வேறொரு மனவெளி - 3

இத்தொகுப்பில் தனித்து நிற்கும் கதை சிவஸ்ரீயின் "பொழப்பு". அது ஒன்றுதான் கடைநிலை வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. அதைக்கூட மத்திமவர்க்கக் குரலாக இல்லாமல், கடைநிலை ஊழியரின் பேச்சாகவே எடுத்துச் சென்றிருப்பது எழுத்தாளரின் திறமையையும், அவரின் ஆளுமையையும் காட்டுகிறது.

பாலியல் பற்றி இத்தொகுப்பு நிறையவே பேசுகிறது. பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்கும் பாலியல் சுதந்திரம், கல்யாணம் ஆன ஆண்களுக்கும் பெண்களுக்குமுள்ள சுதந்திரம் இப்படி. ஆயினும் தமிழினம் சார்ந்தே இக்கதைகளின் போக்கு இருக்கிறது. தமிழ்ச், சீன, மலாய் ஒட்டுறவுகள் பற்றி இத்தொகுப்பில் கதைகள் இல்லை. தமிழினம் உடல் சார்ந்த நிலைப்பாடுள்ள சமூகம். நமது பாரம்பரிய உடைகளிலிருந்து மீளாத்தன்மை இதனைப் பிரதிபலிக்கிறது. ஆனால் சீனச் சமூகம் இந்த சமூக "உடற்கட்டி"லிருந்து விடுபட்டுவிட்ட சமூகம். இதற்கு எதிர் நேர், மலாய் முஸ்லிம் சமூகம். இச்சமூகங்கள் உறவு கொள்ளும் போது ஒன்றின் தாக்கம் மற்றதில் எப்படிப் படிகிறது என்று அறிந்து கொள்வது சுவையாக அமையும்.

ஒரு வாசகன் என்ற அளவில் எனக்கு சுகமான வாசிப்பு அளித்தவை முகவரிப் புத்தகமும், பிதாமகனும். சித்ரா ரமேஷின் எழுத்து நெடுநாட்களுப்பிறகு ஏதோ தி.ஜானகிராமனின் கதையொன்றை வாசித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அறிவியல் பின்புலமுள்ள எனக்கு மாதங்கியின் "புரு" சுவாரசியமான வாசிப்பைத் தந்தது. அதுவொரு அறிவியல் நவீனம். ஆகஸ்டு 1981-ல் கணையாழியில் நான் எழுதியிருந்த "வருகிறது" எனும் அறிவியல் நவீனத்தின் சாயலில் அக்கதை அமைந்திருப்பது கூட என் ஈர்ப்பிற்குக் காரணமாக இருக்கலாம். மாதங்கி அவர்கள் அக்கதையை வாசித்திருக்க நியாயமில்லை. எதிர்காலத்திற்குப் போவோருக்கெல்லாம் "நனவிடை தோய்தல்" என்பது இயல்பாக வரும் பாவம் போலும்.இக்கதாசிரியர்களெல்லாம் தேர்ந்த படிப்பாளிகள், படைப்பாளிகள், பல்துறை நிபுணர்கள். இவர்களெல்லாம் கச்சை கட்டிக் கொண்டு தமிழ் எழுத வந்திருப்பது தமிழுக்கு நல்ல காலம் என்றே தோன்றுகிறது.

தூரக்கிழக்கில் வேலை பார்க்கும் எனக்கு வாரத்தில் ஏழுநாட்கள் போதுவதில்லை. இந்த வாழ்வுமுறையில் இலக்கியம் என்பது என்னிடமிருந்து விலகி வரும் போழ்தில் திரு.பாலு மணிமாறன் இக்கதைகளை வாசிக்குமாறு பணித்தது ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. கட்டாயத்தின் பேரிலாவது கதைகள் படிக்க முடிந்ததே! அவருக்கு நன்றி. இக்கதைகள் மூலம் என்னுலகிலிருந்து என்னைப் பிரித்து இப்பெண்ணாசிரியர்கள் அவர்களின் பல்வேறு உலகுகளைக் காட்டியதற்கு என் நன்றி.

இக்கதைகள் தமிழுக்கு வளம் சேர்க்கின்றன எனத்தனியாக நான் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் அவை தமிழ் வாசகனுக்கு இனிமையான வாசிப்பைத் தருகின்றன என்பதே இங்கு முக்கியம்.

(நா.கண்ணனின் புத்தக முகவுரை முற்றிற்று)

இப்புத்தகம் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்:

In India :
C-54, 1st Floor, Anna Nagar Plaza,
II Avenue,Anna Nagar,
Chennai 600 040

In Singapore:
BlK 325B, #14-655,
Sengkang Eastway,
Singapore

மின்னஞ்சல் தொடர்பிற்கு: தொகுப்பாசிரியர் பாலு மணிமாறண்

0 பின்னூட்டங்கள்: