கர்ப்ப உலகம்

எனது ஆய்வகத்திலே பல பெண் விஞ்ஞானிகள் தாமதமாக பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர். காரணம் Ph.D முடித்து, பின் வேலை கிடைத்து நிம்மதியாக வாழ்வு அமைந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் எனும் போது வயது 30 தாண்டிவிடுகிறது. முதல் பிள்ளை பெற்றுக்கொள்வதில் அதிக பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வயது 40ஐ எட்டிவிடுகிறது. வயதானோர் அதிகமாக உள்ள கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கிறது. எனவே எல்லோரும் இரண்டு, மூன்று என்று பெற்றுக் கோள்கிறார்கள். ஆனால், கடைசிப் பிள்ளைகளைக் கவலையுடன்தான் பெற்றுக் கொள்கின்றனர். காரணம்?

மரபுக் கோளாறு குழந்தைகளுக்கு வந்துவிடுமோ என்ற கவலை. நூறு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் ஏதாவதொரு ஊனத்துடன்தான் கொரியாவில் பிறக்கின்றன. கொரிய கதோலிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒரு ஆய்வு சுட்டுகிறது பிறக்கும் குழந்தைகளில் 2.9% குறைபாடுடன் பிறப்பதாக. கொரிய உணவு-மருந்து ஆணையம் (Korea Food and Drug Administration) ஒரு குறிப்பில் சொல்கிறது 1999க்குப் பிறந்த குழந்தைகளினூடே மரபுக் கோளாறு இரட்டிப்பாகி உள்ளதாக! இதற்கான காரணங்களென்ன?

மருத்துவர்கள் சொல்கிறார்கள் கொரியப் பெண்களுக்குப் போதிய அளவு போலிக் அமிலம் உணவில் உட்செல்வதில்லையென்று. இந்த உணவுச் சத்தில் விட்டமின் பி இருக்கிறது. அது குழந்தை வளரும் போது நரம்பு மண்டலம் ஒழுங்காக வளர உதவுகிறது. இல்லையெனில் anencephaly, spinal bifidia போன்ற கோளாறுகள் தோன்றலாம்! சரி, போலிக் அமிலம் எந்தெந்த உணவில் இருக்கிறது? பச்சைக் காய்கறிகள் உம். புரோக்கோலி (பச்சைக் காலிபிளவர்), அஸ்பராகஸ், கீரை, காளான், பட்டாணி, கிவிப்பழம், ஆரஞ்சு, கல்லீரல் மற்றும் மீன். இந்த போலிக் அமிலம் கொண்ட மல்டி விட்டமின் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவர் சபை சொல்கிறது ஒரு நாளைக்கு குறைந்தது 0.4 மி.கி போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையாம்.

கஷ்டம் என்னவெனில், கர்ப்பம் தரிப்பது என்பது பெரும்பாலும் திட்டமிடாமலே எதேட்சையாக நடந்துவிடுகின்றது. ஒரு பெண் கர்ப்பவதி என அறியும் போது 6, 7 வாரங்களாகிவிடுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் நரம்பு மண்டலம் வளரத்தொடங்குகிறது! ஆனால் மருத்துவஆலோசனையோ கருப்பம் தரிப்பதற்கு 3 மாதம் முன்பிருந்தே 0.4 மி.கி. போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டுமென்று!

கொரியாவில் பெண்கள் பியர் குடிப்பதுண்டு. கொஞ்சம் என்றால் பரவாயில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பவதி அதிகமாக பியர் குடித்தால் குழந்தைக்கு வெட்டு உதடு என்ற குறை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 12 வாரக் கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயமாக குடிப்பதை நிறுத்திவிட வேண்டுமாம். ஏனெனில் அச்சமயத்தில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சி விரிவடையத் தொடங்கிறது. குடிப்பழக்கத்தால் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத்தான் பிறப்பிக்க முடியுமாம்.

விட்டமின் நல்லது என்றாலும் 1000 ச.அ (சர்வதேச அளவு)க்கு மேல் ஒரு நாளைக்கு எடுத்துக் கொண்டால் பின் பிறக்கும் குழந்தைக்கு குறை நிச்சயம் அமையுமாம். உம். குறைப்பிரசவமோ, மந்தமான குழந்தைகளோ இல்லை இறந்து பிறக்கும் குழந்தையோ அமையுமாம்.

காஃபியும் அதிகம் குடிக்கக்கூடாதாம். நாலு கப் காஃபிக்கு மேல் குடிப்பவர்க்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்து ஒல்லியாகப் பிறக்குமாம்! இப்போது பச்சைத் தேயிலை அதிகம் பிரபலமாகிவருகிறது. தேயிலை என்றாலே அதில் காஃபின் இருக்கும்.

சிகரெட் குடிக்கக்கூடாது!

