தன்வயமாகும் மொழிகள்!

நேற்று Animal Planet TV பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவின் கருநாகம் பற்றிய ஆவணம். அதில் இரண்டு இருளர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் ஒருவர் அடுத்தவரிடம் கேட்கிறார் "கண்ணாடி விரியனுக்கும், நாகத்திற்கும் என்ன வித்தியாசமென்று?" பதில்,

"இந்த வட்டமான மார்க்கு நாகப்பாப்பிலே இருக்காது. அது கட்டுவிரியனுக்கு மட்டும் இருக்கும்" என்று. இங்கு Mark/marking எனும் ஆங்கில வார்த்தை எங்கோ மலையில் காட்டுவாசிகளாக வாழும் இருளர்களிடம் புகுந்து தமிழாகிவிட்டது. அவரைப் பொறுத்தவரை மார்க்கு என்றால் பாம்பின் மேலுள்ள குறி என்று பொருள். அவருக்கு குறி மறந்து வருகிறது.

"சாருக்கு ஒரு கலர் வாங்கிட்டு வா!" என்று கிராமத்தார் சொன்னால் இங்கு soft drink என்று பொருள்.

மாட்டுப்பொங்கலுக்கு கொம்பிலே 'கலர்' அடிக்க வேண்டுமென்றால் வர்ணம் பூச வேண்டுமென்று பொருள்.

"அதோ போகுது பாரு பிகரு" என்றால் Figure என்று பொருளல்ல, பெண் என்று பொருள். அதாவது அவள் வடிவழகே அவளுக்கு உருவகமாக வருகிறது! எப்படி? தமிழ் வார்த்தை கொண்டல்ல! ஆங்கிலம் கொண்டு.

இப்படி இன்னும் எவ்வளவோ வார்த்தைகள். மொழிகள் தொடர்ந்து கலக்கின்றன. அன்று ஜெர்மனியில் நடக்கும் இலக்கிய சந்திப்பு பற்றிய அழைப்பிதழ் வந்தது. அதில் "மதிய போசனம்" என்றிருந்தது. "போஜனம்" எனும் சமிஸ்கிருத வார்த்தை தமிழாகி நூற்றாண்டுகளாகிவிட்டன. இது போல் இன்று ஆங்கிலம் தமிழாகி வருகிறது. இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பின் "கலர்" ஆங்கிலமென்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

இது தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மட்டுமென்றில்லை. சில நூற்றாண்டுகளாக ஆங்கிலத்தைப் பல மொழிகள் தன்வயமாக்கி வருகின்றன. ஆங்கிலமோ பல நூற்றாண்டுகளாக பிற மொழிச் சொற்களை ஆங்கிலமாக்கி வருகிறது.

மொழி ஓர் கலப்பினம்!

பேசும் படம் - உடல் மொழிப் படம்!

இப்படியொரு படம் வந்திருப்பது இத்தனை நாள் எனக்குத் தெரியாது. அந்தக்காலங்களில் நான் இந்தியாவுடன் அதிகத் தொடர்பில்லாமல் ஜப்பானில் இருந்தேன். பொதுவாக இந்தியாவிலிருக்கும் போது கமலின் படங்களைத் தவறவிடுவதில்லை. அவருடைய ரசனை, கலை ஈடுபாடு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் சினிமா என்பதை உண்மையான, உயர்வானதொழிலாகக் கொண்டு, தொழில் நேர்த்தியுடனும், ஈடுபாடுடனும் செயல்படும் மிகச் சில நடிகர்களில் கமல் முதலிடத்தில் இருக்கிறார்.

இது பேசும்படம் என்றாலும் பேசாப்படம். உண்மையான பேசாப்படங்களின் சக்கிரவர்த்தி சார்லி சாப்லிணைத் தன் குருவாகக் காணும் கமல்ஹாசனால்தான் இம்மாதிரி தீவிரக் கலை முயற்சியில் ஈடுபடமுடியும். கொஞ்சம் கூடப் பேசாமல், 'அந்த நாள்' படத்திற்குப் பிறகு பாட்டு, கூத்து என்று இல்லாமல் உலக தரத்திற்கு ஒரு தமிழ் படம் வந்திருக்கிறது. இது பேசாப்படம் என்பதால் தமிழ்ப் படமென்று சொல்லிவிடமுடியாது. இது ஒரே சமயத்தில் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழி வாழும் இடங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது 1988-ன் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது. Cannes jury என்றழைக்கப்படும் சர்வ தேச திரைப்படக்குழு இப்படத்தை மிகவும் புகழ்துரைத்துள்ளது. இப்படம் பற்றிய குறிப்பு விக்கிபீடியாவில் உள்ளது! மேலும் இப்படம் IMDb எனும் திரைப்படக்கிட்டங்கியில் பத்துக்கு 9.3 மதிப்பெண் பெற்றுள்ளது! சாபு சிரில் தேர்வில் முதல் பத்து சிறந்த இந்தியப் படங்களில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்படத்தைக் காண இங்கே சுட்டவும்!

கமலஹாசனின் மிகையற்ற நடிப்பு. அமலாவின் இயல்பான காதல், நகைச்சுவை வெளிப்பாடு, அடக்கமான இசை, திறமைமான இயக்கம் இவைதான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். படம் கடைசியில் சோகமாக முடிவது இப்படத்தை நம் மனத்தில் பதிய வைக்கிறது. பேசாப்படமென்றாலும் கேமிரா அமைத்திருக்கும் விதம், காட்சிகளைக் கொண்டு செல்லும் விதம் இவை மூலம் இப்படம் பேசத்தான் செய்கிறது. இப்படியொரு அற்புதமான முயற்சி எப்படி எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போனது? அமலா சாயலில் ஸ்ரீதேவி போல் உள்ளார்.

நகைச்சுவை என்றால் இப்படித்தான் இயல்பாக இருக்க வேண்டும். செய்கைகள் மூலம் எவ்வளவு சொல்லிவிட முடிகிறது! உடல் மொழி என்பது உண்மைதான்!!

வேறொரு மனவெளி - 3

இத்தொகுப்பில் தனித்து நிற்கும் கதை சிவஸ்ரீயின் "பொழப்பு". அது ஒன்றுதான் கடைநிலை வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. அதைக்கூட மத்திமவர்க்கக் குரலாக இல்லாமல், கடைநிலை ஊழியரின் பேச்சாகவே எடுத்துச் சென்றிருப்பது எழுத்தாளரின் திறமையையும், அவரின் ஆளுமையையும் காட்டுகிறது.

பாலியல் பற்றி இத்தொகுப்பு நிறையவே பேசுகிறது. பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்கும் பாலியல் சுதந்திரம், கல்யாணம் ஆன ஆண்களுக்கும் பெண்களுக்குமுள்ள சுதந்திரம் இப்படி. ஆயினும் தமிழினம் சார்ந்தே இக்கதைகளின் போக்கு இருக்கிறது. தமிழ்ச், சீன, மலாய் ஒட்டுறவுகள் பற்றி இத்தொகுப்பில் கதைகள் இல்லை. தமிழினம் உடல் சார்ந்த நிலைப்பாடுள்ள சமூகம். நமது பாரம்பரிய உடைகளிலிருந்து மீளாத்தன்மை இதனைப் பிரதிபலிக்கிறது. ஆனால் சீனச் சமூகம் இந்த சமூக "உடற்கட்டி"லிருந்து விடுபட்டுவிட்ட சமூகம். இதற்கு எதிர் நேர், மலாய் முஸ்லிம் சமூகம். இச்சமூகங்கள் உறவு கொள்ளும் போது ஒன்றின் தாக்கம் மற்றதில் எப்படிப் படிகிறது என்று அறிந்து கொள்வது சுவையாக அமையும்.

ஒரு வாசகன் என்ற அளவில் எனக்கு சுகமான வாசிப்பு அளித்தவை முகவரிப் புத்தகமும், பிதாமகனும். சித்ரா ரமேஷின் எழுத்து நெடுநாட்களுப்பிறகு ஏதோ தி.ஜானகிராமனின் கதையொன்றை வாசித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அறிவியல் பின்புலமுள்ள எனக்கு மாதங்கியின் "புரு" சுவாரசியமான வாசிப்பைத் தந்தது. அதுவொரு அறிவியல் நவீனம். ஆகஸ்டு 1981-ல் கணையாழியில் நான் எழுதியிருந்த "வருகிறது" எனும் அறிவியல் நவீனத்தின் சாயலில் அக்கதை அமைந்திருப்பது கூட என் ஈர்ப்பிற்குக் காரணமாக இருக்கலாம். மாதங்கி அவர்கள் அக்கதையை வாசித்திருக்க நியாயமில்லை. எதிர்காலத்திற்குப் போவோருக்கெல்லாம் "நனவிடை தோய்தல்" என்பது இயல்பாக வரும் பாவம் போலும்.இக்கதாசிரியர்களெல்லாம் தேர்ந்த படிப்பாளிகள், படைப்பாளிகள், பல்துறை நிபுணர்கள். இவர்களெல்லாம் கச்சை கட்டிக் கொண்டு தமிழ் எழுத வந்திருப்பது தமிழுக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது.

தூரக்கிழக்கில் வேலை பார்க்கும் எனக்கு வாரத்தில் ஏழுநாட்கள் போதுவதில்லை. இந்த வாழ்வுமுறையில் இலக்கியம் என்பது என்னிடமிருந்து விலகி வரும் போழ்தில் திரு.பாலு மணிமாறன் இக்கதைகளை வாசிக்குமாறு பணித்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. கட்டாயத்தின் பேரிலாவது கதைகள் படிக்க முடிந்ததே! அவருக்கு நன்றி. இக்கதைகள் மூலம் என்னுலகிலிருந்து என்னைப் பிரித்து இப்பெண்ணாசிரியர்கள் அவர்களின் பல்வேறு உலகுகளைக் காட்டியதற்கு என் நன்றி.

இக்கதைகள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன எனத்தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் அவை தமிழ் வாசகனுக்கு இனிமையான வாசிப்பைத் தருகின்றன என்பதே இங்கு முக்கியம்.

(நா.கண்ணனின் புத்தக முகவுரை முற்றிற்று)

இப்புத்தகம் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்:

In India :
C-54, 1st Floor, Anna Nagar Plaza,
II Avenue,Anna Nagar,
Chennai 600 040

In Singapore:
BlK 325B, #14-655,
Sengkang Eastway,
Singapore

மின்னஞ்சல் தொடர்பிற்கு: தொகுப்பாசிரியர் பாலு மணிமாறண்

வேறொரு மனவெளி - 2

பெண்களின் கதைகள் என்பதால் உறவு இங்கு பிரதானப்படுகிறது. உறவுப் பிரச்சனைகள் பல கதைகளின் கருப்பொருளாகின்றன. பெண்மை உணர்வை ஆண்களால் ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் மரபியல் அமைப்பின் படி, ஒரு ஆண் என்பவன் "பாதிப் பெண்". இதனால்தானோ என்னவோ, வித்யா உபாசகர்கள், அன்பே வடிவான சமயப் பெரியவர்கள் தோற்றத்தில் பெண் வடிவில் தோன்றுகின்றனர். ஆயினும், எல்லா ஆண்களுக்கும் இந்த மெல்லிய உணர்வு தலை தூக்கி நிற்பதில்லை. அந்த நோக்கில் பார்த்தால் பல கதைகளில் இழையோடும் உணர்வுகள் பெண்களால் மட்டுமே சட்டென கிரகிக்கக்கூடியவை என்று தோன்றும். உதாரணமாக, மலர்விழி இளங்கோவனின் "புன்னகை என்ன விலை?" எனும் கதை சுத்தமான பெண் எழுத்து என்று வகைப்படுத்தக் கூடியது. அதில் செடியை வெட்டும் போது மலர்கள் சிதறிப் போவதைக் கண்டு பதறுகிறாள் கதாநாயகி. பூனையின் மேல் நீர் விட்டு தவிக்க விடும் போது தவிக்கிறாள். இயல்பான தாய்மை உணர்வு பேசும் இக்கதை இறுதியில் ஒரு ஆணும் இந்த மென்மை நிலையை அடைய முடியும் என்று சுட்டுகிறது. இதே போல் மிக, மிக லாவகமாக ஒரு முதியவரின் உள்ளுணர்ச்சிகளை ஒரு நாட்குறிப்பேடு போல் பதிய வைக்கிறது ரம்யா நாகேஸ்வரரின் "முகவரிப் புத்தகம்" எனும் கதை. ஜெயந்தி சங்கரின் "நுடம்" ஒரு தேர்ந்த கதை சொல்லியின் வாக்கில் ஒரு சிறு பெண்ணின் பிரச்சனையைப் பேசுகிறது. இது தாய்-சேய் உறவு பற்றிய கதை. ஜோசப்பின் ஜோசப்பின் "அம்மாவுக்கு வயசாச்சு" கதை கூட தாய்-சேய் உறவு பற்றியதுதான். ஆயினும் அது தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிறது.

"பார்வை" எனும் கதையை ஒரு பெண்ணால் மட்டுமே பேச முடியும். அதுவும் ஒரு இந்தியப் பெண்ணால் மட்டுமே பேசமுடியும். ஏனெனில் இந்திய ஆண்கள் வித்தியாசமானவர்கள். நடமாடும் பெண்களெல்லாம் தன் சுகத்திற்கு வந்தவர்கள் என்பது போல் பார்க்கும் ஒரு குணம் அவர்களுக்குண்டு. இந்தியா சென்று திரும்பிய என் ஜெர்மன் நண்பர் (பெண்) சொன்னார், தன் பயணத்தின் ஒரு பொழுதில் ஒரு இந்திய ஆண் அவளை கண்களால் கற்பழித்தான் என்றும், தாங்கமுடியாத ஒரு கட்டத்தில் அவள் கூக்குரலிட்டாள் என்றும். ஏனோ நம் ஆண்களுக்கு அப்படியொரு வியாதி. ஜப்பானியக், கொரிய ஆண், பெண்களை என்றில்லை, ஆண்களையே கண்ணுக்குக் கண் பார்ப்பதில்லை. வியட்நாம், சீனா கூட இப்படித்தான். எனவே அங்கு ஒரு பெண் தனிமையில் "பார்வைக் கற்பழிப்பிலிருந்து" மீளமுடியும். ஆனால் தமிழ் ஆண்கள் வாழும் பகுதியில் முடியாது. ஆனாலும், ஆண்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்களே என்று ஆசிரியர் எல்லாப் பார்வையும் காமப்பார்வையல்ல என்று முடித்து, பழியைப் பெண் மீதே கடைசியில் சுமத்தி விடுகிறார். இது சமூகப் பதப்படுத்தலாலா என்று நோக்க வேண்டும்.பெண் என்பவள் தாய் மட்டுமல்லவே. அதுவும் 21ம் நூற்றாண்டுப் பெண், ஒரு தேர்ந்த அறிவாளி, ஆண்களைப் போல் வேலை செய்பவள், ஆணின் சமூக பாத்திரத்தை வரித்துக் கொண்ட பின்னும் ஒரு தாயாக, ஒரு தோழியாக அவளால் வலம் வரமுடிகிறது. அத்தகைய பெண்கள் பேசும் பெண்ணியல் வாதமும் கதைக்களனாகின்றன. சுதந்திரம் என்றால் என்னவென்று விசாரிக்கப் போய் தன்னையே காதலிக்கத்தொடங்கும் சௌளம்யாவின் "நான் என்னைக் காதலிக்கிறேன்" என்ற கதை பின்நவீனத்துவ வாழ்வியல் தாக்கம் கொண்ட கதை. அதே போல் ஆணுக்குள்ள சகல உரிமையும் பெண்ணிற்கு உண்டு என்று சுட்டும் இன்னொரு கதை "முகமூடி" என்ற சூர்யரத்னாவின் கதை. இக்கதைகளை நகர்ப்புற வாழ்வியல் சார்ந்த ஒரு அறிவுஜீவப் பின்புலம் இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது. இரண்டுமே பட்டவர்த்தனமான கதைகள். பாரதி பேசும் "புதுமைப் பெண்" எழுதிய கதைகள்.

இவை போக சிங்கப்பூருக்கென்றே உள்ள சில குண நலன்களைப் பற்றிப் பேசும் சில கதைகளுண்டு. சிங்கப்பூர் என்பது சீன, இந்தியக் குடியேறிகளால், அங்கு வாழ்ந்த மலாய் மக்களுடன் இயைந்து உருவாக்கப்பட்ட நாடு. எனவே நல்லெண்ணக் கொள்கை பிடிப்புள்ள நாடு அது. சிங்கப்பூர் சந்தோசாத் தீவில் மலையேற்று வண்டியில் மேலே ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு இங்கிலாந்து மாது என்னை விளித்துச் சொன்னதை என்னால் என்றும் மறக்கவியலாது. "பல இன மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், ஆதரவுடனும், சகிப்புத்தன்மையுடன் எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டும் நாடு சிங்கப்பூர்" என்றார் அவர். அதுதான் எவ்வளவு உண்மை! உலகம் நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியலிசம் என்றெல்லாம் பேசி மாறிக்கொண்டு வந்தாலும் அன்பு, பாசம், நட்பு என்பதை நம்மால் உதறித் தள்ளிவிடவா முடிகிறது? என்ன கொஞ்சம் பழைய கதை போல், 60 களில் வந்த சினிமாப் படம் போல் அவை தோற்றம் தந்தாலும், அக்குணங்களே இன்று அந்த நாட்டை நல்வழியில் செலுத்திக் கொண்டு இருக்கிறது. இவை பற்றிப் பேசும் கதைகளே, நவமணி சுந்தரத்தின் "அடுக்குமாடி அநாதைகள்", கண்ணம்மாவின் "எண்ணங்களின் இடைவெளி", நூர்ஜஹான் சுலைமானின் "நட்பு" பிரேமா சத்யன் ராஜூவின் "சீன மூதாட்டியின் கதவுகள்" எனும் கதைகள்.

சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் பற்றிப் பேசும் போது கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவும் சிங்கப்பூர் பெண்கள் கதைகளென்றால் இன்னும் கூட கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டின் வாலுத்தனமெல்லாம் சிங்கப்பூரில் கூடாது என்று எச்சரிக்கும் கதை கமலாதேவி அரவிந்தனின் "ஞயம்பட உரை". கூரறுக்கும் பாணியை அறிவியலே ஒதுக்கி விட்டு "பொதுமைக் கண்ணோட்டத்தில்/முழுமைக் கண்ணோட்டத்தில்" அறிவியலை நோக்க வேண்டுமென்று மாறிவிட்ட காலக்கட்டத்தில் தமிழகத்தின் அறிவுஜீவிகள் இவர்களுக்கு என்ன எழுதத் தெரியுமென்ற பாணியில் சிங்கப்பூர் வந்து விருந்துண்டு விட்டு சொல்லிப்போகும் மனோபாவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது "ஞயம்பட உரை". உண்மையைச் சொல்லப்போனால் தமிழைத் தேசிய மொழியாக்கி, தமிழில் எழுதுவோருக்கு ஊக்கப்பரிசளித்து, தமிழகத்தின் அறிஞர் பெருமக்களை அடிக்கடி வரவழைத்து தமிழ் வளர்க்க பாடுபடுகிறது சிங்கப்பூர். இக்கதைகள் மீண்டும், மீண்டும் சொல்வது போல் சிங்கப்பூரிலிருந்து கொண்டு "எமக்குத்தொழில் கவிதை" என்று இறுமாப்புடன் இருந்துவிட முடியாது. அங்கு எதிரோட்டம் போட்டு, சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு தொழில் என்றில்லாமல் பல தொழில்களில் ஈடுபட்டு பொருளீட்ட வேண்டும். இதற்கிடையில் தமிழையும் வளர்க்க வேண்டும். எனவே அவர்களின் பன்முகத்தன்மையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, கமலாதேவி சொல்வது போல் அங்குள்ள பலர் பன்மொழி அறிவுகொண்டு பல கலைகளில் திறமையுடையவர்களாக உள்ளனர். இப்படி இந்தியாவில் காண்பதரிது. எனவே திணைவகுத்த பண்டைத்தமிழன் போல் சிங்கப்பூர் கதைகள் சிங்கப்பூர் திணையின் குண நலன்களையே பிரதிபலிக்கும் என்று கொள்ள வேண்டும். அங்கு தமிழக எண்ணவோட்டத்தைக் காணவியலாது.

இந்தியர்களின் ஆற்றாமைையயும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கப்பூர்த் திணையை முற்றும் முழுதுமாக பிரதிபலிக்கும் ஒரு தீவிர படைப்பை! அதாவது, இக்கதைகள் அனைத்தும் (பொழப்பு தவிர) மத்திம வர்க்கத்தின் கதைகள். சிங்கப்பூரின் ஏழ்மை பற்றியோ, அங்குள்ள கடைநிலை, விளிம்பு நிலை மாந்தர் பற்றியோ தீவிரமாகப் பேசுவதில்லை. காரணம் இவ்வெழுத்தின் சொந்தக்காரர்கள் சமீபத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கல்யாண நிமித்தம் வந்து குடியேறியவர்கள். அவர்களுக்கே இன்னும் சிங்கப்பூர் முழுவதும் பிடிபடாத போது, அதன் வேர்ப்பிரச்சனைகளை எப்படிக் கண்டு எழுத முடியும்? ஆனாலும், இவர்களின் காத்திரமான எழுத்து, பார்வை இவை இக்கருப்பொருட்கள் மேலும் கூடிய விரைவில் பாயும் என்று நம்பலாம்.

வேறொரு மனவெளி - 1

சிறுகதை உருக்கொண்டு, வெளிப்பட்டு, பரவி நின்றவுடன் அது தன்னளவில் பயனளித்து விடுகிறது. ஆயின் அதன் முழுப்பயனுக்கு கதாசிரியர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வாசிக்கும் வாசகனைப் பொறுத்து, அவன் இதுவரை தன்னுள்ளே கொண்டுள்ள அனுபவங்களைப் பொறுத்து கதையின் பலாபலன்கள் அமையும். எனவே கதைகளைத் தராசில் இட்டு அளக்கமுடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பலன். அது பிரதி, ஆசிரியன், வாசகன் என்ற முக்கோணத்தில் அடங்கிவிடுகிறது. எதற்கு இப்படி நீட்டி, முழக்கிச் சொல்கிறேன் என்றால், நான் இக்கதைகளை தராசிலிட வரவில்லை. ஆயின், வாசகன் என்ற அளவில் அக்கதைகள் என்னுள் எழுப்பிய எண்ண அலைகளை உங்களுடன் பங்குபோட வந்துள்ளேன்.

நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு 20 வருட இடைவெளியில் போய் வரும் வாய்ப்புக் கிடைத்தது. காரில் போய் இறங்கலாமென நினைத்துப் போனது தவறாகப் போய் விட்டது. நான் ஓடி விளையாடிய "பெரிய" தெரு, சுருங்கிப் போயிருந்தது. முதலில் கணக்குப் பண்ணாமல் தாண்டிப் போய்விட்டேன். குழந்தையில் விளையாடிய "ஏறமுடியாத" மண்டபம், இப்போது என்னுயரத்திற்கு நின்றது. ஓடி, ஓடிக் களைத்துப் போகும் இரட்டைத் தெரு ஒரு வளைவில் வந்து, முடிந்து விட்டது இப்போது. என்ன மாற்றம்? தெரு சுருங்கிவிட்டதா என்ன? இல்லை என் பரிமாணங்கள் மாறிவிட்டன! அன்று நான் உலகைப் பார்த்த பரிமாணம் வேறு, இன்று பெரிய ஆளாகி அதையே பார்க்கும் பரிமாணம் வேறு. இதை மிக அழகாக ஆவணப்படமெல்லாம் எடுத்து இருக்கிறார்கள் வெளிநாட்டில். அன்று கண்ட உலகம், அவை தந்த பாதிப்பு, அப்போது எழுந்த மனப்பதிவுகள், அப்போதைய புரிதல் என்பவையெல்லாம் அப்பரிமாணத்தைச் சேர்ந்தவை. அதை ஒரு கனவுத்தன்மையுடன் இன்று அசைபோட முடியுமே தவிர, அப்பரிமாணத்திற்குள் மீண்டும் போகமுடியாது.

ஒரு மனிதனுக்குள்ளே இப்படி இன்னொரு வாழ்வு முறை ஒட்டிக்கொண்டிருக்கும் போது, ஆண் பார்வை, பெண் பார்வை என்பது எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். இங்குள்ள கதைகளெல்லாம் பெண்கள் எழுதியவை. சில கதைகள் பெண்களால் மட்டுமே சொல்ல முடியும் என்று வருகிற கதைகள். அம்மா, அக்கா, தங்கை என்ற உறவுகளில் வளர்ந்துவிட்ட ஆண்களுக்கு இப்பார்வை, இப்புரிதல் கொஞ்சம் அணுக்கமாய் இருக்கலாம். ஆயினும், "அம்மாவுக்குள் இப்படி ஒரு மனுஷி இருப்பதை, அம்மாவை ஒரு பெண்ணாகக் கூட நினைக்காத தன்னையும், அப்பாவையும் ஒரு கணம் நினைத்தான்" என்று பிதாமகன் எனும் கதையில் வரும் முரளி எண்ணுவது போல் நாம் ஆகிவிடக்கூடாது. பெண் எழுத்து என்பது உண்மை. அதைப் புரிந்து பழகிக்கொள்ள இக்கதைகள் நிச்சயம் உதவும்.அடுத்து இக்கதைகள் பேசும் கதைக்களன் வேறு. அது இந்தியா அல்ல. சிங்கப்பூர். சிங்கப்பூர் ஆசியாவில் வளர்ச்சியடைந்த ஒரு நாடு. பல்லின மக்கள் கூட்டாக, ஒற்றுமையாக வாழும் நாடு. தேனீக்கள் போல் எல்லோரும் சுறு, சுறுப்பாக வாழும் நாடு. தமிழ், மலாய், சீனம் எனும் மும்மொழி முக்கியமாய்ப் புழங்கும் நாடு. இந்த நாடு தரும் வாழ்வில் ஊறித்திளைத்து பின் அதன் பாதிப்பில் எழுந்திருக்கும் கதைகள் இவை. எனவே இது தமிழ் வாசகனுக்கு ஒரு புது வாசிப்பைத்தரும். நல்லவேளை தோப்பில் முகம்மது மீரான் கதைகள் போல் அநுபந்தம் போட்டு அர்த்தம் சொல்ல வேண்டிய அளவிற்கு புதுச் சொற்கள் இல்லையெனினும், அவசரமாய் வாசித்து முடித்து விடக்கூடிய கதைகள் இல்லை. கதையின் அடர்த்தி அதற்குக் காரணமெனினும், பல புதிய சொற்கள் கொஞ்சம் நம்மை நிற்க வைக்கத்தான் செய்கின்றன.

பாலு மணிமாறன், தன் பெயருக்கு ஏற்றபடி சிங்கைப் பத்திரிக்கைகளில் வந்து போன மணி, மணியான கதைகளை இத்தொகுப்பில் தொடுத்து இருக்கிறார். எனவே ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை. ஆயினும், ஒரு தமிழ் வாசகனுக்கு இதை வாசித்து முடித்தவுடன் அவர்களின் பர, பரப்பான வாழ்வு கண் முன்னே கொஞ்ச நேரம் நிற்காமல் போவதில்லை. அதுவே பல கதைகளின் கருப்பொருளாகிப் போனதே காரணம்.

ஆடிப்பழகு!

பி.பி.பி கேளிக்கை எனும் தொலைக்காட்சியில் கொஞ்ச நாளாக நடனம் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். சூப்பர் புரோகிராம் என்றுதான் சொல்ல வேண்டும். நடனம் என்பதுதான் எவ்வளவு அழகான கலை. நம்மவூரில் ஏதோவொரு காரணத்திற்காக அது தேவதாசிகளின் வழக்கு என்றும் பின்னால் கூத்தாடிகள் என்று இகழப்பட்ட சினிமாக்காரர்களின் கேளிக்கை என்றும் ஆகிப்போனது. இப்போது புகழ் பெற்று சாஸ்தீரிய நர்த்தனம் எனப்படும் பரதம் கூட தேவதாசிகளின் குலச்சொத்தாகவே இருந்தது! ஆடல்வல்லான் என்று இறைவனையே கூத்தனாக உருவகிக்கும் தமிழகத்தில் நடனம் என்பதற்கு உண்மையான சமூக மதிப்பில்லாமல் இருப்பது முரண்நகை.

இதுவொரு மத்திய வர்க்க மனோநிலையாக இருக்கலாம். ஒரு சபைக் கூச்சம். ஒரு வெட்கம், இக்கலையை வளர்க்கவிடாமல் முடக்கி இருக்கலாம். எனினும் இப்போது காலம் மாறுகிறது. சமூக விழுமியங்கள் தலை கீழாய் மாறிவிட்டன. தாசிகளின் நடனம் உயர் வர்க்கப் பழக்கமாகிவிட்டது. அங்கொரு மைக்கேல் ஜாக்சென் என்றால் இங்கொரு பிரபுதேவா என்றாகிவிட்டது. குழந்தைகளை நடனமாட உற்சாகப்படுத்துங்கள். நீங்களும் கூச்சப்படாமல் நடனமாடுங்கள். நடனம் மிக நல்ல உடற்பயிற்சி. அது உங்களை இளமையாக வைத்திருக்கிறது.

சினிமா தவிர பிற பொழுது போக்கு அம்சங்களை உற்சாகப்படுத்துங்கள். சினிமா உண்மையில் உங்களை சோம்பல்படுத்துகிறது. அதில் உங்கள் பங்களிப்பென்று ஏதுமில்லை. ஆனால் பாடலில், நடனத்தில் நீங்கள் பங்கேற்கிறீர்கள். அது உங்களை வளப்படுத்துகிறது. ஒவ்வொரு அபார்ட்மெண்டிலும் நடனமாட ஒரு அரங்கு உருவாக்குங்கள். இப்போதெல்லாம் கல்யாண நிகழ்வில் சின்ன டிஸ்கோ உண்டாமே? ஒரு வீடியோ பார்த்தேன். நல்ல சேதிதான்!


எண்ணங்களின் நேரடி வலைப்பரப்பு

நானும் நட்சத்திரமான நாளிலிருந்து வாரத்திற்கு இரண்டு பதிவாவது போட வேண்டுமென்று எண்ணுகிறேன் (துளசியின் பரிந்துரை). எழுத எண்ணங்கள் இல்லாமலில்லை. அது தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருக்கிறது. குறைந்தது நான்கு தலைப்புகள் வந்து, வந்துபோய்விட்டன. ஆனால் எழுத நேரமில்லை. ஏன் இன்னும் நேரடியாக எண்ணங்களை பரப்ப முடியவில்லை. ஊடக மாற்று என்பதுதான் முன்னேற்றத்தின் தடையாக இன்று உள்ளது. முதலில் நாங்களெல்லாம் சொளகு போன்ற ஒரு காந்தத்தகட்டில் 500 கி.பைட் பதிவு செய்தோம். டாஸ் முறை. பின் 1 மெகாபைட் வந்தது. அப்புறம் எழுதிய பார்மெட் மெக்கிண்டாஷ் எனில் விண்டோஸ்ஸுக்கு மாற்ற முடியாது. எல்லாம் ஒன்றுக்கொன்று பேசாதுகள். ஒலியாக இருந்தால் அனலாக், டிஜிட்டல் என்று. ஆயிரக்கணக்கான எனது புகைப்படங்கள் ஸ்லைடுகளாக வீட்டில் உறங்குகின்றன! என்று மின்னாக்கம் பெறும் அவை? முன்பெல்லாம் ஒரு ஸ்லைடுலிருந்து ஒரு மின்னாக்கம் (பி.பி.டி கோப்பு) கொண்டுவர ஓரிரவு கூட பிடித்திருக்கிறது. இன்றும் தமிழின் நூல்கள் செல்லரித்து வீட்டில் கிடக்கின்றன. அது காகித ஊடகம். நாம் மின்னூடகத்தில் இருக்கிறோம்.

இந்த ஊடகத்தைக் குப்பையில் போட்டு விட்டு நான் எண்ணுவதை இந்த நிமிடம், இந்தக் கணத்தில் பரப்பிவிடும் வித்தையைக் கற்றுத்தாருங்கள். வலைப்பதிவு படுத்துவிடும் :-)

திமிங்கில வேளாண்மை

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.

கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!

Deepest Point in the World (and Pacific Ocean)
Challenger Deep, Mariana Trench, Western Pacific Ocean: 35,840 feet / 10,924 meters
Deepest Point in the Atlantic Ocean
Puerto Rico Trench: 28,374 feet / 8648 metersDeepest Point in the Arctic Ocean
Eurasia Basin: 17,881 feet / 5450 meters

Deepest Point in the Indian Ocean
Java Trench: 23,376 feet / 7125 meters

Deepest Point in the Southern Ocean
Southern end of the South Sandwich Trench: 23,736 feet / 7235 meters

உலகின் 70% பரப்பு நீரில் அமைந்துள்ளது. கடல் உலகின் 97% நீரைத் தன்னுள் வைத்துள்ளது. அதில் 2% உறை நிலையில் உள்ளது. உலகில் அடங்கியிருக்கும் நீரின் அளவை 1.400.000.000 km3 என்று கணக்கிட்டுள்ளார்கள். இதில் m3 நீர் என்பது 1,000 லிட்டர் நீர் அளவைக் குறிக்கும். ஆக, இவ்வளவு பரந்து பட்ட ஓர் நீர் பரப்பு என்பதுதான் உலகின் ஜீவிதத்திற்கு ஊன்று கோலாய் உள்ளது. "வான் சிறப்பு" என்று வள்ளுவன் "பாயிரத்தை"த் தொடர்ந்து பாடுவதற்கு பொருள் இருக்கிறது. அவனே சொல்வது போல் "நீர் இன்றி அமையாது உலகு".

இந்தப் பெரும் பரப்பை மனிதன் முறையாகக் கையாளத் தொடங்கும் போது பல அற்புதங்கள் நிகழும். ஆனால், முறையாக கடல் வளத்தை, கடல் இயங்கும் விதத்தை மனிதன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கஞ்சி காணாதவன் விருந்தில் உண்பதுபோல் மனிதன் கடல் வளத்தை முறையின்றி அணுகிவருகிறான். ஒரு வளம் இருக்கிறது என்றால் முதலில் அதைச் சுரண்டி ஒழித்துவிடுவது மனிதனின் இயல்பாக உள்ளது. உதாரணமாக உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் பிரேசிலின் சுடுமழைப் பிராந்தியத்தை (tropical rain forests) வெகு வேகமாக அழித்து வருகிறான் மனிதன். நுரையீரலை அழித்துவிட்டு எப்படி பின் சுவாசிக்க முடியும்? அமெரிக்காவில் பிரயரீ(Prairie) எனும் நிலப்பரப்பு பரந்து விரிந்து கிடந்தது. அதன் வேளாண் தன்மையறிந்து அதை முழுவதுமாக மாற்றத் தொடங்கி இன்று அது இருந்த நிலையிலிருந்து வெறும் 20% மட்டுமே உள்ள அளவு குறைந்துவிட்டது! இதைச் செய்யும் போது அங்கு வாழ்ந்த காட்டு எருமைகளைக் கன்னாபினாவென்று மில்லியன் கணக்கில் கொன்று குவித்தான் மனிதன். அதாவது, காட்டு எருமைகள் வாழ்ந்த இடத்தை அபகரிக்க அவைகளைக் கொல்வதைத் தவிர மாற்று வழி தெரியவில்லை மனிதனுக்கு.

