சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?

செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்
உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ!சித்தர்களைத் தத்துவார்த்தமாக எப்படிப் புரிந்து கொள்வது என்பதில் ஒரு தெளிவின்மை இருக்கிறது. மேற்சொன்ன சிவவாக்கியர் பாடல் தெளிவாக அத்வைத நிலை பற்றிப் பேசுகிறது. உள்ளிருக்கும் நாதனைக் கண்ட பின் அவனுக்கு குண நலன்கள் கொடுத்து, ஒரு கற்சிலையாக அதாவது மூர்த்தியாக ஏன் வழிபட வேண்டும்? என்று கேட்கிறது இப்பாடல். வேடிக்கையாக இருக்கிறது! காலத்தால் பிற்பட்ட இப்போக்கு உண்மையில் வேத வழிபாட்டை முன் வைப்பது போல் படுகிறது. வேத நெறியில் "தெய்வம்" என்பதை ஒளி வடிவமாக பார்த்தனர். மேலும், தெய்வங்களுக்கு நாம் செய்யும் நிவேதனங்கள் அக்னி எனும் நெருப்பின் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதும் வேத வழியே! எனவே வேத நெறியில் உருவ வழிபாடு என்பது கிடையாது.

ஆகமங்கள் வேறுன்றத் தொடங்கிய இந்தியாவில் இறைவனுக்கு கோயிலமைத்து, உருவ வழிபாடுகள், உற்சவங்கள் அமைத்து வழிபடும் முறை வருகிறது. இதன் பின்னுள்ள தத்துவம் என்னவெனில்? உள்கிடக்கும் (கடவுள்) இறைவனே வெளியிலும் உள்ளான் என்பது. அவனை உள்ளேயும் காணலாம். அற்புதமான குணநலன்கள் கொண்ட மூர்த்தியாகவும் காணலாம். மூர்த்தங்களுக்குப் பின்னால் புராண, இதிகாசக் கதைகள் தேவைப்படுகின்றன. அப்போதுதான் உருவத்திற்குப் பொருள் வரும். 'கண்ணனெனும் கருந்தெய்வம்' என்று சொல்லும் போது கண்ணனின் பெருமைகள் பற்றிய கதைகள் தேவை. பாகவதம் தேவைப்படுகிறது!சித்தர்கள் பேசுவது யோகவழி. ஆனால் முனிவர்களும், யோகிகளும் 'ஹரி, ஹரி' என்று தொழும் பேரரவம் கோயிலில் கேட்பதாகச் சொல்வது பக்தி. பக்தி தோன்றியது தென்னகத்தில், அங்கேயே இதற்கான எதிர்க்குரலும் ஒலித்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது?

சித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்?


பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!

இதுகூட வெளியில் சமூகச் சமன்பாடு பற்றிப் பேசுவது போல் தோன்றினாலும், தத்துவார்த்தமாக அத்வைதமே பேசுகிறது!

சித்தர்கள் உளக்கிடக்கை என்னவென்று யாராவது "ஆசார்ய ஹிருதயம்" எழுத்தியிருக்கிறார்களோ?

10 பின்னூட்டங்கள்:

ஜீவா (Jeeva Venkataraman) 5/18/2008 01:09:00 AM

பக்தியானது அகத்தைச் சுற்றி அவரவர் எழுப்பிக்கொள்ளும் கடுஞ்சுவர்களை தவிடுபொடியாக்கும் அருஞ்சாதனம். அந்த சுவர்களை தகர்த்தெறிந்தபின், சாதனமெல்லாம் எதற்கென்னும் எண்ணம் சரிதானே. காலத்தால் பிற்பட்ட போக்கென வருந்த இதிலென்ன இருக்கு?

நா.கண்ணன் 5/18/2008 09:04:00 AM

ஜீவா! பக்தி பற்றிய கருத்துச் சரியே! ஆனால் என் கேள்வியை நீங்கள் கவனித்தீர்களா? பக்தியுடன் ஆகம முறையும் ஒட்டிச் செல்கிறது. சித்தர்க கேலி செய்வது ஆகமமுறையை!கோயில் வழ்பாட்டு முறைகளை. அதில் ஒரு முரண் இருக்கிறது!

ஜீவா (Jeeva Venkataraman) 5/18/2008 10:08:00 AM

ஐயா, நான் அந்த முறையையே அவர்கள் கேலி செய்வதாக கொள்ளவில்லை. அவர்களின் 'நிலை'யில் இருந்து பார்க்கையில் இந்த ஆகம முறைகளெல்லாம் இளக்காரமாகத் தெரியலாம்.

அவர்களில் நிலையில் இருந்து பார்த்துச் சொல்கிற தகுதி ஏதும் இல்லாததால் - அவர்களுக்கு இப்படிச் சொல்வேனோ - அப்படிங்களா, சரிங்க; உங்களைப்போல ஒரு ஆன்ம முதிர்ச்சி நிலைக்கு வரும் பாக்கியம் எனக்கு ஒருகால் கிட்டினால் அப்ப இது சரியா தவறா என்கிற கேள்வியில் கருத்தில் கொள்கிறேன்; அதுவரை இந்த ஆகம, புராண, சாஸ்திர முறைகளில் எவை எனக்கு சரியெனப் படுகிறதோ - அவற்றை பற்றுகிறேன் என்று ஒதுங்கிவிடுவேன் நான்! - அதனால்தான் தங்கள் கேள்விக்கான நேரடி பதிலை செப்பிடவில்லை!

சில சித்தர்கள் பற்றிய கதைகள் இந்த வலைப்பூவில் கிடைக்கிறது.

நா.கண்ணன் 5/18/2008 10:18:00 AM

ஜீவா! மிக அடக்கமாகப் பதில் சொல்லியுள்ளீர்கள். எனக்கு ஏதும் தெரியுமென்று சொல்ல வந்ததல்ல அக்கேள்வி (ஏதும் தெரியுமா? என்பதே கேள்வி :-)!

தென் தமிழ் நாட்டிற்கென்று சில சிறப்புக்களுண்டு. அதில் பக்தி எனும் அரிய கருத்தை எடுத்து வளர்த்தது, சித்தர்களின் முற்போக்கை வளர்த்தது என்று இரண்டைச் சுட்டலாம். சித்தர்களை ஆன்மீக நோக்கிலும், சமூக நோக்கிலும் பார்க்கமுடியும். அப்படிப் பார்க்கும் போது சித்தர்களின் போக்கு பக்தியைக் கேலிசெய்வது போலும் படுகிறது. அது ஏன்? என்று கேட்டுப்பார்த்தேன்! அவ்வளவுதான்!

பதிலை வைத்துக் கொண்டு கேள்வி கேட்பது ஒரு வழக்கம். கேள்வியைக் கேட்டுவிட்டு, கேள்வியின் ஆழத்தில் மறைந்திருக்கும் பதிலைக் காணுதல் இன்னொரு வழக்கம். நான் இரண்டாவது வகை :-)

Anonymous 5/19/2008 04:35:00 AM

இவர்களுக்கு நேற்று இன்று நாளை எல்லாம் கிடையாது.
முக்காலமும் அறிந்து இருப்பதால். இவர்களுக்கு வழிபாடு
என்பது அர்த்தமில்லாமல் போகிறது! எல்லாருக்குமே இந்த
உணர்வு நிலை ஏன் இல்லை என்று யோசிக்கிறேன்?
கலாச்சார வழிமுறைகள், மற்றும் உணர்வு பூர்வமாக
வாழ்கிறோம்! வலியை உணர்கிறோம்.

இராமாயணத்தில் அகலிகை சாபம் பெறும்
போது, ராமன் வருகையும் சொல்லப்படுகிறது!

நா.கண்ணன் 5/19/2008 10:26:00 AM

சுவாரசியமான அலசல்! யோகம் பற்றிப் பேசும் கீதை முடிவில் 'என்னைச் சரண் அடை' என்று முடிகிறது. நம் முயற்சியில் பிரபஞ்ச ரகசியத்தை அடைவது ஒருமுறை. 'அவன் அருளால் அவன் தாள் வணங்குதல்' இன்னொரு முறை. நாம் சித்தராக வேண்டுமென்பது அவன் விருப்பமெனில் நாம் சித்தராக ஆகி இருப்போமோ என்னவோ?

இராமன் - அகலிகை விளங்கவில்லை?

