நினைக்கத்தெரிந்த மனமே!

எழுத்தாளர் சுஜாதா பற்றிய முதல் புரிதலை எனக்கு வழங்கியவர் திருப்புவனம் கிருஷ்ணன் அவர்கள். இவர் என்னை விடப் பெரியவர். ஆயினும் பள்ளி மாணவனான என்னுடன் சமமாகப் பழகுவார். இவருக்கு சுஜாத பிடித்துப் போனதற்கு முக்கிய காரணம் இருவருக்குமுள்ள நகைச்சுவை உணர்வு. கிருஷ்ணனுக்கும் எனக்கும் பிடித்துப் போனதற்குக் கூட அதுவே காரணம். நகைச்சுவை உணர்வை மட்டும் இறைவன் அளிக்கவில்லையெனில் மானுடம் பயித்தியமாய் அலைந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். வசந்த், கணேஷ் பற்றி விலாவாரியாக விவரிப்பார் கிருஷ்ணன். அப்போது படிக்கத்தொடங்கியது! அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியவன் என் மருமான் கோபிநாத். அவன் பெங்களூரில் வேலை பார்த்தான். அப்போது நண்பருடன் சென்று அவரைச் சந்தித்து வந்ததாகச் சொன்னான். அன்றிலிருந்து ஆசை பற்றிக் கொண்டது, சுஜாதாவைப் பார்க்க வேண்டுமென்று.

ஜெர்மனியிலிருந்து இந்தியா சென்ற போது குமுதம் அலுவலகத்தில் அவரைச் சந்திதேன். அப்போது குமுதம் ஆசிரியராக இருந்தார். இருவரும் ஆதமி செயலி பற்றிப் பேசினோம். கூபெக் ஸ்ரீநிவாசன் அவரை வந்து சந்தித்தாகச் சொன்னார். சுஜாதாவைப் பார்த்தவுடன் பிடித்துப்போகும் குணம் கிடையாது. எதிர்மறையாகப் பேசும் அவரைப் பிடிப்பது துர்லபம். அப்போதும் ஆங்கிலவழி தட்டச்சுமுறை பிழை என்று வாதாடினார். ஆயினும் அவர் எனக்கும் நண்பர் எனும் மாற்றத்தைக் கொடுத்தவர் நண்பர் இரா.முருகன். இவர் என்னை அழைத்துக்கொண்டு சுஜாதா வீட்டிற்குச் சென்றார். பின்னால் சிங்கப்பூர் இணைய மாநாட்டின் போது நிறைய நேரம் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு. அதன் பின் ஒருமுறை தேசிகன் என்னை மீண்டும் அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ஆக, இதன் பின் எங்கள் உறவு வலுப்பெற்றுவிட்டது. ஜி.அரவிந்த் என்னைப் பலமுறை அவர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பின் சுஜாதா நான் சென்னை வருவது அறிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்.

நான் பார்க்கும் காலங்களிலேயே அவர் மாற்று இதய சிகிச்சை செய்து கொண்டு பூஞ்சையாகத்தான் இருந்தார். ஆயினும்,தொடர்ந்து ஏதாவது புதுமையாகச் செய்து கொண்டே இருந்தார். நானும் அவரும் சேர்ந்து சன் நியூஸ் சானலுக்கு கணினி பற்றி நிகழ்ச்சிகள் அளித்துள்ளோம். அவரை நான் என்றும் நினைவு கொள்ளும் வண்ணம், நம்மாழ்வாரின் ஈடு பதிப்பு ஒரு சில காப்பிகளே சென்னைப்பதிப்பில் இருப்பதாகவும் உடனே சென்று வாங்குமாறும் என்னை உந்தியது. எவ்வளவு பெரிய பொக்கிஷத்தை எனக்குக் காட்டிக்கொடுத்திருக்கிறார்.

அவர் நினைவாஞ்சலியில் குலசேகர ஆழ்வாரின் இன்னமுதமான பாடலை ஒரு நங்கை அற்புதமாகப் பாடினார். அன்று அதிசயமாக தமிழ் இலக்கிய உலகம் அதிகமாக ஆழ்வார்கள் படைப்புப் பற்றிப் பேசியது! பலர் அவர் ஆழ்வார்களை முறையாக தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுமென்றும் இறைவனிடம் பிரார்த்தித்தனர். அக்கூட்டதில் உத்தமம், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக இரங்கலைத் தெரிவிக்க சென்றிருந்தேன். பெரிய பிரபலங்கள் சூழ்ந்த சூழல். ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் சென்னை வரும் என்னை, அதுவும் முதல் வரிசையில் இருக்கும் என்னை யார் என்று பத்திரிக்கையாளர்களுக்குப் புரிந்து கொள்வதில் சிரமம். சரி, எதற்கும் படத்தை எடுத்து வைப்போம். பின்னால் பயன்படும் என்று பலர் கேமிராவை சொடுக்கிக் கொண்டே இருந்தனர். ஒளிப்படம் வேறு. இப்போதுதான் தெரிகிறது குமுதம் எடுத்த ஒளித்தொகுப்பில் கண்ணனும் பிரபலங்களில் ஒருவராக வெளிவந்துவிட்டார் என்று. மறக்காமல் கடைசிவரை பாருங்கள். கடைசி பிரேமில் ஒரு சில நொடிகள் வருகிறேன்.

சுஜாதாவின் நினைவாக சேர்ந்து ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. அவர் போனபின் நிகழ்ந்த இரங்கற் கூட்டத்தில் அவரது நினவுடன் சேர்ந்து படமெடுத்துக் கொள்ள வேண்டுமென்று இருந்திருக்கிறது. கண்ணதாசன் சொன்னது போல், "நினைக்கத்தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா?" என்று கேட்கத்தோன்றுகிறது. எதற்கு மறக்க வேண்டும்!

2 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/11/2008 05:56:00 AM

நட்சத்திர வாரப் பதற்றமா?

தலைப்பிலே எழுத்துப்பிழை?

தெறிந்த = தெரிந்த

அப்புறம் ஒரு இடத்தில்

இரங்களை= இரங்கலை


மன்னிக்கணும். ப்ரூஃப் ரீடரா இருந்துருக்கேன். அதான் கண்ணு இந்தப் பாடு படுத்துது:-)

நா.கண்ணன் 5/11/2008 09:19:00 AM

உங்களை அதான் ரீச்சர்ங்கறாங்களா? கண்ணிலே விளக்கெண்ணெய் போட்டுப் பார்த்தல் என்பது இதுதானோ? (சரி, திருத்தியாச்சு, நன்றி).

பரிகாரமா! உங்க சமூகத்துக்கு ஒரு பாட்டுப் போட்டிருக்கேன் :-)