வெங்காயச் சாகுபடி!

என்னடா! கடலே! கடலே!ன்னு எழுதிவிட்டு வெங்காயச் சாகுபடி பற்றி எழுதுகிறேனே என்று எண்ணுகிறீர்களா? புதன் கிழமை முழுவதும் ஆய்வகத்திற்கு அருகிலுள்ள வயக்காட்டில் வெங்காயம் பிடுங்கினேன்! என்ன இது? ஒரு பேராசிரியர் ஸ்தானத்தில் உள்ளவர் வயக்காட்டில் இறங்குவதா? எனக் கேட்கலாம். ஆனால், எங்கள் ஆய்வகம் இங்குள்ள விவசாயிகளுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. அதன் படி, நாங்கள் மச்சு வீட்டுக் குடித்தனக்காரர்களாக இருந்தாலும் குடிசை வாழ்வு எங்களுக்கு அந்நியமில்லை என்பதைக் காட்டுவது இதன் தாத்பரியம். உண்மையில் வேலை என்பதை வைத்து எப்படி மனிதர்களைப் பாகுபடுத்த முடியும்?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்


ஆய்வகத்தில் செய்வதும் வேலைதான். வயக்காட்டில் செய்வதும் வேலைதான் இல்லையா? ஆனால், படித்தவன் வயக்காட்டில் வேலை செய்து பழக வேண்டும். அப்போதுதான் அதன் அருமை புரியும்! நாங்களொன்றும் நாள் பூரா உழைக்கவில்லை. காலை பத்து மணிக்குப் போய் மாலை 4 மணிக்கு வந்துவிட்டோம். ஆனால் அந்த 5 மணி நேர வயக்காட்டு வேலையே பெண்டைக்கழட்டுவதாக உள்ளது! வேகாத வெய்யிலில் பொறுமையாக வெங்காயத்தைப் பிடுங்கி, பின் சீர் செய்து கட்டி அனுப்பும் வண்ணம் வைக்க வேண்டும் என்பது சின்ன வேலை அல்ல.

எப்போதும் எனக்கொரு ஆசையுண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்கிறார்போல் கிராமத்து விவசாயிகள் போல் வயக்காட்டில் வேலை செய்ய வேண்டும் என்பதே அந்த ஆசை! இந்தப் பரிசோதனை, ஆய்வுகளை ஓரங்கட்ட வேண்டுமென்று. ஆனால் அது எவ்வளவு கடினமென்று இன்று புரிந்தது. ஆச்சர்யம் என்னவெனில், நாங்கள், சுமார் 20 பேர் போகுமுன்பு அங்கு இரண்டு 70 வயதுக் கிழவிகளே அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் வந்த பின் அவர்களே மீண்டும் மிச்ச வேலைக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள் வலுவில், அதுவும் அந்த வயசு வலுவில் கால்வாசிக் கூட நமக்கில்லையே!அறுவடையாகும் வயல்!
வெங்காயம் புடுங்கும் நம்ம ஹீரோ!
20 கிலோ பைகளாக அறுவடை சாகுபடி!
இடையில் விவசாயிகளின் விருந்தோம்பல்!
வழியில் போவோர் வந்திறங்கி வெங்காயம் வாங்கிச் செல்லும் காட்சி. 20 கிலோ சுமார் 15 டாலர் விலை
அப்பாடா! என்று மீண்டும் ஆய்வக வாசலில்


இதை தாய்மார்கள் தின சமர்ப்பணம் என்று சொல்ல வேண்டும். அந்த இரண்டு பெண்கள் சளைக்காமல் வேலை செய்வதால் வாழ்வு இங்கு ருசிக்கிறது. இது போல் எத்தனை தாய்மார்கள் கொரியாவில். அதுவும் நம்ம ஊரில் கிழவி என்று ஒதுக்கிவிடும் பருவத்தில். கொஞ்சம் கூட வயதைப் பாராமல் வேலை செய்யும் இப்பெண்களைத் தெய்வம் என்றால் குறையோ?

17 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/08/2008 08:45:00 AM

வெவ்வேற அனுபவம் இருக்கறதுதானே வாழ்க்கையைப் பூராவும் அனுபவிச்சு வாழ்வதன் பொருள்.

