ஏர் முனைக்கு நேர்?

கிராமத்தில் வாழ்ந்தவன் என்பதால் எனக்கு வயலும் வாழ்வும் என்பது புதியன அல்ல. கோடை விடுமுறை வந்துவிட்டால் கிராமத்துப் பம்பு செட்டுக்குப் போய் கும்மாளம் போடுவதும், பெரிய கமலைக் கிணறுகளில் குதித்து ஆட்டம் போடுவதும் வழக்கம். நெல், வாழை, கரும்பு வளரும் தீரபூமி திருப்புவனம். அந்த ஊரு வெற்றிலை, அவ்வளவு பிரபலம். ஆச்சர்யம் என்னவெனில், கொரியாவின் மிக முக்கியப் பயிர் நெல். இங்கு விளைகின்ற தானிய வகைகளில் 90% பயிராக்கம் நெல்லிற்கே செல்கிறது. அடுத்து வருவது பார்லி மற்றும் பிற தானிய வகைகள். இவர்கள் நிறைய சோயா பீன் எனும் புரதம் மிகுந்த பயிரை விளைவித்து உண்கின்றனர். சோயாப் பால், சோயா மாவு, சோயா இட்லி, சோயா இனிப்பு என்று சோயா இல்லாத உணவே இங்கு இல்லை. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட ஆரம்பிக்கும் முன் புரதச் சத்து இந்த சோயா வழியாகவே வந்திருக்க வேண்டும். இல்லையெனில் அது இவர்கள் உணவு முறையில் இவ்வளவு முக்கியதும் வாய்ப்பானேன்?



படிக்கட்டு விவசாயம்


1963க்கு முன்வரை கொரியாவை நாமொரு விவசாய நாடு என்று சொல்லலாம். ஆனால், அதன் பின் ஏற்பட்ட தொழில் புரட்சியால் விவசாயத்தின் முக்கியத்துவம் மெல்ல, மெல்லக் குறைய ஆரம்பித்துவிட்டது. 1989க்குப் பிறகு 79% விவசாயிகள் தங்கள் பூர்வாங்கத் தொழிலை விட்டு நகர்ப்புறம் போய்விட்டனர். இது இன்னும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கிராமத்து விவசாயம் என்பது 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. மருத்திற்குக் கூட இளைஞர்களை வயல்வெளிகளில் காண முடியாது. கிராமத்து இளைஞர்களுக்கு பெண் கொடுக்க ஆள் இங்கு இல்லை. அதனால் வியட்நாம், பிலிபைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண் எடுக்கிறார்கள். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஒருவகையான சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகிறார்கள். வருகின்ற பெண்களையும் இவர்களுக்கு சரியாக நடத்தத்தெரிவதில்லை. உதாரணமாக, பிலிபைன்ஸ்ஸிலிருந்து வருகின்ற பெண்கள் பெரும்பாலும் படித்தவர்கள், ஆங்கிலம் சரளமாகப் பேசக்கூடியவர்கள். இவர்களுக்கோ ஆங்கிலம் வராது. கஷ்டம்தான்!

கொரியாவில் விவசாயம் பார்க்கக்கூடிய நிலம் என்பது மிகக்குறைவு. 78% மலையும், மலை சார்ந்த பரப்பும். இதனால் இங்கு படிக்கட்டு விவசாய முறை உள்ளது. மலையை படிக்கட்டு போல் வெட்டி அதில் விவசாயம் பண்ணுவது. இப்படி விளைச்சல் நிலம் குறைவாக உள்ளதால் பெரிய சாகுபடி நிலப்பரப்பு என்பது காண்பதறிது. விவசாயிகளுக்கு சிறு, சிறு நிலப்பரப்பே கிடைக்கிறது. எனவே கொரியாவில் எங்காவது இத்துணூண்டு நிலம் கிடைத்தாலும் அதில் எதையாவது போட்டு விவசாயம் செய்து கொண்டிருப்பர். இதைக் காண வேண்டுமெனில் சோல் சர்வ தேச விமான நிலையப் பயணத்தில் (குறிப்பாக கிம்போ விமான நிலையமருகே) சாலைகள் சந்திக்கும் சந்திகளின் நடுவிலுள்ள திட்டில் ஏதோ காய்கறி போட்டு ஒருவர் விவசாயம் செய்து கொண்டு இருப்பார்! மிச்சமிருக்கின்றன் விளை நிலங்களும் கட்டிட நிர்மாணங்களுக்கும், தொழிற்சாலை அமைக்கவும் போய்விடுகிறது. இதனால், நிலத்தின் விலை என்பது கன்னா பின்னாவென்று கூடிக்கொண்டு இருக்கிறது. ஒரு விவசாயி நிலத்தைப் பயிர் செய்து லாபம் சம்பாதிக்க முடியாத நிலை. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் 60% வருமானமே நிலத்திலிருந்து வருகிறது. அரசாங்கமும் எப்படியாவது கிராமத்து வாழ்வை கைதூக்கி விட வேண்டுமென்று முயல்கிறது. இதற்கென சாமுவேல் திட்டமென்ற ஒன்றைச் செயல்படுத்தினர். அதன் மூலம் புதிய கால்வாய்கள் வெட்டுவது, புதிய சாலைகள், பாலங்கள் கட்டுவது, சுகாதார வசதிகள் செய்து கொடுப்பது, கிராமங்களை அழகுறச் செய்வது என்று. பலன், இன்று கிராமங்கள் அழகாக உள்ளன. 60 வயதிற்கு மேல் மண்ணில் இறங்கி வேலை செய்யும் விவசாயிக்கு சௌகர்யமாக இருக்கும் வண்ணம் வயற்புற சாலைகளெல்லாம் அமைந்துள்ளன. ஆயினும், படித்து சௌகர்யமாக வேலைக்குப் போகும் இளைஞர்களைக் கட்டி இழுக்கும் வண்ணம் விவசாயத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. இதனால் விவசாயக் கூலி அதிகம். ஆட்களோ குறைவு. எனவே எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து இன்று ஒரு நிலம், நாளை இன்னொரு நிலம் என்று விவசாயம் பார்க்கும் முறை இங்குள்ளது.