இந்தப் பின்னோட்டத்தில்தான் மனிதனின் இறைச்சித் தேவையை பூர்த்தி செய்ய கடலில் பண்ணைகள் அமைத்து திமிங்கிலங்களை வளர்த்து, சாகுபடி செய்தால் என்ன? எனும் கேள்வி எழுகிறது. இது சாத்தியமே! இப்போது கொரியாவில் 'நத்தைச் சாகுபடி' (oyster culture), மீன் சாகுபடி (fish culture) இம்முறையில் நடத்தப்படுகிறது. திமிங்கிலம் என்பது கடல் சார்ந்து வாழும் நாடுகளான ஜப்பான், கொரியா போன்றவைகளுக்கு முக்கியம். கொரியாவில் திமிங்கில வேட்டை தடை செய்யப்பட்டு விட்டாலும், ஜப்பான் இன்னும் முழுமையாக இதற்கு இணங்கவில்லை. காரணம், அது உலகில் இன்னும் திமிங்கிலங்கள் நிறைய உள்ளன, அவைகளைக் கொல்வதில் தவறில்லை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. திமிங்கிலங்கள் வலசை போகும் பிராணிகள். அவை ஆயிரக்கணக்கான மைல்கள் வலசை போகக் கூடியவை. அவைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வளம் கடலிடம் மட்டுமே உள்ளது. இது பற்றிய முழுமையான அறிவியல் புரிதல் நமக்கு ஏற்படும் போது திமிங்கில வேளாண்மை சாத்தியமே! இப்போது scientific whaling எனும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் திமிங்கில வேளாண்மை என்பது இன்னும் அறிவியல் கடலாய்வுத் திட்டத்தில் அமுல் படுத்தும் நிலையில் இல்லை.

கடலில் எப்படி வாழ்வது என்பது பற்றிய ஆய்வில் கொரியாவும், ஜப்பானும் அதிக ஆர்வம் கொண்டுள்ளன.

சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!சித்தர்களைத் தத்துவார்த்தமாக எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் ஒரு தெளிவின்மை இருக்கிறது. மேற்சொன்ன சிவவாக்கியர் பாடல் தெளிவாக அத்வைத நிலை பற்றிப் பேசுகிறது. உள்ளிருக்கும் நாதனைக் கண்ட பின் அவனுக்கு குண நலன்கள் கொடுத்து, ஒரு கற்சிலையாக அதாவது மூர்த்தியாக ஏன் வழிபட வேண்டும்? என்று கேட்கிறது இப்பாடல். வேடிக்கையாக இருக்கிறது! காலத்தால் பிற்பட்ட இப்போக்கு உண்மையில் வேத வழிபாட்டை முன் வைப்பது போல் படுகிறது. வேத நெறியில் "தெய்வம்" என்பதை ஒளி வடிவமாக பார்த்தனர். மேலும், தெய்வங்களுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் அக்னி எனும் நெருப்பின் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதும் வேத வழியே! எனவே வேத நெறியில் உருவ வழிபாடு என்பது கிடையாது.

ஆகமங்கள் வேறுன்றத் தொடங்கிய இந்தியாவில் இறைவனுக்கு கோயிலமைத்து, உருவ வழிபாடுகள், உற்சவங்கள் அமைத்து வழிபடும் முறை வருகிறது. இதன் பின்னுள்ள தத்துவம் என்னவெனில்? உள்கிடக்கும் (கடவுள்) இறைவனே வெளியிலும் உள்ளான் என்பது. அவனை உள்ளேயும் காணலாம். அற்புதமான குணநலன்கள் கொண்ட மூர்த்தியாகவும் காணலாம். மூர்த்தங்களுக்குப் பின்னால் புராண, இதிகாசக் கதைகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் உருவத்திற்குப் பொருள் வரும். 'கண்ணனெனும் கருந்தெய்வம்' என்று சொல்லும் போது கண்ணனின் பெருமைகள் பற்றிய கதைகள் தேவை. பாகவதம் தேவைப்படுகிறது!சித்தர்கள் பேசுவது யோகவழி. ஆனால் முனிவர்களும், யோகிகளும் 'ஹரி, ஹரி' என்று தொழும் பேரரவம் கோயிலில் கேட்பதாகச் சொல்வது பக்தி. பக்தி தோன்றியது தென்னகத்தில், அங்கேயே இதற்கான எதிர்க்குரலும் ஒலித்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது?

சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?


பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

இதுகூட வெளியில் சமூகச் சமன்பாடு பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும், தத்துவார்த்தமாக அத்வைதமே பேசுகிறது!

சித்தர்கள் உளக்கிடக்கை என்னவென்று யாராவது "ஆசார்ய ஹிருதயம்" எழுத்தியிருக்கிறார்களோ?

மந்திரம் போலொரு சொல் தாரீர்!

யாருமே மேடையில் நிரந்தரமாக இருந்துவிடக்கூடாது. மதிப்பில்லாமல் போய்விடும். விடாமல் நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவில் என்றில்லை. இது உலகம் முழுவதும் காணும் காட்சியாகவே உள்ளது!

ஒருவாரம் உங்களுடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உறவாடியது மிகிழ்வாக உள்ளது. 5ம் நாளைத் தாண்டும் போது என் வலைப்பூவைக் கண்டு ரசித்தவர் எண்ணிக்கை 1000 தாண்டி விட்டது. இதைவிட என்ன மகிழ்ச்சியான சேதி உண்டு? முடிந்தவரை வித்தியாசமான தலைப்புகளில் பல விஷயங்கள் பற்றி அலசியிருக்கிறேன். இலக்கியம், ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விவசாயம், நாட்டு நடப்பு, சரித்திரம், சமூகவியல் என்று. பல்லூடகத்தன்மையுடன் எனது வலைப்பதிவுகளை வழங்கியுள்ளேன். மொத்தம் 18 கட்டுரைகள் வழங்கியுள்ளேன். அதில் 7 கட்டுரைகள் 5 நட்சத்திர மதிப்பெண் பெற்றிருக்கின்றன. சில நேரங்களில் இது பிடிக்கும் என்று எழுதுவோம் ஆனால் பிடிப்பதில்லை. இது பிரச்சனையைக் கிளப்பும் என்று பயந்து கொண்டே எழுதுவோம். வெடித்துச் சிதற வேண்டிய தீபாவளி வெடி புஸ்ஸென்று போய்விடுவது போல், ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் போய்விடும். பின்னூட்டம் தருவது மட்டும் கவனம் பெருகிறது என்றில்லை. பின்னூட்டமே இல்லாமல் சில பதிவுகள் 5 நட்சத்திர மதிப்பெண் பெற்றுவிட்டன! வலைப்பூ தொழில்நுட்பமும் எப்படியாவது வலைப்பதிவர்-வாசகர் புரிதலை 100% கொண்டு வந்துவிட முயல்கிறது. But still we need more powerful, yet simple tools to gauge the reaction of the readers!

உண்மையில் என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் எப்போதும் அதை சிரத்தையுடன் செய்வேன். ஒரு தொழில் நேர்த்தி இருக்க வேண்டுமென்று நினைப்பேன். எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு நியாயம் கற்பிக்க முயல்வேன். மேலும் வலைப்பதிவு என்பது ஒரு ஊடாடும் செயல். நான் விவசாயம் பற்றி விஸ்தாரமாக எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அது "நீங்கள் கேட்டவை". இந்த வாரம் கருத்தரங்கம், ஆய்வுப் பட்டறை என்று தலைநகர் போய் விடுகிறேன். எனவே பதிவு இருக்காது. மேடையில் ஏற்றினால்தான் பேசுவார் போலிருக்கிறது என்று எண்ண வேண்டாம். வந்து தொடர்கிறேன்.

இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் போது நாரணனும் முண்டியடித்துக் கொண்டு வந்துவிடுவான். அது அவன் வழக்கம். ஆழ்வார்கள் காலத்திலிருந்து அப்படித் தன் தொண்டர்கள் நிகழ்வில் கோலாகலமாகக் கலப்பது அவன் பழக்கம். ஏனெனில் அவன் 'பத்துடை அடியர்க்கு எளியவன்'. நாராயண கவசம், கோதை நாச்சியார் தாலாட்டு அவன் முகமகிழ்விற்காக எழுதியது (அவன் அதற்கு எத்தனை நட்சத்திர மதிப்பீடு தந்தான் என்று தெரியவில்லை!)

யாராவது கவனித்தீர்களோ? நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எனது மூன்றாம் கண் வலைப்பதிவிலும் பதிவிட்டு வந்தேன். ஏனோ, நட்சத்திரப் பதிவாக ஒரேயொரு வலைப்பூவே தேர்ந்தெடுக்கப்படுகிறது!

நான் ஒரு பழைய மின்குடிமகன். தமிழில் வலைப்பூக்கள் மலரத்தொடங்கிய காலத்திலிருந்து இருக்கிறேன். தமிழ்மணத்தின் ஆதிப்பெயர் "வலைப்பூ". அப்போதும் நான் நட்சத்திர பதிவாளராக வந்திருக்கிறேன். எனது பின்னூட்டம் 100 எண்ணிக்கையைத் தாண்டி ரெகார்ட் பிரேக் செய்திருக்கிறது. அதுவொரு காலம். இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் பல்வேறு திண்ணைகளைக் காண்கிறேன். ஒரு பூங்காவில் அங்கங்கே கூட்டமாக அமர்ந்து அரட்டை அடிப்பது போல். சில இடத்தில் கூட்டம் அதிகமிருக்கிறது. சில இடத்தில் ஒரு சில பேரே இருக்கிறார்கள். சில இடங்களில் ஒருவருமே இல்லாமல் வெறிக்கப் பார்த்துக் கொண்டு தனி மனிதர்கள். வலைப்பூவை நடத்த நிறைய நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியுள்ளது. நண்பர்களை அடிக்கடி அவர்கள் மின்னில்லம் சென்று விஜாரித்து வர வேண்டியுள்ளது. இந்த முயற்சி இல்லையெனில் "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று உட்கார்ந்து இருக்க வேண்டியது.

இன்னொரு வழியும் உள்ளது! அது என்னவெனில் எப்போதும் 'சலம்பிக்கொண்டே' இருக்க வேண்டும் என்பது! பிரச்சனைக்குரிய தலைப்புகளில் பேசிக்கொண்டிருக்கவேண்டும்!! தமிழனின் சிந்தனையைக் கவர்வது சினிமா, செக்ஸ், அரசியல், ஜாதி மற்றும் இதர பிரிவினை வாதங்கள். இனிப்பை மொய்க்கும் ஈ போல இவ்விஷயங்கள் அவனை உடனே ஈர்த்துவிடுகின்றன.

இவைகளை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். நாம் மாற வேண்டும். எதைப் பற்றி நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ பின் அதுவாகவே மாறிவிடுகிறோம். பிரிவினை பற்றிப் பேசும் மனது அழுக்குறுகிறது. பின் அது அழுக்காகவே இருக்கிறது. வன்முறை பற்றிப் பேசும் மனது மிரண்டு போய் கிடக்கிறது. வன்முறை என்றும் பிரச்சனையைத் தீர்த்ததாகக் கதை இல்லை. வன்முறை, வன்முறையை வளர்க்கும் என்பதே நிதர்சனம். எனவே தமிழ் மின்னுலகம் தன் 'விலங்கு மனத்தை'க் கொஞ்சம் திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவொரு நல்ல வாய்ப்பு. வலைப்பதிவு என்பது யோகமென்று சொன்னீர்கள். அதுதான் எவ்வளவு உண்மை! எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும். அரவிந்தர் கணிக்கும் ஒரு புதிய எழுச்சியுற்ற இந்திய சமுதாயம் உருவாகும் என்றே நான் நம்புகிறேன். இங்கொரு புத்தன், காந்தி, பாரதி பிறப்பது அதிசயமே இல்லை. அங்குதான் பிறப்பார்கள். அது அந்த மண்ணின் வளம். உங்களில் யார் அந்த புத்தன்? யார் அந்த காந்தி? யார் அந்த பாரதி? என்று இனம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு!

தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ,
அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ.
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ,


நல்லா இருக்கா? பாடணும் போல இருக்கா? கருப்பம் பற்றிப் பேசிவிட்டு மழலை இன்பம் பேசவில்லையெனில் எப்படி? இந்த பாட்டு வரிகள் யாரைச் சுட்டுகிறது என்று நினைக்கிறீர்கள்? ஒரு பெண்ணை. தமிழ்த்தாய் ஈன்ற தைர்யமான பெண்ணை. தமிழ் உள்ளளவும் நம் சிறார் பாடி மகிழ பாவைப்பாட்டு பாடிய கோதையை. ஆம் இது ஆண்டாளுக்குப் பாடிய தாலேலோ!

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ,
"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ,

கொஞ்சு தமிழில் யாரோ பாடிய தாலாட்டு. இப்புத்தகத்தை நான் ஆழ்வார் திருநகரியில் கண்டெடுத்தேன். திருஞான முத்திரக்கோவை பதிப்பகத்தார் வீட்டில். 1928 வெளிவந்த புத்தகம். இப்போதுதான் மறுபதிப்பு காண்கிறது. எப்படி? மின்பதிப்பாய்! ஆம், இப்புத்தகம் மதுரைத்திட்ட சேகரத்தில் இருக்கிறது! முழுப்பாடலுமறிய அங்கு போய் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

சரி, கையிலே முழுப்பாட்டும் வந்தாச்சு, மெட்டுக்கட்டி பாடிப்பாருங்கோ. நல்லா மெட்டமைஞ்சு போச்சுன்னா, எனக்கு சின்ன மின்னஞ்சல் அனுப்புங்கோ. நாம அதை தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் வெளியிடுவோம். நிஜமாத்தாங்க சொல்லறேன்.

இந்தக் காலத்து பாடகர் நிலமையைப் பாருங்க. திரும்பத்திரும்ப நாலு சாகித்ய கர்த்தாக்களின் பாட்டையே திரும்பத்திரும்ப. இவர்களது ஆக்க சக்தி எவ்வளவு குறைந்துவிட்டது எனத்தெரிய வேண்டுமெனில் சுமாராக ராஜாஜி எழுதிய 'குறையொன்றுமில்லை' பாடலை வரிஞ்சு வாரிக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு பாடகரும்..ஏதோ இதைப்பாடவில்லையெனில் 'சாமி கண்ணக்குத்தும்' என்பது போல்...ரொம்ப பயப்பட்டுப் பாடுகிறார்கள். இது மிகச் சாதரணமான சாகித்யம். எம்.எஸ் பாடியதால் பிரபலமாகிவிட்டது. அவர் கல்லைப் பேச வைப்பவர், சொல்லைச் சொக்க வைப்பவர். அதுதான் மேஜிக். எம்.எஸ் அம்மா ராஜாஜிக்கு நிரம்ப கடன் பட்டு இருக்கிறார். அதனால் அவரது சுமாரான ஒரு பாட்டை சூப்பர் ஹிட்டாக்கிவிட்டார். அதற்காக பாடுவதற்கு வேறொரு பாடலும் இல்லை என்பது போல் நம் கலைஞர்கள் இதையே எத்தனை சிடிக்களாகத்தருவர்?

இதோ புத்தம் புதிதாய் ஒரு சாகித்யம். கோதை மேல் கொஞ்சு தமிழில்?

உங்களில் யாருக்கு இதைப்பாடும் பாக்கியம் இருக்கிறது?

"வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை சொல்" மண்ணில் நிலைக்கும் என்பதற்கு அவள் திருப்பாவையே சாட்சி. அவள் மேலுள்ள இத்தாலாட்டைப் பாடுபவர் கோதை போல் மண்ணில் புகழ் பெற்று நிலைத்துவிடுவர். சாகித்யமில்லாமல் தவிக்கும் இசைக் கலைஞர்களே, இதோ! ஓர் பொக்கிஷம், கண் முன் கிடக்கிறது. எடுத்து அனுபவியுங்கள். மற்றொருக்கும் இன்னமுதைப் பருகிடத்தாருங்கள்.

ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி.

தபால் பெட்டியின் எதிர்காலம்?

சமீபத்தில் கொரியத் தபால்துறைக்கு கவலை வந்துவிட்டது. நமது தபால் துறை, அதுவும் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட தபால் பெட்டி இன்னும் 10 ஆண்டுகளில்? 20 ஆண்டுகளில்? அல்லது 50 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும்? என்று. உடனே, ஒரு உலகளாவிய போட்டியை நடத்திவிட்டது! 5327 ஆக்கங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டு பதிலை ஓவியமாக சமர்ப்பித்தன. இந்த ஓவியங்களிலிருந்து 15 ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து கீழக்கண்ட மூன்று தலைப்புகளில் பரிசு பெறும் ஓவியங்கள் தெரிவு செய்தனர். 1. முதற் பரிசு (Grand prize), 2. சிறப்புப் பரிசு(award of excellence) 3. ஆறுதல் பரிசு(honorable mention.ஹாங்க்காங்க் கைச் சேர்ந்த லா ட்சுன் யின் எனும் 8 வது சிட்டு எதிர்காலத் தபால் பெட்டி என்பது ஒரு பறக்கும் தட்டுப் போலிருக்கும் என்றும், அதிலிருந்து கிளம்பும் கைகள் தபால்களை ஓரிடத்திலிருந்து பெற்று, இன்னொரு இடத்திற்கு அளிக்கும் என்று கூறும் வண்ணம் தன் ஓவியத்தை வரைந்து முதற் பரிசைத் தட்டிச் சென்று விட்டது!இரண்டாவது பரிசு பெற்ற மார்பெல்லா என்ற 7வது பிலிப்பைன்ஸ் பெண், எத்தனை பெரிய கணினி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தபால் பெட்டியின் தேவை என்றும் போல் இருக்குமென்றும், மக்கள் அமைதியுடனும் அன்புடனும் வாழ்வர் என்று கூறுமுகமாக மேற்கண்ட ஓவியத்தை வரைந்திருந்தாள்.

