நாராயண கவசம்

மனிதன் எவ்வளவு உடலியல் பிராணியோ அவ்வளவு உளவியல் பிராணியும் கூட. அதாவது மனிதனுக்கு உறைவிடமும், உணவும் கிடைத்துவிட்டால் போதும் வாழ்வு என்றில்லை. அது விலங்குகளுக்குச் சரி. மனிதனுக்கில்லை! இவன் ஒரு உளவியல் பிராணி. இவனுக்கு உள்ளம் என்று ஒன்றிருக்கிறது. அதற்கு இசை வேண்டும், கூத்து வேண்டும், சினிமா வேண்டும், சமீப காலங்களில் கணினியும் வேண்டும். கணினி இருந்தால் போதுமா? இணையத் தொடர்பு வேண்டும். அது மட்டுமிருந்தால் போதுமா? தமிழ்மணம் என்ற கூட்டமைப்பு, மின்னரங்கம் தேவை. அங்கு இவனால் மற்றவர்களுடன் கூடி அளவுலாவ முடிகிறது. நேரில் பார்ப்பது போன்ற அதே உணர்வு! அதே பாவம்! அதே உணர்வுகள்! இது எப்படி சாத்தியப்படுகிறது. விலங்களுக்கு மெய் உண்டு. கண்டால் அவை உண்ணும். ஆனால், அவைகளுக்கு மெய்நிகர் (விர்சுவல்) கிடையாது. அவைகளால் கணினியைக் கட்டிக்கொண்டு அழமுடியாது :-)

இந்த மெய்நிகர் எங்கு உருவாகிறது? எங்கு நிலைக்கிறது? அதற்கு பருண்மை உண்டா? எப்படிக் கண்டுபிடிப்பது? உடலின் எங்கோ இருப்பது போல் உணர்கிறோம். ஆனால் அது உடலில்தான் இருக்கிறதா என்றும் தெரிவதில்லை. செத்துப்போன ஒருவனிடம் கணினியைக் கையில் வைத்தாலும் இந்த மெய்நிகர் உணர்வு அவனுக்குத் தோன்றுவதில்லை. கண் இருந்தும் அவனால் காண முடிவதில்லை. மெய் இருந்தும் உணரமுடிவதில்லை. மெய் இருக்கிறது ஆனால் மெய்நிகர் உருவாவதில்லை. எனவே மெய்நிகர் என்பதை ஒரு மந்திர உணர்வு என்று சொல்வோமா? கண்ணில் தெரியாத காற்று இசையைக் கொண்டு வருகிறது. காது எதைக்கொண்டோ இசையை உணர்கிறது. ரசிக்கிறது. இவையெல்லாம் மந்திர உலகத்தின் செயல்பாடு என்று சொல்வோமா?

ஆக, மந்திர உலகம் ஒன்று இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. காணமுடிவதில்லை. இதையுணர்ந்துதான் திருவாய்மொழி இறைவனை "உணர்வின் மூர்த்தி" என்கிறது. உணர்விற்கு அவன் அதிபதி.

உடலுக்கு கவசம் தேவை. குளிர் காலத்தில் பனி தாக்காமல் இருக்க உடை உடுத்துகிறோம். அது கவசம். நமக்கொரு மந்திர உரு இருப்பது போலல்லவா நம் விசாரணை செல்கிறது? இந்த மந்திர உருதானோ உயிர் போனவுடன் நம் உடலை விட்டுப் போய்விடுகிறது?

ஆச்சார்ய ஹிருதயம் என்ற அற்புதமான நூலில் அழகிய மணவாள நாயனார் சொல்கிறார், உலகை நான்கு, நான்காகப் பிரிக்கலாமென்று. சதுர் யுகம், சதுர் வேதம், சதுர்ஜீவ வகைகள். முதல் இரண்டும் நமக்குத் தெரியும் மூன்றாவதாகச் சொல்வது? தேவ/அசுர கணங்கள், மனிதன் (bipedal), விலங்குகள் (tetrapedal), தாவரங்கள் என்று. இதன் அழகு என்னவென்றால் மனிதனை மற்றவற்றிலிருந்து பிரிப்பது அவனது நேர் மிகு நடையே. இதை மிக முக்கிய பரிணாம வளர்ச்சியென்று அறிஞர்கள் சொல்வர். இடர்கள் வரும் போது உடல் பலம் மட்டும் நம்மைக் காப்பதில்லை. மனோதிடமும் அவசியம். அதை வளர்த்தெடுக்கவே இந்த மந்திர கவசம்! இது ஆடை போன்ற பொருள் அல்ல. இது மனதிற்கான கவசம். இதைக் கேட்டாலோ, பாடினாலோ மனது உற்சாகமடைகிறது. உள்ள பயம் நீங்குகிறது.

