ஆகா! எஃப்-எம் தமிழிசைச் சேவை!

எப்படியோ தடிக்கி ஆஹா! FM 91.9 வலைக்குள் விழுந்துவிட்டேன். வாரக்கடைசியில் காலை 7-9 மணிவரை (ISI) கர்நாடக இசைச்சேவை செய்கிறார்கள். பிரபல இளம் கலைஞர்களை அழைத்து அவர்கள் இஷ்டத்திற்கு இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிறு நடத்தச் சொல்கிறார்கள். நான் கேட்ட சில நிகழ்ச்சிகள் அற்புதமாக இருந்தன. பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஒருவாரம் நடத்தினார். பாரதிக்குள்ள அதே நேர்மை, யார்க்கும் அஞ்சாக்குணம்! தமிழிலேயே பேசினார்! (பாருங்கள் இதற்கு ஆச்சர்யப்படும்படி தமிழகமாகிவிட்டது!). NRI நிகழ்ச்சிகள் பற்றி தீவிரமான விமர்சனம் வைத்தார் (எல்லோரும் குல்லாப் போடும் போது இவர் குரல் மட்டும் தனித்துக் கேட்டது). பிறகு ஒரு வாரம் முன்னாள் சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர் நடராஜன் அவர்கள் ஒரு ரசிகன் என்றளவில் அற்புதமான தேர்வுகளைத் தந்தார்.

இன்று சனி (05.01.2008) நான் முன்பு கேட்டறியாத இசைக்கலைஞர் சூர்யப் பிரகாஷ்! முதலில் கேட்ட போது ஆணா? பெண்ணா? என்று இனம் காணமுடியாத குரல். ஆனால், மனுஷன் (ஆண்தான்!) பாட ஆரம்பித்தால் பிச்சுக்கிட்டு போகுது (full blast). ரொம்ப வித்தியாசமான கலைஞர். அந்தக்காலத்து பாகவதர் பாட்டெல்லாம் எடுத்துவிட்டார்! காரணம் இவர் மதுரை ஜி.என்.பி பாரம்பரியத்தில் வருகிறார். இவரும் தனது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிச் சொன்னார். ஆஸ்திரேலியாவை இரண்டாம் வீடு என்று சொன்னார். பல கச்சேரிகள் முழுக்க முழுக்க (98%) தமிழ்க் கச்சேரிகளாக அமைந்துவிடுவதாய்ச் சொன்னார். அந்த 2 விழுக்காடு மும்மூர்த்திகளுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும் ஏனெனில் அவர்கள்தான் நமக்கு இவ்விசையைத் தந்தது என்றார். இதை ஆராயவே இவ்விடுகை.

மும்மூர்த்திகளில் இருவர் பிராமணர்களாகப் போய்விட்டனர். இவர்கள் முறையே தெலுங்கு, சமிஸ்கிருதத்தில் பாடிப் போயினர். மூன்றாமர் கன்னடத்துக்காரர். அவர் தாய் மொழியில் பாடிவிட்டார். தியாகபிரம்மமும் தன் தாய்மொழியில்தான் பாடினார். தீட்சதர் தந்தை மொழியில் (சமிஸ்கிருதத்தில்) பாடிவிட்டார். ஆனால், இவ்விசைக்கான ஆதாரம் தமிழ் மண்ணில் சங்கம் தொட்டு இருந்து வருவதை சிலப்பதிகாரம் செப்பும். இந்த 2000 வருடப் பாரம்பரியத்தில் ஒரு முன்னூறு ஆண்டுப் பழமைதான் இவர்கள் கொண்டாடும் மும்மூர்த்திகள்.