இந்த இரண்டு நாடுகளுக்கும் போயிருந்தால் இக்குழந்தைகளின் மனோநிலையைப் புரிந்து கொள்ள முடியும். Hong Kong சிங்கப்பூர் போன்ற குட்டித்தீவு நாடுகள் (Hong Kong தீவு இல்லைதான், ஆயினும் சீனாவிற்குள் அதுவொரு பொருளாதாரத்தீவு!) தொழில்நுட்ப வளர்ச்சியை நம்பி வாழும் நாடுகள். எப்போது பார்த்தாலும் ஒரு பதட்டம், ஒரு ஓட்டம் அங்கிருக்கும். சந்தேகமில்லாமல் அங்கு வாழும் குழந்தைகள் பறக்கும் தட்டு பற்றி எண்ணுவார்கள். ஆனால், பிலிபைன்ஸ் ஆழ்ந்த கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள நாடு. அது ஏழ்மையிலும் இறை நம்பிக்கையுடன் வாழும் நாடு. அங்குள்ள குழந்தை தொழில் நுட்பத்தை நம்பி வாழும் குழந்தைகள் அல்ல. நம்பிக்கையில் வாழும் குழந்தைகள்! இவை இவ்வோவியங்களில் பிரதி பலிக்கின்றன.

"Doom-filled warnings arrive from AT&T this week. The company says that without substantial investment in network infrastructure, the Internet will essentially run out of bandwidth in just two short years." என்று ஒரு குண்டை அமெரிக்க தொலைபேசிக் கம்பெனி போடுகிறது! என்னது இன்னும் இரண்டு வருடத்தில், இணையம் சேதிக் கும்பலை சமாளிக்க முடியாமல் மூச்சுத்திணறி ஸ்தம்பித்துவிடுமா?

முழுக்கட்டுரையை வாசிக்க?

2010: D-day for the Internet as it hits "full capacity"?


இணையம் இல்லாமல் இனிமேல் ஒரு உலகை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என் வாழ்வு முறையை முற்றிலும் மாற்றிவிட்ட ஒரு தொழில் நுட்பமது. என் தமிழ் வளர்ச்சிக்கு, என் தமிழ்த் தொண்டிற்கு, என் தமிழ் புல வளர்ச்சிக்கு, பாட்டுக் கேட்க, வீட்டைக் கூப்பிட (வாய்ப்), சினிமாப் பார்க்க, பலாவான படம் பார்க்க என்று நான் எண்ணியிராத அளவில் என்னை மாற்றிவிட்டது.

உங்களில் எத்தனை பேர் இதை உணர்கிறீர்கள் என்று தெரியாது நாம் வாழும் 21ம் நூற்றாண்டு ஒரு பொற்காலம். எத்தனை மாற்றங்களை கடந்த 50 ஆண்டுகள் கொண்டு வந்து விட்டன? நான் மிகச் சிறுவனாக இருந்த போது எங்கள் கிராமத்து தெரு மூலையில் ஒரு எண்ணெய் விளக்குண்டு. அதை ஏற்ற ஒருவன் வருவான். ஏதோ புகை மூட்டம் போன்றதொரு நினைவு. பின்னால் மின்சாரம் வந்தது. அப்போதும் செலவை மிச்சப்படுத்த ஜீரோ வால்ட் பல்புதான் போடுவார்கள். அழுது வழியும். அப்போது பஞ்சம் கூட வந்தது. அப்போதுதான் கோதுமை தமிழகத்திற்குள் அறிமுகமாகிறது. என் அன்னைக்கு எட்டுக் குழந்தைகள். நான் எட்டாவது (அதுதான் கண்ணன்). ஆனால் 6 பேர்தான் தங்கினோம். சித்திக்கும் எட்டு. ஆனால் இரண்டுதான் தங்கியது. கரிவண்டியில் ஓடும் பஸ். இப்போது பாருங்கள் எத்தனை மாற்றங்கள். இம்முறை வந்திருந்த போது விமானத்தில்தான் சென்னை, டெல்லி, பெங்களூர் பயணம். மிக, மிக வசதியாக, மகிழ்ச்சியாக. எவ்வளவு மருத்துவ வசதிகள்! எவ்வளவு தொழில் நுட்பம். 2020-ல் முதுமை என்பது நம் கட்டுப்பாட்டில் வந்துவிடுமாம். அத்தலைமுறையினர் 200 ஆண்டுகள் வாழ்வார்களாம். மகிழ்ச்சியாக உள்ளது! 2010-லிலும் இணையம் இருக்கும். இன்னும் கூடுதல் திறனுடன். வாழ்க.

அம்மாவென்றழைக்காத உயிரில்லையே!

தாயே!

என்னை உருவாக்கினாய் என்பதற்கு மேல் உன்னை வாழ்த்த என்னால் எஞ்ஞனம் முடியும்?உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே (2) - தன்
உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே (2)

உன் கண்ணில் வழியும்
ஒருதுளி போதும்
கடலும் உருகும் தாயே
உன்காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே

உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே

விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான் (2)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை (2)
சாமி தவித்தான்..
சாமி தவித்தான்..தாயைப் படைத்தான்

படம்: பவித்ரா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து

பாடல் கேட்க!

நினைக்கத்தெரிந்த மனமே!

எழுத்தாளர் சுஜாதா பற்றிய முதல் புரிதலை எனக்கு வழங்கியவர் திருப்புவனம் கிருஷ்ணன் அவர்கள். இவர் என்னை விடப் பெரியவர். ஆயினும் பள்ளி மாணவனான என்னுடன் சமமாகப் பழகுவார். இவருக்கு சுஜாத பிடித்துப் போனதற்கு முக்கிய காரணம் இருவருக்குமுள்ள நகைச்சுவை உணர்வு. கிருஷ்ணனுக்கும் எனக்கும் பிடித்துப் போனதற்குக் கூட அதுவே காரணம். நகைச்சுவை உணர்வை மட்டும் இறைவன் அளிக்கவில்லையெனில் மானுடம் பயித்தியமாய் அலைந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். வசந்த், கணேஷ் பற்றி விலாவாரியாக விவரிப்பார் கிருஷ்ணன். அப்போது படிக்கத்தொடங்கியது! அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியவன் என் மருமான் கோபிநாத். அவன் பெங்களூரில் வேலை பார்த்தான். அப்போது நண்பருடன் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகச் சொன்னான். அன்றிலிருந்து ஆசை பற்றிக் கொண்டது, சுஜாதாவைப் பார்க்க வேண்டுமென்று.

ஜெர்மனியிலிருந்து இந்தியா சென்ற போது குமுதம் அலுவலகத்தில் அவரைச் சந்திதேன். அப்போது குமுதம் ஆசிரியராக இருந்தார். இருவரும் ஆதமி செயலி பற்றிப் பேசினோம். கூபெக் ஸ்ரீநிவாசன் அவரை வந்து சந்தித்தாகச் சொன்னார். சுஜாதாவைப் பார்த்தவுடன் பிடித்துப்போகும் குணம் கிடையாது. எதிர்மறையாகப் பேசும் அவரைப் பிடிப்பது துர்லபம். அப்போதும் ஆங்கிலவழி தட்டச்சுமுறை பிழை என்று வாதாடினார். ஆயினும் அவர் எனக்கும் நண்பர் எனும் மாற்றத்தைக் கொடுத்தவர் நண்பர் இரா.முருகன். இவர் என்னை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டிற்குச் சென்றார். பின்னால் சிங்கப்பூர் இணைய மாநாட்டின் போது நிறைய நேரம் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு. அதன் பின் ஒருமுறை தேசிகன் என்னை மீண்டும் அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ஆக, இதன் பின் எங்கள் உறவு வலுப்பெற்றுவிட்டது. ஜி.அரவிந்த் என்னைப் பலமுறை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின் சுஜாதா நான் சென்னை வருவது அறிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்.

நான் பார்க்கும் காலங்களிலேயே அவர் மாற்று இதய சிகிச்சை செய்து கொண்டு பூஞ்சையாகத்தான் இருந்தார். ஆயினும்,தொடர்ந்து ஏதாவது புதுமையாகச் செய்து கொண்டே இருந்தார். நானும் அவரும் சேர்ந்து சன் நியூஸ் சானலுக்கு கணினி பற்றி நிகழ்ச்சிகள் அளித்துள்ளோம். அவரை நான் என்றும் நினைவு கொள்ளும் வண்ணம், நம்மாழ்வாரின் ஈடு பதிப்பு ஒரு சில காப்பிகளே சென்னைப்பதிப்பில் இருப்பதாகவும் உடனே சென்று வாங்குமாறும் என்னை உந்தியது. எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை எனக்குக் காட்டிக்கொடுத்திருக்கிறார்.

அவர் நினைவாஞ்சலியில் குலசேகர ஆழ்வாரின் இன்னமுதமான பாடலை ஒரு நங்கை அற்புதமாகப் பாடினார். அன்று அதிசயமாக தமிழ் இலக்கிய உலகம் அதிகமாக ஆழ்வார்கள் படைப்புப் பற்றிப் பேசியது! பலர் அவர் ஆழ்வார்களை முறையாக தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுமென்றும் இறைவனிடம் பிரார்த்தித்தனர். அக்கூட்டதில் உத்தமம், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக இரங்கலைத் தெரிவிக்க சென்றிருந்தேன். பெரிய பிரபலங்கள் சூழ்ந்த சூழல். ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் சென்னை வரும் என்னை, அதுவும் முதல் வரிசையில் இருக்கும் என்னை யார் என்று பத்திரிக்கையாளர்களுக்குப் புரிந்து கொள்வதில் சிரமம். சரி, எதற்கும் படத்தை எடுத்து வைப்போம். பின்னால் பயன்படும் என்று பலர் கேமிராவை சொடுக்கிக் கொண்டே இருந்தனர். ஒளிப்படம் வேறு. இப்போதுதான் தெரிகிறது குமுதம் எடுத்த ஒளித்தொகுப்பில் கண்ணனும் பிரபலங்களில் ஒருவராக வெளிவந்துவிட்டார் என்று. மறக்காமல் கடைசிவரை பாருங்கள். கடைசி பிரேமில் ஒரு சில நொடிகள் வருகிறேன்.

சுஜாதாவின் நினைவாக சேர்ந்து ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அவர் போனபின் நிகழ்ந்த இரங்கற் கூட்டத்தில் அவரது நினவுடன் சேர்ந்து படமெடுத்துக் கொள்ள வேண்டுமென்று இருந்திருக்கிறது. கண்ணதாசன் சொன்னது போல், "நினைக்கத்தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று கேட்கத்தோன்றுகிறது. எதற்கு மறக்க வேண்டும்!

கர்ப்ப உலகம்

எனது ஆய்வகத்திலே பல பெண் விஞ்ஞானிகள் தாமதமாக பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர். காரணம் Ph.D முடித்து, பின் வேலை கிடைத்து நிம்மதியாக வாழ்வு அமைந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் எனும் போது வயது 30 தாண்டிவிடுகிறது. முதல் பிள்ளை பெற்றுக்கொள்வதில் அதிக பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வயது 40ஐ எட்டிவிடுகிறது. வயதானோர் அதிகமாக உள்ள கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கிறது. எனவே எல்லோரும் இரண்டு, மூன்று என்று பெற்றுக் கோள்கிறார்கள். ஆனால், கடைசிப் பிள்ளைகளைக் கவலையுடன்தான் பெற்றுக் கொள்கின்றனர். காரணம்?

மரபுக் கோளாறு குழந்தைகளுக்கு வந்துவிடுமோ என்ற கவலை. நூறு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் ஏதாவதொரு ஊனத்துடன்தான் கொரியாவில் பிறக்கின்றன. கொரிய கதோலிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒரு ஆய்வு சுட்டுகிறது பிறக்கும் குழந்தைகளில் 2.9% குறைபாடுடன் பிறப்பதாக. கொரிய உணவு-மருந்து ஆணையம் (Korea Food and Drug Administration) ஒரு குறிப்பில் சொல்கிறது 1999க்குப் பிறந்த குழந்தைகளினூடே மரபுக் கோளாறு இரட்டிப்பாகி உள்ளதாக! இதற்கான காரணங்களென்ன?

மருத்துவர்கள் சொல்கிறார்கள் கொரியப் பெண்களுக்குப் போதிய அளவு போலிக் அமிலம் உணவில் உட்செல்வதில்லையென்று. இந்த உணவுச் சத்தில் விட்டமின் பி இருக்கிறது. அது குழந்தை வளரும் போது நரம்பு மண்டலம் ஒழுங்காக வளர உதவுகிறது. இல்லையெனில் anencephaly, spinal bifidia போன்ற கோளாறுகள் தோன்றலாம்! சரி, போலிக் அமிலம் எந்தெந்த உணவில் இருக்கிறது? பச்சைக் காய்கறிகள் உம். புரோக்கோலி (பச்சைக் காலிபிளவர்), அஸ்பராகஸ், கீரை, காளான், பட்டாணி, கிவிப்பழம், ஆரஞ்சு, கல்லீரல் மற்றும் மீன். இந்த போலிக் அமிலம் கொண்ட மல்டி விட்டமின் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவர் சபை சொல்கிறது ஒரு நாளைக்கு குறைந்தது 0.4 மி.கி போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையாம்.

கஷ்டம் என்னவெனில், கர்ப்பம் தரிப்பது என்பது பெரும்பாலும் திட்டமிடாமலே எதேட்சையாக நடந்துவிடுகின்றது. ஒரு பெண் கர்ப்பவதி என அறியும் போது 6, 7 வாரங்களாகிவிடுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் நரம்பு மண்டலம் வளரத்தொடங்குகிறது! ஆனால் மருத்துவஆலோசனையோ கருப்பம் தரிப்பதற்கு 3 மாதம் முன்பிருந்தே 0.4 மி.கி. போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டுமென்று!

கொரியாவில் பெண்கள் பியர் குடிப்பதுண்டு. கொஞ்சம் என்றால் பரவாயில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பவதி அதிகமாக பியர் குடித்தால் குழந்தைக்கு வெட்டு உதடு என்ற குறை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 12 வாரக் கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயமாக குடிப்பதை நிறுத்திவிட வேண்டுமாம். ஏனெனில் அச்சமயத்தில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சி விரிவடையத் தொடங்கிறது. குடிப்பழக்கத்தால் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத்தான் பிறப்பிக்க முடியுமாம்.

விட்டமின் நல்லது என்றாலும் 1000 ச.அ (சர்வதேச அளவு)க்கு மேல் ஒரு நாளைக்கு எடுத்துக் கொண்டால் பின் பிறக்கும் குழந்தைக்கு குறை நிச்சயம் அமையுமாம். உம். குறைப்பிரசவமோ, மந்தமான குழந்தைகளோ இல்லை இறந்து பிறக்கும் குழந்தையோ அமையுமாம்.

காஃபியும் அதிகம் குடிக்கக்கூடாதாம். நாலு கப் காஃபிக்கு மேல் குடிப்பவர்க்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்து ஒல்லியாகப் பிறக்குமாம்! இப்போது பச்சைத் தேயிலை அதிகம் பிரபலமாகிவருகிறது. தேயிலை என்றாலே அதில் காஃபின் இருக்கும்.

சிகரெட் குடிக்கக்கூடாது!

பச்சை மாமிசம் சாப்பிடக்கூடாது! Toxoplasma என்ற வியாதி 30 லிருந்து 63% அதிகமாகிவிடுமாம்! இதுவொரு ஒட்டுண்ணி. அது பச்சை மாமிசத்தில் இருக்கும். அது குறைப்பிரவத்தை உண்டு பண்ணும். இந்தப் பூச்சி வீட்டில் வளர்க்கும் பூனையிடமும் உண்டு. இந்தியப் பெண்கள் குடிப்பதில்லை என்பதற்காக பூனை வளர்க்கக் கூடாது. பிறகு பிரச்சனைதான்!

இப்படிப்பட்ட கொரிய மருத்துவ யோசனைகள் சுட்டுவது ஒன்று. தெளிவாக. இந்திய உணவுப் பழக்கம் என்பது இதையெல்லாம் கணக்கில் கொண்டு நம் முன்னோரால் வகுக்கப்பட்டது என்பதே! குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயமில்லை! அதிக கவனம் கொள்ள வேண்டிய நிகழ்வு. இந்தியாவில் பிறப்பு பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்தக் காலத்துப் பெண்கள் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. பின் வேலை. அதன்பின் திருமணம். இச்சூழலில் பிறப்பு என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாக அமைவதே தாய்-சேய்க்கு நல்லது! ஏனெனில் ஊனமாகக் குழந்தை பிறந்துவிட்டால் அதைக் கட்டிக் காக்கும் பொறுப்பு நம்மில் பலருக்கு இருப்பதே இல்லை. எனவே வரும் முன் காப்பது மேல்!

சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!

