட்டால் "சுருக்கென்று தைக்காது என்று இப்படியொரு முடிவா? கல்லூரி மாணவிகள் எரியூட்டப்பட்டது வெங்கொடுமை. இல்லையென்று சொல்லவில்லை. அதைத் தனிக்கருவாகவே படம் எடுத்திருக்கலாமே? ஏனோ இம்முடிவு செயற்கையானது என்று மனது சொல்கிறது.

பனிச் சிற்பக்காட்சி

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பனி பற்றி அதிகம் பேசமுடியாது. கவிஞர் நா.விச்வநாதன் எனக்கொருமுறை எழுதினார் "சார்! ரொம்ப பனியாப் போச்சு! சண்டை போட்டுக் கொண்டு போக வேண்டியதாப்போச்சு" என்று. அதுதான் நம் நாட்டுப் பனி அநுபவம்.

இங்கெல்லாம் அப்படியில்லை. பனி பெய்து ஊரைக் குளிர்விக்கும். அது சமயம் பனிச் சிற்ப வேலைகள் கூட நடக்கும். ஜப்பானின் ஹொகைதோவில்தான் இது மிகப்பிரபலம். ஆனால் சமீபத்தில் கொரியாவில் சோல் (Seoul) நகரிலும் பனிச் சிற்ப கண்காட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். இதோ கண்டு களியுங்கள்.

பேசும் படம் - 07

1960ல் களத்தூர் கண்ணம்மா வெளிவருகிறது. நம் தலைமுறையின் ஒரு அதிசயக் கலைஞனை இப்படம் அறிமுகப்படுத்துகிறது. இன்று 'உலக நாயகன்' என்று பெயர் பெற்று தன் தொழிலில் வெற்றிபெற எத்தகைய வேஷயங்களையும் எப்பாடு பட்டாவது செய்து சினிமாத் தொழிலிலும் செம்மை (professionalism) இருக்க வேண்டும் காட்டிவரும் கமலஹாசனை அறிமுகப்படுத்திய படம்!

1961ல் தமிழ் சினிமா உலகம் மறக்கமுடியாத காவியமான "பாசமலர்" வருகிறது. நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரும் நடித்தது. எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். பீம்சிங்கின் "ப" வரிசை தொடர்கிறது அவ்வாண்டில், பாவ மன்னிப்பு, பாலும் பழமும். அவ்வாண்டின் மிகச்சிறந்த படம் இயக்குநர் ஸ்ரீதரின் "தேன்நிலவு". ஜெமினி கணேசனைக் 'காதல் மன்னாக'க் காட்டும் படம். படம் மட்டுமல்ல பாட்டெல்லாம் தேன்! எக்காலத்திற்கும் இனிக்கும்.

1962-ல் பலே பாண்டியா, கொஞ்சும் சலங்கை, பட்டிணத்தார், போலீஸ்காரன் மகள் வருகின்றன. சிவாஜிக்கு காமெடி நன்றாக வரும். ஆனால் அவரை யாரும் அந்த ரோல்களில் நடிக்கவிடுவதில்லையென்று சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். பலே பாண்டியா காமெடி. எம்.ஆர்.ராதா, சிவாஜி காம்பினேசன் எப்போதும் ஒர்கவுட் ஆகும். அவ்வாண்டின் மிகச்சிறந்த 'ஹிட்' கொஞ்சும் சலங்கை. இதைப்போல் இன்னுமொரு படம் வராது. காரக்குறிச்சி அருணாசத்தின் நாதஸ்வரம், நடிகையர் திலகம் , ஜெமினி கணேசன். சூப்பர் படம். பட்டிணத்தார் டி.எம்.எஸ் பாட்டிற்காக எடுத்த படம். அப்போது பாடகர்களும், கவிஞர்களும் நடிகர்களானால்தான் பெருமை என்றிருந்த காலம். பின்னால் சீர்காழி, கண்ணதாசன் போன்றோரையும் விடாத வியாதி இது! போலீஸ்காரன் மகள் படத்தை பாட்டிற்காகப் பார்க்க வேண்டும். பி.பி.ஸ்ரீநிவாசின் "பொன் என்பேன், சிறுபூவென்பேன்" என்ற பாடல் திரை இசை உலகின் மகுடம்.

1963-ல் வெளிவந்த கற்பகம், கே.ஆர்.விஜயாவை இனம் காட்டிய படம். 'லவகுசா' இராமாயணத்தின் தொடர்ச்சி. நல்ல பாடல்கள் உள்ள படம். அவ்வாண்டின் சூப்பர் ஹிட், மீண்டும் ஸ்ரீதரின் "நெஞ்சம் மறப்பதில்லை".

