அவரின் இருப்பிற்குச் சாட்சி - சுஜாதா

தமிழ் எழுத்தாளர் சுஜாதா மறைவு குறித்த செய்தி களப்பணியிலிருந்த எனக்கு மின்தமிழ் ஊடாகத்தெரிய வந்தது. செய்தி கொடுத்த "தமிழ்க் கொங்கு" நா.கணேசன் அவர்கள், சுஜாதாவின் பரம ரசிகரான தேசிகனின் வலைப்பதிவை சுட்டியிருந்தார். சுஜாதாவிடம் இல்லாத கதை கூட தேசிகனிடமுண்டு என்பது பிரசித்தி. தேசிகன் ஆடிப்போயிருப்பதை அவர் வலைப்பதிவு சுட்டியது."எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது" என்று தினமணியில் எழுதிய ரங்காச்சாரி சொல்வது சரி.

பிடிக்காமல் போவதற்கு அதிகக் காரணங்களைச் சொல்ல முடியாது. ஆனால் பிடிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லமுடியும்.

தமிழுக்கு ஒரு விறு,விறுப்பான நடையைத் தந்தவர் சுஜாதா. பாரதி பேசும், "புதுமை" அவரிடம் நிச்சயமுண்டு.

கணினி பற்றிய புரிதலை, அத்தொழில் நுட்பம் வளரத்தொடங்கிய கால கட்டத்திலேயே, "சுடச்சுட" தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா.

20ம் நூற்றாண்டு மாபெரும் தொழில்நுட்ப, அறிவியல் வளர்ச்சி கண்ட நூற்றாண்டு. அதற்கு மேற்குலகம் தயாராகி பழக்கப்படுத்திக் கொண்ட போதில், தமிழர்கள் பின் தங்கிவிடாமல் தட்டி எழுப்பியவர் சுஜாதா.

அறிவியல் புதினம் எனும் புதிய வாகையை தமிழுக்கு அறிமுகப்படுத்தி, வழிகாட்டிய எழுத்து சுஜாதாவினுடையது.

வாசிக்கும் பழக்கத்தை தமிழர்களிடம் பரவலாக்கியது சுஜாதா. அதற்கு முன் தமிழ் எழுத்தாளர்கள் வீட்டிற்குள் வாசித்துவிட்டு வெளி உலகில் தன் அறிவு சுயம் பிரகாசம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர். இப்போது மற்றவர் எழுத்தை வாசிக்கும் பழக்கமுண்டு என்பதைக் கூச்சத்துடனாவது ஒத்துக் கொள்கின்றனர்!

புதுக்கவிதை தோன்றி வளர்ச்சியுற்ற காலத்தில் 'சோ' போன்ற பலர் கிண்டலடித்துக் கொண்டிருந்த போது சுஜாதா, அதை சங்கப்பாடலுடன் ஒப்பிட்டுக் காட்டி தமிழின் தொடர்ச்சியை விளங்கப்படுத்தினார்.

அவரது நகைச்சுவை உணர்வு, எழுதும் திறன் இவை அவரைத் திரைப்படத்துறைக்குத் தள்ளியது. அவருடன் சேர்ந்து "பாரதியார்" பட பிரிமியர் பார்த்தது நினைவில் உள்ளது. பல இடங்களில் இருவரும் உணர்ச்சியுற்றோம்.

சுஜாதாவைக் குற்றம் சொல்பவர், அவரது தமிங்கில நடையைச் சுட்டுவதுண்டு. தமிழர்கள் மாறுகிறார்களோ இல்லையோ ஆனால் மற்றவரைக் குற்றம் சொல்வதில் என்றும் தயங்கியதில்லை. எனவே ஒரு மாறுதலுக்கு நானும், சுஜாதாவும் சேர்ந்து சன் நியூஸ் சேனலுக்கு கணினி குறித்த சில நிகழ்ச்சிகளை ஆங்கிலம் துளியும் கலக்காமல் "மீடியா டிரீம்ஸ்" மூலமாக தயாரித்து அளித்தோம்.

சென்னை போகும் போதெல்லாம் அவரைக் காண்பதுண்டு. பழகுவதற்கு எளியவர். சிங்கையில், கனிமொழி, அரவிந்தன் இவர்களுடன் தமிழ் இணைய மாநாட்டில் அதிக நேரம் கலந்துரையாடியது நினைவில் நிற்கிறது.

