வேறொரு மனவெளி - 1

சிறுகதை உருக்கொண்டு, வெளிப்பட்டு, பரவி நின்றவுடன் அது தன்னளவில் பயனளித்து விடுகிறது. ஆயின் அதன் முழுப்பயனுக்கு கதாசிரியர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வாசிக்கும் வாசகனைப் பொறுத்து, அவன் இதுவரை தன்னுள்ளே கொண்டுள்ள அனுபவங்களைப் பொறுத்து கதையின் பலாபலன்கள் அமையும். எனவே கதைகளைத் தராசில் இட்டு அளக்கமுடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பலன். அது பிரதி, ஆசிரியன், வாசகன் என்ற முக்கோணத்தில் அடங்கிவிடுகிறது. எதற்கு இப்படி நீட்டி, முழக்கிச் சொல்கிறேன் என்றால், நான் இக்கதைகளை தராசிலிட வரவில்லை. ஆயின், வாசகன் என்ற அளவில் அக்கதைகள் என்னுள் எழுப்பிய எண்ண அலைகளை உங்களுடன் பங்குபோட வந்துள்ளேன்.

நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு 20 வருட இடைவெளியில் போய் வரும் வாய்ப்புக் கிடைத்தது. காரில் போய் இறங்கலாமென நினைத்துப் போனது தவறாகப் போய் விட்டது. நான் ஓடி விளையாடிய "பெரிய" தெரு, சுருங்கிப் போயிருந்தது. முதலில் கணக்குப் பண்ணாமல் தாண்டிப் போய்விட்டேன். குழந்தையில் விளையாடிய "ஏறமுடியாத" மண்டபம், இப்போது என்னுயரத்திற்கு நின்றது. ஓடி, ஓடிக் களைத்துப் போகும் இரட்டைத் தெரு ஒரு வளைவில் வந்து, முடிந்து விட்டது இப்போது. என்ன மாற்றம்? தெரு சுருங்கிவிட்டதா என்ன? இல்லை என் பரிமாணங்கள் மாறிவிட்டன! அன்று நான் உலகைப் பார்த்த பரிமாணம் வேறு, இன்று பெரிய ஆளாகி அதையே பார்க்கும் பரிமாணம் வேறு. இதை மிக அழகாக ஆவணப்படமெல்லாம் எடுத்து இருக்கிறார்கள் வெளிநாட்டில். அன்று கண்ட உலகம், அவை தந்த பாதிப்பு, அப்போது எழுந்த மனப்பதிவுகள், அப்போதைய புரிதல் என்பவையெல்லாம் அப்பரிமாணத்தைச் சேர்ந்தவை. அதை ஒரு கனவுத்தன்மையுடன் இன்று அசைபோட முடியுமே தவிர, அப்பரிமாணத்திற்குள் மீண்டும் போகமுடியாது.

ஒரு மனிதனுக்குள்ளே இப்படி இன்னொரு வாழ்வு முறை ஒட்டிக்கொண்டிருக்கும் போது, ஆண் பார்வை, பெண் பார்வை என்பது எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். இங்குள்ள கதைகளெல்லாம் பெண்கள் எழுதியவை. சில கதைகள் பெண்களால் மட்டுமே சொல்ல முடியும் என்று வருகிற கதைகள். அம்மா, அக்கா, தங்கை என்ற உறவுகளில் வளர்ந்துவிட்ட ஆண்களுக்கு இப்பார்வை, இப்புரிதல் கொஞ்சம் அணுக்கமாய் இருக்கலாம். ஆயினும், "அம்மாவுக்குள் இப்படி ஒரு மனுஷி இருப்பதை, அம்மாவை ஒரு பெண்ணாகக் கூட நினைக்காத தன்னையும், அப்பாவையும் ஒரு கணம் நினைத்தான்" என்று பிதாமகன் எனும் கதையில் வரும் முரளி எண்ணுவது போல் நாம் ஆகிவிடக்கூடாது. பெண் எழுத்து என்பது உண்மை. அதைப் புரிந்து பழகிக்கொள்ள இக்கதைகள் நிச்சயம் உதவும்.அடுத்து இக்கதைகள் பேசும் கதைக்களன் வேறு. அது இந்தியா அல்ல. சிங்கப்பூர். சிங்கப்பூர் ஆசியாவில் வளர்ச்சியடைந்த ஒரு நாடு. பல்லின மக்கள் கூட்டாக, ஒற்றுமையாக வாழும் நாடு. தேனீக்கள் போல் எல்லோரும் சுறு, சுறுப்பாக வாழும் நாடு. தமிழ், மலாய், சீனம் எனும் மும்மொழி முக்கியமாய்ப் புழங்கும் நாடு. இந்த நாடு தரும் வாழ்வில் ஊறித்திளைத்து பின் அதன் பாதிப்பில் எழுந்திருக்கும் கதைகள் இவை. எனவே இது தமிழ் வாசகனுக்கு ஒரு புது வாசிப்பைத்தரும். நல்லவேளை தோப்பில் முகம்மது மீரான் கதைகள் போல் அநுபந்தம் போட்டு அர்த்தம் சொல்ல வேண்டிய அளவிற்கு புதுச் சொற்கள் இல்லையெனினும், அவசரமாய் வாசித்து முடித்து விடக்கூடிய கதைகள் இல்லை. கதையின் அடர்த்தி அதற்குக் காரணமெனினும், பல புதிய சொற்கள் கொஞ்சம் நம்மை நிற்க வைக்கத்தான் செய்கின்றன.

பாலு மணிமாறன், தன் பெயருக்கு ஏற்றபடி சிங்கைப் பத்திரிக்கைகளில் வந்து போன மணி, மணியான கதைகளை இத்தொகுப்பில் தொடுத்து இருக்கிறார். எனவே ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை. ஆயினும், ஒரு தமிழ் வாசகனுக்கு இதை வாசித்து முடித்தவுடன் அவர்களின் பர, பரப்பான வாழ்வு கண் முன்னே கொஞ்ச நேரம் நிற்காமல் போவதில்லை. அதுவே பல கதைகளின் கருப்பொருளாகிப் போனதே காரணம்.

0 பின்னூட்டங்கள்: