Dr. Seuss' Horton Hears a Who!

இந்த வருடத்தின் மிகச் சிறந்த கார்ட்டூன் படமாக திகழப்போகிறது "ஹார்டன்" எனும் 20 நூற்றாண்டு நரியின் திரைப்படம்.

ஹார்ட்டன் என்பதொரு யானை. காட்டில் பாடம் சொல்லித்தரும் வாத்தியார். பாவம் ஈ, எறும்பிற்குக் கூட குந்தகம் நினைக்காத நல்ல ஜீவன். அது ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தூசு ப்றந்து வர அதிலிருந்து "உதவி" எனும் குரல் கேட்கிறது. யானைக்குத் தோன்றுகிறது அந்தச் சின்னத் துகளுக்குள் ஜீவன்கள் இருக்கலாம் என்று. எனவே அந்தத் துகளுடன் பேச முயல்கிறது. காட்டிலுள்ள மற்ற விலங்குகள் இதற்கு நட்டு கழண்டு விட்டது என்று கேலி செய்கின்றன. குறிப்பாக, கங்காரு ஒன்று யானையை மிரட்டுகிறது. இம்மாதிரி தூசுக்குள் யாரோ இருக்கிறார்கள் என்பது போன்ற அபத்தங்களை குழந்தைகளுக்குச் சொல்லித்தந்து கெடுக்கிறது யானை என்று.

யானை மீண்டும், மீண்டும் முயன்று தூசுக்குள் உள்ள மனிதர்களுடன் தொடர்பு கொண்டு விடுகிறது. அவர்களுக்கு தாங்கள் ஒரு தூசுக்குள் இருக்கிறோம் என்பதே தெரியாது இதுவரை. அவர்கள் உலகத்திற்கும் மேலே இன்னொரு உலகம் இருப்பதை நம்புவதற்கு முதலில் கஷ்டப்படுகின்றனர். மெல்ல, மெல்லக் கதை விரிகிறது. இப்படத்தின் முன்னோட்டம் பார்க்க கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக!டாக்டர் சூஸ் எழுதிய கதையிது. இவரின் பல கதைகள் பல கோடி புத்தகங்களாக விற்பனையாகி 17 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் கூட இருக்கலாம். இத்திரைப்படத்தைக் குடும்பத்தோடு போய் பாருங்கள்.

இப்படத்தை பார்த்தவுடன் டாக்டர் கார்ல் சாகன் நிகழ்த்திய ஒரு பேருரை நினைவிற்கு வந்தது. அதில் சூரிய மண்டலத்தின் கோடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு படத்தைக் காட்டுவார். அங்கிருந்து பார்க்கும் போது பூமி ஒரு தூசு போல் தெரியும். இந்தத் தூசான உலகில்தான் அத்தனை சரித்திரமும், வன்முறையும், கொடுமைகளும், வாழ்வும் நடந்து கொண்டு இருக்கிறது. இதைக் கொஞ்சம் உணர்ந்தால் நமக்கு அடக்கம் என்பது தோன்றும் என்று முடிப்பார்.

ஆகஸ்ட் ரஷ்

அனாதைச் சிறுவன் ஒருவன். அபரிதமான இசை ஞானம் குழந்தையிலேயே. காற்றினிலே வரும் கீதத்தை உணரும் திறன். வண்டின் ரீங்காரம், புல்லின் அசைவு, ஜன்னல் கதவு இழுக்கும் ஓசை..இவையெல்லாம் அவனுக்கு இசை வடிவாய் தெரிகின்றன. இப்பிள்ளை எப்படிப் பிறந்தான்? ஒரு குழுப்பாடகன். நல்ல குரல் வளம் உள்ளவன். ஒரு சாஸ்திரீய இசைக் கலைஞி. அவளுக்கும் இசையில் அதிக ஈடுபாடு உண்டு. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க நேரிட. கண்டதும் காதல். காதலுடன் கூடல். ஒரேயொரு கூடல். அவள் கர்பவதியாகிவிடுகிறாள். ஆனால் அவள் தந்தைக்கு இக்காதலில் இசைவில்லை. கருக்கலைக்க முடியவில்லை. குழைந்தை பிறந்தவுடன் தாயறியாமல் குழந்தையை அநாதை ஆசிரமத்திற்குக் கொடுத்துவிடுகிறார். தாய் குழந்தையைத் தேடி. காதலன் காதலியைத் தேடி. குழந்தை பெற்றோரைத் தேடி. இவர்களை இணைப்பது இசை. இறுதியில் இசையால் ஒன்று கூடுகின்றனர்.

என்ன 1945ம் வருடத்து தியாகராஜ பாகவதர் காலத்துக் கதை சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை 2007-ல் வெளிவந்திருக்கும் ஹாலிவுட் படக்கதையிது. போனவாரம் பெரு தேசத்திற்குப் பயணப்பட்ட போது விமானத்தில் பார்த்தேன். எனக்கே நம்ப முடியவில்லை. ஒன்று கதைக்கரு நமது பாலிவுட், காலிவுட்டிலிருந்து போயிருக்க வேண்டும், இல்லை இதைக் காப்பியடித்து நம்மவர் இந்த வருடம் ஒரு படம் வெளியிடுவர். இரண்டில் ஒன்று நிச்சயம்.

நேற்று இரவு ஒரு ஹாலிவுட் வங்கித் திருட்டுப் படம் பார்க்கிறேன், "டைட்டில் சாங்" நம்ம ஏ.ஆர் ரகுமானின் 'தய தைய்ய, தைய்ய தையா!'