விலை என்ன கொஞ்சம் கூடுதலாச் சொல்றிங்க? முனைவர்கள் அறுத்துக் கட்டுன மூட்டை என்றதாலா? ;-))))

நம்ம பக்கம் வெங்காய அறுவடைக் காலத்தில் நிலத்தைக் கிளறிப் போட்டுட்டு,
பிக் யுவர் ஓன் என்று பக்கெட்டுகளில் விக்கிறாங்க. நாம் போய் பொறுக்கிப் பக்கெட்டை நிரப்பிக்கலாம். கோபுரம் கும்மாச்சிக் கட்டி அதை கீழே சிதறவிடாமல் வைக்கும் சாமர்த்தியம் நமக்கெல்லாம் இப்பக் கைவந்த கலை ஆகியாச்சு:-)))

பக்கெட் 5 டாலர். பத்துகிலோ தேறும் தாராளமா.

படங்கள் சூப்பர்.

வயதானவர்கள் வேலை செய்வது சீனாவிலும் மிகுதிதான். ஆனால் கவனிச்சீங்களா..... நம்ம குஜ்ஜு பாய்களின் வியாபாரம் நடக்கும் கடைகளில்
தொண்ணூறுவயதுத் தாத்தாக்களும் கடையைக் கவனிச்சுக்கும் வேலையைச் செய்றாங்க. உண்மையான 'பனியாக்கள்'

பின்னூட்டம் நீண்டு போனதுக்கு oops...

SP.VR. SUBBIAH 5/08/2008 08:55:00 AM

எனக்குத் தெரிந்த பேராசிரியர் சொல்வார்:
கடவுள் மனிதனுக்கு அளித்த வரம் - வெங்காயம் & வெள்ளைபூண்டு

சின்ன வெங்காயம் மிகச் சிறந்து என்பார்கள்.

மனிதனின் சோம்பேறித்தனத்தால் அது மறைந்து கொண்டிருக்கிறது

அங்கே சின்ன வெங்காயம் உண்டா இல்லையா?

20 கிலோ ரூ.600:00 என்னும் போது அதிகமாகத் தெரிகிறது!

இங்கே இருபது கிலோ ரூ.200:00 மட்டுமே!

SP.VR. SUBBIAH 5/08/2008 08:56:00 AM

///விலை என்ன கொஞ்சம் கூடுதலாச் சொல்றிங்க? முனைவர்கள் அறுத்துக் கட்டுன மூட்டை என்றதாலா? ;-))))///

இப்படிக் கலாய்க்க துளசியக்காவினால் மட்டுமே முடியும்!

நா.கண்ணன் 5/08/2008 08:59:00 AM

துளசி:
//பிக் யுவர் ஓன் என்று பக்கெட்டுகளில் விக்கிறாங்க.//

இந்தியாவிற்கும் வந்து விட்டதா? இதன் லாபம் நேரடியாக விவசாயிக்குப் போகிறது.

நடுத்தரக் குடும்பங்களில் 60 வயது வந்துவிட்டால் கிழடு, கிழடுன்னு..அம்மா..இந்த சமூகப் புறக்கணிப்பு இருக்கிறதே. கொரிய விவசாயம் இவர்களை நம்பித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது!

நா.கண்ணன் 5/08/2008 09:01:00 AM

நண்பர்களே: விலை கூடுதலா? இங்கு விலைவாசி கொஞ்சம் கூடுதல்தான். ஜப்பான் இன்னும் மோசம். இங்கு சின்ன வெங்காயம் கிடையாது.

துளசி கோபால் 5/08/2008 09:04:00 AM

நான் சொல்லும் 'நம்ம பக்கம்' நியூஸின்னு வச்சுக்குங்க:-))))

Anonymous 5/08/2008 01:08:00 PM

மிகவும் சுவராசியமான பதிவு. விவசாய குடும்பத்தை சேர்ந்த எனக்கு, பிற நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை முறையினை தெரிந்து கொள்வது நெடுநாளைய விருப்பம். . நாம் நாட்டினை போல் படித்தவன் - நகரத்தான், படிக்காதவன் - விவசாயி என்பது போல் ஏற்றத்தாழ்வு தென் கொரியாவில் இருக்கிறதா ? அந்த மக்களின் வாழ்க்கை முறை. இதைப் பற்றியெல்லாம் உங்கள் அனுபவத்தை ஒரு பதிவு இடவேண்டுகிறேன். நன்றி.

