Mr. and Mrs. Iyer - திரைப்படம்

சினிமா என்பது நம்ப வைக்கும் கலை. ஒரு பிம்பத்தைக் காட்டி, பெயர் வைத்து, பெயருக்குப் பின்னால் ஒரு கதை சொல்லிவிட்டால் போதும். நாம் நம்பி சினிமாவில் ஊறிப்போய்விடுவோம். காட்சியில் மயங்கி கண் கலங்குவோரும் உண்டு. இந்தக் கலை சினிமாப் பார்க்கும் போது மட்டும் நடப்பதல்ல. நிஜ வாழ்வும் மிகச் சரியாக சினிமா போலவே நடப்பதுதான் அதிசயம்!

பிறந்தவுடன் நமக்கொரு பெயர் சூட்டுகின்றனர். சாகும்வரை அப்பெயரை நம்பி அதாகவே வாழ்ந்து முடித்துவிடுகிறோம். தாய் பாலூட்டும் போது உறவுகளைச் சுட்டுகிறாள். அது நெஞ்சில் அப்படியே பதிந்து விடுகிறது. நம்மைப் பற்றிய பிம்பம் உருவாகும் போதே மற்றவரைப் பற்றிய பிம்பமும் கூடவே உருவாகிறது. பிம்பங்களுக்கு அபிப்ராயம் ஆதாரம். முஸ்லிம் என்றால் நமக்கொரு பிம்பம். கிருஸ்தவன் என்றால் ஒரு பிம்பம். பின் ஜாதிகள் பற்றிய பிம்பங்கள். இப்படி நாம் அபிப்பிராயங்களினால் கட்டிய உலகில் அதை அப்படியே நம்பி வாழ்ந்து முடித்து விடுகிறோம்.

சினிமா நம்மைக் கவர்வதற்குக் காரணமே அது ஒரு நிழல் உலகை நம் கண் முன்னே வைப்பதுதான். நாம் கனவுகள் அற்றவர்களாக இருந்திருந்தால் சினிமாகூட இவ்வளவு ருசிக்காது என்று தோன்றுகிறது. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கனவில் ஒரு சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது. சினிமா ஒரு பிரம்மாண்டமான பிரம்மலோகம். அங்கு எதை, எது வேண்டுமானாலும் மாற்றுவார்கள். ஆக்குவார்கள், சினிமா எடுக்கும் வரை காப்பர், பின் அழிப்பர். முத்தொழிலும் நடைபெறும் உலகமது.

Mr. and Mrs. Iyer என்ற படம் பார்த்தேன். 2002 வந்து பல பரிசுகளைத் தட்டிச் சென்ற படம். இதுவொரு தமிழ்ப்படம்தான்! ஏனெனில் இதன் தாய்மொழி தமிழ் :-) ஆனால் வங்காள தேசத்தில் நடக்கிறது. பல இந்திய மொழிகள் கலந்து, இந்திய ஆங்கிலம் துணை புரிய கதை நகர்கிறது. எனவே இதுவொரு இந்தியப்படம். ஆனால், படம் அதையும் தாண்டி "மானுடம்" எனும் புனிதம் பற்றிப் பேசுவதால் இதுவொரு உலகப்படம்.

கதைக்கரு ஒரு பயணம். ஒரு குழந்தையுடன் ஒரு தமிழ்ப் பெண் தன் பெற்றோர் வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குப் போகிறாள். பயணத்தில் எல்லா ரக இந்தியர்களும் உள்ளனர். சீக்கியர், பெங்காலி, முஸ்லிம், யூதர், ஐயர் (தமிழ்நாடு மற்றும் வடநாடு) இப்படி. பஸ் போகும் வழியில் முஸ்லிம்-இந்துக் கலவரம் வந்துவிடுகிறது. இவளுக்குத் துணையாக கொல்கொத்தா வரை வரும் 'ராஜா' உண்மையில் சௌளத்திரி என்ற பெயர் கொண்ட முஸ்லிம். பஸ் கலவரத்தில் மாட்டிக் கொள்ள பஸ்ஸில் இருக்கும் முஸ்லிம்கள் வேட்டையாடப் படுகின்றனர். ஒரு ஆண் துணை வேண்டுமே என்ற முதல் எண்ணத்தில் சமஜோதிமாக மீனாட்சி எனும் நம் கதாநாயகி, சௌளத்திரி கையில் கைக்குழந்தையைக் கொடுத்து Mr.Iyer ஆக்கிவிடுகிறாள். கடைசிக் காட்சிவரை சௌளத்திரி ஐயராக நடிக்க வேண்டி வந்துவிடுகிறது.