உங்களில் எத்தனை பேருக்கு சரித்திர நாவல் பிடிக்குமோ தெரியாது, எனக்குப் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் தாத்தா தொடர்ந்து கல்கி வாங்குவார். ராஜாஜி மீதொரு அபிமானம். அப்போது ஆசிரியர் கல்கி "பொன்னியின் செல்வன்" என்ற சரித்திர நாவலை எழுத்திக் கொண்டிருந்தார். அது வெளி வந்து அலையெல்லாம் ஓய்ந்த காலத்தில் வீட்டில் கிடந்த பைண்ட் வால்யூம்களைப் புரட்டத் தொடங்கினேன். அப்படியே பொன்னி நதி பாயும் நதி தீரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது அந்நாவல். அந்தக் கோடை விடுமுறை இந்நாவலால் களிப்புற்றது. அதன் பின் விடுமுறை வந்துவிட்டால் போதும் திருப்புவனம் நூலகத்தைக் குடைய ஆரம்பிப்பேன். சங்கரன் என்ற பக்கத்து வீட்டுப் பையன்தான், சாண்டில்யனை அறிமுகப்படுத்தினான். விடலைப் பருவம். கனவுகள் மிகுதியான பருவம். சாண்டில்யனின் வருணனை என் கனவுகளுக்குத் தீனி போட்டது. யவன ராணியை முடித்துவிட்டு அவளுக்காக அழுதிருக்கிறேன்.

காலம் ஓடிவிட்டது. நான் ஒரு எழுத்தாளன் என்றாகி, நல்ல இலக்கியங்கள் பரிட்சயமான பின் இந்த நாவல்களில் இருந்த அபிமானம் முற்றிலும் மாறிவிட்டது. அபிப்பிராயம் மாறினாலும் இன்னும் அந்த வெகுளியான கற்பனை கொள்ளும் மனது அப்படியே உள்ளதால், நண்பர் திவாகர் தனது திருமலைத் திருடன் சரித்திர நாவலை அனுப்பி விமர்சிக்குமாறு சொன்னவுடன் மகிழ்வுற்றேன். என்னை விமர்சிக்கவோ அல்லது மதிப்புரை வழங்கவோ சொன்னால் நான் என்றும் அதைத் தட்டுவதில்லை. ஏனெனில், வேலைப்பளுவை ஒதுக்கிவிட்டு வாசிக்க முடியாத இக்காலக்கட்டத்தில் இம்மாதிரி வேண்டுதல்கள் என்னைக் கட்டாயம் புத்தகம் வாசிக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன. எனவே தட்டுவதில்லை. சமீபத்தில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாசித்து மதிப்புரை வழங்கினேன். அதுவும் ஒரு நல்ல அனுபவம்.திருமலைத்திருடன் வாசிக்க இன்னொரு முக்கிய காரணம் அது வேங்கடம் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது இராமானுஜர் பற்றிப் பேசுகிறது. சோழர் காலத்துக்கதை. திருவேங்கடம் சைவக் கோயிலா? இல்லை வைணவக் கோயிலா என்று அந்தக் காலத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இவ்விரு நெறிகளும் நேரடியாக மோதிக்கொண்ட காலக்கட்டம். இம்மோதல்களை உருவாக்கியது யார்? அதன் அரசியல் பின்னணி என்ன? இக்கேள்வி ஸ்ரீராமானுஜர் முன் வைக்கப்பட்டபோது அதற்கான விடையை அவர் எப்படித் தந்தார்?

சம்பிரதாயமான குருபரம்பரைக் கதையில் இராமானுஜர் வேங்கடவன் சந்நிதியில் பல்வேறு தெய்வங்களின் ஆயுதங்களை வைத்துவிட்டு, அவன் யாரோ? அவனே காட்டட்டும் என்று விட்டு விடுவார். விடிந்தால் வேங்கடவன், சங்கு சக்கரதாரியாக நிற்பான். ஹி..ஹி..இதை எப்படிங்க நம்பறது? என்று அவராகக் கேட்டுக் கொண்டு வடநாட்டு இளவரசியை உருவாக்கி அவள் சாளுக்கிய குருவின் மூளைச் சலவையால் கோயிலுக்குள் புகுந்து இருக்கின்ற சங்கு சக்கரத்தை எடுத்து குழப்பம் பண்ணிவிட்டு, மீண்டும் இராமானுஜர் வந்த பிறகு சங்கு சக்கரத்தை வைத்து விடுவதாகக் கதை!

நிறையத் தெரிந்து கொள்ளலாமென வாசிக்கப் போய் நிறைய அலச வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்நாவல் என்னை இட்டுவிட்டது. வேங்கடம் பற்றி, இராமானுஜன் பற்றி நிறைய புரிந்தும், புரியாமலுமான பல அபிப்பிராயங்கள் உலவுகின்றன. எனவே இவை பற்றிய ஒரு விளக்கத்தைத் தரும் வாய்ப்பாக இதை நான் எடுத்துக் கொண்டு, நான் மட்டுறுத்தும் மின் தமிழில் ஒரு தொடராக எழுதத் தொடங்கினேன். மேலும், தமிழ்.வலையில் எழுதும் காலத்திலிருந்து சைவ சித்தாந்திகளுடன் ஒரு தொடர் உரசல் இருந்து கொண்டே வந்தது. இந்த நாவலும் அவ்வுரசலை இன்னும் கூர்மைப் படுத்தியது. எனவே அது பற்றியும் பேச வேண்டியதாகிப் போனது!

இப்படியே, அலசி, அலசி அது 7 கட்டுரைகள் கொண்ட தொடராகிப் போனது. எனவே அதை இங்கு வெளியிட முடியாது. தனியாக ஒரு வலைப்பக்கம் உருவாக்கி அதை வலையேற்றி விட்டேன். வாசிக்க நேரம் பிடிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழேயுள்ள முகவரிக்குச் செல்க:

திவாகரின் திருமலைத் திருடன் - ஓர் அலசல்!

உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக இங்கு இடலாம். பதில் சொல்கிறேன்.

பர்மாவில் புயல்

நான் நட்சத்திரப் பதிவாளனாகின்ற நேரத்தில் 1 லட்சம் மக்கள் பர்மாவில் உயிரிழந்துள்ளனர் எனும் சேதி இன்றுதான் எனக்குத் தெரியவந்தது! வங்காள விரிகுடாவில் உருவான புயல் மணிக்கு 190 கிமி வேகத்தில் பர்மாவைத் தாக்கி நிலைகுலைய வைத்துள்ளது! சுமார் 1.5 மில்லியன் மக்கள் உண்ண உணவின்றி இருக்க இடமின்றி தவிக்கின்றனராம். கொடுமை என்னவெனில் உதவிக்கரம் நீட்டும் வெளிநாட்டு நிருவனங்களை உள்ளே நுழையாதே என்கிறது ஜண்டா கொடுங்கோன்மை அரசு. பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது எவ்வளவு உண்மை! செப்டம்பரில் சுதந்திரம் கேட்டுப் போராடிய புத்த பிட்சுக்களை கொடுவதை செய்து அடக்கிவிட்டது இந்த அரசாங்கம். இப்போது குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத மக்களுக்கு உதவ முன்வரும் கரங்களை மடக்கலாமா?

நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணுகிறீர்களா? உதவும் கரங்கள் எனும் ஒரு அமைப்பு ஒரு மின்னஞ்சல் மனு தயாரித்துள்ளது. இதன் மூலம் உலக மக்கள் உங்கள் துயரில் பங்கு கொள்ள ஆவலாய் உள்ளனர். ஐக்கியநாடுகள் சபை போன்ற நிருவனங்களின் உதவியையாவது வாங்கிக் கொள்ளுங்கள் என்று அது பர்மா அரசாங்கத்தைக் கேட்கிறது. இதில் நீங்களும் கையெழுத்திட வேண்டுமெனில், கீழே தட்டவும்:

Help the Burmese People Receive Aid in Cyclone Aftermath

வின்வெளிக் கண்காணிப்பு & எச்சரிக்கை!

புயலடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ!

ஏர் முனைக்கு நேர்?

கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எனக்கு வயலும் வாழ்வும் என்பது புதியன அல்ல. கோடை விடுமுறை வந்துவிட்டால் கிராமத்துப் பம்பு செட்டுக்குப் போய் கும்மாளம் போடுவதும், பெரிய கமலைக் கிணறுகளில் குதித்து ஆட்டம் போடுவதும் வழக்கம். நெல், வாழை, கரும்பு வளரும் தீரபூமி திருப்புவனம். அந்த ஊரு வெற்றிலை, அவ்வளவு பிரபலம். ஆச்சர்யம் என்னவெனில், கொரியாவின் மிக முக்கியப் பயிர் நெல். இங்கு விளைகின்ற தானிய வகைகளில் 90% பயிராக்கம் நெல்லிற்கே செல்கிறது. அடுத்து வருவது பார்லி மற்றும் பிற தானிய வகைகள். இவர்கள் நிறைய சோயா பீன் எனும் புரதம் மிகுந்த பயிரை விளைவித்து உண்கின்றனர். சோயாப் பால், சோயா மாவு, சோயா இட்லி, சோயா இனிப்பு என்று சோயா இல்லாத உணவே இங்கு இல்லை. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட ஆரம்பிக்கும் முன் புரதச் சத்து இந்த சோயா வழியாகவே வந்திருக்க வேண்டும். இல்லையெனில் அது இவர்கள் உணவு முறையில் இவ்வளவு முக்கியதும் வாய்ப்பானேன்?படிக்கட்டு விவசாயம்


1963க்கு முன்வரை கொரியாவை நாமொரு விவசாய நாடு என்று சொல்லலாம். ஆனால், அதன் பின் ஏற்பட்ட தொழில் புரட்சியால் விவசாயத்தின் முக்கியத்துவம் மெல்ல, மெல்லக் குறைய ஆரம்பித்துவிட்டது. 1989க்குப் பிறகு 79% விவசாயிகள் தங்கள் பூர்வாங்கத் தொழிலை விட்டு நகர்ப்புறம் போய்விட்டனர். இது இன்னும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கிராமத்து விவசாயம் என்பது 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. மருத்திற்குக் கூட இளைஞர்களை வயல்வெளிகளில் காண முடியாது. கிராமத்து இளைஞர்களுக்கு பெண் கொடுக்க ஆள் இங்கு இல்லை. அதனால் வியட்நாம், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண் எடுக்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒருவகையான சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள். வருகின்ற பெண்களையும் இவர்களுக்கு சரியாக நடத்தத்தெரிவதில்லை. உதாரணமாக, பிலிபைன்ஸ்ஸிலிருந்து வருகின்ற பெண்கள் பெரும்பாலும் படித்தவர்கள், ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்களுக்கோ ஆங்கிலம் வராது. கஷ்டம்தான்!

கொரியாவில் விவசாயம் பார்க்கக்கூடிய நிலம் என்பது மிகக்குறைவு. 78% மலையும், மலை சார்ந்த பரப்பும். இதனால் இங்கு படிக்கட்டு விவசாய முறை உள்ளது. மலையை படிக்கட்டு போல் வெட்டி அதில் விவசாயம் பண்ணுவது. இப்படி விளைச்சல் நிலம் குறைவாக உள்ளதால் பெரிய சாகுபடி நிலப்பரப்பு என்பது காண்பதறிது. விவசாயிகளுக்கு சிறு, சிறு நிலப்பரப்பே கிடைக்கிறது. எனவே கொரியாவில் எங்காவது இத்துணூண்டு நிலம் கிடைத்தாலும் அதில் எதையாவது போட்டு விவசாயம் செய்து கொண்டிருப்பர். இதைக் காண வேண்டுமெனில் சோல் சர்வ தேச விமான நிலையப் பயணத்தில் (குறிப்பாக கிம்போ விமான நிலையமருகே) சாலைகள் சந்திக்கும் சந்திகளின் நடுவிலுள்ள திட்டில் ஏதோ காய்கறி போட்டு ஒருவர் விவசாயம் செய்து கொண்டு இருப்பார்! மிச்சமிருக்கின்றன் விளை நிலங்களும் கட்டிட நிர்மாணங்களுக்கும், தொழிற்சாலை அமைக்கவும் போய்விடுகிறது. இதனால், நிலத்தின் விலை என்பது கன்னா பின்னாவென்று கூடிக்கொண்டு இருக்கிறது. ஒரு விவசாயி நிலத்தைப் பயிர் செய்து லாபம் சம்பாதிக்க முடியாத நிலை. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் 60% வருமானமே நிலத்திலிருந்து வருகிறது. அரசாங்கமும் எப்படியாவது கிராமத்து வாழ்வை கைதூக்கி விட வேண்டுமென்று முயல்கிறது. இதற்கென சாமுவேல் திட்டமென்ற ஒன்றைச் செயல்படுத்தினர். அதன் மூலம் புதிய கால்வாய்கள் வெட்டுவது, புதிய சாலைகள், பாலங்கள் கட்டுவது, சுகாதார வசதிகள் செய்து கொடுப்பது, கிராமங்களை அழகுறச் செய்வது என்று. பலன், இன்று கிராமங்கள் அழகாக உள்ளன. 60 வயதிற்கு மேல் மண்ணில் இறங்கி வேலை செய்யும் விவசாயிக்கு சௌகர்யமாக இருக்கும் வண்ணம் வயற்புற சாலைகளெல்லாம் அமைந்துள்ளன. ஆயினும், படித்து சௌகர்யமாக வேலைக்குப் போகும் இளைஞர்களைக் கட்டி இழுக்கும் வண்ணம் விவசாயத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. இதனால் விவசாயக் கூலி அதிகம். ஆட்களோ குறைவு. எனவே எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து இன்று ஒரு நிலம், நாளை இன்னொரு நிலம் என்று விவசாயம் பார்க்கும் முறை இங்குள்ளது.கொரிய கிராமப்புரம்


1980 களிலேயே கொரியாவின் தானியத் தேவைக்கான பாதியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. நெல் சாகுபடியை உயர் விலை கொடுத்து அரசு வாங்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரிசி விலை கிலோ ரூ.125. அமெரிக்கா போன்ற கூட்டு நாடுகள் இவர்கள் இன்னும் நிறைய விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென நிர்பந்தித்து வருகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் அரிசியின் மீதான இறக்குமதித்தடை விலகலாம். அப்போது அரிசி விலை தாளும். இவர்களது மாமிச உணவுத்தேவைக்கென 2 மில்லியன் மாடுகளும், 4.9 மில்லியன் பன்றிகளும், 59 மில்லியன் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இறைச்சி உண்பது என்பது உயர் மட்ட வாழ்வு முறையாக மாறிவரும் கொரியாவில் இறைச்சி இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற கொரியத் தலைவர் லீ, இறைச்சி இறக்குமதிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இது உள்ளாட்டில் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கொரிய விவசாயிகள் தேசிய அளவில் சங்கம் வைத்துள்ளனர். இவர்களது போராட்டங்கள் இதுவரை வெற்றி பெற்றே வந்துள்ளன. உதாரணமாக, கொரியாவின் அபரிதமான தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஒப்பு நோக்கும் போது தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்களிப்பு என்பது வெறும் 10.8%. ஆனால், அது அரசாங்கத்திடமிருந்து பெறும் சலுகைகள் அதிகம்.

இப்போது இறைச்சி இறக்குமதியாகப்போகிறது. எல்லோருக்கும் ஒரு பயம். கிறுக்கு மாட்டு நோய் எங்கே இங்கு இறக்குமதியாகிவிடுமோ? என்ற கவலை. அந்நோய் உடனே தெரிவதில்லை, 10 ஆண்டுகள் கழித்தே தெரியவருகிறது! சக விஞ்ஞானிகள் இது பற்றி அதிகம் என்னிடம் பேசினர். பேசி என்ன பயன்? உள்நாட்டு விவசாயத்தைப் பேண ஒரு இளைஞன் கூட முன் வருவதில்லை. பின் எப்படி இறக்குமதியைத் தவிர்க்க முடியும்? கொரியர்களோ omnivorous feeders. எதை வேண்டுமானாலும் உண்டு விடுவர். பௌத்தம் தேசியச் சமயமாக இருந்த காலங்களில் கூட இதை மாற்ற முடியவில்லை. இறைச்சியின் மீதான மோகம் குறையப் போவதில்லை. பின் என்ன செய்ய முடியும்? 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிறுக்கு மாட்டு நோயில் உழல வேண்டுமென்ற விதியிருந்தால் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்!

நாங்கள் வெங்காயச் சாகுபடிக்குப் போனது வாராத விருந்தினர் வயக்காட்டிற்கு வந்தது போலிருந்தது அந்த இரண்டு பாட்டிகளுக்கும். வேறு யார் வருகிறார்கள்? மதியத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு பாட்டி குஷியாகப் பாடிக்கொண்டே யாரோ ஒரு விருந்தாளியை வரவேற்கப் போனாள். அதுவொரு மூதாட்டி. அவளும் ஒரு காலத்தில் விவசாயியாக இருந்திருக்க வேண்டும். இப்போது கால் நடமாட்டமில்லை. ஆயினும் அவள் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். நாங்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்ததில் அவளுக்கோர் திருப்தி. அந்த மூதாண்டிதான் கொரிய விவசாயத்தின் பிரதிநிதிபோல், கொரிய விவசாயம் இருக்கும் உண்மை நிலையைப் படம் பிடிப்பது போல் எனக்குத் தோன்றியது.

பாலர் மீதான பாலியல் வன்முறை

சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (பெனடிக்ட் 16) அமெரிக்கா வந்திருக்கும் செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. அவரது அமெரிக்கப் பயணத்தின் போது மிக முக்கிய நிகழ்ச்சியாக அவர் அமைத்துக் கொண்டது அமெரிக்கப் பாதிரிகளால் பாலியல் வன்முறைக்குள்ளான பாலர்களின் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொல்வது என்பது. சுமார் 1200 பாதிரிகள் இக்குற்றத்திற்கு ஆட்படுகின்றனர். இவர்கள் வன்முறைக்குள்ளான குழந்தைகளை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஐம்புலன் அடக்கம் கொண்டிருக்க வேண்டிய சமய நெறியாளர்களே இவ்வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றால், சாதாரணக் குடிமகனைக் கேட்க வேண்டாம். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு80,000 வன்முறைப் பதிவுகள்! பதிவு பெறாத வன்முறைச் சம்பவங்கள் இன்னும் ஏராளமாய் இருக்குமென்று AACAP ஒரு கணக்கு சொல்கிறது.