- அருண்

கபீரன்பன் 5/08/2008 01:36:00 PM

//அங்கு இரண்டு 70 வயதுக் கிழவிகளே அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர் //

உடலுழைத்து பழக்கப் பட்டவர்களுக்கு அது இல்லாமல் போனால்தான் சங்கடம். எனக்கு தெரிந்த வயது 80க்கும் மேலான பெண்மணி மதுரையில் மகன் வீட்டிற்கு வந்தாலும் ஒரு நாளைக்கு மேல் தங்க மாட்டார். கிராமத்துக்கு ஓடிவிடுவார். எப்போதும் ஏதாவது ஒரு வேலை இருக்கவேண்டும் அவருக்கு. அந்த உழைப்புதான் அவரை மிக ஆரோக்கியமாக வைத்திருக்கிறது போலும் !

நா.கண்ணன் 5/08/2008 04:47:00 PM

அருண்:

நீங்கள் வேண்டியபடி இது பற்றி இன்னும் கொஞ்சம் பின்னால் எழுதுகிறேன்.

கையேடு 5/08/2008 05:49:00 PM

பேராசிரியர். நா. கண்ணன் அவர்களுக்கு,
தங்களது அனுபவத்தைப் படிக்கும் போதே, அறிவியலாளருக்கும், பொதுமக்களுக்கும் இருக்கும் ஒருங்கிணைப்பில் கிடைக்கும் நிறைவை உணர முடிகிறது.

அதே சமயத்தில், இந்தியாவில் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பைக் காணமுடியாத ஒரு ஆதங்கமும் விஞ்சுகிறது.

இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பில் இருக்கும் பயனை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள், இப்படிப்பட்ட திட்டங்களை, Indian National Academy of sciences,Indian Institute of Science, National laboratories, DST, CSIR ... etc. etc. என இன்னபிற அறிவியல் குழுமங்களுக்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது.

பரிந்துரைத்தால், மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது, என்பது போன்ற எதிர்விளைவுகள் இருக்கலாம். ஆனால், சலனமற்ற குளத்தில், உங்களைப் போன்றவர்கள் வீசுகின்ற கற்களால், ஒரு சிறு வளையம் கூடவா உண்டாகாமல் போய்விடும்.

தங்களுக்கு அவகாசமிருந்தால்..
http://kaiyedu.blogspot.com/2007/09/blog-post_09.html

விளம்பரப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

நன்றி

நா.கண்ணன் 5/08/2008 06:08:00 PM

நான் இந்தியாவில் பூச்சி மருந்துகளின் வேதிமச் சுழற்சி பற்றி ஆய்வு செய்த காலங்களிலும் விவசாயிகளுடன் நெருக்கமாகப் பழகியதுண்டு. அவர்களின் விருந்தோம்பலும், வெள்ளை உள்ளமும் பிடிக்கும் (அப்படியே அச்சாக, கொரிய விவசாயியும்!). ஒருமுறை ஆந்திரா பல்கலைக் கழகம் (விசாகபட்டிணம்) என்னைப் பேச அழைத்திருந்தது. அது சமயம் ஒரு ஊடக நேர்காணல் நடந்தது. அப்போது நான் விவசாயிகளின் தொன்மையான சூழல் சார்புடைய பழக்க வழக்கங்களை விஞ்ஞானிகள் கற்றறிந்து பிரபலப்படுத்த வேண்டுமென்றேன். பத்திரிக்கையில் வந்திருந்தது. எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்த holistic approach பற்றிப் பேசுவேன். உங்கள் வலைத்தளம் பற்றி அறியத் தந்ததற்கு நன்றி. இது விளம்பரமல்ல. இணைப்பு :-)

கயல்விழி முத்துலெட்சுமி 5/08/2008 08:27:00 PM

நல்ல அனுபவம் ... இப்படி ஒரு நாள் உழைத்துப்பார்க்கும் அக்கரைக்கு இக்கரை பச்சை ஆசை எனக்கும் இருக்கிறது.. ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் நிறைவேறும் என்றூநினைக்கிறேன்.. :)

இலவசக்கொத்தனார் 5/09/2008 06:51:00 AM

நல்ல அனுபவம்தான்.