இத்தலைமுறை சங்கீதக்காரர்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள். எனவே கொஞ்சம் சரித்திரமும் படித்துவிட்டு மும்மூர்த்திகளை விட்டால் கர்நாடக இசையே இல்லை என்று எண்ணும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். நமக்கு தியாகய்யர் மீதுள்ள அபிமானத்தால், குரு பக்தியால் உண்மையை மறக்கக்கூடாது. பிராமண சமூகம் தன் தமிழ் வேர் மூலத்தைக் கண்டுணர அமைந்திருக்கும் நல்ல சமயம் இது. சேஷகோபாலன் கலிபோர்னியா போய் 'சிலப்பதிகாரம்' பாடுகிறார். சுதா ரகுநாதன் ஈழத்தமிழர்களுக்காக முழுக்க முழுக்க முருகன் மீதான தமிழ்க் கீர்த்தனங்களைப் பாடுகிறார். இந்நிலை ரசிகன் கேட்டுப்பாடும் நிலை. இது மாறி அவர்களாகவே தம் வேர் மூலமறிந்து தமிழ்ப் பாடல் பாட வேண்டும். சங்கத்தில் 'பார்ப்பன வாகை' என்றே உண்டு. பரிபாடல் முழுவதும் ஸ்ரீஹரி பாடல்களே! விட்டு சித்தரும், தொண்டரடிப்பொடியும், ஆண்டாளும் தமிழ்ப்பண்களில்தான் தம் இசைக்கவிதைகளை யாத்துள்ளனர். பின்னால் பாரதி, ஊத்துக்காடு, பாபநாசம் சிவன் என்று எத்தனை பேர் தமிழிசை யாத்துள்ளனர். தமிழில் பாடுவது என்று முடிவுசெய்துவிட்டால் நம்மிடம் இல்லாத கீர்த்தனங்களா? நாலாயிரம் முழுவதும் பாடலாமே! சும்மா, மார்கழிக்கு ரெண்டு பாட்டு, கச்சேரி முடிவில் துக்கடா என்று தமிழ்ப் பிரபந்தங்களைப் பாடும் பழக்கத்தை மாற்றி, முழுக்க, முழுக்க தமிழ்க் கச்சேரிகள் செய்ய வேண்டும். கர்நாடக இசையிலிருந்து பிரிந்ததுதான் வடநாட்டில் பயிலப்படும் "துருபத்" எனும் இசை. அதற்காக அவர்கள் தமிழில் பாடுவதில்லை. ஹிந்தியில்தான் பாடுகின்றனர். தமிழில் பாடும் போது பாடுபவருக்கும் புரிகிறது, கேட்பவருக்கும் புரிகிறது. இருந்தும் ஏன்? புரியாத மொழியில் 'சம்பிரதாயம்' என்பதற்காக மட்டும் பாட வேண்டும்? பிறமொழிப் பாடல்களைத் துக்கடாவாகப் பாடினால் அடுக்காதோ?

நிறைய மாறிவருகிறது. இன்னும் முழுமையாய் மாற வேண்டும். நம் இசைக்கலைஞர்கள் செவி சாய்க்க வேண்டும்!

இக்கட்டுரை வாசித்ததற்காக உங்களுக்குப் பரிசு இதோ!
பார்க்கடல் அலைமேலே! என்ற அற்புதமான ராகமாலிகை!! (சம்பூர்ண ராமாயணம் படத்தில் இராவணன் பாடுவது ஞாபகத்திற்கு வரலாம். அதே ராகங்கள். ஏறக்குறைய அதே மெட்டு)

6 பின்னூட்டங்கள்:

DHIVAKAR 1/05/2008 07:19:00 PM

கண்ணன்,
உங்கள் கருத்தும் என் கருத்தும் ஆச்ச்சரியமாக ஒத்துப்போகிறது. நான் தெலுங்கு தேசத்தில் இருப்பவன். தெலுங்கு மொழியை இவர்கள் படுத்தும் பாடு - சமயத்தில் எத்தனை பெரிய பாடகரானாலும் சரி.. வருத்தப்படவேண்டிய விஷயம்தான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஏதாவது விமரிசித்தால் நம்மை ஞான சூனியம் என்று பட்டம் வேறு கொடுத்துவிடுவார்கள்.

சரி, தெலுங்கு மொழி போகட்டும். தமிழில் பாடும்போதும் கூட இவர்களால் தமிழ் வார்த்தையை ஏன் வேண்டுமென்றே ஒரு மாதிரி இழுத்துப் பாடவேண்டும் (அதுவும் கேலி செய்வது போல) என்று புரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் கேட்கும் ரசிகர்களுக்கு மொழி புரிந்து விட்டால் தங்கள் தவறு புரிந்துவிடுமோ என பயப்படுகிறார்களோ இவர்கள்?

