சுஜாதா நினைவுகள்


இதுதான் நான் பேச நினைத்தது:


இரங்கற் கூட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. காக்கைகள் கூட இரங்கற் கூட்டம் நடத்துகின்றன. என்ன கொஞ்சம் கூச்சல், குழப்பம் அதிகமிருக்கும். நாம் ஒப்பாரி வைத்து, குய்யோ, முறையோ என்று கத்துவது போல. ஆனால், யானைகள் மிக நளினமாக இரங்கற் கூட்டங்கள் நடத்துகின்றன. மிக அமைதியாக இறந்து பட்ட உடலைச் சுற்றி நிற்கின்றன. தங்கள் துதிக்கையால் உடலைத்தொட்டும் தொடாதவாறு, ஏதோ அவ்வுயிர் வெளிப்படுத்தும் ஜீவ ஒளியின் மேல் படுமாறு தடவுகின்றன. பின் அமைதியாய் போய்விடுகின்றன. அவ்வுடல் இயற்கைச் சிதலமடைந்த பின் மீண்டும் கூடி, எஞ்சிய எலும்புகளை பல்வேறு திக்குகளில் வீசிவிட்டு மறைகின்றன. எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்.


நான் சென்னை வரும் பெரும்பாலான பொழுதுகளில் சுஜாதாவைக் கண்டு போவதுண்டு. ஒவ்வொருமுறையும் ஏதாவது சுவாரசியமாக நடக்கும். இம்முறையும்தான். ஆனால் சுஜாதா கண்ணில் படும்படி இல்லை. அவர் விரும்பியபடி நரகலோகத்தில் இருந்து கொண்டு நகைத்துக் கொண்டு இருக்கலாம். சுஜாதாவிற்கு இறைவன் பற்றிய புரிதல் மூன்று நிலைகளில் இருந்திருக்கிறது.


1. சாமி, கடவுள் என்பதெல்லாம் "டோமினோ எபெக்ட்" எனும் அளவில் முதல் புரிதல். அதாவது ஒரு கிறுக்கன் ஆரம்பித்து வைக்க எல்லோரும் புரிந்தும் புரியாமலும் அவனைப் பின்பற்றுவது. அவர் நம்பினார், இயற்கையின் சூட்சுமங்கள் முழுவதும் புரிபடும் போது, மனித வாழ்வு பொருளாதார முன்னேற்றமடையும் போது, இறைவன் என்ற கருதுகோள் அவசியமில்லாமல் போய்விடுமென்று.


2. இரண்டாவது நிலையில், இறைமை, அது சம்மந்தமான நம்பிக்கைகள் மரபுடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்ற புரிதல். இப்புரிதலை மிக அழகாக ஒரு அறிவியல் புதினமாக்கித் தந்திருக்கிறார். அக்கதையில், எதிர்கால உலகில், கடவுளற்ற நவீன உலகில் எல்லோரும் சௌகர்யமாக வாழ்ந்து வருவர். ஒரு நாள் தொலைக்காட்சியில் "நாளை அரங்கில் கடவுள் தோன்றுவார்" என்றொரு அறிவிப்பு வரும்". யார் கொடுத்தது என்பது பற்றிய பெரிய ரிப்போர்ட் தயாராகும் நிலை.


சொன்ன நேரத்தில், சொன்ன அரங்கில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி நிற்பர். என்று கதை முடியும்.


3. தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு விநாடியும் கொடையே என்று நோக்கத் தொடங்குகிறார் சுஜாதா கடைசியில். எல்லோருக்கும், குறிப்பாக மனைவிக்கு நன்றி சொல்கிறார், அடிக்கடி. இன்னும் கொஞ்சம் ஆத்திகத்திற்கு, குறிப்பாக ஆழ்வார்களுக்கு நேரம் ஒதுக்கியிருக்கலாமோ? என்று எண்ணத் தொடங்குகிறார்.


