காக்க, காக்க!

கல்லூரி என்பது கனவுத் தொழிற்சாலை. படிக்கிறோமோ இல்லையோ, அங்கு கனவுகள் வளர்கின்றன. அது காதல் கனவாக இருக்கலாம் ("ஒரு தலை ராகம்" பிறந்த கல்லூரியை சமீபத்தில் கண்டுவந்தேன்) அல்லது வாழ்வை வெற்றி கொள்ளும் கனவாக இருக்கலாம். எல்லாம் அங்குதான் பிறக்கின்றன. மனிதனின் வாழ்வில் எதையும் சாதிக்கத் துடிக்கும் வயது கல்லூரி வயது! அப்போது, அங்கு தோன்றும் கனவுகள் பலிக்கின்றன. உதாரணத்திற்கு வேறு எங்கும் போக வேண்டியதில்லை, நானேதான் உதாரணம். என் கல்லூரி எனக்குத் தந்த பாடம், "புடம் போடப்படும் தங்கமே ஜொலிக்கும். எனவே புடம் போடுதல் புண்ணாக்கல் அல்ல, அசுதத்தை அகற்றலே" (Purify, don't consume). இதை மிக அழகாக ஆழ்வார்களும் சொல்லுகின்றனர்,

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் போயாளன் போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் விற்றுவக் கோட்டம்மா
நீளா உனதருளே பார்ப்பன் அடியேனே! (691)

பெருமாள் திருமொழியில் குலசேகர மன்னன் சொல்கிறான், நோய் தீர்க்க வேண்டுமென மருத்துவன் நம் உடலை வாளால் அறுத்துச் சுடுகிறான். அது துன்பமானதுதான். ஆயினும் அத்துன்பத்தை நாம் உவப்புடன் ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல் வாழ்வில் துயர் வரும் போது அது இறைவன் நமக்குத்தரும் சிகிச்சை எனக் கொள்ளுதல் நலம், என்று.

இப்போது அமெரிக்கன் கல்லூரிக்கு கஷ்டகாலம் என்று என் ஆசிரியர் சாம் ஜார்ஜ் எழுதியிருந்தார். அதையே எதிரொலிக்கிறது இங்கொரு வலைத்தளம்.

என்ன நடக்கிறது அங்கு? முழு விவரம் இன்னும் எனக்குத் தெரியவில்லை. வாசித்த வரையில் "வேலியே பயிரை மேய்ந்து கொண்டு இருப்பது" தெரிகிறது. கல்லூரி என்பது கல்வி நிருவனம். அதை கிறிஸ்தவமடம் நிருவியிருந்தாலும், பொதுச் சொத்து என்று வந்த பின் அதற்குரிய மரியாதைத் தந்துவிட வேண்டும்.

அமெரிக்கன் கல்லூரியில்தான் எனக்கு நாத்திகமும், ஆத்திகமும் போதிக்கப்பட்டது. என் பேராசிரியர் ஜே.சி.ஆப்ரகாம் பழுத்த நாத்திகர், டார்வின்தாசர். எப்போதும் கடவுள் இல்லை எனும் போதனை. இன்னொரு புறம் பேரா.டி.கே.நாராயணன். சுவாமி சிவானந்தரின் போதனை. இதற்கிடையில் கல்லூரி நூலகமோ விவேகாநந்தரின் வாழ்க்கைச் சரிதம் முழுவதையும் எனக்கு வாசிக்க அளித்தது. எனவே அங்கு வெறும் கிறிஸ்தவ போதனை மட்டும் அளிக்கப்பட்டது என்று எண்ணுவது தவறு. உண்மையை சொல்லப்போனால், ஆர்.கே.நாராயணின் 'சுவாமியும் நண்பர்களும்' (Swami and friends) கதையில் வரும் சுவாமி போல் எனக்கு மதம் மற்றம் நிகழ்ந்துவிடுமோ! என்ற பயமிருந்ததால், அங்குள்ள சாப்பல் பக்கமே போனதில்லை (கிறிஸ்தவப் பெண்களைப் பிடிக்கும் என்பது வேறு விஷயம்!அது வயதின் கோளாறு :-).

இப்போது அக்கல்லூரியில் ஒரு Academic Coup நடந்தப்பட்டிருக்கிறது. நடத்தியவர் பாதிரியார். முதல்வர் அலுவலகத்தை மூடிவிட்டு, ஒட்டு மொத்தமாக ஒரு புதிய கல்லூரி நிருவாகத்தை புகுத்தியிருக்கிறார். மக்களாட்சி நடக்கும் இந்தியாவில் இதுவொரு அடாவடித்தனம் என்று சொல்ல வேண்டியதில்லை. இதைக் கண்டிக்க வேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது. அப்பனுக்குப் பாடம் சொல்லுதல் கிறிஸ்தவத்தில் உண்டோ இல்லையோ, தமிழ் மண்ணில் உண்டு. நெற்றிக் கண் திறப்பினும் குற்றம், குற்றமே என்று சொல்வது தமிழ் மண். எனவே இம்மண்ணில் பாடம் சொல்லித்தரும் கல்லூரியில் ஒரு அடாவடித்தனமெனில் அதைக் கண்டிக்க வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.

1 பின்னூட்டங்கள்:

மஞ்சூர் ராசா 5/07/2008 10:11:00 PM

கல்வியில் மதத்தை புகுத்துவது கண்டிப்பாக கண்டிக்கப்படவேண்டியதே.

இதை மதுரை மக்களும் அரசாங்கமும் உடனடியாக கவனிக்கவேண்டும்.