மந்திரம் போலொரு சொல் தாரீர்!

யாருமே மேடையில் நிரந்தரமாக இருந்துவிடக்கூடாது. மதிப்பில்லாமல் போய்விடும். விடாமல் நாற்காலியைப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவில் என்றில்லை. இது உலகம் முழுவதும் காணும் காட்சியாகவே உள்ளது!

ஒருவாரம் உங்களுடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உறவாடியது மிகிழ்வாக உள்ளது. 5ம் நாளைத் தாண்டும் போது என் வலைப்பூவைக் கண்டு ரசித்தவர் எண்ணிக்கை 1000 தாண்டி விட்டது. இதைவிட என்ன மகிழ்ச்சியான சேதி உண்டு? முடிந்தவரை வித்தியாசமான தலைப்புகளில் பல விஷயங்கள் பற்றி அலசியிருக்கிறேன். இலக்கியம், ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விவசாயம், நாட்டு நடப்பு, சரித்திரம், சமூகவியல் என்று. பல்லூடகத்தன்மையுடன் எனது வலைப்பதிவுகளை வழங்கியுள்ளேன். மொத்தம் 18 கட்டுரைகள் வழங்கியுள்ளேன். அதில் 7 கட்டுரைகள் 5 நட்சத்திர மதிப்பெண் பெற்றிருக்கின்றன. சில நேரங்களில் இது பிடிக்கும் என்று எழுதுவோம் ஆனால் பிடிப்பதில்லை. இது பிரச்சனையைக் கிளப்பும் என்று பயந்து கொண்டே எழுதுவோம். வெடித்துச் சிதற வேண்டிய தீபாவளி வெடி புஸ்ஸென்று போய்விடுவது போல், ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் போய்விடும். பின்னூட்டம் தருவது மட்டும் கவனம் பெருகிறது என்றில்லை. பின்னூட்டமே இல்லாமல் சில பதிவுகள் 5 நட்சத்திர மதிப்பெண் பெற்றுவிட்டன! வலைப்பூ தொழில்நுட்பமும் எப்படியாவது வலைப்பதிவர்-வாசகர் புரிதலை 100% கொண்டு வந்துவிட முயல்கிறது. But still we need more powerful, yet simple tools to gauge the reaction of the readers!

உண்மையில் என்னிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தால் எப்போதும் அதை சிரத்தையுடன் செய்வேன். ஒரு தொழில் நேர்த்தி இருக்க வேண்டுமென்று நினைப்பேன். எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு நியாயம் கற்பிக்க முயல்வேன். மேலும் வலைப்பதிவு என்பது ஒரு ஊடாடும் செயல். நான் விவசாயம் பற்றி விஸ்தாரமாக எழுதுவேன் என்று நினைக்கவில்லை. அது "நீங்கள் கேட்டவை". இந்த வாரம் கருத்தரங்கம், ஆய்வுப் பட்டறை என்று தலைநகர் போய் விடுகிறேன். எனவே பதிவு இருக்காது. மேடையில் ஏற்றினால்தான் பேசுவார் போலிருக்கிறது என்று எண்ண வேண்டாம். வந்து தொடர்கிறேன்.

இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் போது நாரணனும் முண்டியடித்துக் கொண்டு வந்துவிடுவான். அது அவன் வழக்கம். ஆழ்வார்கள் காலத்திலிருந்து அப்படித் தன் தொண்டர்கள் நிகழ்வில் கோலாகலமாகக் கலப்பது அவன் பழக்கம். ஏனெனில் அவன் 'பத்துடை அடியர்க்கு எளியவன்'. நாராயண கவசம், கோதை நாச்சியார் தாலாட்டு அவன் முகமகிழ்விற்காக எழுதியது (அவன் அதற்கு எத்தனை நட்சத்திர மதிப்பீடு தந்தான் என்று தெரியவில்லை!)

யாராவது கவனித்தீர்களோ? நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் எனது மூன்றாம் கண் வலைப்பதிவிலும் பதிவிட்டு வந்தேன். ஏனோ, நட்சத்திரப் பதிவாக ஒரேயொரு வலைப்பூவே தேர்ந்தெடுக்கப்படுகிறது!

