பேசும் படம் - 07

1960ல் களத்தூர் கண்ணம்மா வெளிவருகிறது. நம் தலைமுறையின் ஒரு அதிசயக் கலைஞனை இப்படம் அறிமுகப்படுத்துகிறது. இன்று 'உலக நாயகன்' என்று பெயர் பெற்று தன் தொழிலில் வெற்றிபெற எத்தகைய வேஷயங்களையும் எப்பாடு பட்டாவது செய்து சினிமாத் தொழிலிலும் செம்மை (professionalism) இருக்க வேண்டும் காட்டிவரும் கமலஹாசனை அறிமுகப்படுத்திய படம்!

1961ல் தமிழ் சினிமா உலகம் மறக்கமுடியாத காவியமான "பாசமலர்" வருகிறது. நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரும் நடித்தது. எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். பீம்சிங்கின் "ப" வரிசை தொடர்கிறது அவ்வாண்டில், பாவ மன்னிப்பு, பாலும் பழமும். அவ்வாண்டின் மிகச்சிறந்த படம் இயக்குநர் ஸ்ரீதரின் "தேன்நிலவு". ஜெமினி கணேசனைக் 'காதல் மன்னாக'க் காட்டும் படம். படம் மட்டுமல்ல பாட்டெல்லாம் தேன்! எக்காலத்திற்கும் இனிக்கும்.

1962-ல் பலே பாண்டியா, கொஞ்சும் சலங்கை, பட்டிணத்தார், போலீஸ்காரன் மகள் வருகின்றன. சிவாஜிக்கு காமெடி நன்றாக வரும். ஆனால் அவரை யாரும் அந்த ரோல்களில் நடிக்கவிடுவதில்லையென்று சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். பலே பாண்டியா காமெடி. எம்.ஆர்.ராதா, சிவாஜி காம்பினேசன் எப்போதும் ஒர்கவுட் ஆகும். அவ்வாண்டின் மிகச்சிறந்த 'ஹிட்' கொஞ்சும் சலங்கை. இதைப்போல் இன்னுமொரு படம் வராது. காரக்குறிச்சி அருணாசத்தின் நாதஸ்வரம், நடிகையர் திலகம் , ஜெமினி கணேசன். சூப்பர் படம். பட்டிணத்தார் டி.எம்.எஸ் பாட்டிற்காக எடுத்த படம். அப்போது பாடகர்களும், கவிஞர்களும் நடிகர்களானால்தான் பெருமை என்றிருந்த காலம். பின்னால் சீர்காழி, கண்ணதாசன் போன்றோரையும் விடாத வியாதி இது! போலீஸ்காரன் மகள் படத்தை பாட்டிற்காகப் பார்க்க வேண்டும். பி.பி.ஸ்ரீநிவாசின் "பொன் என்பேன், சிறுபூவென்பேன்" என்ற பாடல் திரை இசை உலகின் மகுடம்.

1963-ல் வெளிவந்த கற்பகம், கே.ஆர்.விஜயாவை இனம் காட்டிய படம். 'லவகுசா' இராமாயணத்தின் தொடர்ச்சி. நல்ல பாடல்கள் உள்ள படம். அவ்வாண்டின் சூப்பர் ஹிட், மீண்டும் ஸ்ரீதரின் "நெஞ்சம் மறப்பதில்லை".

1964-ல் வெளிவருகிறது வீணை இசைக்கலைஞர் எஸ்.பாலச்சந்தர் இயக்கிய "பொம்மை" என்ற படம். வித்தியாசமாக இயக்கியிருப்பார். அவ்வாண்டின் சூப்பர் ஹிட், மீண்டும் ஸ்ரீதரின் "காதலிக்க நேரமில்லை". இப்போது வரப்போகும், 'தசாவதாரம்' படத்தின் முன்மாதிரி 'நவராத்திரி' அவ்வாண்டில் வெளிவருகிறது. சும்மா சிவாஜியைப் பிழிஞ்சு எடுக்கிறதற்காக வந்த படங்கள். சுமார்தான். ஆயினும் சிவாஜிக்காகப் பார்க்கலாம். நடிகர் நாகேஷை முழுமையாய் இனம் காட்டிய படம் அவ்வாண்டின் 'சர்வர் சுந்தரம்'.