ஆனால் கதை அதுவல்ல. எப்படி மீனாட்சி என்ற ஐயர் வீட்டுப் பெண்ணிற்கு தன் ஜாதி பற்றிய அபிப்பிராயங்கள், முஸ்லிம் பற்றிய அபிப்பிராயங்கள், வாழ்வு பற்றிய அபிப்பிராயங்கள் இந்தப் பயணத்தில் மாறுகின்றன என்பதுதான் கதை.

விமர்சனகர்த்தாக்கள் அடிக்கடி "poetry in celluloid" என்ற பதத்தைப் பயன்படுத்துவர். புரியாவிடில் இப்படம் பாருங்கள். பொருள் புரிந்துவிடும். ஒரு எழுத்தாளன் என்ற அளவில் இப்படம் என்னுள் பெரும் பொறாமையைக் கிளப்பிவிட்டது. ஒரு ஆக்கம் செய்ய வேண்டுமெனில் இப்படியொரு ஆக்கம் செய்ய வேண்டும் என்று. கதை சிருஷ்டிகர்த்தா ஒருவர்தான். ஆனால் சினிமா ஒரு தொழிற்சாலை. இத்தனை பேர் இயக்கத்தில் பங்கு பெரும் போதும் இத்தகைய அழகு படைக்கப்படுகிறது என்னும் போது யார் மீது பொறாமைப்படுவது என்று தெரியவில்லை. படத்தின் இயக்குநர் அபர்னாசென். 100% வெற்றி இவருக்கு. இசை தபேலாப் பேரரசர் ஜாகிர் உசேன். அவர் இதில் பாடிவேறு இருக்கிறார். 90% மேல் மார்க்கு. படத்தின் ஆணிவேர் மீனாட்சியாக நடித்திருக்கும் கொன்கொனா சென் ஷர்மா. பெயர் தெரியாமல் படத்தைப் பார்த்தால் இது நம்ம ஊரு சாம்பாரு என்றுதான் நம்பிவிடுவோம். அப்படியொரு தமிழ் முகவெட்டு (பெங்காலிகளும், தமிழர்களும் ஓரினம் என்பது எனக்கொரு சம்சயம்). பேச்சோ..கேட்கவே வேண்டாம். அப்படியே தமிழ்ப்பெண் பேச்சு. இந்தப் பெங்காலிகள் என்னவேண்டுமானும் செய்வர். இளையராஜா இசையில் "உன்னைவிட இந்த உலகில் ஒசந்தது ஒண்ணுமில்ல" எனும் பாட்டைப் பாடியது ஒரு பெங்காலி. இன்னும் நம்பவே முடியவில்லை! நூத்துக்கு நூறு மார்க்கு. ராஜாவாக நடித்திருக்கும் ராகுல் போஸ் வெளுத்து வாங்குகிறார். Successful combination.படம் கவிதையாவது ஒரு நெகிழ்வான பொழுதில். இவள் மணமானவள்தான். மிகவும் conservative குடும்ப சூழலில் வளர்ந்தவள்தான். ஆனால், தான் முதலில் வெறுக்கும் ஒரு முஸ்லிம், போகப் போக தன் மனிதாபிமானத்தால், தன் மென்மையால், கனிவால் இவளைக் கவர இவள் கொஞ்சப் பொழுதேனும் Mrs.Iyer (அதாவது இப்போது வரித்துக் கொண்டிருக்கும் Mr.Iyer-ன் மனைவியாக) வாழமுற்படுவதுதான். அங்குதான் ஒரு ஊடுபாய்தல் நடக்கிறது. இதை ஒரு பெங்காலியால் மட்டுமே இவ்வளவு நளினமாக எடுக்கமுடியும். கொஞ்சம் கூட விரசமில்லாமல், மிக இயல்பாக அவள் காதலை வெளிப்படுத்துவது கவிதை. பேசும் கண்கள். இக்கதையில் கவிதையைக் காண்பது நாம் கடவுளைக் காண்பது போல்தான். நாம் வெறும் சநாதானிகளாக இருந்தால். அபிப்பிராய மூட்டையாக இருந்தால் கவிதையைக் காணவியலாது. [கமல் வசனம்தான் நினைவிற்கு வருகிறது: இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது]. உண்மையில் அவள் இப்படத்தில் தன்னுள் உள்ள 'மானுடம்' காணும் தரிசனமே அவளை உருக்கி காதலாக வெளிப்படுத்துகிறது. அது உடலுறவுக் காதல் அல்ல. அவ்வுணர்வின் அழகிய வெளிப்பாடு மட்டுமே. வார்த்தைகளில், கண்களில் உள்ளே குமுறும் காதல் ஒரு நீரோடை போல் தவழ்கிறது. ஆச்சர்யமில்லை, இப்படம் அவருக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதை வாங்கித் தந்தது!