சுஜாதாவின் கணிப்பொறி பங்களிப்பை மதித்துப் போற்ற இரண்டு குழுமங்களின் சார்பில் வந்திருக்கிறேன். 1. உத்தமம், 2. தமிழ் மரபு அறக்கட்டளை.


அவர் குடும்பத்திற்கு எங்கள் சார்பில் ஆழ்ந்த இரக்கங்கள்.


இதை நான் பேசவில்லை. கூட்டத்திற்கு அழைப்பின் பேரில் போயிருந்தேன். இரண்டு மணி நேரங்கள் இருந்தேன். பக்கத்தில் வைரமுத்து காத்திருந்தார். சரி,

இவருக்கே இந்த கதியெனில் நமக்கு எவ்வளவு நேரம் பிடிக்குமோ? என்று வந்துவிட்டேன். மாலை நான்கிலிருந்து இரவு 8:45 வரை கூட்டம் நடந்ததாம். நாரத கான சபா நிரம்பி வழிந்தது. சுஜாதா என்ற நோஞ்சையான, அழகில்லாத, எள்ளல்காரர் இவைகளையும் மீறி பல்லாயிரக்கணக்கான தமிழ் இதங்யகளைப் பாதித்து இருப்பதை அக்கூட்டம் செப்பியது!

4 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 3/28/2008 02:38:00 PM

என்னங்க? இவ்வளவு கால தாமதமாக?!
இப்பதான் ஊருக்கு திரும்பி வந்தீங்களா?
நீங்கள் நினைத்ததை பேச முடியாமல் போய்விட்டதே!! :-(

N.Kannan 3/28/2008 03:30:00 PM

குமார்: தாமதமான பதிவுதான். நான் சென்னை வந்து இறங்கியவுடன் செய்த முதற்காரியமிது. இப்போதுதான் பதிய முடிகிறது. இன்னும் வரும்..

Karthigesu 5/01/2008 11:23:00 AM

கண்ணன்,

நல்ல பதிவு. சுஜாதாவைத் தீவிர எழுத்தாளர்கள் குழு என்றும் மதித்ததில்லை. அவரும் அவர்களை ஒரு எள்ளல் தொனியில்தான் பேசினார். தீவிரப் பத்திரிக்கையான கணையாழியில் அந்தக் கிண்டல்கள் வந்தன. அநதப் பத்திரிக்கையில் அதிகம் படிக்கப்பட்ட பகுதியும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். தன்னைப் பற்றியும் கூட அவர் நிறையக் கிண்டல்கள் செய்து கொண்டார்.

பலமுறை தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டுமிருக்கிறார்.மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு மாறுவது என்பது மிக முக்கியமானது என வலியுறுத்தியுமிருந்தார்.

சுஜாதாவின் magnum opus எது? பாலகுமாரனுக்கு "மெர்க்குரிப் பூக்கள்" (தலைநாவல்) முக்கியமான நாவல் என பெரும்பாலான வாசகர்கள் ஒத்துக் கொள்வது போல சுஜாதாவுக்கு இல்லை. அவரவர்களுக்குப் பிடித்தது வெவ்வேறானதாக இருக்கிறது. எனக்கு "கனவுத் தொழிற்சாலை" பிடித்திருக்கிறது. ஆனால் அதைப் பிடித்தவர்கள் அதிகம் பேர் இல்லை என்றும் அறிந்து கொண்டேன்.

பொதுவாக எல்லாவற்றையும் அலட்சியமாக எழுதியே (கவனம் பெற்று இருந்தாலும்) கனமற்றுப் போய்விட்டாரோ? இறுதியில் கணையாழிக் கடைசிப் பக்கங்கள்" தொகுப்புத்தான் அவர் பெயர் சொல்லும் போல.

ரெ.கா.

N.Kannan 5/01/2008 11:42:00 AM

ரெ.கா:

வித்தியாசமான அணுகல்! அவருடையது ஒரு விருந்து போல. சுவைத்து உண்ண பல பண்டங்களுண்டு. விருந்தில் எது ருசி? என்று கேட்டால் முழிப்போம்!