திமிங்கில வேளாண்மை

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.

கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!

Deepest Point in the World (and Pacific Ocean)
Challenger Deep, Mariana Trench, Western Pacific Ocean: 35,840 feet / 10,924 meters
Deepest Point in the Atlantic Ocean
Puerto Rico Trench: 28,374 feet / 8648 metersDeepest Point in the Arctic Ocean
Eurasia Basin: 17,881 feet / 5450 meters

Deepest Point in the Indian Ocean
Java Trench: 23,376 feet / 7125 meters

Deepest Point in the Southern Ocean
Southern end of the South Sandwich Trench: 23,736 feet / 7235 meters

உலகின் 70% பரப்பு நீரில் அமைந்துள்ளது. கடல் உலகின் 97% நீரைத் தன்னுள் வைத்துள்ளது. அதில் 2% உறை நிலையில் உள்ளது. உலகில் அடங்கியிருக்கும் நீரின் அளவை 1.400.000.000 km3 என்று கணக்கிட்டுள்ளார்கள். இதில் m3 நீர் என்பது 1,000 லிட்டர் நீர் அளவைக் குறிக்கும். ஆக, இவ்வளவு பரந்து பட்ட ஓர் நீர் பரப்பு என்பதுதான் உலகின் ஜீவிதத்திற்கு ஊன்று கோலாய் உள்ளது. "வான் சிறப்பு" என்று வள்ளுவன் "பாயிரத்தை"த் தொடர்ந்து பாடுவதற்கு பொருள் இருக்கிறது. அவனே சொல்வது போல் "நீர் இன்றி அமையாது உலகு".

இந்தப் பெரும் பரப்பை மனிதன் முறையாகக் கையாளத் தொடங்கும் போது பல அற்புதங்கள் நிகழும். ஆனால், முறையாக கடல் வளத்தை, கடல் இயங்கும் விதத்தை மனிதன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. கஞ்சி காணாதவன் விருந்தில் உண்பதுபோல் மனிதன் கடல் வளத்தை முறையின்றி அணுகிவருகிறான். ஒரு வளம் இருக்கிறது என்றால் முதலில் அதைச் சுரண்டி ஒழித்துவிடுவது மனிதனின் இயல்பாக உள்ளது. உதாரணமாக உலகின் நுரையீரல் என்று சொல்லப்படும் பிரேசிலின் சுடுமழைப் பிராந்தியத்தை (tropical rain forests) வெகு வேகமாக அழித்து வருகிறான் மனிதன். நுரையீரலை அழித்துவிட்டு எப்படி பின் சுவாசிக்க முடியும்? அமெரிக்காவில் பிரயரீ(Prairie) எனும் நிலப்பரப்பு பரந்து விரிந்து கிடந்தது. அதன் வேளாண் தன்மையறிந்து அதை முழுவதுமாக மாற்றத் தொடங்கி இன்று அது இருந்த நிலையிலிருந்து வெறும் 20% மட்டுமே உள்ள அளவு குறைந்துவிட்டது! இதைச் செய்யும் போது அங்கு வாழ்ந்த காட்டு எருமைகளைக் கன்னாபினாவென்று மில்லியன் கணக்கில் கொன்று குவித்தான் மனிதன். அதாவது, காட்டு எருமைகள் வாழ்ந்த இடத்தை அபகரிக்க அவைகளைக் கொல்வதைத் தவிர மாற்று வழி தெரியவில்லை மனிதனுக்கு.