கவிதையைக் கொச்சைப் படுத்தவில்லை. கொல்கொத்தா வந்து மீனாட்சியையும், அவள் குழந்தையையும் அவள் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு ராஜா போகிறான். அவர்களுக்குள் ஏற்படும் சபலங்களைக் கூட சமூக இடைஞ்சல் முன்னமே தடுத்துவிடுகிறது. அதே போல், கடைசியிலும் 'திருமணம்' எனும் ஸ்தாபனம், அதற்கு மேல் ஒரு இஞ்ச் கூடப் போகவிடாமல் தடுத்துவிடுகிறது!

ஆனால், அத்தருணங்கள். அவை அரியவை. எப்போதாவதுதான் நிகழக்கூடியது. கண்ணனிடம் கோபியர் கொண்ட காதல் போல். வரம்புகள் மேவிய பொழுதுகள். ஒரு ஆன்மாவிற்கும், இன்னொரு ஆன்மாவிற்கும் பரஸ்பரம் நடக்கும் காதல். ஏனெனில் ஆன்மாவிற்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, சமூக நிர்பந்தம் கிடையாது.

இது இந்து-முஸ்லிம் ஒருங்கிணைப்பு முயற்சி அல்ல. அக்கலவரம் ஒரு புறச்சூழலை உருவாக்கும் உத்தி மட்டுமே. இல்லையெனில் நெகிழ்வான பல பொழுதுகள் இத்தம்பதியினருக்குக் கிடைத்திருக்காது.

வெளியே மழை பெய்து கொண்டு இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அத்தருணங்களுக்குப் பயணப்பட சரியான சமயம்!

24 பின்னூட்டங்கள்:

ச்சின்னப் பையன் 1/20/2008 09:35:00 PM

மிக நல்ல படம் மற்றும் விமர்சனம்.

இதை 'தமிழ்' கலந்த படம் என்று தெரியாமல் DVD வாங்கிப் பார்த்தோம்.

பன்ச் வசனங்கள், அடிதடி சண்டை என்றில்லாமல் மெல்லிய உணர்வுகளை அழகாக சொல்லும் படம்.

பார்த்து பல நாட்களானாலும், அந்த பஸ் பயணக் காட்சி இன்னும் கண்ணிலேயே இருக்கிறது.

ILA(a)இளா 1/21/2008 01:07:00 AM

2005ல் பார்த்ததுன்னு நினைக்கிறேன். இந்தப் படம் பார்த்த பிறகு 2 நாளைக்கு இந்தப் படமே மனசுல ஓடிட்டு இருந்துச்சு. ராகுலும், கொன்கெனா சென் நடிப்பு மிக இயல்பு. பேருந்து பயணம் இன்னும் கண் முன்னாடியே நிக்குதுங்க

Anonymous 1/21/2008 04:33:00 AM

நானும் ரொம்ப நாள் முன்னாடி இந்தப்படம் பாத்தேன்.இந்து முஸ்லிம் ஒற்றுமை பத்தின படம்னு சொல்லமுடியாது. மானுடம் பத்தின படம். அருமையான படம்

N.Kannan 1/21/2008 08:40:00 AM

நன்றி நண்பர்களே: "இந்தப் படம் பார்த்த பிறகு 2 நாளைக்கு இந்தப் படமே மனசுல ஓடிட்டு இருந்துச்சு".