பெற்றோர்களின் மனோநிலை எப்படி இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. எப்படி இந்த கள்ளமறியாப் பிஞ்சு உடல்களை துவம்சம் செய்ய முடிகிறது! என்று அழத்தான் முடிகிறது. பெரும்பாலான் நேரங்களில் பெற்றோர் இதை ஒரு குற்றமென காவல்துறையினரிடம் பதிவு செய்வதில்லை. ஜெயகாந்தனே தனது அக்னிப்பரிட்சையில் கங்காவின் தாய் அவளுக்கு நீராட்டி இவள் புனிதமானவள் என்று ஆறுதல் படுத்தவே முயல்கிறாள் என்று எழுதுகிறார். யாரிடம் கூறி முறையிடமுடியுமென்ற ஒரு சமூக வெட்கம்.

பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தைகளின் மனோநிலை பின் எப்படி இருக்கும்? வாழ்நாள் முழுவதுமான ஒரு குற்ற உணர்வு, ஒரு நீசத்தனம், வன்முறைப்பட்ட உடற் காயங்கள் வேறு. இது பெண் குழந்தைகளுக்குத்தான் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. வன்முறைக்குள்ளாகும் ஆண் சிறுவர்களும் அதிகம். இந்தியா போன்ற நாட்டில் பெண் குழந்தைகளைவிட ஆண் சிறுவர்களே வன்முறைக்கு அதிகம் ஆளாகின்றனர். பள்ளியில் படிக்கும் காலங்களில் தலித் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஹாஸ்டல் இருக்கும். சின்னப் பையன், பெரிய பையன் என்று எல்லா ரகத்திலும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படியும் கல்வி தந்துவிட வேண்டும் எனும் அரசின் முனைப்பு. மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது உறுதி. ஆனால், பல சிறுவர்கள் பெரிய மாணவர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் உறுதி. அக்காலத்தில் இதையொரு வேடிக்கை கலந்த உரையாடலாகக் கேள்வியுற்றதுண்டு. கொழுக்கு, மழுக்கென்று இருந்த என் சிறு வயது உடல் பலரை இம்சைப் படுத்தி இருப்பது என் அனுபவத்திற்கு வரும் போதுதான் தப்பித்து வருவது எவ்வளவு கடினமென்று உணர்ந்தேன். வேடிக்கை என்னவெனில், பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்கின்ற காலத்தில் ஒருமுறை ஒரு பேராசிரியர் தன் பாலியல் ஆசையை உடல்மொழி மூலமாகக் காண்பித்ததுதான் வெட்கக்கேடு! தமிழகத்தின் நிலமை ஒரு ஆபத்தான நிலமை. ஏனெனில் சங்கம் தொடங்கி இன்றைய சினிமாப்பாடல்வரை காதல் என்பதே முதன்மையாக இருக்கிறது, கலவி பற்றி சுற்றி வளைத்து எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சினிமாப் படம் என்பது செக்ஸ் என்ற விஷயத்தை ஒரு உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆனால், சமூகமோ ஒரு கட்டுபட்டியான கட்டுப்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. பலன் பல ஆண்களும், பெண்களும் ஒரு மாபெரும் பாலியல் அவதியில் உள்ளனர். அதன் வெளிப்பாடு பாலர் பாலியல் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும், என் வாழ்வில் ஏற்பட்டது போன்ற ஒரு சில முயற்சிகளாவது நேர் பட்டிருக்கும். ஆனால், இவை பற்றிப் பேசுவது என்பது சமூக வெட்கக்கேடான விஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூச்சம் போகும் போதுதான் தமிழகத்தில் இம்மாதிரி வன்முறைகள் முறையாகப் பதிவாகி, இதன் உளநிலை ஆராயப்படும்.

பாலியல் வன்முறை செய்பவர்க்கு வெட்கம், நாணம் போன்ற எந்தக் குணங்களும் கிடையாது. அவர்களது இச்சையைப் போக்கிக் கொள்ள வேண்டும்! அதற்காக என்னமும் செய்வார்கள். இல்லையெனில் பாதிரியார் இதில் ஈடுபடுவாரா? அன்யாங்க் என்ற இடத்தில் (கொரியாவில்) இரண்டு பெண் குழந்தைகளை இம்சைப்படுத்திவிட்டு ஒரு முரடன் கொன்று விட்டான். அப்போதுதான் இப்பிரச்சனை பற்றி கொரியாவில் அதிகப் பேச்சு அடிபட்டது. விசாரித்ததில்தான் தெரிந்தது அவனுக்கு பல்வேறு வகையான பாலியல் ஆசைகள் உண்டென்று. அவை தீர்க்கப்படும்வரை அவன் இத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பான் என்று.

எனவே பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளை வெகுளியாக வளர்க்காதீர்கள். அந்நிய மனிதர்களிடம் கவனமாகவே பழகச் சொல்லுங்கள். குடித்துவிட்டு நிற்பவன் பக்கமே அண்ட விடாதீர்கள். பெரும்பாலான சம்பவங்களில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சமூகக் கட்டுப்பாடு என்பது தளர்ந்து விடுகிறது. அதன் பயனாய் குற்ற உணர்வு கிஞ்சித்தும் இருப்பதில்லை. ஏதாவது ஆபத்து என்றால் குழைந்தைகளை சத்தம் போட்டுக் கத்தச் சொல்லுங்கள். நாம் அடக்கி, அடக்கி வைப்பதால் தேவையான சமயத்தில் கூட அவர்கள் சத்தம் போட மறுத்துவிடுகின்றனர். அவர்களுக்கு அவர்கள் உடல் மீது ஒரு அபிமானத்தை உண்டு பண்ணுங்கள். "ஊனுடம்பு ஆலயம்" என்று திருமூலர் சொல்வது போல் நமது உடல் ஒரு அரிய பொக்கிஷம் அதை கண்டவர் உதாசீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்ற மனோநிலையை உருவாக்குங்கள். இது கல்யாணமான பின்பு கூட கணவன் துஷ்பிரயோகம் செய்ய நினைத்தால் (ABCD படம் பாருங்கள் என்னவென்று புரியும்) தடுக்க உதவும்.

நல்ல நண்பர்கள் என்று சிலரை வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி பேசிப் பழகுங்கள். இம்மாதிரி சம்பவம் நிகழ்ந்தால், தைர்யமாக எதிர்த்துப் போராடுங்கள்.எதிர்க்குரல் கொடுக்காத வரை இவ்வன்முறை சமூகத்தில் குறையாது!

வேறொரு மனவெளி

திரு.பாலு மணிமாறன் 20 சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து "வேறொரு மனவெளி" என்ற புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். புத்தக வெளியீடு சமீபத்தில் திரைப்பட இயக்குநர் அமீர் அவர்களை வைத்து நடந்தது. அமீரது படங்கள் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றிருக்கின்றன. (RAM - Cyprus Film festival 2006, PARUTHIVEERAN - Berlin film festival -2008) அவரை சிறப்பிக்கும் முகமாகவும் இவ்விழா நடைபெற்று இருக்கிறது. சிங்கப்பூரில் 20 பெண் எழுத்தாளர்களா? என்று வியந்த அமீர் பெண்கள் தைர்யமாக எழுத வேண்டுமென்றார். விமர்சனங்களுக்குப் பயப்படக் கூடாது என்றார். 20 பெண் எழுத்தாளர்களில் 17 பேர் வந்திருந்தனர். வேலை நாளாக இருந்த போதும் 250 பேருக்கு மேல் விழாவிற்கு வந்திருந்தது சிறப்பு என்கிறார் பாலு! அமீர் தவிர, திரு.ராம கண்ணபிரான், திருமதி.ஸ்ரீலட்சுமி, திரு.பீர் முகமது போன்றோரும் பேசினர். மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது சிங்கப்பூர், மலேசிய பெண் எழுத்தாளர்கள் பங்கேற்கும் சிறப்புப் பட்டறை ஒன்றை நடத்த வேண்டுமென்ற தன் விருப்பதைச் சொன்னார். சிங்கப்பூர் ஊடகத்துறையைச் சேர்ந்த முகமது அலி அவர்கள் "நூலாய்வு" செய்தார். இப்புத்தகத்திற்கு மதிப்புரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சுவாரசியமான பல கதைகளைக் கொண்ட இப்பதிப்பு நம் எல்லோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஒன்று. இப்புத்தகம் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்:

In India :
C-54, 1st Floor, Anna Nagar Plaza,
II Avenue,Anna Nagar,
Chennai 600 040

In Singapore:
BlK 325B, #14-655,
Sengkang Eastway,
Singaporeதிரு.அமீர் புத்தக வெளியீடு செய்கிறார்.
விழாவிற்கு வந்திருந்த பெண் எழுத்தாளர்களில் சிலர், அமீருடன்
திரு.அமீர் உரையாற்றுகிறார்

வெங்காயச் சாகுபடி!

என்னடா! கடலே! கடலே!ன்னு எழுதிவிட்டு வெங்காயச் சாகுபடி பற்றி எழுதுகிறேனே என்று எண்ணுகிறீர்களா? புதன் கிழமை முழுவதும் ஆய்வகத்திற்கு அருகிலுள்ள வயக்காட்டில் வெங்காயம் பிடுங்கினேன்! என்ன இது? ஒரு பேராசிரியர் ஸ்தானத்தில் உள்ளவர் வயக்காட்டில் இறங்குவதா? எனக் கேட்கலாம். ஆனால், எங்கள் ஆய்வகம் இங்குள்ள விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன் படி, நாங்கள் மச்சு வீட்டுக் குடித்தனக்காரர்களாக இருந்தாலும் குடிசை வாழ்வு எங்களுக்கு அந்நியமில்லை என்பதைக் காட்டுவது இதன் தாத்பரியம். உண்மையில் வேலை என்பதை வைத்து எப்படி மனிதர்களைப் பாகுபடுத்த முடியும்?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்


ஆய்வகத்தில் செய்வதும் வேலைதான். வயக்காட்டில் செய்வதும் வேலைதான் இல்லையா? ஆனால், படித்தவன் வயக்காட்டில் வேலை செய்து பழக வேண்டும். அப்போதுதான் அதன் அருமை புரியும்! நாங்களொன்றும் நாள் பூரா உழைக்கவில்லை. காலை பத்து மணிக்குப் போய் மாலை 4 மணிக்கு வந்துவிட்டோம். ஆனால் அந்த 5 மணி நேர வயக்காட்டு வேலையே பெண்டைக்கழட்டுவதாக உள்ளது! வேகாத வெய்யிலில் பொறுமையாக வெங்காயத்தைப் பிடுங்கி, பின் சீர் செய்து கட்டி அனுப்பும் வண்ணம் வைக்க வேண்டும் என்பது சின்ன வேலை அல்ல.

எப்போதும் எனக்கொரு ஆசையுண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்கிறார்போல் கிராமத்து விவசாயிகள் போல் வயக்காட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை! இந்தப் பரிசோதனை, ஆய்வுகளை ஓரங்கட்ட வேண்டுமென்று. ஆனால் அது எவ்வளவு கடினமென்று இன்று புரிந்தது. ஆச்சர்யம் என்னவெனில், நாங்கள், சுமார் 20 பேர் போகுமுன்பு அங்கு இரண்டு 70 வயதுக் கிழவிகளே அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் வந்த பின் அவர்களே மீண்டும் மிச்ச வேலைக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள் வலுவில், அதுவும் அந்த வயசு வலுவில் கால்வாசிக் கூட நமக்கில்லையே!அறுவடையாகும் வயல்!
வெங்காயம் புடுங்கும் நம்ம ஹீரோ!
20 கிலோ பைகளாக அறுவடை சாகுபடி!
இடையில் விவசாயிகளின் விருந்தோம்பல்!
வழியில் போவோர் வந்திறங்கி வெங்காயம் வாங்கிச் செல்லும் காட்சி. 20 கிலோ சுமார் 15 டாலர் விலை
அப்பாடா! என்று மீண்டும் ஆய்வக வாசலில்


இதை தாய்மார்கள் தின சமர்ப்பணம் என்று சொல்ல வேண்டும். அந்த இரண்டு பெண்கள் சளைக்காமல் வேலை செய்வதால் வாழ்வு இங்கு ருசிக்கிறது. இது போல் எத்தனை தாய்மார்கள் கொரியாவில். அதுவும் நம்ம ஊரில் கிழவி என்று ஒதுக்கிவிடும் பருவத்தில். கொஞ்சம் கூட வயதைப் பாராமல் வேலை செய்யும் இப்பெண்களைத் தெய்வம் என்றால் குறையோ?

ஒளி படைத்த கண்ணினாய் வா!

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வசதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்பாடு என்றொரு செய்தியை வாசித்தேன். ஜெர்மனியில் வாழ்ந்த காலங்களில்தான் இந்த மிகப்பெரிய விமானக் கட்டண மாற்றம் நிகழ்ந்தது. இங்கிலாந்தின் சில விமானக் கம்பெனிகள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு குறைந்த விமான கட்டணத்தில் பயணத்தை வழங்கின. ஐரோப்பா போன்ற செலவு மிகுந்த பிரதேசத்தில் இதுவொரு அற்புதமாகத் தோன்றியது. ஒருமுறை ரெயினேர் எனும் ஐரிஷ் கம்பெனி அவர்களது சுதந்திர தினத்திற்கு இலவசமாக பயணிகளை டப்பிளினுக்கு அழைத்துச் சென்றது! இது என்ன பொருளாதாரம்? இதை எப்படி சாதிக்க முடிகிறது? அமெரிக்காவில் கூட இவ்வளவு மலிவு கிடையாது. ஆனால் ஐரோப்பாவில் முடிகிறது. சென்ற முறை ஜெர்மனி சென்ற போது என் ஐரோப்பிய பயணங்களை ஏர்பெர்ளின் மூலமாகச் செய்தேன். அவ்வளவு கச்சிதமான பயணம். நல்ல உணவு. படிக்கப் புத்தகம் (சும்மா இல்லே! பிளேபாய் ஆக்கும்!!), சொகுசான பயணம். பஸ்ஸில் போவதைவிட, ரயிலில் போவதைவிட மலிவு.

இது இப்போது இந்தியாவிற்கு வந்திருக்கிறது. இந்தியா போன்ற விரிந்த தேசத்திற்கு மிகவும் உகந்த முறையிது. மார்ச்சில் இந்தியா வந்திருந்த போது, குறைந்த விடுமுறை என்பதால் விமானத்திலேயே பயணப்பட்டேன். அவ்வளவு சௌகர்யமான பயணம்! விமானங்களெல்லாம் புத்தம் புதுசு! ஒரு சத்தமில்லை. சின்ன ஸ்நாக் கொடுத்தார்கள். ஒரு கம்பெனி உள்ளே ஏலம் விட்டார்கள். சுவாரசியமாக இருந்தது. இந்தியாவை மூன்றாம் உலகு என்று இனிமேலும் சொல்ல முடியாது. என்ன! விமானக் கட்டணம் குறைவுதான், பிற வரிகள்தான் விலையைத் தூக்கிவிடுகின்றன. அப்படியும் வெளிநாட்டுப் பயணங்களை ஒப்பிடுகையில் இது மலிவே!

உள்நாட்டில் பயணப்படும் பயணிகள் மிகவும் பதிவிசாக நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து செல்லும் பயணிகள் கொத்தவால் சாவடிக் கும்பல்போல் நடந்து கொள்கின்றனர். இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்துதானே, இவர்களை விமான சிப்பந்திகளும் நடத்துவார்கள். இது மிகத்துல்லியமாகத் தெரிகிறது. சென்ற முறை இந்தியா போனபோது, சோல், தாய்பெய், பேங்காக், வழியாக சென்னை பயணம். சோல்-தாய்பெய் no problem! தாய்பெய்-பேங்காக் no problem! பேங்காக்-சென்னை? பிரச்சனை விமான நிலையத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது! விமானத்தில்தான் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறதே? ஆனால் ஏறுமிடத்தில் ஒரே கும்பல். ஏதோ பஸ்ஸில் ஏறி முன்னால போய் சீட் போடற மாதிரி. அவர்கள் இந்தந்த வரிசை இப்போது வரவேண்டுமென்று அழைத்தாலும் ஒரே கொத்தவால் சாவடி கும்பல்தான். Naturally, அந்த விமானப் பயணத்தில் சிப்பந்திகள் இந்தியர்களை நடத்தும் விதம் பள்ளி ஆசிரியை மாணவர்களை நடத்துவது போலிருந்தது. டீச்சர் முகத்தில் எப்போதும் ஒரு சிடு, சிடுப்பு இருக்குமே! அதுபோல். தண்ணீர், பழரசம் தவிர வேறு எதையும் கண்ணால் கூட காண்பிக்க மாட்டேன் என்கிறார்கள். இந்தியர்கள் மீது அவ்வளவு பயம்.

இந்தியாவில் 'முதல் உலக' தொழில் நுட்பம் வந்தாகிவிட்டது. அத்தொழில் நுட்பத்துடன் இணைந்து போகும் சமூக நாகரீகம் இன்னும் வந்து சேரவில்லை. இந்தியா மூன்றாம் உலக நாடு அல்ல.விமானங்கள் நேரத்தில் பறக்கின்றன. விமான நிலையத்தில் முன்பு போன்ற தேவையற்ற சிவப்புநாடாக் கெடுபிடிகளில்லை. இரயில் சொன்ன நேரத்திற்கு வருகிறது. எந்த போகி எங்கு நிற்குமென்று முன்னமே தெரிகிறது. வீட்டிலிருந்தவாறே இரயில் பயணத்தைச் சீர்செய்து கொள்ளமுடிகிறது. பெரிய சொகுசு பேருந்துகளெல்லாம் வந்திவிட்டன. பால் கிடைக்கிறது, மோர் கிடைக்கிறது, நெய் கிடைக்கிறது, ஹார்லிக்ஸ், போர்விட்டா, நூடுல்ஸ், தானியங்கள் (காலையுணவு) வெளி நாட்டில் கிடைக்காதது என்ன கிடைக்கவில்லை இந்தியாவில்?