ஒவ்வொரு முறையும் சங்கீதக் கச்சேரி கேட்கும்பொதெல்லாம் என் நினைவில் ஒரு கேள்வி தொக்கி நிற்கும்.

இன்னும் எத்தனை நாள் புரியாத பாஷையில் பாட்டுப் பாடி இப்படி காலத்தை ஓட்டப்போகிறார்கள்...

N.Kannan 1/05/2008 07:56:00 PM

நன்றி திவாகர்!

அன்ங்கிலத்தில் சொல்வது போல் "enough is enough" என்று சொல்லிவிட்டு இந்த சங்கீத கோஷ்டி தமிழுக்கு மாற வேண்டும். அந்நிய பாஷைதான் வேண்டுமெனில் பேசாமல் ஆங்கில போப் இசைப்பாடல்களைப் பாடப் போய்விடலாம். அதிலே இன்னும் துட்டு!

Sivakumar 1/07/2008 11:24:00 PM

திரு கண்ணன் அவர்களே

ஐயம்..!!

கர்னாடக இசையின் வரலாறு பற்றி அறிய ஆவல். அதைப்பற்றி ஏதேனும் எழுத்து(write up) இருந்தால் எனக்கு தெறியப்படுத்தவும்.
கர்னாடக இசையில் தமிழ் பாடல் பாடுவது (தான்) தமிழிசையா? அப்படி என்றால் தமிழிசையும் தெலுகு இசையும் ஒன்று தானா?
கர்னாடக இசையில் தமிழ் பாடல்கள் பாடுவது வரவேற்க்கத்தக்கது தான் கேட்பவர்களுக்கு பாடல் புரியவேண்டும்.
எனது ஐயம் தீர கைகொடுங்கள். கர்னாடக இசை தான் தமிழிசையா?

N.Kannan 1/07/2008 11:30:00 PM

கர்நாடக இசை என்பதே தமிழ் இசைதான். செவ்விலக்கியங்கள் அனைத்தும் இசைக்கவிதைகள்தான். அவற்றிற்குப் பண் (ராகம்) உண்டு. தமிழ் இசையின் நவீன உருதான் "கர்நாடக இசை" என்பது. இது ஏதோ "தெலுங்கு" சமாச்சாரம் என்ற அளவிற்கு இந்த இசைக்கலைஞர்கள் இதைக் குழப்பி வைத்திருக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் இவ்விடுகையின் நோக்கம்.

மற்றபடி கர்நாடக இசை பற்றி ஏராளமான ஆங்கில வலைப்பக்கங்களும், வலைப்பதிவுகளுமுண்டு. ஒன்று தெலுங்கு இல்லையெனில் ஆங்கிலம் என்று அல்லாடுகிறது தமிழ் மனம்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) 1/08/2008 08:39:00 PM

அண்ணா!
அழகாக ஆழமாக விடயத்தை அன்பாகவும் கூறவேண்டியவர்களுக்குக் கூறியுள்ளீர்கள். இவர்கள் முழுத் தமிழ்க் கச்சேரி கூட செய்யவேண்டாம். அரைத் தமிழ்க் கச்சேரி செய்தாலே போதும்.மொழி புரியாவிடிலும் மும்மூர்த்திகளிலும் உருக்கம் உண்டு.அதனால் ஒன்று இரண்டு பாடட்டும்...தமிழில்
பாடப் பாடல் இல்லை எனபதுபோல் கங்கணம் கட்டுவதும்; சமயம் கிடைக்கும் போது பேட்டிகளிலும்
கூறுவதுமே மிக வேதனை.
ஆனாலும் இப்போ நித்யசிறீ;சஞ்சய் போன்றோர் மாற்றம் கொண்டுவருகிறார்கள்.
உங்கள் இந்தக் கட்டுரையை அவர்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

ஷைலஜா 1/10/2008 04:41:00 PM

பாற்கடல் அலை நெஞ்சின் அலைகளாய் நிரந்தரமாய் தங்கிவிட்டது.அருமை கண்ணன்!