அவரின் இருப்பிற்குச் சாட்சி - சுஜாதா

தமிழ் எழுத்தாளர் சுஜாதா மறைவு குறித்த செய்தி களப்பணியிலிருந்த எனக்கு மின்தமிழ் ஊடாகத்தெரிய வந்தது. செய்தி கொடுத்த "தமிழ்க் கொங்கு" நா.கணேசன் அவர்கள், சுஜாதாவின் பரம ரசிகரான தேசிகனின் வலைப்பதிவை சுட்டியிருந்தார். சுஜாதாவிடம் இல்லாத கதை கூட தேசிகனிடமுண்டு என்பது பிரசித்தி. தேசிகன் ஆடிப்போயிருப்பதை அவர் வலைப்பதிவு சுட்டியது."எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது" என்று தினமணியில் எழுதிய ரங்காச்சாரி சொல்வது சரி.

பிடிக்காமல் போவதற்கு அதிகக் காரணங்களைச் சொல்ல முடியாது. ஆனால் பிடிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும்.

தமிழுக்கு ஒரு விறு,விறுப்பான நடையைத் தந்தவர் சுஜாதா. பாரதி பேசும், "புதுமை" அவரிடம் நிச்சயமுண்டு.

கணினி பற்றிய புரிதலை, அத்தொழில் நுட்பம் வளரத்தொடங்கிய கால கட்டத்திலேயே, "சுடச்சுட" தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா.

20ம் நூற்றாண்டு மாபெரும் தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சி கண்ட நூற்றாண்டு. அதற்கு மேற்குலகம் தயாராகி பழக்கப்படுத்திக் கொண்ட போதில், தமிழர்கள் பின் தங்கிவிடாமல் தட்டி எழுப்பியவர் சுஜாதா.

அறிவியல் புதினம் எனும் புதிய வாகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, வழிகாட்டிய எழுத்து சுஜாதாவினுடையது.

வாசிக்கும் பழக்கத்தை தமிழர்களிடம் பரவலாக்கியது சுஜாதா. அதற்கு முன் தமிழ் எழுத்தாளர்கள் வீட்டிற்குள் வாசித்துவிட்டு வெளி உலகில் தன் அறிவு சுயம் பிரகாசம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். இப்போது மற்றவர் எழுத்தை வாசிக்கும் பழக்கமுண்டு என்பதைக் கூச்சத்துடனாவது ஒத்துக் கொள்கின்றனர்!

புதுக்கவிதை தோன்றி வளர்ச்சியுற்ற காலத்தில் 'சோ' போன்ற பலர் கிண்டலடித்துக் கொண்டிருந்த போது சுஜாதா, அதை சங்கப்பாடலுடன் ஒப்பிட்டுக் காட்டி தமிழின் தொடர்ச்சியை விளங்கப்படுத்தினார்.

அவரது நகைச்சுவை உணர்வு, எழுதும் திறன் இவை அவரைத் திரைப்படத்துறைக்குத் தள்ளியது. அவருடன் சேர்ந்து "பாரதியார்" பட பிரிமியர் பார்த்தது நினைவில் உள்ளது. பல இடங்களில் இருவரும் உணர்ச்சியுற்றோம்.

சுஜாதாவைக் குற்றம் சொல்பவர், அவரது தமிங்கில நடையைச் சுட்டுவதுண்டு. தமிழர்கள் மாறுகிறார்களோ இல்லையோ ஆனால் மற்றவரைக் குற்றம் சொல்வதில் என்றும் தயங்கியதில்லை. எனவே ஒரு மாறுதலுக்கு நானும், சுஜாதாவும் சேர்ந்து சன் நியூஸ் சேனலுக்கு கணினி குறித்த சில நிகழ்ச்சிகளை ஆங்கிலம் துளியும் கலக்காமல் "மீடியா டிரீம்ஸ்" மூலமாக தயாரித்து அளித்தோம்.

சென்னை போகும் போதெல்லாம் அவரைக் காண்பதுண்டு. பழகுவதற்கு எளியவர். சிங்கையில், கனிமொழி, அரவிந்தன் இவர்களுடன் தமிழ் இணைய மாநாட்டில் அதிக நேரம் கலந்துரையாடியது நினைவில் நிற்கிறது.