கொரிய கிராமப்புரம்


1980 களிலேயே கொரியாவின் தானியத் தேவைக்கான பாதியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை. நெல் சாகுபடியை உயர் விலை கொடுத்து அரசு வாங்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அரிசி விலை கிலோ ரூ.125. அமெரிக்கா போன்ற கூட்டு நாடுகள் இவர்கள் இன்னும் நிறைய விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டுமென நிர்பந்தித்து வருகிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் அரிசியின் மீதான இறக்குமதித்தடை விலகலாம். அப்போது அரிசி விலை தாளும். இவர்களது மாமிச உணவுத்தேவைக்கென 2 மில்லியன் மாடுகளும், 4.9 மில்லியன் பன்றிகளும், 59 மில்லியன் கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இறைச்சி உண்பது என்பது உயர் மட்ட வாழ்வு முறையாக மாறிவரும் கொரியாவில் இறைச்சி இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற கொரியத் தலைவர் லீ, இறைச்சி இறக்குமதிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இது உள்ளாட்டில் பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கொரிய விவசாயிகள் தேசிய அளவில் சங்கம் வைத்துள்ளனர். இவர்களது போராட்டங்கள் இதுவரை வெற்றி பெற்றே வந்துள்ளன. உதாரணமாக, கொரியாவின் அபரிதமான தொழில்துறை சார்ந்த வளர்ச்சியை ஒப்பு நோக்கும் போது தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்களிப்பு என்பது வெறும் 10.8%. ஆனால், அது அரசாங்கத்திடமிருந்து பெறும் சலுகைகள் அதிகம்.

இப்போது இறைச்சி இறக்குமதியாகப்போகிறது. எல்லோருக்கும் ஒரு பயம். கிறுக்கு மாட்டு நோய் எங்கே இங்கு இறக்குமதியாகிவிடுமோ? என்ற கவலை. அந்நோய் உடனே தெரிவதில்லை, 10 ஆண்டுகள் கழித்தே தெரியவருகிறது! சக விஞ்ஞானிகள் இது பற்றி அதிகம் என்னிடம் பேசினர். பேசி என்ன பயன்? உள்நாட்டு விவசாயத்தைப் பேண ஒரு இளைஞன் கூட முன் வருவதில்லை. பின் எப்படி இறக்குமதியைத் தவிர்க்க முடியும்? கொரியர்களோ omnivorous feeders. எதை வேண்டுமானாலும் உண்டு விடுவர். பௌத்தம் தேசியச் சமயமாக இருந்த காலங்களில் கூட இதை மாற்ற முடியவில்லை. இறைச்சியின் மீதான மோகம் குறையப் போவதில்லை. பின் என்ன செய்ய முடியும்? 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிறுக்கு மாட்டு நோயில் உழல வேண்டுமென்ற விதியிருந்தால் அனுபவித்துத் தானே ஆக வேண்டும்!

நாங்கள் வெங்காயச் சாகுபடிக்குப் போனது வாராத விருந்தினர் வயக்காட்டிற்கு வந்தது போலிருந்தது அந்த இரண்டு பாட்டிகளுக்கும். வேறு யார் வருகிறார்கள்? மதியத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு பாட்டி குஷியாகப் பாடிக்கொண்டே யாரோ ஒரு விருந்தாளியை வரவேற்கப் போனாள். அதுவொரு மூதாட்டி. அவளும் ஒரு காலத்தில் விவசாயியாக இருந்திருக்க வேண்டும். இப்போது கால் நடமாட்டமில்லை. ஆயினும் அவள் ஊன்றுகோல் வைத்துக் கொண்டு வயக்காட்டிற்கு வந்துவிட்டாள். நாங்கள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்ததில் அவளுக்கோர் திருப்தி. அந்த மூதாண்டிதான் கொரிய விவசாயத்தின் பிரதிநிதிபோல், கொரிய விவசாயம் இருக்கும் உண்மை நிலையைப் படம் பிடிப்பது போல் எனக்குத் தோன்றியது.