தமிழினி 2000 மாநாட்டின் "இணையமும் இலக்கியமும்" எனும் அமர்வை, என்னைத் தலைமை தாங்கி நடத்தச் சொன்னது அமைப்புக் குழு. சுஜாதாவிற்கு, சு.ரா(காலச்சுவடு) விற்கும் கருத்து ஒற்றுமை கிடையாது என்பதறிந்தும் சுஜாதாவைத் தலைமை ஏற்று நடத்தித்தருமாறு வேண்டினேன். அது பொழுது, "அறிவியல் புதினம்" எனும் தலைப்பில் அருமையான கட்டுரை ஒன்று வாசித்தளித்தார்.

எனது தீவிர கணினி ஈடுபாட்டைக் கண்டுவிட்டு, சென்னையில் ஒருமுறை "இலக்கியச் சிந்தனை வட்டம்" குழுவிற்கு "மின்வெளி தமிழின் ஆறாம்திணை" எனும் தலைப்பில் உரையாற்றச் சொன்னார். அந்த மாலையில் சென்னை காந்தி சீனிவாசன் அரங்கில் பல பிரபல எழுத்தாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு கணினி உலகம் அப்போது அறிமுகமானது. அன்றைய மாலையை மறக்க முடியாது.

சுஜாதாவின் எழுத்து முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தே போய்விட்டதால் அவரால் தமிழ் செவ்விலக்கியப் பரப்பில் ஆழம் பதிக்க முடியவில்லை. அவரைக் கிட்டவே நெருங்க ஒட்டாமல் பலர் விரட்டியதுமுண்டு. ஆயினும் அதுவொரு பெரிய குறை இல்லை. அது இல்லாமலே அவரின் பங்களிப்பு தமிழை வளம் சேர்த்திருக்கிறது.

சுஜாதா அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர். தமிழைச் சரியாகக் கையாளத்தெரிந்த நுட்பன்னர். அறிவியலின் யுக்தியை தமிழுக்குள் பாய்ச்சி தமிழுக்கு ஒரு புதிய வேகத்தைத் தந்தவர் சுஜாதா.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதுபோல் அவர் இறப்பு கூட புதிய சர்ச்சைகளை தமிழ் இலக்கிய உலகில் தவழவிடும். அதுவே அவரின் இருப்பிற்குச் சாட்சி.

4 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 2/28/2008 05:59:00 PM

புதிய சர்ச்சைகள்.....

சரியாகக் கணித்திருக்கிறீர்கள்.

சில தமிழ்மனங்களைத் தமிழ்மணத்தில் பார்த்து மனசே சரியில்லாமல் கிடக்கு.

அன்னாருக்கு எங்கள் அஞ்சலிகள்.

Anonymous 2/28/2008 07:14:00 PM

அவர் தமிழுக்கு எதிராம்!கன்ப்யூஸ்டு கேசுகளின் பொறாமை பேத்தல்களை விட்டு விட வேண்டும் துளசியம்மா.கண்ணன் சொல்வது போல எப்படி இருந்தாலும் அவர் எழுத்து பேசப்படும்.அது வாகை சூடிய எழுத்து.
அன்புடன்
பாண்டியன்

Karthigesu 5/01/2008 11:32:00 AM

"சுஜாதாவின் எழுத்து முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தே போய்விட்டதால்..."

இது சுஜாதாவுக்கு நியாயம் செய்வதாக இல்லை. அவர் எழுதி அப்படி ஒன்றும் சம்பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. தீவிர இலக்கிய உலகில் யார் கேட்டாலும் எழுதியும் யார் கூப்பிட்டாலும் பேசியும் இருக்கிறாரே! வணிகப் பத்திரிகைகள் அவரை வைத்துச் சம்பாதித்திருக்க்லாம். Not vice versa.

ரெ.கா.

N.Kannan 5/01/2008 11:40:00 AM

ரெ.கா!

தமிழ் இலக்கிய உலகில் வணிகம் சார்ந்த எழுத்து, இலக்கிய எழுத்து, பிரச்சார எழுத்து என்று மூன்று பெரும் பிரிவுகளுண்டு. சுஜாதா, சு.ரா, கலைஞர் இப்பிரிவுகளுக்கு நல்ல உதாரணங்கள்.

பாவம்! அவர் சம்பாதித்தார் என்று சொல்ல வரவில்லை!