கல்லூரி - சினிமாஇத்திரைப்படம் பார்த்த கையோடு எழுதுகிறேன்.

அருமையான படம். திறமையான இயக்கம். மிகவும் இயல்பான நடிப்பு. கிராமம் மெல்ல, மெல்ல கல்லூரிக்கு வரும் அவஸ்தை கதைக்கரு. 'அசால்டான' வசனம். ஒரே கிளப்பல், கலக்கல். நல்ல பாடல்கள்.

ஆனாலும் இரண்டு விஷயங்கள் நெருடுகின்றன.

1. தமிழ்க் கதாநாயகி என்பவள் "கட்டாயம்" சிவப்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியா? (அந்தப் பெண் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது வேறு விஷயம்).

2. படத்தின் முடிவு, தண்ணி அடித்தால் ஊறுகாயை "சுருக்கென்று" கடிக்க வேண்டும் என்று இருப்பது போல் ஒரு செயற்கைத் திணிப்பு. காதல் வென்று விடுகிறது! "சுபம்" என்று போட்டால் "சுருக்கென்று தைக்காது என்று இப்படியொரு முடிவா? கல்லூரி மாணவிகள் எரியூட்டப்பட்டது வெங்கொடுமை. இல்லையென்று சொல்லவில்லை. அதைத் தனிக்கருவாகவே படம் எடுத்திருக்கலாமே? ஏனோ இம்முடிவு செயற்கையானது என்று மனது சொல்கிறது.

4 பின்னூட்டங்கள்:

தருமி 1/19/2008 01:10:00 AM

நாவல், சிறுகதை இரண்டிலும் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும். முன்னதில் எல்லா காரண காரியங்கள் (லாஜிக்) முற்றாக முடிந்ததாக இருக்க வேண்டும். சிறுகதை ஏதோ ஒரு முனையில் (பாய்ண்ட்) டக்கென்று முடியலாம். இந்தப் படத்தின் கதை ஒரு சிறுகதையின் முடிவினை ஒத்துள்ளது.

-இப்படி சொன்னால் உங்கள் வாதம் என்ன?

N.Kannan 1/19/2008 09:12:00 AM

தருமிசார்:

மிகச் சரியான கணிப்பு. அந்த பஸ்ஸை மறித்தவுடன் எனக்குப் புரிந்துவிட்டது. இது சிறுகதை முடிவுசித்தரிப்புன் என்று. ஒரு கதாசிரியனாக இருப்பதில் உள்ள சின்ன நஷ்டம் பாதிப்படத்திலேயே கதை எப்படிப் போகும் என்று தெரிந்துவிடுகிறது (அது ஆங்கிலப்படமாக இருந்தாலும் சரி!).

கல்லூரி மிக பிரம்மிப்பான வாழ்வுச் சித்தரிப்பு. எங்கிருந்து இப்படியொரு நடிகர் தேர்வு? எவ்வளவு நுணுக்கமான காட்சி அமைப்பு, இயக்கம். படத்தை சூப்பர்லேடிவ்வில் சொல்ல வேண்டியிருக்க முடிவு உதைக்கிறது!

ஒருவகையில் கே.பாலச்சந்தர் போல் மரணத்தை 'என்றும் சமன்படுத்த முடியாத இந்திய வாழ்வியலுக்கான' முடிவாக இயக்குநர் எண்ணுகிறார் என்று தோன்றுகிறது. (பெண்களை எரித்தவன் தமிழன் ஆனால் பழியைத் தெலுங்கர் மீது போடுவதேனோ?)

சர்வதேச திரைப்படத் தேர்விற்கு அனுப்பினால் இப்படம் பரிசு வெல்லும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) 1/19/2008 09:31:00 AM

அண்ணா!
எனக்கும் மிகப் பிடித்த படம்.
கதாநாயகி வேற்றுமாநிலப் பெண் என்பது போல் காட்சி நகருவதால் இந்த நிறப் பெண் தேர்வோ,ஆனாலும்
நல்ல வீட்டுப் பாங்கான தோற்றத் தேர்வு.
நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களைச் சொல்ல கடைசி பஸ்
எரிப்புக் காட்சியோ..
எனினும் நல்ல படம் வெகுநாட்களின்
பின் பார்த்த திருப்தி.
அனைவரும் பாராட்டுக்குரியோர்.

N.Kannan 1/19/2008 09:36:00 AM

யோகன்: இப்படத்தில் சில மறைவான சமூகப் பிரச்சனைகள் பேசப்படுகின்றன. கதாநாயகி தமிழ் ஐயங்கார் வீட்டுப் பெண். அவளுக்கு கல்லுடைக்கும் குடும்பத்துப் பையன் மேல் காதல் வருகிறது. படம் முழுவதும் யதார்த்தமாக எடுத்தவருக்கு இக்காதலுக்கு எப்படி முடிவு சொல்வது என்று தெரியவில்லை. சாவு பிரச்சனையை தீர்த்து விட்டது!!

வர்க்க அரசியலும் படத்திலுண்டு.