தமிழினி 2000 மாநாட்டின் "இணையமும் இலக்கியமும்" எனும் அமர்வை, என்னைத் தலைமை தாங்கி நடத்தச் சொன்னது அமைப்புக் குழு. சுஜாதாவிற்கு, சு.ரா(காலச்சுவடு) விற்கும் கருத்து ஒற்றுமை கிடையாது என்பதறிந்தும் சுஜாதாவைத் தலைமை ஏற்று நடத்தித்தருமாறு வேண்டினேன். அது பொழுது, "அறிவியல் புதினம்" எனும் தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்று வாசித்தளித்தார்.

எனது தீவிர கணினி ஈடுபாட்டைக் கண்டுவிட்டு, சென்னையில் ஒருமுறை "இலக்கியச் சிந்தனை வட்டம்" குழுவிற்கு "மின்வெளி தமிழின் ஆறாம்திணை" எனும் தலைப்பில் உரையாற்றச் சொன்னார். அந்த மாலையில் சென்னை காந்தி சீனிவாசன் அரங்கில் பல பிரபல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு கணினி உலகம் அப்போது அறிமுகமானது. அன்றைய மாலையை மறக்க முடியாது.

சுஜாதாவின் எழுத்து முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தே போய்விட்டதால் அவரால் தமிழ் செவ்விலக்கியப் பரப்பில் ஆழம் பதிக்க முடியவில்லை. அவரைக் கிட்டவே நெருங்க ஒட்டாமல் பலர் விரட்டியதுமுண்டு. ஆயினும் அதுவொரு பெரிய குறை இல்லை. அது இல்லாமலே அவரின் பங்களிப்பு தமிழை வளம் சேர்த்திருக்கிறது.

சுஜாதா அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர். தமிழைச் சரியாகக் கையாளத்தெரிந்த நுட்பன்னர். அறிவியலின் யுக்தியை தமிழுக்குள் பாய்ச்சி தமிழுக்கு ஒரு புதிய வேகத்தைத் தந்தவர் சுஜாதா.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதுபோல் அவர் இறப்பு கூட புதிய சர்ச்சைகளை தமிழ் இலக்கிய உலகில் தவழவிடும். அதுவே அவரின் இருப்பிற்குச் சாட்சி.

கலக்கல் இசைஇதைக் கேட்டு விட்டீர்களோ?

தமிழும் வடமொழியும் கலப்பது மணிப்பிரவாளம். தமிழும் ஆங்கிலமும் கலப்பது 'கலக்கல்'. உண்மையில் மிகவும் மெனக்கெட்டு இவ்விசை உருவாகியிருப்பது தெரிகிறது. பல இடங்களில் கிச்சு, கிச்சு மூட்டுகிறது. பல இடங்களில் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இடையிடையே "சொல்றோம் இல்ல" போன்ற தூவல்கள், கடைசியில் எம்.ஆர்.ராதாவின் முத்தாய்ப்பு வசனம். நெத்தியடி சமாச்சாரம் என்னவெனில் இதுவொரு 'பக்தி இசை' !!

பெருமாளே! உன் லீலையை என்னவென்று சொல்வது? :-))

மிகவும் ரசித்தேன்!!

மூலிகை - தென்கொரியப் படம்

허브 (Heo-beu)

அழகு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்த விஷயம். பெரும்பாலும் நாம் கண்டு கொள்ளாத கருப்பொருளைக் கலைக் கண்ணோடு ஒரு கலைஞன் பார்க்கும் போது சாகா இலக்கியம், சாகாத் திரைப்படம் பிறக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் இவைகளுக்கென்று மிக நீண்ட பாரம்பரியமுண்டு. ஆனால் கொரியாவிற்கு அத்தகைய பாரம்பரியம் கிடையாது. ஆனால், ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பின் வீறுகொண்டு எழுந்த கொரியா இன்று பொருளாதாரத்தில் உலகின் 11வது பெரும் பணக்கார நாடாக இருப்பது மட்டுமல்ல, கலைத்துறையில் ஆசியாவின் முதல் இடத்தைப் பிடிக்க வேகமாக முன்னேறிவருகிறது. தமிழர்கள், "கொரியப் படமா?" அப்படின்னா? என்று அன்னாந்து பார்ப்பதை விட்டு விட்டு கொரியப் படங்களில் பரிட்சியப்படுத்திக் கொள்ளுதல் நலம்! சத்யஜித் ரே, அடூர்பாசி, பாலுமகேந்திரா இவர்களையெல்லாம் அள்ளிச் சாப்பிட்டு ஏப்பம் விடும் இயக்குநர்கள் இங்கு இருக்கிறார்கள். சிவாஜி கணேசன், சாவித்திரி போன்றோரையும் மூக்கில் விரலை வைக்க வைக்கும் திறம் படைத்த நடிக, நடிகையருண்டு இத்தேசத்தில்.