1965-ல் நெஞ்சில் நின்ற படம் கே.பாலச்சந்தரின் 'நீர்க்குமிழி". மீண்டும் நாகேஷுக்கு ஓர் வெற்றிப்படம்.

1966-ல் வருகிறது "Madras to Pondichery" என்ற முழுநீளக் காமெடிப்படம். அமெரிக்கப் படத்தின் காப்பி என்றாலும் நன்றாக ஓடிய படம். இந்த ஆண்டு "மேஜர் சுந்தர்ராஜன்" என்று பெயர் பெற்ற நடிகரை தமிழ் சினிமாவிற்கு இனம் காட்டிய கே.பாலச்சந்தரின் "மேஜர் சந்திரகாந்த்" வெளிவருகிறது. ஆயினும் அவ்வாண்டின் தேசிய விருது பெற்ற படம், இலக்கியவாதி ஜெயகாந்தன் எழுதி, இயக்கிய "யாருக்காக அழுதான்?" என்ற படம். ஜே.கே ஒரு பன்முகக்கலைஞன் என்று காட்டிய படம்.

1967-ல் ஒரு சஸ்பென்ஸ் கதை. பார்த்தவர்கள் யாரிடமும் முடிவைச் சொல்லக்கூடாது என்ற கண்டிஷனுடன்! நடிகர் ரவிச்சந்தருக்கு ஹிட்டான படம், "அதே கண்கள்". அவ்வாண்டின் சிறந்த காமெடி, கே.பாலச்சந்தரின் "பாமா விஜயம்"

1970-ல் வெளிவருகிறது, "காவியத்தலைவி". சௌகார் ஜானகி ஒரு தேர்ந்த நடிகை. ஆனாலும் அவர் காலத்தில் அவரை சாப்பிட்டு விழுங்கக்கூடிய ஒரு நடிகையர் பட்டாளமே இருந்தது. எனவே ஒரு சவாலாக எடுத்த படம் காவியத்தலைவி. கே.பாலச்சந்தர் இயக்கம். அவர் இப்படத்தில் வென்று இருக்கிறார்.

(இன்னும் எழுதனுமா? :-)

4 பின்னூட்டங்கள்:

Sivakumar 1/07/2008 10:46:00 PM

Yes Pls continue..!!
Thnks.

I remember your sang few lines of 'Ponnenben sirupoo enben' during ur visit to Ulsan deepawali... from then I had been singing that song quite often.
if u remember me (the one who made noise with guitar)

N.Kannan 1/07/2008 10:53:00 PM

வாங்க சிவகுமார்! என்ன அவ்வளவு அழகாக அன்று கிடார் வாசித்துவிட்டு வெறும் 'சத்தம்' என்கிறீர்கள்!

அந்தபாடல்! அடடா! அந்தக்காலத்து ஜானகி பாடல்களெல்லாம் அவ்வளவு அழகாக அமைந்துள்ளன. பி.பி.எஸ், ஜானகி இருவருக்கும் உச்ச ஸ்தாயியை விட அதம ஸ்தாயியில் இன்னும் அழகாகப் பாட வரும். பல பாடல்களில் இளையராஜா இந்த உத்தியைப் பயன்படுத்தி அமர கீதங்கள் தந்துள்ளார். அவருக்கு முன்மாதிரித்தான் "போலீஸ்காரன் மகள்" பாடல். இப்படியானதொரு பாடலை இன்றுவரை கேட்டதில்லை! என்ன நுணுக்கம்!

சரி..மேற்கொண்டு எழுதுவோம் :-)

Sambar Vadai 1/09/2008 08:30:00 PM

தொடருங்கள் கண்ணன் சார். இந்த லிஸ்ட் நிச்சயம் தேவை.,

N.Kannan 1/09/2008 08:46:00 PM

சரி! தொடர்கிறேன்!
இன்னும் சில தசாம்சங்கள்.
எனக்கே பிரம்மிப்பாக இருக்கு எவ்வளவு படம் பார்த்திருக்கிறேன் என்று :-)