நமக்குத் தெரிந்து அவ்வை இயற்றிய விநாயகர் அகவல், பாலதேவர் இயற்றிய கந்தர் சஷ்டி கவசம் போன்றவை பிரபலம். ஆனால், ஆதிப்பிரானான நாரணனின் பெயர் சொல்லும் நாரண கவசமும் உண்டு. ஆழ்வாராதிகள் அருளிச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பெரியாழ்வார், நம்மாழ்வார் போன்றோர். ஆனால் அவை நெஞ்சை உருக்கும் பாசுரங்களுடன் ஒன்றாக அமைந்துவிடுகின்றன. நாராயண கவசம் என்பது வடமொழியில் உண்டு. ஆயினும், விநாயகர் அகவல் போன்ற நாரண கவசம் இதுவரைத் தமிழில் உருவாகவில்லை. அக்குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார் வானமாமலை திருக்கோயில் மடத்தின் ஆஸ்தான வித்வான் திரு.வேங்கடகிருஷ்ணன். அற்புதமான கொஞ்சு தமிழ். ஆழ்வார்களின் அருளிச் செயல்களை உள்வாங்கிய நடை. திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான பாடகி திருமதி மணிகிருஷ்ணசாமி இதை சுத்தமான உச்சரிப்பில் பாடி வழங்கியிருக்கிறார்.

இனி நாரண கவசம் உங்கள் இல்லங்களில் ஒலிக்கட்டும். அதுவே உங்களை உங்கள் இடர்களிலிருந்து காக்கட்டும். நாராயண, நாராயண!!


காதல் கொண்டு கடல்வண்ணன் புராண
மோதினன் நாரணன் காப்பென் றுரைத்தனன்.

மணிமேகலை [சமயக் கணக்கர் தந்திறங்கொண்ட காதை]
சங்க காலம்.

11 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/07/2008 08:41:00 AM

கேட்டுக்கிட்டு இருக்கேன்.

நாராயணா நாராயணா......

நா.கண்ணன் 5/07/2008 08:47:00 AM

ரொம்ப அற்புதமா வந்திருக்கு துளசி. கவிதையும், இசையும் கொஞ்சிக் குலாவி...ஆகா!

துளசி கோபால் 5/07/2008 09:00:00 AM

இன்னிக்கு அட்சய திருதியை(யாமே)

ஒண்ணும் வாங்கிக்கலையேன்னு நினைச்சவளுக்கு இப்படிப் புண்ணியத்தை வாங்கிக்க வச்சதுக்கு நன்றி கண்ணன்.

மனசுக்குத் திருப்தியா இருக்கு.

வாழ்க பல்லாண்டு.

நா.கண்ணன் 5/07/2008 09:23:00 AM

அவன் இன்னருள் துளசி! வாழ்க!

Anonymous 5/08/2008 02:29:00 AM

Thank you very much.

Ramya

குமரன் (Kumaran) 5/09/2008 01:22:00 AM

வடமொழியில் 'நாராயண கவசம்' படித்திருக்கிறேன் ஐயா. இன்று தமிழிலும் அதனைக் கேட்கிறேன். நன்றிகள் ஐயா.

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/09/2008 01:32:00 PM

மனிதனைத் தவிர மற்ற பிறவி எதற்கும் மெய்நிகர் இல்லையா கண்ணன் சார்?
விலங்குகள் அதனதன் வசதிக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் தொடர்பு உத்திகள், அவற்றின் பார்வையில் அவற்றுக்கு மெய்நிகர் இல்லையா?

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/09/2008 01:35:00 PM

கவசம் மிகவும் அருமை!
வடமொழியில் இருந்து தமிழுக்கு இயல்பாய் ஆகி வந்துள்ளது!

இசை இன்பம் வலைப்பூவில் இது போல் தியாகராஜ கீர்த்தனைகளை மெட்டு குலையாமல் ஆக்கி, தியாகராஜரைத் தமிழில் அணைக்கும் முயற்சிகளாக செய்து கொண்டு வருகிறோம் கண்ணன் சார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/09/2008 01:39:00 PM

விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!
யோக நிலைகளைக் காட்டும் அகவலில், மெய் நிலைகளைக் காக்க வேண்டி நேரிடையாக ஒரு வரியும் வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!
"காக்க" என்ற சொல்லோ, கவசம் என்ற சொல்லோ கூட ஒரு முறையும் பயிலவில்லை பாருங்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/09/2008 01:39:00 PM

விநாயகர் அகவல் கவச வகைகளில் வருமா தெரியவில்லை!
யோக நிலைகளைக் காட்டும் அகவலில், மெய் நிலைகளைக் காக்க வேண்டி நேரிடையாக ஒரு வரியும் வரவில்லை-ன்னே நினைக்கிறேன்!
"காக்க" என்ற சொல்லோ, கவசம் என்ற சொல்லோ கூட ஒரு முறையும் பயிலவில்லை பாருங்கள்!

நா.கண்ணன் 5/09/2008 01:48:00 PM

விலங்குகளின் மெய்நிகர்? ம்ம்ம்..நமக்கு எப்படி அவற்றின் மெய்நிகர் தெரியும்? நம் மெய்நிகரை நம் போல் உணர்வுள்ளோருக்கு காட்டமுடியும் (இப்ப நம்ம இரண்டுபேரும் உரையாடுதல் போல்). ஆனால் அவைகளால் முடியாதவரை எதுவும் ஊர்ஜிதமில்லை. பூனைகளும், நாய்களும் கனவு காண்பதாகப் படித்துள்ளேன்.

தியாகராஜரை தமிழ்ப் படுத்தி பாலமுரளி நிறையப் பாடியிருக்கிறாரே!

விநாயகர் அகவல் கவசம்தான். அது என்னைக் காத்திருக்கிறது!