இதே நிலமைதான் இப்போது எனக்கு :-)

செந்தழல் ரவி 1/21/2008 04:23:00 PM

அருமையான விமர்சனம்...

படத்தை மிஸ் பண்ணிட்டனோன்னு தோணுது...

டி.வி.டி தேடி உடனே செல்லவேண்டும்போல் உள்ளது...!!!

N.Kannan 1/21/2008 04:28:00 PM

ரவி: அவசியம் பாருங்கள். இதமான இசை. அழகிய காட்சி அமைப்பு. எளிமையான வசனங்கள். சாதாரணமான மனிதர்கள் (நம்ம ஆளுகதான் இன்னும் கதாநாயகின்னா பூலோக ரம்பை மாதிரி இருக்கனும்னு நினைக்கிறாங்க). அபர்ணா தேர்ந்த இயக்குநர். இதுவொரு சத்யஜித்ரே பள்ளி.

செந்தில் குமரன் 1/21/2008 05:19:00 PM

நான் பார்த்த சிறப்பான படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கு எப்போதும் ஒரு இடம் உண்டு கொங்கனா சென்னின் மிகப் பெரிய விசிறியாக்கி விட்டது இந்தப் படம்.

N.Kannan 1/21/2008 05:23:00 PM

செந்தில்: என்ன அபாரமான நடிப்பு. அந்த மிரண்ட கண்கள். மிகையில்லாத நடிப்பு. உள்ளதைக் கொள்ளை கொண்டு விடுகிறார். உங்க லிஸ்டிலே என்னையும் சேர்ந்துக்கங்க. இவர் ஏனோ எனக்கு "அழியாத கோலங்கள்" ஷோபாவை நினைவுறுத்துகிறார்.

செந்தழல் ரவி 1/21/2008 05:45:00 PM
This comment has been removed by a blog administrator.
N.Kannan 1/21/2008 06:05:00 PM

ரவி: உண்மைதான். "குலம் உயர்வு, தாழ்ச்சி சொல்லல் பாவம்" என்றான் பாரதி. ஆனால், நான் சொல்வது பொதுவிதி. பார்ப்பனர்களைக் கைகாட்டிவிட்டு மற்றவர் ஒதுங்கமுடியாது. பாரதி ஒரு தலையங்கத்தில் "பறையன் பதினெட்டு நுழையன் நூத்தியெட்டு" என்று சொல்கிறான். இமயம் எழுதிய கோவேறு கழுதை வாசித்து இருக்கிறீர்களா. எவ்வளவு இறுக்கமாக சாதீயம் தமிழகத்தில் வாழ்கிறது என்று அறிய. ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் படையாச்சி-வண்ணான் சாதீய முறைகளைக் காட்டுகிறார்.

இதை எல்லோரும் உணர்ந்தால் இந்தியாவிற்கு விமோசனம். ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு இருந்தால் தனிப்பட்ட உறவுகள் பாழாகுமே தவிர சாதீயம் ஒழியாது. இதனால்தான் இராமானுசர் தொடக்கம் பெரியார்வரை எல்லோரும் முழு வெற்றி அடையமுடியவில்லை.

சுரேஷ் கண்ணன் 1/21/2008 06:25:00 PM

நா.கண்ணன்,

ரசனையான மொழியில் அழகாக எழுதியுள்ளீர்கள். நான் இந்தப் படத்தில் ரசித்த பல விஷயங்களுள் சில:

* ராகுல் போஸின் தண்ணீர் பாட்டிலை அவசரத்திற்காக உபயோகிக்கும் ஆச்சாரமான கொங்கனா செண், பின்னர் அவன் பாட்டிலை வாய் வைத்து குடிக்கும் போது, இதையே உபயோகித்தோம் சற்றே ஒரு கணம் அதிர்ச்சியோடு பார்த்து பின்னர் சுதாரித்துக் கொள்வது.

*பேருந்தில் கலவரக்காரர்கள் இசுலாமியர்கள் தேடும் காட்சிகளில், ரத்தமோ சத்தமோ இல்லாமல் வன்முறையின் முழு உக்கிரமும் வெளிப்படும்படி அமைத்திருப்பது.

*பேருந்தில் உள்ள இளம்பெண்கள் அவர்கள் இருவரையும் காதல் தம்பதியினர் எனக்கருதி அவர்களின் அனுபவங்களை கூறக் கேட்பதும் இவர்கள் ஆளுக்கு ஒர் கற்பனைக் கதையை ரசனையுடன் கூறுவதும்.

*இருவருக்கிடையேயான ஈர்ப்பை எந்தவித விரசமுமில்லாம் சித்தரித்திருப்பது.

- SURESH KANNAN

N.Kannan 1/21/2008 06:40:00 PM

சுரேஷ்: நீங்கள் ரசித்த அக்காட்சிகளை நானும் இரசித்தேன். முதலில் "அடக்கடவுளே இவன் குடித்த பாட்டிலிலிருந்து தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டேனே!' என்று வருந்தும் மீனாட்சி கடைசிப் பயணத்தில் அவன் வாய் வைத்துக் குடித்த பாட்டிலை விருப்பமுடன் வாங்கிக் குடிப்பது! அடேங்கப்பா! பெண்கள் நினைத்தால் எத்தனை வகைகளில் தங்கள் காதலை வெளிக்காட்ட முடிகிறது!

மாணவிகள் மடக்கிவிட தங்கள் தாம்பத்தியம் தொடங்கும் இடமாக பயணத்தையே வைத்துச் சொல்வது சூப்பர். இக்கட்டம்தான் படத்தின் முக்கியக் கட்டம்.

கொஞ்சம் கூட மிகையில்லாத இயற்கையான நடிப்பு கொன்கொனா ஒரு மிகச்சிறந்த நடிகை.

சுரேஷ் கண்ணன் 1/21/2008 07:13:00 PM

எனது முந்தைய பின்னூட்டத்தின் சில இடங்களில் எழுத்துப் பிழைகளை இப்போதுதான் காண நேர்ந்தது. மன்னிக்க.

படத்தை தேடி எடுத்து மீண்டும் பார்க்கும் படி செய்து விட்டீர்கள். இன்றிரவின் உறக்கம் உங்களால் கெடப் போகிறது. :-)

N.Kannan 1/21/2008 07:41:00 PM

//படத்தை தேடி எடுத்து மீண்டும் பார்க்கும் படி செய்து விட்டீர்கள். //

நான் கூட இன்னுமொருமுறை பார்க்கப்போகிறேன். கொஞ்சம் இடைவெளிவிட்டு. இது கல்கண்டை வாயில் போட்டு மெல்ல, மெல்ல சுவைப்பது போல! எத்தனைமுறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

//இன்றிரவின் உறக்கம் உங்களால் கெடப் போகிறது. :-)//

கொன்கொனாவினால் என்று சொல்லுங்கள் :-) சரியாக இருக்கும்!!

Anonymous 1/22/2008 11:37:00 AM

//பிறந்தவுடன் நமக்கொரு பெயர் சூட்டுகின்றனர். சாகும்வரை அப்பெயரை நம்பி அதாகவே வாழ்ந்து முடித்து விடுகிறோம். தாய் பாலூட்டும் போது உறவுகளைச் சுட்டுகிறாள். அது நெஞ்சில் அப்படியே பதிந்து விடுகிறது. //
I have often wondered about this! Even the most
educated and intellectuals do not question this!

N.Kannan 1/22/2008 11:46:00 AM

//I have often wondered about this! Even the most
educated and intellectuals do not question this!//

This film has touched an important chord with me. We live in a world of "make belief". We believe what is told and make others to believe so. Unless one questions oneself ruthlessly this illusionary cycle will never break.