ஏழ்மையைக் கணக்கில் கொள்ளமுடியாது. ஏழ்மை அமெரிக்காவிலும் இருக்கிறது. வீடற்ற அநாதைகள் பிரான்சில், ஜெர்மனியில், ஜப்பானில், கொரியாவிலுண்டு. ஆனால் அங்கெல்லாம் ஒரு சமூக ஒழுங்கு இருக்கிறது. அச்சமூக ஒழுங்கு அரசாங்கம் கொண்டு வருவதல்ல. மக்களாக தங்கள் சௌகர்யத்திற்கு ஏற்படுத்திக் கொண்டது. உதாரணமாக பஸ் வந்து நிற்கிறது என்றால் காட்டுக் கும்பலாக ஏற முற்படாமல் வரிசையாக நின்று ஏற வேண்டும் என்பது இங்கிலாந்தில் எழுதாச் சட்டம். பஸ்ஸில் போகும் போது ஒருவருக்கொருவர் மெலிதாகப் பேச வேண்டுமென்பது ஜெர்மனியில் எழுதாச் சட்டம். சிவப்பு விளக்கு எரியும் போது வீதியைக் கடக்கக்கூடாது என்பது அங்கு எழுதாச் சட்டம். இது மக்களுக்கு மக்களால் உருவாக்கிக்கொண்ட பாதுகாப்பு.

குப்பை இல்லாத இந்தியா!
கூளம் இல்லாத இந்தியா!
சாக்கடை பாயாத வீதிகள்!
கழிப்பிடமற்ற இடத்தில் விலங்குகள் போல் கழிக்காத இந்தியா!
சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதே! என்ற அறிவிப்பு இல்லாத இந்தியா!
ஊரில் சடங்கு என்றால் காலையிலேயே ஊரைக் கலக்கும் லவுட் ஸ்பீக்கர் இல்லாத இந்தியா!
இரவுப் பயணம் என்று சொல்லிவிட்டு ஒரு சினிமாவை ஓடவிட்டு சத்தமாகப் பிராணனை வாங்காத இந்தியா!
பஸ்ஸில் போய்க்கொண்டு இருக்கும் போதே பளிச்சென்று வெளியே எச்சல் துப்பாத இந்தியா!
தெருவில் உந்து வண்டிகளைத் தவிர ஆடுமாடு, கழுதை, பன்றி இவை வந்து போகாத இந்தியா!

ஏன் உருவாகவில்லை இன்னும்? மக்கள் யாருக்கோ காத்திருக்கிறார்கள். யாரும் செய்யப் போவதில்லை. கலைஞர் ஆட்சி, கலைஞர் குடும்பத்திற்கே! அமிதாப் சினிமா அடுத்து அபிஷேக்கிற்கே! எல்லோருக்கும் அவரவர் குடும்பமே பிரதானம். பின்? நாம்தான் செய்ய வேண்டும். முடியாதா?

பெரு ஏழை நாடுதான். தெருக்கள் சுத்தமாக உள்ளன. கம்போடியா ஏழை நாடுதான் வீதிகளில் குப்பை இல்லை. பிலிபைன்ஸ் ஏழை நாடுதான், அடுத்தவர் வீட்டுச் சுவரில் போஸ்டர் ஒட்டுவதில்லை. எங்கிருந்து வருகிறது சுத்தம்? நாகரீகம்? நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். நம்ம ஊரிலோ வேலைக்குப் பஞ்சமில்லை. தெருவுக்குத்தெரு சங்கங்கள் அமைத்து சந்தா வசூலித்து தெருவைச் சுத்தம் செய்யுங்களேன்? வேலை கொடுத்தமாதிரியும் ஆகிறது, தெருவும் சுத்தமாகிறது!

எல்லா இடத்திலும் ஆடுமாடுகள் போல் கழிகிறார்களா? அதற்கும் வழி இருக்கிறது! காசு வசூலிக்காத கழிப்பிடங்களைக் கட்டி லாபம் சம்பாதிக்க முடியும்? எப்படி? உண்மையில் கழிவு என்றாலும் அதிலும் சக்தி இருக்கிறது. மாட்டுச் சாணத்தில் கோபார் வாயு உருவாக்க முடியுமென்றால் மனிதக் கழிவிலிருந்து உருவாக்க முடியாதா என்ன? முடியும்! சீனாவில் செய்து காட்டியிருக்கிறார்கள். ஆக, எது பிரச்சனை என்று சொல்கிறோமோ அதையே மூலதனமாக மாற்ற முடியும்.

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போயிருந்த போது அவ்வளவு சுத்தமாக இருந்தது. சின்ன வேலை செய்திருக்கிறார்கள். அதை plastic free zone என்று மாற்றிவிட்டார்கள். என்ன மாயம்? ஏன் நம் குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் சூழல் ஒழுங்கு பற்றி போதிக்கக் கூடாது? பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் போதே சாக்லெட் தின்றுவிட்டு காகிதத்தை அப்படியே வெளியே வீசக்கூடாது என்று சொல்லித்தந்தால் குழந்தை கற்றுக் கொள்ளாதா என்ன? எத்தனை குடும்ப ஒழுக்கங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். பொய் பேசுவதில்லை, குடிப்பழக்கமில்லை, சிகரெட் குடிப்பதில்லை, பிற மாந்தரை சகோதரிபோல் நடத்துவது..இப்படி எத்தனை! ஒவ்வொரு இந்தியனும் தன் குடும்ப அளவில் மிகவும் ஒழுக்கமுள்ளவனாக வளர்க்கப் படுகிறான். ஆனால் அவனுக்கு சமூக ஒழுங்கு என்றும் போதிக்கப் பட்டதில்லை. கன்பூசியஸ் என்ற பெரியவர் தனி மனித ஒழுங்கு, சமூக ஒழுங்கு இவையிரண்டையும் சரிவிகிதத்தில் சேர்த்து வழிமுறைகள் சொல்லியுள்ளார். அது 40 வருடங்கள் முன் மூன்றாம் உலக நாடாக இருந்த கொரியாவை இன்று முதல் உலக நாடாக மாற்றி இருக்கிறது.

இந்தியா உலகிற்குத் தந்திருக்கும் பெரிய கொடை புலால் மறுத்தல் என்பது. கொல்லாமை. எல்லா உயிர்களுக்கும் வாழும் சம உரிமை! அது இன்று காட்டுத்தீ போல் உலகெங்கும் பரவி வருகிறது. 700 கோடிப்பேரை கொல்லாமை நெறியில் கொண்டு வந்த இந்தியாவால் குப்பை போடாமல் தடுக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள்! இந்த 700 கோடிப்பேரும் நாளை ஆளுக்கொரு ஹேம்பர்க்கர் வாங்கிச் சாப்பிட்டால் அது உலகச் சூழலை எப்படி பாதிக்குமென்று. அமெரிக்க மெக்டொலால்டு ஹேம்பர்க்கருக்காக பிரேசில் நாட்டுக் காடுகள் தரை மட்ட மாகின்றன. காடுகள் அழியும் போது மழை வளம் குறைகிறது. மழை வளம் குறையும் போது வறட்சியும், பாலையும் உருவாகின்றன. ஆக இந்த 700 கோடியும் நாளையே கொல்லாமை நெறி தவறி கொல்லத்தொடங்கினால் உலகில் மாடுகளும், பன்றிகளும், கோழிகளும் நடமாடாது! காடுகள் அழிந்து கடும் வறட்சி உண்டாகும். இதையுணர்த்தி நம்மை ஆயிரம் ஆண்டுகளாக நெறிப்படுத்திய சீலர்களை எப்படி வணங்குவது. இதைச் செய்து காட்டிய இந்தியாவால் சுற்றம், சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியாதா?

பாரதி பாடியது போல் "போகின்ற பாரதம்", "வருகின்ற பாரதம்" என்று பாட வேண்டும் போல் தோன்றுகிறது. ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

இந்தியாவை 2020-ல் முதல் உலக நாடாக மாற்றிவிட வேண்டும். கனவு காணுங்கள் என்கிறார் கலாம். நான் இந்தியாவை இன்றே முதல் உலக நாடாகத்தான் பார்க்கிறேன். தேவை இன்னும் கூடுதல் கல்வியறிவும், சமூகப் பழக்கங்களும்தான். அது இல்லாதவரை எவ்வளவு செல்வம் வந்தும் இந்தியா மூன்றாம் உலக நாடு போல் தோற்றமளிக்கும்.

நாராயண கவசம்

மனிதன் எவ்வளவு உடலியல் பிராணியோ அவ்வளவு உளவியல் பிராணியும் கூட. அதாவது மனிதனுக்கு உறைவிடமும், உணவும் கிடைத்துவிட்டால் போதும் வாழ்வு என்றில்லை. அது விலங்குகளுக்குச் சரி. மனிதனுக்கில்லை! இவன் ஒரு உளவியல் பிராணி. இவனுக்கு உள்ளம் என்று ஒன்றிருக்கிறது. அதற்கு இசை வேண்டும், கூத்து வேண்டும், சினிமா வேண்டும், சமீப காலங்களில் கணினியும் வேண்டும். கணினி இருந்தால் போதுமா? இணையத் தொடர்பு வேண்டும். அது மட்டுமிருந்தால் போதுமா? தமிழ்மணம் என்ற கூட்டமைப்பு, மின்னரங்கம் தேவை. அங்கு இவனால் மற்றவர்களுடன் கூடி அளவுலாவ முடிகிறது. நேரில் பார்ப்பது போன்ற அதே உணர்வு! அதே பாவம்! அதே உணர்வுகள்! இது எப்படி சாத்தியப்படுகிறது. விலங்களுக்கு மெய் உண்டு. கண்டால் அவை உண்ணும். ஆனால், அவைகளுக்கு மெய்நிகர் (விர்சுவல்) கிடையாது. அவைகளால் கணினியைக் கட்டிக்கொண்டு அழமுடியாது :-)

இந்த மெய்நிகர் எங்கு உருவாகிறது? எங்கு நிலைக்கிறது? அதற்கு பருண்மை உண்டா? எப்படிக் கண்டுபிடிப்பது? உடலின் எங்கோ இருப்பது போல் உணர்கிறோம். ஆனால் அது உடலில்தான் இருக்கிறதா என்றும் தெரிவதில்லை. செத்துப்போன ஒருவனிடம் கணினியைக் கையில் வைத்தாலும் இந்த மெய்நிகர் உணர்வு அவனுக்குத் தோன்றுவதில்லை. கண் இருந்தும் அவனால் காண முடிவதில்லை. மெய் இருந்தும் உணரமுடிவதில்லை. மெய் இருக்கிறது ஆனால் மெய்நிகர் உருவாவதில்லை. எனவே மெய்நிகர் என்பதை ஒரு மந்திர உணர்வு என்று சொல்வோமா? கண்ணில் தெரியாத காற்று இசையைக் கொண்டு வருகிறது. காது எதைக்கொண்டோ இசையை உணர்கிறது. ரசிக்கிறது. இவையெல்லாம் மந்திர உலகத்தின் செயல்பாடு என்று சொல்வோமா?

ஆக, மந்திர உலகம் ஒன்று இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. காணமுடிவதில்லை. இதையுணர்ந்துதான் திருவாய்மொழி இறைவனை "உணர்வின் மூர்த்தி" என்கிறது. உணர்விற்கு அவன் அதிபதி.

உடலுக்கு கவசம் தேவை. குளிர் காலத்தில் பனி தாக்காமல் இருக்க உடை உடுத்துகிறோம். அது கவசம். நமக்கொரு மந்திர உரு இருப்பது போலல்லவா நம் விசாரணை செல்கிறது? இந்த மந்திர உருதானோ உயிர் போனவுடன் நம் உடலை விட்டுப் போய்விடுகிறது?

ஆச்சார்ய ஹிருதயம் என்ற அற்புதமான நூலில் அழகிய மணவாள நாயனார் சொல்கிறார், உலகை நான்கு, நான்காகப் பிரிக்கலாமென்று. சதுர் யுகம், சதுர் வேதம், சதுர்ஜீவ வகைகள். முதல் இரண்டும் நமக்குத் தெரியும் மூன்றாவதாகச் சொல்வது? தேவ/அசுர கணங்கள், மனிதன் (bipedal), விலங்குகள் (tetrapedal), தாவரங்கள் என்று. இதன் அழகு என்னவென்றால் மனிதனை மற்றவற்றிலிருந்து பிரிப்பது அவனது நேர் மிகு நடையே. இதை மிக முக்கிய பரிணாம வளர்ச்சியென்று அறிஞர்கள் சொல்வர். இடர்கள் வரும் போது உடல் பலம் மட்டும் நம்மைக் காப்பதில்லை. மனோதிடமும் அவசியம். அதை வளர்த்தெடுக்கவே இந்த மந்திர கவசம்! இது ஆடை போன்ற பொருள் அல்ல. இது மனதிற்கான கவசம். இதைக் கேட்டாலோ, பாடினாலோ மனது உற்சாகமடைகிறது. உள்ள பயம் நீங்குகிறது.

நமக்குத் தெரிந்து அவ்வை இயற்றிய விநாயகர் அகவல், பாலதேவர் இயற்றிய கந்தர் சஷ்டி கவசம் போன்றவை பிரபலம். ஆனால், ஆதிப்பிரானான நாரணனின் பெயர் சொல்லும் நாரண கவசமும் உண்டு. ஆழ்வாராதிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பெரியாழ்வார், நம்மாழ்வார் போன்றோர். ஆனால் அவை நெஞ்சை உருக்கும் பாசுரங்களுடன் ஒன்றாக அமைந்துவிடுகின்றன. நாராயண கவசம் என்பது வடமொழியில் உண்டு. ஆயினும், விநாயகர் அகவல் போன்ற நாரண கவசம் இதுவரைத் தமிழில் உருவாகவில்லை. அக்குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார் வானமாமலை திருக்கோயில் மடத்தின் ஆஸ்தான வித்வான் திரு.வேங்கடகிருஷ்ணன். அற்புதமான கொஞ்சு தமிழ். ஆழ்வார்களின் அருளிச் செயல்களை உள்வாங்கிய நடை. திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான பாடகி திருமதி மணிகிருஷ்ணசாமி இதை சுத்தமான உச்சரிப்பில் பாடி வழங்கியிருக்கிறார்.

இனி நாரண கவசம் உங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும். அதுவே உங்களை உங்கள் இடர்களிலிருந்து காக்கட்டும். நாராயண, நாராயண!!


காதல் கொண்டு கடல்வண்ணன் புராண
மோதினன் நாரணன் காப்பென் றுரைத்தனன்.

மணிமேகலை [சமயக் கணக்கர் தந்திறங்கொண்ட காதை]
சங்க காலம்.

கடலே! கடலே!!

கடல் நம் மூத்ததாய். இது பலருக்குத் தெரியாது. காற்றை சுவாசித்துக் கொண்டு, தரையில் நடைபோடும் மானுடப் பிறவி கடலிலிருந்து வந்தது என்றால் யார் தான் நம்புவர்? குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றால் அவன் தாய் குரங்கு போல் இருக்கிறாள் என்று பொருள் அல்ல. அல்லது அவனது தாத்தா, பாட்டி குரங்குகள் என்றும் பொருள் அல்ல. உயிர் அனைத்தும் கடலிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. இந்தப் புரிதல் நம் புராண இந்தியர்களுக்கு இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லையெனில் திருப்பாற்கடல் கதை ஏன்? கடலைக் குடையக் குடைய மனித வாழ்விற்கான பொருட்கள் வருகின்றன என்று பூடகமாகச் சொல்வானேன். இந்திரா பார்த்தசாரதி எழுதுவார் கடலிலிருந்து உப்பு எடுத்ததையே அமுதம் என்று சொல்வரென்று. உப்பில்லாமல் வாழ்வு ஏது? நீரில்லாமல்தான் வாழ்வு ஏது? பனிக்குடம் உடைந்தால் உயிர்கள் ஜனிக்கும் என்றோரு ஒரு சினிமாப்பாட்டு. ஏன் குழந்தை நீரில் தவழ வேண்டும்? மனித உடலுள் ஒரு சிறு கடலை உருவாக்கி அதில் சிசுவைத் தவழவிடும் விந்தை நம் முன்னாளைய உயிர் சூழல் கடலிலிருந்து என்று காட்டுவதற்கே!

