வேறொரு மனவெளி - 2

பெண்களின் கதைகள் என்பதால் உறவு இங்கு பிரதானப்படுகிறது. உறவுப் பிரச்சனைகள் பல கதைகளின் கருப்பொருளாகின்றன. பெண்மை உணர்வை ஆண்களால் ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் மரபியல் அமைப்பின் படி, ஒரு ஆண் என்பவன் "பாதிப் பெண்". இதனால்தானோ என்னவோ, வித்யா உபாசகர்கள், அன்பே வடிவான சமயப் பெரியவர்கள் தோற்றத்தில் பெண் வடிவில் தோன்றுகின்றனர். ஆயினும், எல்லா ஆண்களுக்கும் இந்த மெல்லிய உணர்வு தலை தூக்கி நிற்பதில்லை. அந்த நோக்கில் பார்த்தால் பல கதைகளில் இழையோடும் உணர்வுகள் பெண்களால் மட்டுமே சட்டென கிரகிக்கக்கூடியவை என்று தோன்றும். உதாரணமாக, மலர்விழி இளங்கோவனின் "புன்னகை என்ன விலை?" எனும் கதை சுத்தமான பெண் எழுத்து என்று வகைப்படுத்தக் கூடியது. அதில் செடியை வெட்டும் போது மலர்கள் சிதறிப் போவதைக் கண்டு பதறுகிறாள் கதாநாயகி. பூனையின் மேல் நீர் விட்டு தவிக்க விடும் போது தவிக்கிறாள். இயல்பான தாய்மை உணர்வு பேசும் இக்கதை இறுதியில் ஒரு ஆணும் இந்த மென்மை நிலையை அடைய முடியும் என்று சுட்டுகிறது. இதே போல் மிக, மிக லாவகமாக ஒரு முதியவரின் உள்ளுணர்ச்சிகளை ஒரு நாட்குறிப்பேடு போல் பதிய வைக்கிறது ரம்யா நாகேஸ்வரரின் "முகவரிப் புத்தகம்" எனும் கதை. ஜெயந்தி சங்கரின் "நுடம்" ஒரு தேர்ந்த கதை சொல்லியின் வாக்கில் ஒரு சிறு பெண்ணின் பிரச்சனையைப் பேசுகிறது. இது தாய்-சேய் உறவு பற்றிய கதை. ஜோசப்பின் ஜோசப்பின் "அம்மாவுக்கு வயசாச்சு" கதை கூட தாய்-சேய் உறவு பற்றியதுதான். ஆயினும் அது தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுகிறது.

"பார்வை" எனும் கதையை ஒரு பெண்ணால் மட்டுமே பேச முடியும். அதுவும் ஒரு இந்தியப் பெண்ணால் மட்டுமே பேசமுடியும். ஏனெனில் இந்திய ஆண்கள் வித்தியாசமானவர்கள். நடமாடும் பெண்களெல்லாம் தன் சுகத்திற்கு வந்தவர்கள் என்பது போல் பார்க்கும் ஒரு குணம் அவர்களுக்குண்டு. இந்தியா சென்று திரும்பிய என் ஜெர்மன் நண்பர் (பெண்) சொன்னார், தன் பயணத்தின் ஒரு பொழுதில் ஒரு இந்திய ஆண் அவளை கண்களால் கற்பழித்தான் என்றும், தாங்கமுடியாத ஒரு கட்டத்தில் அவள் கூக்குரலிட்டாள் என்றும். ஏனோ நம் ஆண்களுக்கு அப்படியொரு வியாதி. ஜப்பானியக், கொரிய ஆண், பெண்களை என்றில்லை, ஆண்களையே கண்ணுக்குக் கண் பார்ப்பதில்லை. வியட்நாம், சீனா கூட இப்படித்தான். எனவே அங்கு ஒரு பெண் தனிமையில் "பார்வைக் கற்பழிப்பிலிருந்து" மீளமுடியும். ஆனால் தமிழ் ஆண்கள் வாழும் பகுதியில் முடியாது. ஆனாலும், ஆண்கள் கோபித்துக் கொள்ளப்போகிறார்களே என்று ஆசிரியர் எல்லாப் பார்வையும் காமப்பார்வையல்ல என்று முடித்து, பழியைப் பெண் மீதே கடைசியில் சுமத்தி விடுகிறார். இது சமூகப் பதப்படுத்தலாலா என்று நோக்க வேண்டும்.பெண் என்பவள் தாய் மட்டுமல்லவே. அதுவும் 21ம் நூற்றாண்டுப் பெண், ஒரு தேர்ந்த அறிவாளி, ஆண்களைப் போல் வேலை செய்பவள், ஆணின் சமூக பாத்திரத்தை வரித்துக் கொண்ட பின்னும் ஒரு தாயாக, ஒரு தோழியாக அவளால் வலம் வரமுடிகிறது. அத்தகைய பெண்கள் பேசும் பெண்ணியல் வாதமும் கதைக்களனாகின்றன. சுதந்திரம் என்றால் என்னவென்று விசாரிக்கப் போய் தன்னையே காதலிக்கத்தொடங்கும் சௌளம்யாவின் "நான் என்னைக் காதலிக்கிறேன்" என்ற கதை பின்நவீனத்துவ வாழ்வியல் தாக்கம் கொண்ட கதை. அதே போல் ஆணுக்குள்ள சகல உரிமையும் பெண்ணிற்கு உண்டு என்று சுட்டும் இன்னொரு கதை "முகமூடி" என்ற சூர்யரத்னாவின் கதை. இக்கதைகளை நகர்ப்புற வாழ்வியல் சார்ந்த ஒரு அறிவுஜீவப் பின்புலம் இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது. இரண்டுமே பட்டவர்த்தனமான கதைகள். பாரதி பேசும் "புதுமைப் பெண்" எழுதிய கதைகள்.