Anonymous 5/21/2008 12:10:00 AM

சாப விமோசனம் தீர்மானிக்கப்படுகிறது என்றால் ராமன் படப்போகும் துன்பங்களும் துயரங்களும்
தீர்மானிக்கப்படுகிறது. இது மாய உலகின் கட்டமைப்பு. ராமன் தான் அவதார புருஷன் என்ற உணர்வே இல்லாமல் வாழ்கிறான். இது மண்ணில் பிறக்கும் அனைவருக்குமே பொருந்தும். நாராயணன் என்றால் அழியாப் பொருட்களின் இருப்பிடம் என்று சொல்லியிருந்தீர்கள். என்னில் இருக்கும் நாராயணன் எல்லாவற்றிலும் இருக்கிறான், அகிலம் என்பதை அந்தரத்தில் மிதக்கும் அணுக்களின் கூட்டம் என்பதை பார்க்க மாயக் கட்டமைப்பு அனுமதிப்பதில்லை. அடித்தால் வலிக்கிறது. வலியை உணர முடியாத சிறுமியைப் பற்றிய குறும் படம் ஒன்று பார்த்தேன். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது நல்லதாகப் பட்டாலும் இது ஆபத்தானது. இந்தக் கட்டமைப்பை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!
நதிக்கரையில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணரிடம், தண்ணீரில் நடக்கக் கற்றுக் கொடுக்கும்படி
ஒருவன் கேட்டானாம். கொஞ்சம் காசு கொடுத்தால் ஓடக்காரன் அக்கரையில் கொண்டு போய்
சேர்த்து விடுவான் என்றாராம். காசு வாங்காமலேயே கரை சேர்க்க கண்ணனோ கந்தனோ காத்திருக்கிறான். தண்ணீரில் நடப்பதற்குக் கற்றுக் கொடுப்பது சித்தர் வழி.

அவர்களின் பாடலான
"மாங்காய்ப்பாலுண்டு" என்ற பாடலை அவர்களிடமே திரும்பச் சொல்லி அவர்களை கேலி செய்து விடுவோம் :-)

நா.கண்ணன் 5/21/2008 07:50:00 AM

அடேங்கப்பா! அற்புதம். இவ்வளவு இருக்கா. சொல்லுங்க..சொல்லுங்க!

ஆழ்வார்கள் இராம அவதாரத்தை விட கிருஷ்ணாவதாரத்தை நினைத்துத்தான் பதறுகிறார்கள். இராமன் இராஜாவீட்டுப் பிள்ளை. கூடவெ இளைய பெருமாள் வேறு இருக்கிறார். கிருஷ்ணனோ அறியா (?)ப்பிள்ளை. புள், பூண்டு கூட அசுர வடிவம் எடுத்துவிடுகிறது. இதனால்தான் நந்தகோபன் ஒரு கூர் வேலை எப்போதும் வைத்திருப்பானாம். கண்ணன் கதையைக் கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் பக், பக்கு என்று இருக்குமாம் ஆழ்வார்களுக்கு!

மாயா உலகை அனுபவிக்க ஆழ்வார்கள் வேண்டும் போலும்! வலி இல்லை எனும் போது ரசிப்பும் இல்லாமல் போய்விடுமோ?

Anonymous 11/20/2008 11:37:00 AM

கண்ணனை நாமும், நமக்கும் சாரதியாகப் பார்க்கப் பழக வேண்டும். கண்ணனுக்கு நாம் சாரதி
என்று மனித மனம் சொல்லும். நந்தகோபனும் இங்கே விதிவிலக்கல்ல. நான் என்ற சிந்தனை,
என்னால் என்ற சிந்தனை, இதற்கெல்லாம் காரணம். சரணாகதி அருமையான தத்துவம்.
சிறு குழந்தை தன்னைத் தூக்கும் தாய் கீழே போட்டு விடுவாள் என்று நினக்கிறதா? குழந்தையாக வேண்டும், மறுபடியும் குழந்தையாக வேண்டும். உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது.

நா.கண்ணன் 11/20/2008 01:24:00 PM

உலகில் இரண்டு பெருஞ்சமயங்களில்தான் தெய்வத்தைக் குழந்தையாகப் பார்க்கும் ப்ழக்கமுள்ளது. ஆயினும் கண்ணன் எனும் உருவகத்தை விஞ்சுவது ஏதுமில்லை. குழந்தையாய் நாமிருந்துவிட்டால் கடவுளாய் நாமிருக்கிறோம் என்று பொருள்!!