நான் ஒரு பழைய மின்குடிமகன். தமிழில் வலைப்பூக்கள் மலரத்தொடங்கிய காலத்திலிருந்து இருக்கிறேன். தமிழ்மணத்தின் ஆதிப்பெயர் "வலைப்பூ". அப்போதும் நான் நட்சத்திர பதிவாளராக வந்திருக்கிறேன். எனது பின்னூட்டம் 100 எண்ணிக்கையைத் தாண்டி ரெகார்ட் பிரேக் செய்திருக்கிறது. அதுவொரு காலம். இப்போதெல்லாம் தமிழ்மணத்தில் பல்வேறு திண்ணைகளைக் காண்கிறேன். ஒரு பூங்காவில் அங்கங்கே கூட்டமாக அமர்ந்து அரட்டை அடிப்பது போல். சில இடத்தில் கூட்டம் அதிகமிருக்கிறது. சில இடத்தில் ஒரு சில பேரே இருக்கிறார்கள். சில இடங்களில் ஒருவருமே இல்லாமல் வெறிக்கப் பார்த்துக் கொண்டு தனி மனிதர்கள். வலைப்பூவை நடத்த நிறைய நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியுள்ளது. நண்பர்களை அடிக்கடி அவர்கள் மின்னில்லம் சென்று விஜாரித்து வர வேண்டியுள்ளது. இந்த முயற்சி இல்லையெனில் "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று உட்கார்ந்து இருக்க வேண்டியது.

இன்னொரு வழியும் உள்ளது! அது என்னவெனில் எப்போதும் 'சலம்பிக்கொண்டே' இருக்க வேண்டும் என்பது! பிரச்சனைக்குரிய தலைப்புகளில் பேசிக்கொண்டிருக்கவேண்டும்!! தமிழனின் சிந்தனையைக் கவர்வது சினிமா, செக்ஸ், அரசியல், ஜாதி மற்றும் இதர பிரிவினை வாதங்கள். இனிப்பை மொய்க்கும் ஈ போல இவ்விஷயங்கள் அவனை உடனே ஈர்த்துவிடுகின்றன.

இவைகளை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். நாம் மாற வேண்டும். எதைப் பற்றி நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ பின் அதுவாகவே மாறிவிடுகிறோம். பிரிவினை பற்றிப் பேசும் மனது அழுக்குறுகிறது. பின் அது அழுக்காகவே இருக்கிறது. வன்முறை பற்றிப் பேசும் மனது மிரண்டு போய் கிடக்கிறது. வன்முறை என்றும் பிரச்சனையைத் தீர்த்ததாகக் கதை இல்லை. வன்முறை, வன்முறையை வளர்க்கும் என்பதே நிதர்சனம். எனவே தமிழ் மின்னுலகம் தன் 'விலங்கு மனத்தை'க் கொஞ்சம் திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவொரு நல்ல வாய்ப்பு. வலைப்பதிவு என்பது யோகமென்று சொன்னீர்கள். அதுதான் எவ்வளவு உண்மை! எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும். அரவிந்தர் கணிக்கும் ஒரு புதிய எழுச்சியுற்ற இந்திய சமுதாயம் உருவாகும் என்றே நான் நம்புகிறேன். இங்கொரு புத்தன், காந்தி, பாரதி பிறப்பது அதிசயமே இல்லை. அங்குதான் பிறப்பார்கள். அது அந்த மண்ணின் வளம். உங்களில் யார் அந்த புத்தன்? யார் அந்த காந்தி? யார் அந்த பாரதி? என்று இனம் காண வேண்டியது உங்கள் பொறுப்பு.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு!

19 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH 5/12/2008 10:57:00 AM

////எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும்////

நிதர்சனமான உண்மை!
பாராட்டுக்கள் அன்பரே!
வாரம் முடைந்தால் என்ன?
அடிக்கடி வாருங்கள்!

நா.கண்ணன் 5/12/2008 11:09:00 AM

மிக்க நன்றி சுப்பையா. நீங்கள் தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி. இந்த வாரமிட்டு, அடுத்த வாரம் மீண்டும் வருகிறேன்!

துளசி கோபால் 5/12/2008 11:22:00 AM

வாரக்கணக்கெல்லாம் நமக்கெதுக்கு?