இவை போக சிங்கப்பூருக்கென்றே உள்ள சில குண நலன்களைப் பற்றிப் பேசும் சில கதைகளுண்டு. சிங்கப்பூர் என்பது சீன, இந்தியக் குடியேறிகளால், அங்கு வாழ்ந்த மலாய் மக்களுடன் இயைந்து உருவாக்கப்பட்ட நாடு. எனவே நல்லெண்ணக் கொள்கை பிடிப்புள்ள நாடு அது. சிங்கப்பூர் சந்தோசாத் தீவில் மலையேற்று வண்டியில் மேலே ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு இங்கிலாந்து மாது என்னை விளித்துச் சொன்னதை என்னால் என்றும் மறக்கவியலாது. "பல இன மக்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், ஆதரவுடனும், சகிப்புத்தன்மையுடன் எப்படி வாழ வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டும் நாடு சிங்கப்பூர்" என்றார் அவர். அதுதான் எவ்வளவு உண்மை! உலகம் நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜிக்கல் ரியலிசம் என்றெல்லாம் பேசி மாறிக்கொண்டு வந்தாலும் அன்பு, பாசம், நட்பு என்பதை நம்மால் உதறித் தள்ளிவிடவா முடிகிறது? என்ன கொஞ்சம் பழைய கதை போல், 60 களில் வந்த சினிமாப் படம் போல் அவை தோற்றம் தந்தாலும், அக்குணங்களே இன்று அந்த நாட்டை நல்வழியில் செலுத்திக் கொண்டு இருக்கிறது. இவை பற்றிப் பேசும் கதைகளே, நவமணி சுந்தரத்தின் "அடுக்குமாடி அநாதைகள்", கண்ணம்மாவின் "எண்ணங்களின் இடைவெளி", நூர்ஜஹான் சுலைமானின் "நட்பு" பிரேமா சத்யன் ராஜூவின் "சீன மூதாட்டியின் கதவுகள்" எனும் கதைகள்.