1964-ல் வெளிவருகிறது வீணை இசைக்கலைஞர் எஸ்.பாலச்சந்தர் இயக்கிய "பொம்மை" என்ற படம். வித்தியாசமாக இயக்கியிருப்பார். அவ்வாண்டின் சூப்பர் ஹிட், மீண்டும் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை". இப்போது வரப்போகும், 'தசாவதாரம்' படத்தின் முன்மாதிரி 'நவராத்திரி' அவ்வாண்டில் வெளிவருகிறது. சும்மா சிவாஜியைப் பிழிஞ்சு எடுக்கிறதற்காக வந்த படங்கள். சுமார்தான். ஆயினும் சிவாஜிக்காகப் பார்க்கலாம். நடிகர் நாகேஷை முழுமையாய் இனம் காட்டிய படம் அவ்வாண்டின் 'சர்வர் சுந்தரம்'.

1965-ல் நெஞ்சில் நின்ற படம் கே.பாலச்சந்தரின் 'நீர்க்குமிழி". மீண்டும் நாகேஷுக்கு ஓர் வெற்றிப்படம்.

1966-ல் வருகிறது "Madras to Pondichery" என்ற முழுநீளக் காமெடிப்படம். அமெரிக்கப் படத்தின் காப்பி என்றாலும் நன்றாக ஓடிய படம். இந்த ஆண்டு "மேஜர் சுந்தர்ராஜன்" என்று பெயர் பெற்ற நடிகரை தமிழ் சினிமாவிற்கு இனம் காட்டிய கே.பாலச்சந்தரின் "மேஜர் சந்திரகாந்த்" வெளிவருகிறது. ஆயினும் அவ்வாண்டின் தேசிய விருது பெற்ற படம், இலக்கியவாதி ஜெயகாந்தன் எழுதி, இயக்கிய "யாருக்காக அழுதான்?" என்ற படம். ஜே.கே ஒரு பன்முகக்கலைஞன் என்று காட்டிய படம்.

1967-ல் ஒரு சஸ்பென்ஸ் கதை. பார்த்தவர்கள் யாரிடமும் முடிவைச் சொல்லக்கூடாது என்ற கண்டிஷனுடன்! நடிகர் ரவிச்சந்தருக்கு ஹிட்டான படம், "அதே கண்கள்". அவ்வாண்டின் சிறந்த காமெடி, கே.பாலச்சந்தரின் "பாமா விஜயம்"

1970-ல் வெளிவருகிறது, "காவியத்தலைவி". சௌகார் ஜானகி ஒரு தேர்ந்த நடிகை. ஆனாலும் அவர் காலத்தில் அவரை சாப்பிட்டு விழுங்கக்கூடிய ஒரு நடிகையர் பட்டாளமே இருந்தது. எனவே ஒரு சவாலாக எடுத்த படம் காவியத்தலைவி. கே.பாலச்சந்தர் இயக்கம். அவர் இப்படத்தில் வென்று இருக்கிறார்.

(இன்னும் எழுதனுமா? :-)

ஆகா! எஃப்-எம் தமிழிசைச் சேவை!

எப்படியோ தடிக்கி ஆஹா! FM 91.9 வலைக்குள் விழுந்துவிட்டேன். வாரக்கடைசியில் காலை 7-9 மணிவரை (ISI) கர்நாடக இசைச்சேவை செய்கிறார்கள். பிரபல இளம் கலைஞர்களை அழைத்து அவர்கள் இஷ்டத்திற்கு இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிறு நடத்தச் சொல்கிறார்கள். நான் கேட்ட சில நிகழ்ச்சிகள் அற்புதமாக இருந்தன. பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஒருவாரம் நடத்தினார். பாரதிக்குள்ள அதே நேர்மை, யார்க்கும் அஞ்சாக்குணம்! தமிழிலேயே பேசினார்! (பாருங்கள் இதற்கு ஆச்சர்யப்படும்படி தமிழகமாகிவிட்டது!). NRI நிகழ்ச்சிகள் பற்றி தீவிரமான விமர்சனம் வைத்தார் (எல்லோரும் குல்லாப் போடும் போது இவர் குரல் மட்டும் தனித்துக் கேட்டது). பிறகு ஒரு வாரம் முன்னாள் சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர் நடராஜன் அவர்கள் ஒரு ரசிகன் என்றளவில் அற்புதமான தேர்வுகளைத் தந்தார்.

இன்று சனி (05.01.2008) நான் முன்பு கேட்டறியாத இசைக்கலைஞர் சூர்யப் பிரகாஷ்! முதலில் கேட்ட போது ஆணா? பெண்ணா? என்று இனம் காணமுடியாத குரல். ஆனால், மனுஷன் (ஆண்தான்!) பாட ஆரம்பித்தால் பிச்சுக்கிட்டு போகுது (full blast). ரொம்ப வித்தியாசமான கலைஞர். அந்தக்காலத்து பாகவதர் பாட்டெல்லாம் எடுத்துவிட்டார்! காரணம் இவர் மதுரை ஜி.என்.பி பாரம்பரியத்தில் வருகிறார். இவரும் தனது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிச் சொன்னார். ஆஸ்திரேலியாவை இரண்டாம் வீடு என்று சொன்னார். பல கச்சேரிகள் முழுக்க முழுக்க (98%) தமிழ்க் கச்சேரிகளாக அமைந்துவிடுவதாய்ச் சொன்னார். அந்த 2 விழுக்காடு மும்மூர்த்திகளுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும் ஏனெனில் அவர்கள்தான் நமக்கு இவ்விசையைத் தந்தது என்றார். இதை ஆராயவே இவ்விடுகை.