இப்பெல்லாம் ஒரே குழப்பமா இருக்கு ஹாலிவுட், பாலிவு, கோலிவுட் எல்லாம் சேர்ந்து ஒரே கலக்கலான்னா இருக்கு!


காக்க, காக்க!

கல்லூரி என்பது கனவுத் தொழிற்சாலை. படிக்கிறோமோ இல்லையோ, அங்கு கனவுகள் வளர்கின்றன. அது காதல் கனவாக இருக்கலாம் ("ஒரு தலை ராகம்" பிறந்த கல்லூரியை சமீபத்தில் கண்டுவந்தேன்) அல்லது வாழ்வை வெற்றி கொள்ளும் கனவாக இருக்கலாம். எல்லாம் அங்குதான் பிறக்கின்றன. மனிதனின் வாழ்வில் எதையும் சாதிக்கத் துடிக்கும் வயது கல்லூரி வயது! அப்போது, அங்கு தோன்றும் கனவுகள் பலிக்கின்றன. உதாரணத்திற்கு வேறு எங்கும் போக வேண்டியதில்லை, நானேதான் உதாரணம். என் கல்லூரி எனக்குத் தந்த பாடம், "புடம் போடப்படும் தங்கமே ஜொலிக்கும். எனவே புடம் போடுதல் புண்ணாக்கல் அல்ல, அசுதத்தை அகற்றலே" (Purify, don't consume). இதை மிக அழகாக ஆழ்வார்களும் சொல்லுகின்றனர்,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் போயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா
நீளா உனதருளே பார்ப்பன் அடியேனே! (691)

பெருமாள் திருமொழியில் குலசேகர மன்னன் சொல்கிறான், நோய் தீர்க்க வேண்டுமென மருத்துவன் நம் உடலை வாளால் அறுத்துச் சுடுகிறான். அது துன்பமானதுதான். ஆயினும் அத்துன்பத்தை நாம் உவப்புடன் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல் வாழ்வில் துயர் வரும் போது அது இறைவன் நமக்குத்தரும் சிகிச்சை எனக் கொள்ளுதல் நலம், என்று.

இப்போது அமெரிக்கன் கல்லூரிக்கு கஷ்டகாலம் என்று என் ஆசிரியர் சாம் ஜார்ஜ் எழுதியிருந்தார். அதையே எதிரொலிக்கிறது இங்கொரு வலைத்தளம்.

என்ன நடக்கிறது அங்கு? முழு விவரம் இன்னும் எனக்குத் தெரியவில்லை. வாசித்த வரையில் "வேலியே பயிரை மேய்ந்து கொண்டு இருப்பது" தெரிகிறது. கல்லூரி என்பது கல்வி நிருவனம். அதை கிறிஸ்தவமடம் நிருவியிருந்தாலும், பொதுச் சொத்து என்று வந்த பின் அதற்குரிய மரியாதைத் தந்துவிட வேண்டும்.

அமெரிக்கன் கல்லூரியில்தான் எனக்கு நாத்திகமும், ஆத்திகமும் போதிக்கப்பட்டது. என் பேராசிரியர் ஜே.சி.ஆப்ரகாம் பழுத்த நாத்திகர், டார்வின்தாசர். எப்போதும் கடவுள் இல்லை எனும் போதனை. இன்னொரு புறம் பேரா.டி.கே.நாராயணன். சுவாமி சிவானந்தரின் போதனை. இதற்கிடையில் கல்லூரி நூலகமோ விவேகாநந்தரின் வாழ்க்கைச் சரிதம் முழுவதையும் எனக்கு வாசிக்க அளித்தது. எனவே அங்கு வெறும் கிறிஸ்தவ போதனை மட்டும் அளிக்கப்பட்டது என்று எண்ணுவது தவறு. உண்மையை சொல்லப்போனால், ஆர்.கே.நாராயணின் 'சுவாமியும் நண்பர்களும்' (Swami and friends) கதையில் வரும் சுவாமி போல் எனக்கு மதம் மற்றம் நிகழ்ந்துவிடுமோ! என்ற பயமிருந்ததால், அங்குள்ள சாப்பல் பக்கமே போனதில்லை (கிறிஸ்தவப் பெண்களைப் பிடிக்கும் என்பது வேறு விஷயம்!அது வயதின் கோளாறு :-).

இப்போது அக்கல்லூரியில் ஒரு Academic Coup நடந்தப்பட்டிருக்கிறது. நடத்தியவர் பாதிரியார். முதல்வர் அலுவலகத்தை மூடிவிட்டு, ஒட்டு மொத்தமாக ஒரு புதிய கல்லூரி நிருவாகத்தை புகுத்தியிருக்கிறார். மக்களாட்சி நடக்கும் இந்தியாவில் இதுவொரு அடாவடித்தனம் என்று சொல்ல வேண்டியதில்லை. இதைக் கண்டிக்க வேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது. அப்பனுக்குப் பாடம் சொல்லுதல் கிறிஸ்தவத்தில் உண்டோ இல்லையோ, தமிழ் மண்ணில் உண்டு. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம், குற்றமே என்று சொல்வது தமிழ் மண். எனவே இம்மண்ணில் பாடம் சொல்லித்தரும் கல்லூரியில் ஒரு அடாவடித்தனமெனில் அதைக் கண்டிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.