மூலிகை என்றொரு படம் சென்ற நவம்பரில் வெளிவந்து இருக்கிறது. Heo In-moo (허인무) என்பவரின் படைப்பாக. 21 வயது நிரம்பிய மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணின் படம். தந்தையற்ற அப்பெண்ணை பூ விற்கும் ஒரு தாய் வளர்த்து ஆளாக்குவது கதை. மூன்றாம் பிறை ஸ்ரீதேவி செய்தது மிகை என்று உணர வைக்கும் அற்புத நடிப்பு. அதிலிருந்து சில காட்சிகள் கீழே. இதுவொரு காமெடிப்படம்!! ஆச்சர்யம். கதாநாயகன் மெல்ல கதாநாயகி கையைப் பிடிக்க வரும் போது அவள் அவனைத் தள்ளி விடுகிறாள். என்னமோ, ஏதோ என்று பதறிப் போய் பார்த்தால், வழியில் நாயின் மலம் இருக்கிறது. அதை மிதித்து விடப் போகிறானே என்று தள்ளி விடுகிறாள். ஒரு காட்சியில் ரேடியோ தெராபி போகும் தாயின் தலைமுடி கையோடு வருகிறது. அதை அப்படியே தாய் காணாமல் மறைத்து விடுகிறாள். இப்படி எத்தனையோ காட்சிகள்.அவள் மீது ஒரு இளம் போலீஸ்காரன் மையல் கொள்கிறான். முதலில் அவள் மனக்குறை அவனுக்குத் தெரியாது. மெல்ல, மெல்ல உணரும் போது இவள் அவன் மீது காதல் கொண்டு விடுகிறாள். (அவளுக்கு இவன் மீது ஒருதலை ராகமுண்டு. அதனால்தான் அவன் கண்ணாடியைக் கழற்றியவுடன் அப்படிப் பதறிப் போகிறாள்) அவளை உதற மனவரவில்லை இவனுக்கு. அவளை அவன் முதலில் கவரும் காட்சி:படம் முழுக்க பார்த்துவிட்டு கீழே வரும் காட்சியைக் காண வேண்டும். இது என்ன நடிப்பா? இல்லை கதாநாயகி அப்பெண்ணாகவே மாறிவிட்டாளா? மனக்குறை உடையவர்களின் பேச்சு மட்டும் குழந்தைத் தனமாக இருக்குமென்றில்லை, அவர்கள் உடலே வேறு விதமாகப் பேசும். கன்னத்து தசை அதுவாகத் துடிக்கும், கண்கள் எங்கோ பார்க்கும், முகம் கோணல் செய்யும். அதை மிகக் கூர்ந்து கவனித்திருந்தால்தான் புரியும். இக்கதாநாயகி இத்தனையும் செய்கிறாள். இவளுக்கு முன் நம் தேசத்து நடிகைகள் கிண்டர்கார்டன் பிள்ளைகள்.

இது கடைசிக் காட்சி. இக்குறை மாதுவைக் கண்ணுக்குக் கண்ணாக கவனித்து வந்த அவள் தாய் புற்றுநோயில் இறந்துவிடுகிறாள். தாயின் அஸ்தியைப் பெட்டியில் வைத்துக் கொண்டு அப்பெண் பேசும் காட்சி இருக்கிறதே! அற்புதம்! என்று சொல்லுதல் குறையுடைய மதிப்பீடே! (உம்மா, உம்மா என்பது தாயை அழைப்பது)பாலுமகேந்திரா குமுதம்.காம் பேட்டியில் தனது மூன்றாம் பிறை பற்றி நினைவு கூருகிறார். ஸ்ரீதேவி எனும் நடிகை அருவி போல் கொட்டுகிறாள், அதைத் தாங்கும் கலனாக கமல் இருக்கிறார் என்று சொல்கிறார். பாலு மகேந்திரா இனிமேல் கொரியப்படங்கள் பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.

To view the stills. Click here!

