கூட்டத்தோடு கோவிந்தா!!

நான் இசை ஞானம் அற்றவன் என்று சொல்ல முடியாது. உண்மையில் கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற இசைகளும் கூட. அதனால்தான் இப்பதிவு.

தியாகராஜ ஆராதனை வீடியோவை இன்று குமுதம்.காமில் கண்ணுற நேரிட்டது. அதன் பாதிப்பு கீழே...

தியாகராஜர் பக்த சிரோமணி. அவர் கீர்த்தனைகள் அமிர்தம். பக்தி என்பது தனி மனித ஆராதனை என்ற அளவில் அது மகாப் பெரிய விஷயம். ஆனால் இப்படி ஆராதனை என்ற பெயரில் கூச்சலாக கூப்பாடு போடுவது எதற்கு? இது யாரை திருப்திப் படுத்த. கூட்டத்தில், அது தரும் உணர்வில், தனி மனித நெகிழ்வு உண்டாகும் என்பது உண்மைதான். ஆயினும் பெரும்பாலும் இசை என்பது ஒழுங்கு தவறிவிட்டால் கூச்சலாகிவிடும். அதற்குப் பெயர் ஓசை என்று மாறிவிடும். இங்கு அதுதான் பதிவாகியிருக்கிறது.

நம் பாகவதர்களுக்கு கேமிரா வந்தவுடன் விசேஷமான தலையாட்டல் வருகிறது! அப்புறம் பக்தி போய் விடுகிறது கேமிராவே நினைவில் நிற்கிறது.

ஜப்பானில் 9000 பேர் பீத்தோவனின் 9வது சிம்பொனியை இசைக்கின்றனர், வருடம் ஒருமுறை. ஆனால் அதற்காக பிரத்தியேகமாக ஏற்பாடுகள் செய்து அபாரமாக எல்லோரும் இன்புரும் வண்ணம் செய்கின்றனர். இப்படி கூட்டத்தோடு கோவிந்தா இல்லை.

தனிமனிதத் திறமையில் தமிழர்கள் எங்கோ நிற்கின்றனர். உதாரணம் ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா, எல்.சுப்ரமணியம், இன்னோரன்ன பிற இளம் கலைஞர்கள். ஆனால், நாலு பேர் சேர்ந்து கூடி இசைக்க வேண்டுமெனில் அது எப்படியோ, 'சந்தைக்கடை கூச்சலாகிவிடுகிறது'.

நம் இசையில் 'ஹார்மோனிக்கா' இல்லைதான். நோட்ஸ் இல்லைதான். அது தனிம்னித மேம்பாட்டிற்கு, ஆராதனைக்கு என்று உருவானது. இன்று எல்லோரும் சேர்ந்து, ஒருவர் உருவாக்கிய கீர்த்தனைகளைப் பாட வேண்டுமெனில் அதற்கு முன் தயாரிப்பு தேவை, முறையான திட்டம் தேவை, ஓர் அமைப்பு தேவை, மிகவும் அவசியமாக மன ஒழுங்கு தேவை, சமூகப் புரிதல் தேவை. இவை எதுவும் இல்லாமல், 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறாரு' என்று சொல்வது போல் இப்படியொரு ஆராதனை உற்சவம் நடத்துவது தியாகய்யருக்கே பொறுக்காது. எதற்காக அப்பாடல்கள் உருவானதோ, அது கடைசியில் இவ்வாராதனையில் மறுதலிக்கப் படுகிறது.

2 பின்னூட்டங்கள்:

ச்சின்னப் பையன் 2/14/2008 02:03:00 AM

வீடியோவை அலுவலகத்தில் பார்க்கமுடியாது... அதனால் வீட்டில் போய் பார்க்கிறேன்.

1. ஆராதனையில் எல்லோரும் அந்த முதல் வரிசையைப் பிடித்து விடவேண்டும் - மற்றும் தங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ளவேண்டும் - என்றே நினைக்கிறார்கள் - இது என் கருத்து.

2. அதுவுமில்லாமல், எல்லோரும் டிசம்பர் முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று கச்சேரிகள் செய்திருப்பார்கள் (சென்னை சீசனில்). இந்த ஆராதனை சரியாக ஜனவரி முதல் இரு வாரத்தில் வந்து விடும். அதனால், கும்பலோடு கோவிந்தா போட்டால்தான் அவரவர் குரல்களைப் பாதுகாக்க முடியும்.

எது எப்படியோ, என் தந்தை இருந்தவரை ஆராதனைக்கு தவறாமல், சென்னையிலிருந்து திருவையாறு சென்று விடுவார். இந்தியாவிலிருந்தவரை நான் பார்த்தது டிடியில் தான். இப்போது அதுவும் கிடையாது.

N.Kannan 2/14/2008 09:37:00 AM

இந்தியா மக்கள் நிரம்பி வழியும் நாடு. எதற்கெடுத்தாலும் கூட்டம் வரும், கூடும். எனவே இம்மாதிரி பெரிய விழாக்கள் அமைக்கும் போது கூடுதல் திட்டம் தேவை. தொழில்நுட்பம் இருக்கிறது. கலைஞர்கள் சேர்ந்து செயல்பட்டால் இதையொரு உலகப்பிரசித்தி பெற்ற ஆராதனையாக மாற்ற முடியும். குன்னக்குடியை விட்டு விட்டு, ஏ.ஆர்.ரகுமானிடம் இவர்கள் போக வேண்டும்!!