பச்சை மாமிசம் சாப்பிடக்கூடாது! Toxoplasma என்ற வியாதி 30 லிருந்து 63% அதிகமாகிவிடுமாம்! இதுவொரு ஒட்டுண்ணி. அது பச்சை மாமிசத்தில் இருக்கும். அது குறைப்பிரவத்தை உண்டு பண்ணும். இந்தப் பூச்சி வீட்டில் வளர்க்கும் பூனையிடமும் உண்டு. இந்தியப் பெண்கள் குடிப்பதில்லை என்பதற்காக பூனை வளர்க்கக் கூடாது. பிறகு பிரச்சனைதான்!

இப்படிப்பட்ட கொரிய மருத்துவ யோசனைகள் சுட்டுவது ஒன்று. தெளிவாக. இந்திய உணவுப் பழக்கம் என்பது இதையெல்லாம் கணக்கில் கொண்டு நம் முன்னோரால் வகுக்கப்பட்டது என்பதே! குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயமில்லை! அதிக கவனம் கொள்ள வேண்டிய நிகழ்வு. இந்தியாவில் பிறப்பு பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்தக் காலத்துப் பெண்கள் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. பின் வேலை. அதன்பின் திருமணம். இச்சூழலில் பிறப்பு என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாக அமைவதே தாய்-சேய்க்கு நல்லது! ஏனெனில் ஊனமாகக் குழந்தை பிறந்துவிட்டால் அதைக் கட்டிக் காக்கும் பொறுப்பு நம்மில் பலருக்கு இருப்பதே இல்லை. எனவே வரும் முன் காப்பது மேல்!

18 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 5/10/2008 09:48:00 AM

வயது தளர்ந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்....
பிறந்த பிறகு குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு அவுங்க அம்மாவை “அழகாக” இருக்காங்க என்று சொல்லமுடியாது. :-)
குழந்தைகளுக்கு ஒப்பீடு பண்பு அதிகமாக இருக்குமா?

நா.கண்ணன் 5/10/2008 09:54:00 AM

குமார்: உண்மைதான். நான் என் வீட்டில் எட்டாவது குழந்தை. என் தந்தையை 40 வயது மனிதராகவே எனக்குத் தெரியும். அம்மாவும் தளர்ந்துவிட்டார்கள். ஆனால் சகோதரிகள் சினிமா ஸ்டார் மாதிரி இருப்பார்கள். அதிலே கட்டற்ற மகிழ்ச்சி. வயதான தாயிடம் ஒரு மெருகு, ஒரு முதிர்ச்சி, ஒரு நிதானம் இருக்கும். அது குழந்தைக்கு நல்லது.

ஜீவா (Jeeva Venkataraman) 5/10/2008 10:37:00 AM

நல்ல பயனுள்ள கட்டுரை, நம்மவர்களுக்கு.
கர்ப காலச் சோதனைகளில் - குறிப்பாக கர்ப மரபணு சோதனைகள் செய்வதால் - ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முன்பாகவே அறிந்து கொள்ளும் வசதி இருந்தாலும், அவை செய்வதில் கூடவே அபாயங்கள் இருப்பதாக இங்கு அமெரிக்கவில் அச்சப்படுபவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த அச்சம் காரணமாக, அந்த சோதனைகளில் பெரிதுமாக மறுப்பவர்களும் இருக்கிறார்கள்!
எவ்வளவுதான் முன்னேறி இருப்பதாக நாம் நினைத்தாலும், invasive சோதனை முறைகளை விட்டால் வேறு வழியில்லை என்று சில சமயங்களில் நேர்ந்து விடுகிறது.

நா.கண்ணன் 5/10/2008 10:40:00 AM

கொரியாவில், ஜப்பானில் பிறக்கப்போகும் குழந்தையின் பால் என்னவென்று சொல்வதில்லை. ஆனால் இப்போது ஸ்டெம் செல் ஆய்வில் கொரியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.

துளசி கோபால் 5/10/2008 11:43:00 AM

எட்டாவது குழந்தையா?

அதான் பெயர்ப்பொருத்தமோ?

நம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.

துளசி கோபால் 5/10/2008 11:44:00 AM

எட்டாவது குழந்தையா?

அதான் பெயர்ப்பொருத்தமோ?

நம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.

நா.கண்ணன் 5/10/2008 11:58:00 AM

//நம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.//

என்ன சொல்ல வறீங்க? எங்க 8லே எது நாய், எது பூனை? (நான் நிச்சயமா பூனை இல்லை) :-)

ரசிகன் 5/10/2008 03:48:00 PM

பயனுள்ள பதிவு நன்றிகள் டாக்டர்:)

அறிவன்#11802717200764379909 5/10/2008 06:41:00 PM

//////கஷ்டம் என்னவெனில், கர்ப்பம் தரிப்பது என்பது பெரும்பாலும் திட்டமிடாமலே எதேட்சையாக நடந்துவிடுகின்றது. ஒரு பெண் கர்ப்பவதி என அறியும் போது 6, 7 வாரங்களாகிவிடுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் நரம்பு மண்டலம் வளரத்தொடங்குகிறது!/////////

ஆனால் இக்காலத்தில் இந்நோக்கு சரியில்லையோ எனத் தோன்றுகிறது.
பெரும்பாலும் குழந்தை பெற திட்டமிடல் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

நா.கண்ணன் 5/10/2008 06:53:00 PM

திட்டமிட்ட செயற்பாடுகளிலும் கூட தவறிப் போய் கர்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைச் சொல்லுகிறது கட்டுரை.