எங்க ரீச்சர் சொல்வது போல் இங்கேயும் பிக் யுவர் ஓன் உண்டு. அங்க ஒரு தடவை மினி வலைப்பதிவாளர்கள் மீட்டிங் ஒண்ணு கூடப் போட்டோம்.

குமரன் (Kumaran) 5/10/2008 09:02:00 AM

உங்கள் வெங்காய சாகுபடி அனுபவம் படிக்க நன்றாக இருந்தது ஐயா. துளசியக்கா சொன்னது போல் இங்கே எங்கள் ஊரிலும் (அமெரிக்காவிலும்) அறுவடை காலங்களில் செய்கிறார்கள் - வெங்காயம் இல்லை. ஸ்ட்ராபெர்ரி, ஆப்பில் போன்ற பழங்களுக்கு. வீட்டுச் சிறுவர்களுடன் சென்றால் நல்ல பொழுதுபோக்கும் ஆகிவிடுகிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் விவசாயிகளுடன் இணைந்து ஒரு நாளேனும் வேலை செய்து பார்க்கவேண்டும். அது தனித்த அனுபவமாகத் தான் இருக்கும்.

நா.கண்ணன் 5/10/2008 09:50:00 AM

குமரன்: அமெரிக்கர்களிடம் எனக்குப் பிடித்த மிக நல்ல பழக்கம் இப்படிச் சிறுபழங்களை குடும்பத்தோடு பிடுங்கவிடுவது. அது குழந்தைகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. தேன் எடுப்பவன் எப்படி கையை நக்காமல் இருக்க முடியும்? இந்த உளவியலை நன்கு அறிந்த அமெரிக்கர்கள் தின்கின்ற மட்டும் தின்றுவிட்டு மீதத்தைக் கொண்டு வா, விலைக்கு! என்பது மிகவும் மனிதாபிமானமிக்க, அரோக்கியமான விவசாய முறை. உண்மையில் லாபம் அங்கு குறில்லை. சமூக மகிழ்வுக் குறி. சென்ற கோடை விடுமுறைக்கு அமெரிக்கா வந்திருந்த போது நண்பர் குடும்பத்தோடு வடகரோலின மாநிலத்தில் இப்படி பிளாக்பெரி பிடிங்கினோம். இப்போது இம்முறை ஜெர்மனிக்கும் வந்துவிட்டது. ஆனால், இங்கிலாந்து ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இன்னும் wild berries நிறைய உண்டு. கால்நடை பயிலப் போகும் வழிகளில் இச்செடிகள் நிறைய இருக்கும். பறித்து உண்ணலாம்.

ஆனால், வெங்காயச் சாகுபடி ரொம்ப சீரியஸ் விஷயம். அந்த வெய்யிலில் உழைத்ததில் பல பேருக்கு உடல் வலி, காய்ச்சல், ஜலதோஷம், தோல் எரிச்சல் வந்து விட்டது. கிராமத்தான் ஏன் அப்படி கருமையுடன், கரடுமுரடாக இருக்கிறான் என்றால் அது சூரியன் பண்படுத்திய உடல் என்று காண வேண்டும்.

Anonymous 5/20/2008 05:36:00 AM

Interesting post. I really enjoyed reading this. Korean people seems to work so hard. /அவர்கள் வலுவில், அதுவும் அந்த வயசு வலுவில் கால்வாசிக் கூட நமக்கில்லையே!/
How true. Keep posting. I always look forward to reading your blog.

Ravi

நா.கண்ணன் 5/20/2008 10:16:00 AM

இது பற்றிய என் கவலையை ஒரு கொரியப் பெரியவரிடம் பகிர்ந்து கொண்டேன். வயதான விவசாயிகள் இறந்து போன பின் விவசாயம் கொரியாவில் படுத்துவிடும். உலகம் அமைதியாய் இருக்கும் வரை இறக்குமதி செய்து பிழைத்துக் கொள்ளலாம். போர்க்காலங்களிலோ, இயற்கையின் மாற்றக்காலங்களிலோ, விவசாய சுய தேவை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அவசியம். இந்தியாவின் இரு பெரும் சாதனைகள் என்று சொல்லத்தக்கது. உணவில் தன்னிறைவு. எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு. இவை இந்தியாவை என்றென்றும் காக்கும்.