11 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/09/2008 01:43:00 PM

//நாங்கள் வெங்காயச் சாகுபடிக்குப் போனது வாராத விருந்தினர் வயக்காட்டிற்கு வந்தது போலிருந்தது அந்த இரண்டு பாட்டிகளுக்கும்//

கண்ணன் சார்,
அப்படியே ப்ரெஷ்ஷான வெங்காயத்தில், பாட்டிகளுக்கு வெங்காய பஜ்ஜி போட்டுக் கொடுத்திருக்கணும் நீங்க!
இன்னும் சந்தோசப்பட்டிருப்பாங்க! இந்திய உணவுக்குக் கொரியாவில் சந்தை உருவாக்குன புண்ணியமும் கிடைச்சிருக்கும்! சான்சை மிஸ் பண்ணிட்டீங்களே!

சரி சரி! இங்கிட்டு ஒரு ப்ளேட் பஜ்ஜி பார்சேல்ல்ல்ல்ல்ல்! :-)

நா.கண்ணன் 5/09/2008 01:52:00 PM

கொரியர்களுக்கு இந்திய உணவு ரொம்பப் பிடிக்கும். இங்கு காலூன்ற வேண்டுமெனில் ஒரு கிளப்புக்கடை திறந்தால் போதும், பிழைத்துக் கொள்ளலாம். இப்போ! அது ஒண்ணுதான் முயன்று பார்க்கலை! அடுத்து அதையும் செய்து கையில் சூடு வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்!

Madura 5/09/2008 06:26:00 PM

நல்ல பதிவு. கொரியாவில் மலைப்பகுதிகளில் உருளை கிழங்கு சாகுபடி உண்டா? அங்கு மழை எம்மாதங்களில் வரும்? நீர் பாசனமா, வானம் பார்த்த பூமியா, மலைகளில்?
//நாங்கள் வெங்காயச் சாகுபடிக்குப் போனத//
நீங்க விவசாயம் சார்ந்த ப்ராஜக்ட்சும் பண்றீங்களா?

Madura 5/09/2008 06:29:00 PM
This comment has been removed by a blog administrator.
நா.கண்ணன் 5/09/2008 06:48:00 PM

மதுரா:

கொரியாவில் உருளைகிழங்கு விளைச்சலுண்டு.

இங்கு ஜூலை மாதம் முழுவதும் மழைதான். பிற மாதங்களில் "மாதம் மும்மாரி"யாவதுண்டு. மலை இருந்தால் மழையுண்டு.

என் ஆய்வு கடலியல் சார்ந்தது. இது சும்மா விவசாயிகளை குஷிப்படுத்த போட்ட திட்டம். நல்லுறவு கைழுத்து!

நா.கண்ணன் 5/09/2008 06:52:00 PM

இப்போது தமிழ் வார்ப்பு பெரிதாகத் தெரிய வேண்டுமே!

SP.VR. SUBBIAH 5/09/2008 08:58:00 PM

///1989க்குப் பிறகு 79% விவசாயிகள் தங்கள் பூர்வாங்கத் தொழிலை விட்டு நகர்ப்புறம் போய்விட்டனர். இது இன்னும் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது கிராமத்து விவசாயம் என்பது 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. மருத்திற்குக் கூட இளைஞர்களை வயல்வெளிகளில் காண முடியாது.///

இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்?
அதே அவல் நிலைமைதான்!
இன்றைய இளைஞர்களுக்கெல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் கனவுதான்!

Madura 5/10/2008 04:30:00 PM

ஆமாம் தமிழ் வார்ப்பு (font?) நன்றாக, பெரியதாக தெரிகிறது இப்போது.
:)
Thank you.

நா.கண்ணன் 5/10/2008 04:36:00 PM

நன்றி. Font என்பதை எழுத்துரு என்பார்கள். நான் பெரும்பாலும் இராம.கி தரும் கலைச்சொற்களைப் பாவிப்பவன். அவர் இதை வார்ப்பு என்பார். அவர் தரும் சொற்களில் எளிமை, நேர்ச்சுட்டு, சுருக்கம் இருக்கும். உங்கள் பின்னூட்டம் என வலைப்பக்கத்தை சீர்படுத்தியிருக்கிறது. நன்றி.

வல்லிசிம்ஹன் 5/10/2008 09:22:00 PM

பெரிய எழுத்துகளில் படிப்பது சௌகரியமாக இருக்கிறது.
நம் ஊர் போலயே அங்கேயும் விவசாயம் குறைந்து வருவது வருத்தமாக இருக்கிறது.

நா.கண்ணன் 5/10/2008 09:25:00 PM

அடக்கடவுளே! இவ்வளவு நாளா கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்க! என் கணினி இதைச்சொல்லவே இல்லையே! :-(