ஆ.கோகுலன் 5/10/2008 07:26:00 PM

உண்மைதான் கண்ணன் அவர்களே. Gyonngi do இல் Subway இல் பயணிக்கும் போது பல வலது குறைந்தவர்களை கண்டிருக்கிறேன். MBC இன் விவரணமொன்றிலும் இது தொடர்பாக ஒளிபரப்பினார்கள். பொது இடங்களிலும் மின்உயர்த்தியிலும் கண்டிப்பாக வலது குறைந்தவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கொரியப்பெண்களால் பியர் இல்லாமல் இருக்க முடியுமா..?!

நா.கண்ணன் 5/10/2008 08:11:00 PM

//கொரியப்பெண்களால் பியர் இல்லாமல் இருக்க முடியுமா..?!//

கொரிய சமூகத்தில் இருக்கமான கட்டுப்பாடுகளுண்டு. அதில் பெண் இருக்கும் இடம் இரண்டாவது அல்லது மூன்றாவது படிநிலை. இந்த பாரத்தை சமாளிக்க அல்லது அதன் எதிர்வினையாகக் கொரியப் பெண் மது அருந்துகிறாள். மற்றொரு காரணம் ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்மணிகள் போலிருக்க வேண்டுமென்ற ஆவல். ஒரு கொரிய சினிமாவில் பார்த்தேன் to liberate herself from social inhibitions அவள் குடிப்பதாக. உதாரணமாக ஐ லவ் யூ சொல்லக் கூட சில நேரம் குடிக்க வேண்டி வரலாம்!

//பொது இடங்களிலும் மின்உயர்த்தியிலும் கண்டிப்பாக வலது குறைந்தவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.//

இதன் பொருள் விளங்கவில்லை. ஊனமுற்றோர் பற்றியா இல்லை முதியோர் பற்றியா?

Chandravathanaa 5/11/2008 04:50:00 PM

பயனுள்ள கட்டுரை

Anonymous 5/11/2008 10:38:00 PM

// விட்டமின் நல்லது என்றாலும் 1000 ச.அ (சர்வதேச அளவு)க்கு மேல் ஒரு நாளைக்கு எடுத்துக் கொண்டால் பின் பிறக்கும் குழந்தைக்கு குறை நிச்சயம் அமையுமாம். \\

எல்லா விட்டமினுமா அல்லது குறிப்பிட்ட விட்டமின் எது சார்?

-ஸம்பத்

நா.கண்ணன் 5/11/2008 10:46:00 PM

விட்டமீன் A நண்பரே!

இக்கட்டுரை ஒரு விழிப்புணர்வு தர வந்தது.வீட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உங்கள் முடிவுகள் அமையட்டும்.

ஆகாய நதி 5/12/2008 02:15:00 PM

தங்களது கட்டுரை அருமை! நானும் 8மாத கர்ப்பவதி தான்:) தாங்கள் கூறியது போல் போலிக் அமிலமும், வைட்டமின் பி,சி, கால்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாகவே 30 வயதிற்குள்ளாக குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது.

தங்கள் கட்டுரைக்கு நன்றி!!!

நா.கண்ணன் 5/12/2008 02:59:00 PM

ஓ! அப்படியா? உடம்பைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மன மகிழ்வோடு இருங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். நிறைய சாந்தி தரும் பாடல்களைக் கேளுங்கள் (பிடித்தால் கர்நாடக, ஹிந்துஸ்தாணி சாஸ்தீரிய சங்கீதங்கள்). எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதீர்கள். தினம் காலாற நடந்து பழகுங்கள்.

குழந்தை பிறந்தபிறகு உங்கள் கணவரை குழந்தை வளர்ப்பில் சரி சமமான பொறுப்பை ஏற்றுக் கோள்ள வையுங்கள். அது குழந்தையுடனான நீண்ட கால நல்லுறவிற்கு உதவும்.

வாழ்த்துக்கள்.

ஜீவா (Jeeva Venkataraman) 5/12/2008 08:53:00 PM

//எல்லா விட்டமினுமா அல்லது குறிப்பிட்ட விட்டமின் எது சார்?
//
இங்கே அமெரிக்காவில் Pre Natal விட்டமின்கள் என்று தனியான கலவையாக கிடைக்கிறது, இதற்காகவே. இது அந்த குறைந்தபட்ச விட்டமின் மற்றும் மினரல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாய் உள்ளது; இது எந்த ஒன்றும் அளவிற்கு அதிகமாக செல்லாமல் பார்த்துக்கொள்ளும். அதற்கு மேலும் ஒருவருக்கு, உதாரணமாக இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும்போது, அதற்கு தனியான துணை மருந்துகள் பரிந்துரக்கப் படுகின்றன.