சிங்கப்பூர் எழுத்தாளர்களின் கதைகள் பற்றிப் பேசும் போது கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதுவும் சிங்கப்பூர் பெண்கள் கதைகளென்றால் இன்னும் கூட கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. தமிழ் நாட்டின் வாலுத்தனமெல்லாம் சிங்கப்பூரில் கூடாது என்று எச்சரிக்கும் கதை கமலாதேவி அரவிந்தனின் "ஞயம்பட உரை". கூரறுக்கும் பாணியை அறிவியலே ஒதுக்கி விட்டு "பொதுமைக் கண்ணோட்டத்தில்/முழுமைக் கண்ணோட்டத்தில்" அறிவியலை நோக்க வேண்டுமென்று மாறிவிட்ட காலக்கட்டத்தில் தமிழகத்தின் அறிவுஜீவிகள் இவர்களுக்கு என்ன எழுதத் தெரியுமென்ற பாணியில் சிங்கப்பூர் வந்து விருந்துண்டு விட்டு சொல்லிப்போகும் மனோபாவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறது "ஞயம்பட உரை". உண்மையைச் சொல்லப்போனால் தமிழைத் தேசிய மொழியாக்கி, தமிழில் எழுதுவோருக்கு ஊக்கப்பரிசளித்து, தமிழகத்தின் அறிஞர் பெருமக்களை அடிக்கடி வரவழைத்து தமிழ் வளர்க்க பாடுபடுகிறது சிங்கப்பூர். இக்கதைகள் மீண்டும், மீண்டும் சொல்வது போல் சிங்கப்பூரிலிருந்து கொண்டு "எமக்குத்தொழில் கவிதை" என்று இறுமாப்புடன் இருந்துவிட முடியாது. அங்கு எதிரோட்டம் போட்டு, சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும். ஒரு தொழில் என்றில்லாமல் பல தொழில்களில் ஈடுபட்டு பொருளீட்ட வேண்டும். இதற்கிடையில் தமிழையும் வளர்க்க வேண்டும். எனவே அவர்களின் பன்முகத்தன்மையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, கமலாதேவி சொல்வது போல் அங்குள்ள பலர் பன்மொழி அறிவுகொண்டு பல கலைகளில் திறமையுடையவர்களாக உள்ளனர். இப்படி இந்தியாவில் காண்பதரிது. எனவே திணைவகுத்த பண்டைத்தமிழன் போல் சிங்கப்பூர் கதைகள் சிங்கப்பூர் திணையின் குண நலன்களையே பிரதிபலிக்கும் என்று கொள்ள வேண்டும். அங்கு தமிழக எண்ணவோட்டத்தைக் காணவியலாது.

இந்தியர்களின் ஆற்றாமைையயும் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் எதிர்பார்ப்பது சிங்கப்பூர்த் திணையை முற்றும் முழுதுமாக பிரதிபலிக்கும் ஒரு தீவிர படைப்பை! அதாவது, இக்கதைகள் அனைத்தும் (பொழப்பு தவிர) மத்திம வர்க்கத்தின் கதைகள். சிங்கப்பூரின் ஏழ்மை பற்றியோ, அங்குள்ள கடைநிலை, விளிம்பு நிலை மாந்தர் பற்றியோ தீவிரமாகப் பேசுவதில்லை. காரணம் இவ்வெழுத்தின் சொந்தக்காரர்கள் சமீபத்தில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கல்யாண நிமித்தம் வந்து குடியேறியவர்கள். அவர்களுக்கே இன்னும் சிங்கப்பூர் முழுவதும் பிடிபடாத போது, அதன் வேர்ப்பிரச்சனைகளை எப்படிக் கண்டு எழுத முடியும்? ஆனாலும், இவர்களின் காத்திரமான எழுத்து, பார்வை இவை இக்கருப்பொருட்கள் மேலும் கூடிய விரைவில் பாயும் என்று நம்பலாம்.

1 பின்னூட்டங்கள்:

நா.கண்ணன் 5/26/2008 01:31:00 PM

பேரா.ரெ.கா:

"வேறொரு மனவெளி" படித்துவிட்டேன். கதைகளை விட உங்கள் முன்னுரையே மிகவும் ஆர்வமூட்டுவதாக இருந்தது.


எழுத்தாளர்களை புதிய வரவுகள் என்றும் பழைய வரவுகள் என்றும் பிரித்திருக்கிறார்கள். புதிய வரவுகளின் படைப்புக்களே இந்த நூலைத் தூக்கிப் பிடிக்கின்றன, இந்த உண்மையை நீங்கள் மிக இதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.


உங்களுடைய கருத்துக்கள்தாம் பல கதைகளுக்கு ஒளிபாய்ச்சி நன்கு விளங்க வைக்கின்றன.


நூலின் பிற்பகுதியில் உள்ள கலந்துரையாடல்கள் தொகுப்பிலும் நல்ல கருத்துக்கள் சிங்கப்பூரர்களாலும் மலேசியர்களினாலும் சொல்லப் பட்டிருக்கின்றன. கருத்துச் சொல்லியவர்கள் தமிழ்ச் சிறுகதையின் உலகளாவிய தன்மைகளை உணர்ந்தவர்களாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.


இந்தத் தொகுப்பை உலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.


ரெ.கா.