ஆயினும் கடலின் ஆழ, அகலத்தைப் பார்த்து மனிதன் பயந்துவிட்டான். கடல்தாண்டிப் போகாதே! என்று சாஸ்திரம் வேறு எழுதிவிட்டான். எந்த நீரிலிருந்து உயிர்கள் உருவாயினவோ அந்த நீரே இவன் உயிர் கொல்லும் ஊடகமாக மாறிப்போனதும் விந்தைதான். ஆயினும் கப்பல் தொழில் முன்னேறிய இக்காலக்கட்டத்தில், வானிலிருந்தே கடலைக் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்பம் சாத்தியப்படக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் கடல் முன்பு போல் பயமுறுத்துவதில்லை.சுனாமி, புயல் போன்ற பேரழிவுச் சக்திகள் முன் மனிதன் தூசு என்கின்ற ஒரு பயம் என்றுமுண்டு. அதற்கு மனிதன் பயப்பட்டுதான் ஆக வேண்டும். ஆனால் அமைதியான கடல் ஆராயப்பட வேண்டிய ஒன்றே (the next frontier to explore after space).முல்லை/மருத நிலத்து ஆசாமியான நான் இந்த நெய்தல் ஆய்வில் விழுந்ததும் தற்செயல்தான். உண்மையில் உண்மையான கடல் ஆய்வாளர் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். தரையில் மனிதன் செய்யும் தொழிற்புரட்சி கடலை எப்படிப் பாதிக்கிறது எனும் துறையில் நான் விழுகிறேன். எனவே கடல்வள மேம்பாட்டுக் குழுவின் சார்பாக ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டு நாடுகளின் வருடாந்திரக் கூட்டத்தொடருக்கு கொரியாவை முன்னிலைப் படுத்தி நான் பெரு நாட்டிற்குச் சென்றேன். ஒரு வாரம் நடந்த கூட்டமது. ஒரு நாளைக்கு பல அமர்வுகள். பல விஷயங்கள் அலசப்பட்டன. அறிவியல் அரசியலை நேர் கொள்ளும் தருணம். அறிவியல் இறையாண்மை நெறியாளர்களை நேர் கொள்ளும் தருணம். உலகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது! இருபான்மையினரும் தங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் கொஞ்சமாவது இத்துறைகள் பற்றிய அறிவு வேண்டும். அல்லது கற்றுக் கொள்ளும் கூரிய புத்தி வேண்டும். இது அங்கு வந்திருந்த எல்லோருக்கும் இருந்தது.

கடல், மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம். கடலிலிருந்து மீன் மட்டுமா கிடைக்கிறது? உப்பு போன்ற கனிமம். எண்ணை, எரிவாய்வு, அலைச் சக்தி, கனிமப் படிவங்கள் இப்படி. ஆயினும் கடலின் பெரிய சொத்து மீன் போன்ற உயிர் வாழ் இனங்களே. ஒரு காலத்தில் திமிங்கில எண்ணெய் என்பதே ஐரோப்பிய இரவுகளை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. கடல் உணவு என்பது இந்தியர்களுக்கு அவ்வளவு பரிட்சயமில்லாத ஒன்று. ஆனால் சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகள் கடலையே நம்பியுள்ளன. இந்தியா எப்படி வேளாண்மையை நம்பி உள்ளதோ அது போல் இவர்கள் கடளாண்மையை நம்பியுள்ளனர். கடலிலிருந்து பாசி, நத்தை, மீன், நத்தைகள், நண்டு என்று எத்தனையோ உணவுகள். புரதங்கள்.எனவே கடல் பற்றிய ஆய்வும் புரிதலும் கிழக்காசியாவிற்கு இன்றியமையாதது.

மனிதனின் அபரிதமான தொழில் வளர்ச்சி அவனது வாழ்வை மெல்ல, மெல்ல சிதைக்கத் தொடங்கியுள்ளது. வளர்ச்சி என்று சொல்லிவிட்டு சிதைக்கும் என்றால் பொருந்தவில்லையே? ஆனால் உண்மையில் நமது எரிவாயுக்கள் காற்று மண்டலத்தில் சென்று பாதிப்பதால் நமது பருவக்காற்றின் திசை மாறிவிடுகிறது. மீத்தேன், ஃபிரியோன் போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டுவிட்டன. மண்ணிலிருந்து கிளம்பும் கரியமில வாய்வு கடலின் அமிலச்சத்தைக் கூட்டுகிறது. இவற்றின் விளைவுகள் எப்படியிருக்கும்? பூமி மண்டலம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு சூடேறத்தொடங்கிவிட்டது. இச்சூட்டால் கடல் சார்ந்த சில நிகழ்வுகள் மாற்றம் கொள்ள ஆரம்பித்துள்ளன. உதாரணமாக தென்மேற்குப் பசிபிக்கில் தொடங்கும் எல்நினியோ எனும் வெப்ப நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களின் வலசை போதலைக் கட்டுப் படுத்துகிறது. ஸ்பானிஷ் மொழியில் எல் நினியோ என்றால் பாலகன் ஏசு என்று பொருள். ஏன்? பெரு நாட்டின் கடல் சார்ந்த மக்கள் மீன் விளைச்சலை நம்பியே வாழ்கின்றனர். கிறிஸ்துமஸ்க்கு முன்னால் எல் நினியோ நீரோட்டம் அக்கரைகளுக்கு வந்து சேரும் இந்த வெப்பமாற்றத்தைத் தாங்காத மீன்கள் கடலின் ஆழத்திற்கும் பிற திசைகளுக்கும் சென்றுவிடும். எனவே மீன் சாகுபடி அங்கு நின்று போகும். எனவே ஏசு பாலகன் வரும் நேரமிது என்பதைக் குறிக்க இந்த நீரோட்டத்தை எல் நினியோ என்றழைத்தனர். தென் அமெரிக்காவில் தோன்றிய முதல் தேவாலயத்தைக் கண்ணுறும் வாய்ப்பு "பாய்த்தா" எனும் பெரு நாட்டுக் கிராமத்தில் கிடைத்தது!கடலின் வளத்தைச் சேதப்படுத்தாமல் எப்படி நித்ய சாகுபடி செய்வது என்பதே இன்றையக் கடலியல் ஆய்வு. எப்படி நமது நடவடிக்கைகள் கடலைப் பாதிக்கிறது? அதை எப்படி அளந்து அறிவது? மண்ணில் பல உயிரினங்களை பூண்டோடு அழித்துவிட்டோம். அதுபோல் கடற் சாகுபடி மூலம் மீன் இனங்களையும் அழித்து விட்டோமா? அவ்வினங்கள் சுய மீள்ச்சி பெறும் முன் அவைகளைச் சாகுபடி செய்துவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன? போன்ற பல கேள்விகள்.

உதாரணமாக கொரிய, ஜப்பான் போன்ற நாடுகளில் ஜெல்லி மீன் என்பது பெருந்தொல்லையாகிவிட்டது. ஏன் திடீரென்று இவ்வினம் பெருகிவிட்டது? மீன்களை கொள்மேற் சாகுபடி செய்துவிடும் போது மீன்கள் செய்துவந்த உயிரியல் பணியை நிரப்பஜெல்லி மீன்கள் வருகின்றன. அல்லது அதைக் கட்டுப்படுத்தும் காரணி இல்லாததால் அவை பெருகிவிடுகின்றன என்பது போல் ஆய்வுகள் காரணங்களைச் சுட்டுகின்றன. எனவே system's approach to ocean management என்பது புதிய துறை! எப்படி ஒன்றோடொன்று தொடர்புடையன, அவைகளை எப்படிப் புரிந்து கொள்வது, எப்படி அளந்து நெறிப்படுத்துவது இப்படிப் பல கூறுகள் கொண்ட துறை. அடுத்த கூட்டத்தொடர் கேனடாவிலுள்ள வாங்கூவர் எனும் நகரில். அது போது இத்துறையை உள்வாங்கிக் கொள்ள ஒரு பட்டறை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மூர்த்தியும் கீர்த்தியும்!

தமிழில் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது! என்பார்கள். உண்மைதானே! உருவத்தில் சிறிதாக வாமனன் வருகிறான். தன் பிஞ்சுக்கால்களால் மூன்றடி கேட்கின்றான். இது ஒரு யாசகமா? என்றெண்ணி மாபலி கொடுக்க, இவன் தன் ஆட்சியை சர்வ லோகங்களுக்கும் பரப்பிவிடுகிறான். இதுதான் பாயிண்ட்.

அன்றைய கிரேக்கம், ஏதென்ஸ் நகரம் அளவில் மிகச்சிறியன. ஆயினும் கிரேக்கத்தின் தாக்கம் எகிப்து, இத்தாலி, ஐரோப்பாவென பரவலாக இருந்தது. கலை என்று பார்க்கும் போது நமது புத்தருக்கு சுருள் முடி வழங்கியது கிரேக்கக் கலைஞர்களே! இன்றைய ஆசியாவில் சிங்கப்பூர், ஹாங்க்காங்க், தைவான் போன்ற நாடுகள் சிறியனவாயினும் அதன் பொருளாதாரத் தாக்கம் அதிகம்.

1500 தொடக்கம் 1900 வரையிலான சரித்திரத்தைக் கண்டால் இத்துணூண்டு இங்கிலாந்து, நெதர்லாந்து (டச்சுக்காரர்கள்), போர்ச்சுகல் இவர்கள் உலகையே ஆளவில்லையா?

ஆனாலும் உலகில் பெரிய, பெரிய நாடுகள் உள்ளன! உலகின் எட்டுப் பெரிய நாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன:

AUSTRALIA
Land Area: 7,686,850 km2
Population 2007:20,434,176
Projected Population 2050:28,041,000
Arable Land: 50,304,000 ha

BRAZIL
Land Area: 8,511,965 km2
Population 2007:190,010,647
Projected Population 2050:254,085,000
Arable Land: 57,640,000 ha

CANADA
Land Area: 9,984,670 km2
Population 2007:33,390,141
Projected Population 2050:42,754,000
Arable Land: 45,810,00 ha

CHINA
Land Area: 9,596,960 km2
Population 2007:1,321,851,888
Projected Population 2050:1,408,846,000
Arable Land: 137,124,000 ha

EUROPEAN UNION
Land Area: 4,324,782 km2
Population 2007:490,426,060
Projected Population 2050:664,183,000
Arable Land: N/A

INDIA
Land Area: 3,287,590 km2
Population 2007:1,129,866,154
Projected Population 2050:1,658,270,000
Arable Land: 160,555,000 ha

RUSSIA
Land Area: 17,075,200 km2
Population 2007:141,377,752
Projected Population 2050:107,832,000
Arable Land: 124,374,000 ha

UNITED STATES
Land Area (square kilometers): 9,826,630
Population 2007:301,139,947
Projected Population 2050:402,415,000
Arable Land: 176,018,000 ha

இருசியா மிகப்பெரிய நாடுதான். உலகை தன் கைக்குள் கொண்டு வர வேண்டுமென ஆசைப்பட்ட நாடுதான். ஆனால் "சைபீரியாவின் சாபம்" என்று சொல்லுகின்ற வண்ணம் பாதி நிலப்பரப்பு பெர்மா புரோஸ்ட் என்று சொல்லக்கூடிய பனியில். மக்கள் தொகையும் அதிகமில்லை, அது கூடுவதாகவும் தெரியவில்லை. எனவே இதன் வல்லமையை இப்போதைக்கு ஒதுக்கிவிடுவோம்.அடுத்துக் கேனடாவைப் பார்ப்போம். இங்கும் இதே கதைதான், பாதிக்கு மேல் பனி மூடிய பிரதேசம்! அதனுடைய ஜனத்தொகையும் அதிகமில்லை. கூடுவதாயிருந்தால் புலம்பெயர்ந்த நம்மவர் கூட்டினாலுண்டு.

ஆஸ்திரேலியாவிலோ பாதிக்கு மேல் "இங்கே மனுஷன் இருப்பானா?" என்று சொல்லும்படியான பாலை. ஆஸ்திரேலியர்களை "விளிம்பு நிலை மாந்தர்" எனலாம் :-) ஏனெனில் இவர்கள் வாழ்வது ஆஸ்திரேலியாவின் விளிம்பில்தானே!

ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் எனும்போது எதைக் கணக்கில் கொள்வது என்பது சிக்கல்? முதலில் சேர்ந்த 6 நாடுகளா? இல்லை பின்னால் 18 ஆகி இப்போது 23 ஆகியிருக்கும் நாடுகளையும் சேர்ப்பதா? என்கின்ற கேள்வி? சில ஐரோப்பிய நாடுகளில் ஜனத்தொகை சரியத்தொடங்கியுள்ளது. உணவு என்று கொண்டால் தன்னிறைவு தெரிகிறது. சில பகுதிகளில் தேவைக்கு அதிகமே விளைகிறது. பொதுவாகப் பார்த்தால் ஐரோப்பா பிழைத்துவிடும் என்று தோன்றுகிறது. ஹிட்லர் போன்ற அசுரர்களோ, இல்லை உலகப்போரில் மூக்கை நுழைப்பது போன்ற அரசியல் பிழைகள் ஏற்படாமல் இருக்கும் வரை இந்த ஆரூடம் சரிப்படும். கீல் பல்கலைக் கழகத்தில் என் சகா சொல்வார், கடந்த 50 ஆண்டுகளில்தான் பிரான்சும், ஜெர்மனியும் மோதிக்கொள்ளவில்லையென்று. சங்ககாலம் தொட்டு நம்மவர்கள் மோதிக்கொள்வது நினைவிற்கு வருகிறது. இவன் மதுரை அழித்து மதுராந்தகம் என்று பெயர் சூட்டுவான். அவன் மீண்டெழுந்து இவன் ஊரை அழிப்பான். இப்படியே தங்களை அழித்துக் கொள்வார்கள்.

பிரேசில் ஒரு தூங்கும் யானை! மூன்றாம் உலக நாடு. ஏழைகள் அதிகமுள்ள நாடு. சூழல் பாதுகாப்பின்மை! இவ்வளவு இருந்தும் நில அளவு, மக்கள் தொகை, தீரபூமி (விவசாயத்தன்மை கொண்ட நிலம்) என்று முக்காலி இங்கு நிலையாக நிற்கிறது. நல்ல தீர்க்கமான அரசியல் அமைந்தால் இந்நாடு பிழைத்துக் கொள்ளும்!

அமெரிக்க ஐக்கிய நாடுகள். 70 களில் உலகின் பார்வையாக, எதிர்பார்ப்பாக, கனவாக இருந்த இந்த நாடு அனாவசியமாக வெளியூர் விவகாரங்களில் தலையிட்டு இன்று முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு நிற்கிறது. மேற்சொன்ன முக்காலி இங்கு மெலிதாக ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. பொருளாதார பூதமென இருந்த அமெரிக்கா ஆசியாவின் வீம்பியெழும் முன்னேற்றத்தின் முன் தலை குனிந்து நிற்கிறது. தனது படைபலம் கொண்டு அங்கெல்லாம் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறது. உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் ஜப்பானின் ஒகினாவா, கொரியாவின் சோல் போன்ற இடங்களில் அமெரிக்க தளவாட, இராணுவக் குவிப்பு என்பது நடந்து கொண்டே இருக்கிறது. சோல் நகரில் மட்டும் 40,000 அமெரிக்கச் சிப்பாய்கள் உள்ளனர்! அமெரிக்கா தொடர்ந்து முட்டாள்தனமான அரசியலில் ஈடுபட்டால் "உலகின் காவல்காரன்" என்று நினைக்கும் நினைப்பு வீண் கனவாகவே போகும். ஆயினும் அதன் மக்கள் தொகையைப் பார்க்கும் போதும், அதன் நீர், நில வளத்தைப் பார்க்கும் போதும் ஐரோப்பாவிற்குச் சொன்ன ஆரூடத்தையே இதற்கும் சொல்லலாம்!

ஆசிய ஜோதிகளான இந்தியாவையும், சீனாவையும் காண்போம். பெரிய நாடுகள்தான். நில வளம், நீர் வளம் கொண்ட நாடுகள். ஆனால் உலகின் 40% மக்கள் இங்கு வாழ்கிறார்கள். மக்கள் தொகை குறைவதாய் தெரியவில்லை. விவசாயத்திற்கான நிலம் குறைந்து கொண்டு வருகிறது. மக்கள் பெருக்கத்தை சமாளிக்க வயக்காட்டை பிளாட் போட்டு விற்பது நமக்குத் தெரிந்ததுதானே! இந்த நாடுகளின் பெரிய வளம், மனித வளம்தான். ஆனால் அதைப் பெரும் பாரமாகவே காண்கின்றனர் மக்கள். இந்திய அரசியல் குழப்பத்தைப் பற்றி ஊரே அறியும்! எந்த அரசியல் கட்சிகளும் சூழல் பாதுகாப்பு என்பதை அதன் அரசியல் பிரகடனங்களில் சேர்த்துக் கொள்வதே இல்லை. சீனாவின் அரசியலோ இன்னும் குழப்பமாக உள்ளது. அது என்ன கம்யூனிஸ்ட் நாடுதானா? ஷாங்காய் போய் பார்த்தால் அப்படித்தெரியவில்லையே? ஹாங்காங் கூட இப்போது சைனாதான்!

இந்த நாடுகளின் ஒரே நம்பிக்கை அடிமட்டத்திலிருந்து விழித்துக் கொள்ளப் போகும் மக்களின் சக்தி. மேல் மட்டத்திலிருந்து அரசுகள் செய்யும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருந்தால் ஆடும் முக்காலியில் நிலையாக உட்கார முயலும் முயற்சிதான்! மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் இருக்கின்ற வளங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று அறிந்து கொள்ள வேண்டும். நதி நீர்ப்பங்கீடு போன்ற அல்பமான அரசியல் செய்யாமல், பாரதி சொன்னது போல் காவிரியையும், கங்கையும் இணைக்க வேண்டும். அப்துல் கலாம் சொல்வது போல் நாளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல பழக்கங்கள் கற்றுத்தர வேண்டும். தீர்க்கமான தொலை நோக்கு என்றால் என்னவென்று சொல்லித்தர வேண்டும். நாளைய உலகு அவர்களுடையது. அதை சீர் செய்து வாழ வேண்டியது அவர்கள் கடமை என்று உணர்த்த வேண்டும். படித்த, நேர்மையான அரசியல்வாதிகளை அவர்களிடமிருந்து உருவாக்க வேண்டும். அப்போதுதான் 21ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு எனும் ஆரூடம் பலிக்கும்.

பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!


மகாகவி பாரதி.

(விமானப் பயணத்தில் படித்த செய்தியின் விரிவு)