நம் கடன் (எழுத்துப்)பணி செய்வது மட்டும்தான்.

பின்னூட்டம் என்ன தராசா? அதைவச்சு எடை போட!!!

குறைஞ்சது வாரம் ரெண்டு பதிவுகள் எழுதணும் கண்ணன்.

ஆத்ம திருப்தின்னு ஒண்ணு இருக்குல்லே அதுக்காக.

நட்சத்திரவாரம் நல்லாத்தான் இருந்த்து.

மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

நா.கண்ணன் 5/12/2008 11:41:00 AM

உண்மைதான் துளசி. எழுத்து என்பதொரு யோகம். அது சிந்தையை கூர்மை செய்வதுடன், தளிர்ப்பித்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வாரம் இரண்டு பதிவுகள். சாத்தியம்தான். ஆனால் சில நேரம் விட்டுப் போகிறது. அப்புறம் அப்படியே போய்விடுகிறது. நட்சத்திரவாரம் என்னைப் போன்றோருக்கு ஒரு கட்டாயப் பதிவு வாரம். இதுக்குத்தான் காலிலே ஒரு கட்டுப் போட்டா பொறுப்பு வந்துடும்ன்னு சொல்லறாங்க போலிருக்கு :-)

நன்றி துளசி. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி :-)

தருமி 5/12/2008 12:12:00 PM

//காலிலே ஒரு கட்டுப் போட்டா பொறுப்பு வந்துடும்ன்னு .. //

எப்போதும் கால்கட்டோடு இருப்பதாக நினைத்து .. பொறுப்போடு - தொடர்ந்து எழுதுவதைச் சொல்கிறேன் - இருக்க அழைக்கிறேன்.

Anonymous 5/12/2008 12:15:00 PM

/வாரம் முடைந்தால் என்ன?
அடிக்கடி வாருங்கள்!/

I agree with sp.vr.Subbiah Sir.I happen to see lots of Korean programs in TV. Lots of Tamil words they use. Like amma,appa,ulleyva etc. Please write about South Korean language in your blog. It would be very interested how they related to Tamil. Thanks.

Ravi

நா.கண்ணன் 5/12/2008 12:27:00 PM

தருமி சார். இன்னும் பொறுப்பில்லா பையன் என்கிறீர்கள் :-)?

நா.கண்ணன் 5/12/2008 12:36:00 PM

ரவி: கொரிய-தமிழ் தொடர்பு பற்றி பல இடங்களில் பேசியுள்ளேன். இங்கு கூட ஒரு பதிவு இட்டதாக ஞாபகம். சிஃபி.காமில் சில பதிவுகள் உள்ளன. சிங்கபூரில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை வாசித்துள்ளேன். அது புத்தகமாக வரவுள்ளது. வெளியானவுடன் என் கட்டுரையின் (ஆங்கிலம்) மின்வடிவைத் தருகிறேன். கொரிய மொழி (எழுத்து வடிவம் மட்டும்) தமிழை முன்னுதாரணமாகக் கொண்டு உருவான மொழி என்பது என் துணிபு.

அறிவன்#11802717200764379909 5/12/2008 01:00:00 PM

/////இவைகளை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன். நாம் மாற வேண்டும். எதைப் பற்றி நாம் அதிகம் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ பின் அதுவாகவே மாறிவிடுகிறோம். பிரிவினை பற்றிப் பேசும் மனது அழுக்குறுகிறது. பின் அது அழுக்காகவே இருக்கிறது. வன்முறை பற்றிப் பேசும் மனது மிரண்டு போய் கிடக்கிறது. வன்முறை என்றும் பிரச்சனையைத் தீர்த்ததாகக் கதை இல்லை. வன்முறை, வன்முறையை வளர்க்கும் என்பதே நிதர்சனம். எனவே தமிழ் மின்னுலகம் தன் 'விலங்கு மனத்தை'க் கொஞ்சம் திருத்தி நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவொரு நல்ல வாய்ப்பு. வலைப்பதிவு என்பது யோகமென்று சொன்னீர்கள். அதுதான் எவ்வளவு உண்மை! எழுத்தை யோகமாகக் கொள்ளுங்கள். மந்திரம் போலொரு சொல் விழ வேண்டுமெனில்? உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டும். உள்ளத்தில் ஒளி தோன்றினால் வாக்கினில் இனிமை வரும், சொல்லில் கனிவு வரும். அப்போது விழும் சொற்கள் மந்திரத்தன்மையுடன் இருக்கும்.//////

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

எனது உள்ள ஆயாசமும் இதுவே.