மும்மூர்த்திகளில் இருவர் பிராமணர்களாகப் போய்விட்டனர். இவர்கள் முறையே தெலுங்கு, சமிஸ்கிருதத்தில் பாடிப் போயினர். மூன்றாமர் கன்னடத்துக்காரர். அவர் தாய் மொழியில் பாடிவிட்டார். தியாகபிரம்மமும் தன் தாய்மொழியில்தான் பாடினார். தீட்சதர் தந்தை மொழியில் (சமிஸ்கிருதத்தில்) பாடிவிட்டார். ஆனால், இவ்விசைக்கான ஆதாரம் தமிழ் மண்ணில் சங்கம் தொட்டு இருந்து வருவதை சிலப்பதிகாரம் செப்பும். இந்த 2000 வருடப் பாரம்பரியத்தில் ஒரு முன்னூறு ஆண்டுப் பழமைதான் இவர்கள் கொண்டாடும் மும்மூர்த்திகள்.

இத்தலைமுறை சங்கீதக்காரர்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள். எனவே கொஞ்சம் சரித்திரமும் படித்துவிட்டு மும்மூர்த்திகளை விட்டால் கர்நாடக இசையே இல்லை என்று எண்ணும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு தியாகய்யர் மீதுள்ள அபிமானத்தால், குரு பக்தியால் உண்மையை மறக்கக்கூடாது. பிராமண சமூகம் தன் தமிழ் வேர் மூலத்தைக் கண்டுணர அமைந்திருக்கும் நல்ல சமயம் இது. சேஷகோபாலன் கலிபோர்னியா போய் 'சிலப்பதிகாரம்' பாடுகிறார். சுதா ரகுநாதன் ஈழத்தமிழர்களுக்காக முழுக்க முழுக்க முருகன் மீதான தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுகிறார். இந்நிலை ரசிகன் கேட்டுப்பாடும் நிலை. இது மாறி அவர்களாகவே தம் வேர் மூலமறிந்து தமிழ்ப் பாடல் பாட வேண்டும். சங்கத்தில் 'பார்ப்பன வாகை' என்றே உண்டு. பரிபாடல் முழுவதும் ஸ்ரீஹரி பாடல்களே! விட்டு சித்தரும், தொண்டரடிப்பொடியும், ஆண்டாளும் தமிழ்ப்பண்களில்தான் தம் இசைக்கவிதைகளை யாத்துள்ளனர். பின்னால் பாரதி, ஊத்துக்காடு, பாபநாசம் சிவன் என்று எத்தனை பேர் தமிழிசை யாத்துள்ளனர். தமிழில் பாடுவது என்று முடிவுசெய்துவிட்டால் நம்மிடம் இல்லாத கீர்த்தனங்களா? நாலாயிரம் முழுவதும் பாடலாமே! சும்மா, மார்கழிக்கு ரெண்டு பாட்டு, கச்சேரி முடிவில் துக்கடா என்று தமிழ்ப் பிரபந்தங்களைப் பாடும் பழக்கத்தை மாற்றி, முழுக்க, முழுக்க தமிழ்க் கச்சேரிகள் செய்ய வேண்டும். கர்நாடக இசையிலிருந்து பிரிந்ததுதான் வடநாட்டில் பயிலப்படும் "துருபத்" எனும் இசை. அதற்காக அவர்கள் தமிழில் பாடுவதில்லை. ஹிந்தியில்தான் பாடுகின்றனர். தமிழில் பாடும் போது பாடுபவருக்கும் புரிகிறது, கேட்பவருக்கும் புரிகிறது. இருந்தும் ஏன்? புரியாத மொழியில் 'சம்பிரதாயம்' என்பதற்காக மட்டும் பாட வேண்டும்? பிறமொழிப் பாடல்களைத் துக்கடாவாகப் பாடினால் அடுக்காதோ?

நிறைய மாறிவருகிறது. இன்னும் முழுமையாய் மாற வேண்டும். நம் இசைக்கலைஞர்கள் செவி சாய்க்க வேண்டும்!

இக்கட்டுரை வாசித்ததற்காக உங்களுக்குப் பரிசு இதோ!
பார்க்கடல் அலைமேலே! என்ற அற்புதமான ராகமாலிகை!! (சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவது ஞாபகத்திற்கு வரலாம். அதே ராகங்கள். ஏறக்குறைய அதே மெட்டு)