இந்தப் பின்னோட்டத்தில்தான் மனிதனின் இறைச்சித் தேவையை பூர்த்தி செய்ய கடலில் பண்ணைகள் அமைத்து திமிங்கிலங்களை வளர்த்து, சாகுபடி செய்தால் என்ன? எனும் கேள்வி எழுகிறது. இது சாத்தியமே! இப்போது கொரியாவில் 'நத்தைச் சாகுபடி' (oyster culture), மீன் சாகுபடி (fish culture) இம்முறையில் நடத்தப்படுகிறது. திமிங்கிலம் என்பது கடல் சார்ந்து வாழும் நாடுகளான ஜப்பான், கொரியா போன்றவைகளுக்கு முக்கியம். கொரியாவில் திமிங்கில வேட்டை தடை செய்யப்பட்டு விட்டாலும், ஜப்பான் இன்னும் முழுமையாக இதற்கு இணங்கவில்லை. காரணம், அது உலகில் இன்னும் திமிங்கிலங்கள் நிறைய உள்ளன, அவைகளைக் கொல்வதில் தவறில்லை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. திமிங்கிலங்கள் வலசை போகும் பிராணிகள். அவை ஆயிரக்கணக்கான மைல்கள் வலசை போகக் கூடியவை. அவைகளின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வளம் கடலிடம் மட்டுமே உள்ளது. இது பற்றிய முழுமையான அறிவியல் புரிதல் நமக்கு ஏற்படும் போது திமிங்கில வேளாண்மை சாத்தியமே! இப்போது scientific whaling எனும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் திமிங்கில வேளாண்மை என்பது இன்னும் அறிவியல் கடலாய்வுத் திட்டத்தில் அமுல் படுத்தும் நிலையில் இல்லை.

கடலில் எப்படி வாழ்வது என்பது பற்றிய ஆய்வில் கொரியாவும், ஜப்பானும் அதிக ஆர்வம் கொண்டுள்ளன.

4 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 5/18/2008 11:48:00 AM

ஜபானியர்கள் ஒரு பக்கம் திமிங்கலத்தை வேட்டையாடினாலும் இந்த மாதிரி ஆராய்சி செய்து அதை அழிவில் இருந்து காப்பாற்றினால் நல்லது.

நம்மூரில் ஏன் திமிங்கலம் வேட்டையாடப்படுவதில்லை? அந்த பக்கம் அவ்வளவாக இல்லாத்தது தான் காரணமா?

நா.கண்ணன் 5/18/2008 05:29:00 PM

ஜப்பானில் நான் ஆய்வு செய்த குழு இவ்விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்தியர்கள் புலால் மறுத்தல் எனும் உயரிய பண்பால் திமிங்கில வேட்டையில் ஈடுபடுவதில்லை. வங்காள விரிகுடாவிலும், இந்திய மகா சமுத்திரத்திலும் திமிங்கில வகைகள் உண்டு. நன்னீர் டால்பின் கங்கை ஆற்றிலேயே உண்டு.

நா.கண்ணன் 5/24/2008 09:26:00 PM

பேரா.ரெ.கார்த்திகேசு:

"வான் சிறப்பு" என்று வள்ளுவன் "பாயிரத்தை"த் தொடர்ந்து பாடுவதற்கு பொருள்

இருக்கிறது. அவனே சொல்வது போல் "நீர் இன்றி அமையாது உலகு".

கண்ணன்,

கடலைப் பற்றிப் பேச வந்த நீங்கள் மழையைப் பற்றிப் பேசுவதால்

இந்தக் கேள்வி. மழைக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

முதலில் கடல் உருவாகி அதிலிருந்துதான் மழை உருவாகியிருக்க

வேண்டும் என்பது என் ஊகம். கடல்தான் மழையை வாழ்விக்கிறது;

vice-versa அல்ல. ஆனால் மழை குன்றிவிட்டால் கடல் வற்றிவிடும் என

வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அறிவியல் பார்வையில் சரிதானா?

இனி கொஞ்சம் வேற்றுப் பாதையில் ஒரு கேள்வி:

மழை, உழவு முதலியவற்றைப் பாராட்டிய வள்ளுவர் இரண்டுக்கும் முக்கிய

காரணமான சூரியனை ஏன் பாராட்டவில்லை? சூரியன் இல்லாமல்

மழையும் உழவும் ஏது?

நா.கண்ணன் 5/24/2008 09:55:00 PM

அன்பின் ரெ.கா: மழைதான் முதலில் தோன்றியது. வள்ளுவர் சொல்வது சரியே. முதலில் வெறும் வளியாக இருந்த பிராணவாயுவும், எரிவாயுவும் ஒன்று சேர்ந்து நீர் ஆகின்றது. அந்த நீர் படியும் போது மழை, கடல் உருவாகின்றன!

ஒரு வேடிக்கை! வள்ளுவன் மழையைப் பாடும் முன் "கடலை"ப் பாடியுள்ளான் என்று மதுரைத் திட்டம் சொல்கிறது!!

வள்ளுவர் ஏன் சூரியனை வாழ்த்தவில்லை? நல்ல கேள்வி. கப்சிப் காரா வடை!!