தற்போது வலைப்பூக்கள் உலகு நீங்கள் சொல்லிய வண்ணமே உள்ளது.எனினும் கலங்குவது தெளிவு பெறவே என்பது பலநாள் நம்பிக்கை.

நம்புவோம்.....

Anonymous 5/12/2008 04:09:00 PM

அருமை!
:)

கயல்விழி முத்துலெட்சுமி 5/12/2008 10:35:00 PM

மிக அழகாக இன்றைய வலைப்பதிவின் நிலைமையை விளக்கி இருக்கிறீர்கள்..உண்மைதான்.. நீங்கள் உங்கள் வயது அனுபவம் மூலம் சொல்கிறீர்களோ என்றும் படுகிறது..

கவனித்தால் அதுவும் ஒரு காரணி தானே..

நட்சத்திரவாரத்தில் நல்ல இடுகைகளை படைத்தளித்தமைக்கு நன்றி..

kannan 5/13/2008 01:50:00 AM

Hi Kannan,

Nice post.
Whatever you think about most,it will come to you.It is called "Law of Attraction".This concept is the basis for the movie "Secret" which sold millions of copies.
As you said,better to think about positive things always and avoid talking about the things which we don't want.
Keep up your good work.
Best wishes,
kannan viswagandhi
http://www.growing-self.blogspot.com

Anonymous 5/13/2008 02:54:00 AM

/சிங்கபூரில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை வாசித்துள்ளேன். அது புத்தகமாக வரவுள்ளது. வெளியானவுடன் என் கட்டுரையின் (ஆங்கிலம்) மின்வடிவைத் தருகிறேன். கொரிய மொழி (எழுத்து வடிவம் மட்டும்) தமிழை முன்னுதாரணமாகக் கொண்டு உருவான மொழி என்பது என் துணிபு./

Thank you Sir. I look forward to reading this.

Ravi

நா.கண்ணன் 5/13/2008 08:00:00 AM

Friends: I'm in the capital attending a US-Korean workshop on oil pollution and hence I can't answer you back in Tamil. I am glad that you enjoyed my blog. I shall download the movie "Secret" and see.

Let me continue to blog after I come to my home base,

ஜீவா (Jeeva Venkataraman) 5/14/2008 11:46:00 AM

இவரேன் இப்படி என எடுப்பு எண்ண வைத்தாலும், முடிப்பு பிரமாதம்!

குமரன் (Kumaran) 6/12/2008 02:52:00 AM

இன்று தான் உங்கள் விண்மீன் வார கடைசி இடுகையைப் படித்தேன் ஐயா. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

நா.கண்ணன் 6/12/2008 06:34:00 AM

குமரன்: எப்படி உங்களால் இப்படிப் பொறுமையாக பழைய பதிவுகளையெல்லாம் வாசிக்க முடிகிறது? :-) மிக்க நன்றி.

குமரன் (Kumaran) 6/12/2008 09:32:00 AM

தொடர்ந்து படிக்கும் பதிவுகளில் புதிய இடுகைகள் வந்தவுடன் ஒத்தி எடுத்து வைத்துக் கொள்வேன் ஐயா. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு வருவேன். எப்போதோ ஒத்தி எடுத்துக் கொண்டது இன்று படித்தேன். அவ்வளவு தான். ரொம்ப நாள் கழித்து வந்து பின்னூட்டம் இடுவதற்காக இடுகைகளை எழுதியவர்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். :-)

நா.கண்ணன் 6/12/2008 09:34:00 AM

//நாள் கழித்து வந்து பின்னூட்டம் இடுவதற்காக இடுகைகளை எழுதியவர்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும். :-)//

இல்லையில்லை! அது உங்கள் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. என்னால் உங்களைப் போல் பொறுப்பாக இருக்கமுடியவில்லையே என்ற வருத்தம்தான் :-)