Look at this film. Meenakshi has her believes about caste, religion etc. She had her categories told by her clan. She breaks it through understanding. That is great. But most interestingly she falls back in to another 'make belief' cycle by believing a new "Mr & Mrs.Iyer".

Kudos to Aparna Sen! This is marvellously a beautiful (meaningful) film.

துளசி கோபால் 1/22/2008 12:33:00 PM

//அப்படியொரு தமிழ் முகவெட்டு (பெங்காலிகளும், தமிழர்களும் ஓரினம் என்பது எனக்கொரு சம்சயம்). //

அதே அதே. இல்லாமலா சுவலட்சுமி இத்தனைத் தமிழ்ப்படங்களில் நடித்தது.

உங்க விமரிசனம் படித்தவுடன், இன்னொருக்கா படம் பார்க்கணுமுன்னு தோணுது.

கைவசம் வச்சுருக்கேன்.

படம் நல்லா இருக்கு.

ஆமாம்..எந்தப் படம்?

உங்க ஃப்ரொஃபைல் படம்தான்:-)))

ஜிப்பா, திருமண்


ம்ம்ம்ம்ம் சூப்பர்:-)

N.Kannan 1/22/2008 12:41:00 PM

அப்பா! துளசி எங்கே போயிட்டீங்க! Long time no see!! ஓ அந்தப்படமா? இந்த தீபாவளிக்குப் போயிருந்த போது, ஒரு பெண் இட்டுவிட்டாள். வட இந்திய வழக்கம் போலும். சிவப்பு நம் தாயாரைக் குறிப்பதால் அப்படியே இருந்தேன். வீட்டிற்கு வந்து முகம் கழுவிய பின்னும் சில நாட்கள் அத்தடம் இருந்தது! அன்னை அனுக்கிரகம் :-)

N.Kannan 1/22/2008 12:51:00 PM

Friends:

A comment has been removed on the request of Ravi as he informed me that he didn't post that comment (possible spam). In fact, I am not affended by that comment. I wanted only to remove his name, but I could not. I wish Blogger gives us the full control of our blogs!!

துளசி கோபால் 1/22/2008 12:57:00 PM

அத்தடம் இருந்தால் நல்லதுதான்.
ஒத்தடம் தேவை இருக்காது:-)

அந்தப் பின்னூட்டம் பார்த்ததுமே இது நம்ம ரவியா இருக்கச் சான்ஸ் இல்லைன்னு நினைச்சேன். ஷக் தோ சஹி நிக்கலா....

செந்தழல் ரவி 1/22/2008 01:27:00 PM

அன்புள்ள கண்ணன்...

நன்றி..!!!

டீச்சர்...உங்களைப்போன்றவர்களின் நம்பிக்கைக்கு டபுள் நன்றி !!!!!!

N.Kannan 1/22/2008 01:29:00 PM

துளசி: நீங்க சொன்னீர்களென்று, இந்த முறை மலேசியா போயிருந்த போது "ஹரிதாஸ்" படம் வாங்கி வந்து பார்த்தேன். நல்ல படம். anti-heroine சூப்பர். அந்தக் காலத்திலே பலரின் தூக்கத்தைக் கெடுத்தவராக இருந்திருப்பார் போலும் ;-)

Anonymous 1/22/2008 01:49:00 PM

Dear Kannan,
Nice article. Saw this movie very recently - 2 weeks before. It's still in my mind. Eventhough I involved in day to day activity, Meenakshi's eyes and Raja's soft look towards her were always in my thought. To my surprise here's an article about that movie. You've written the deepest thought. But for me, Love between them - how it emerged, grew strong and at one point burst into physical attraction, oh my, that's real love. Love, LOVE, LOVE that's what my mind was filled with then and now. Great!

N.Kannan 1/22/2008 01:56:00 PM

It is nice to know that this film has touched so many hearts like mine. The love that is depicted in this film is very subtle. It is a representation of our deepest wish to get out of all boundaries. Very poetic.

Interestingly, Bengalis and Malayalees are fascinated by this subtle movement of human feelings than Tamils. From Tagore's time Bengali literature deals with such topics rather boldly. I presume only Thi.Janakiraman in Tamil literature has attempted on those lines.