கொரிய விமர்சனம்:

HerbDirected by Heo In Moo (Love so Divine), Herb sensitively looks into the life of a young woman with the mind of a child. Much like Marathon, the film centers on a mother’s love for her child. Gang Hye Jung has continuously challenged herself with a wide range of roles in films like Old Boy, Welcome to Dongmakgol, and Love Phobia, and this time she completely captures the character of a childlike woman who gets her first taste of romance and tragedy. Bravely venturing into a new world, she comes of age on her own terms, and the process is both heartwarming and tearjerking. Veteran actress Bae Jong Ok (Ad Lib Night) anchors the film with her touching performance as the mother, while Jung Kyung Ho (Gangster High) portrays Gang Hye Jung’s love interest.


At first look, Sang Eun (Gang Hye Jung) is a beautiful and healthy 20-year-old woman, but in reality she has the intelligence of a seven-year-old child. Lovingly cared for by her mother (Bae Jong Ok), the simple and sweet Sang Eun sees the world in fairy tale colors. One day, a Prince Charming comes into her life in the form of policeman Jeong Bom (Jung Kyung Ho). Through budding romance and unexpected tragedy, Sang Eun learns to face the world on her own two feet.For online viewing: Click here!

கூட்டத்தோடு கோவிந்தா!!

நான் இசை ஞானம் அற்றவன் என்று சொல்ல முடியாது. உண்மையில் கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற இசைகளும் கூட. அதனால்தான் இப்பதிவு.

தியாகராஜ ஆராதனை வீடியோவை இன்று குமுதம்.காமில் கண்ணுற நேரிட்டது. அதன் பாதிப்பு கீழே...

தியாகராஜர் பக்த சிரோமணி. அவர் கீர்த்தனைகள் அமிர்தம். பக்தி என்பது தனி மனித ஆராதனை என்ற அளவில் அது மகாப் பெரிய விஷயம். ஆனால் இப்படி ஆராதனை என்ற பெயரில் கூச்சலாக கூப்பாடு போடுவது எதற்கு? இது யாரை திருப்திப் படுத்த. கூட்டத்தில், அது தரும் உணர்வில், தனி மனித நெகிழ்வு உண்டாகும் என்பது உண்மைதான். ஆயினும் பெரும்பாலும் இசை என்பது ஒழுங்கு தவறிவிட்டால் கூச்சலாகிவிடும். அதற்குப் பெயர் ஓசை என்று மாறிவிடும். இங்கு அதுதான் பதிவாகியிருக்கிறது.

நம் பாகவதர்களுக்கு கேமிரா வந்தவுடன் விசேஷமான தலையாட்டல் வருகிறது! அப்புறம் பக்தி போய் விடுகிறது கேமிராவே நினைவில் நிற்கிறது.

ஜப்பானில் 9000 பேர் பீத்தோவனின் 9வது சிம்பொனியை இசைக்கின்றனர், வருடம் ஒருமுறை. ஆனால் அதற்காக பிரத்தியேகமாக ஏற்பாடுகள் செய்து அபாரமாக எல்லோரும் இன்புரும் வண்ணம் செய்கின்றனர். இப்படி கூட்டத்தோடு கோவிந்தா இல்லை.

தனிமனிதத் திறமையில் தமிழர்கள் எங்கோ நிற்கின்றனர். உதாரணம் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, எல்.சுப்ரமணியம், இன்னோரன்ன பிற இளம் கலைஞர்கள். ஆனால், நாலு பேர் சேர்ந்து கூடி இசைக்க வேண்டுமெனில் அது எப்படியோ, 'சந்தைக்கடை கூச்சலாகிவிடுகிறது'.

நம் இசையில் 'ஹார்மோனிக்கா' இல்லைதான். நோட்ஸ் இல்லைதான். அது தனிம்னித மேம்பாட்டிற்கு, ஆராதனைக்கு என்று உருவானது. இன்று எல்லோரும் சேர்ந்து, ஒருவர் உருவாக்கிய கீர்த்தனைகளைப் பாட வேண்டுமெனில் அதற்கு முன் தயாரிப்பு தேவை, முறையான திட்டம் தேவை, ஓர் அமைப்பு தேவை, மிகவும் அவசியமாக மன ஒழுங்கு தேவை, சமூகப் புரிதல் தேவை. இவை எதுவும் இல்லாமல், 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறாரு' என்று சொல்வது போல் இப்படியொரு ஆராதனை உற்சவம் நடத்துவது தியாகய்யருக்கே பொறுக்காது. எதற்காக அப்பாடல்கள் உருவானதோ, அது கடைசியில் இவ்வாராதனையில் மறுதலிக்கப் படுகிறது.