கடலே! கடலே!!

கடல் நம் மூத்ததாய். இது பலருக்குத் தெரியாது. காற்றை சுவாசித்துக் கொண்டு, தரையில் நடைபோடும் மானுடப் பிறவி கடலிலிருந்து வந்தது என்றால் யார் தான் நம்புவர்? குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றால் அவன் தாய் குரங்கு போல் இருக்கிறாள் என்று பொருள் அல்ல. அல்லது அவனது தாத்தா, பாட்டி குரங்குகள் என்றும் பொருள் அல்ல. உயிர் அனைத்தும் கடலிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. இந்தப் புரிதல் நம் புராண இந்தியர்களுக்கு இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லையெனில் திருப்பாற்கடல் கதை ஏன்? கடலைக் குடையக் குடைய மனித வாழ்விற்கான பொருட்கள் வருகின்றன என்று பூடகமாகச் சொல்வானேன். இந்திரா பார்த்தசாரதி எழுதுவார் கடலிலிருந்து உப்பு எடுத்ததையே அமுதம் என்று சொல்வரென்று. உப்பில்லாமல் வாழ்வு ஏது? நீரில்லாமல்தான் வாழ்வு ஏது? பனிக்குடம் உடைந்தால் உயிர்கள் ஜனிக்கும் என்றோரு ஒரு சினிமாப்பாட்டு. ஏன் குழந்தை நீரில் தவழ வேண்டும்? மனித உடலுள் ஒரு சிறு கடலை உருவாக்கி அதில் சிசுவைத் தவழவிடும் விந்தை நம் முன்னாளைய உயிர் சூழல் கடலிலிருந்து என்று காட்டுவதற்கே!

ஆயினும் கடலின் ஆழ, அகலத்தைப் பார்த்து மனிதன் பயந்துவிட்டான். கடல்தாண்டிப் போகாதே! என்று சாஸ்திரம் வேறு எழுதிவிட்டான். எந்த நீரிலிருந்து உயிர்கள் உருவாயினவோ அந்த நீரே இவன் உயிர் கொல்லும் ஊடகமாக மாறிப்போனதும் விந்தைதான். ஆயினும் கப்பல் தொழில் முன்னேறிய இக்காலக்கட்டத்தில், வானிலிருந்தே கடலைக் கண்காணிக்கக் கூடிய தொழில்நுட்பம் சாத்தியப்படக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில் கடல் முன்பு போல் பயமுறுத்துவதில்லை.சுனாமி, புயல் போன்ற பேரழிவுச் சக்திகள் முன் மனிதன் தூசு என்கின்ற ஒரு பயம் என்றுமுண்டு. அதற்கு மனிதன் பயப்பட்டுதான் ஆக வேண்டும். ஆனால் அமைதியான கடல் ஆராயப்பட வேண்டிய ஒன்றே (the next frontier to explore after space).முல்லை/மருத நிலத்து ஆசாமியான நான் இந்த நெய்தல் ஆய்வில் விழுந்ததும் தற்செயல்தான். உண்மையில் உண்மையான கடல் ஆய்வாளர் என்று சொல்லிக்கொள்ள மாட்டேன். தரையில் மனிதன் செய்யும் தொழிற்புரட்சி கடலை எப்படிப் பாதிக்கிறது எனும் துறையில் நான் விழுகிறேன். எனவே கடல்வள மேம்பாட்டுக் குழுவின் சார்பாக ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டு நாடுகளின் வருடாந்திரக் கூட்டத்தொடருக்கு கொரியாவை முன்னிலைப் படுத்தி நான் பெரு நாட்டிற்குச் சென்றேன். ஒரு வாரம் நடந்த கூட்டமது. ஒரு நாளைக்கு பல அமர்வுகள். பல விஷயங்கள் அலசப்பட்டன. அறிவியல் அரசியலை நேர் கொள்ளும் தருணம். அறிவியல் இறையாண்மை நெறியாளர்களை நேர் கொள்ளும் தருணம். உலகம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது! இருபான்மையினரும் தங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் கொஞ்சமாவது இத்துறைகள் பற்றிய அறிவு வேண்டும். அல்லது கற்றுக் கொள்ளும் கூரிய புத்தி வேண்டும். இது அங்கு வந்திருந்த எல்லோருக்கும் இருந்தது.

கடல், மனிதன் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய பொக்கிஷம். கடலிலிருந்து மீன் மட்டுமா கிடைக்கிறது? உப்பு போன்ற கனிமம். எண்ணை, எரிவாய்வு, அலைச் சக்தி, கனிமப் படிவங்கள் இப்படி. ஆயினும் கடலின் பெரிய சொத்து மீன் போன்ற உயிர் வாழ் இனங்களே. ஒரு காலத்தில் திமிங்கில எண்ணெய் என்பதே ஐரோப்பிய இரவுகளை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தன. கடல் உணவு என்பது இந்தியர்களுக்கு அவ்வளவு பரிட்சயமில்லாத ஒன்று. ஆனால் சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான் போன்ற நாடுகள் கடலையே நம்பியுள்ளன. இந்தியா எப்படி வேளாண்மையை நம்பி உள்ளதோ அது போல் இவர்கள் கடளாண்மையை நம்பியுள்ளனர். கடலிலிருந்து பாசி, நத்தை, மீன், நத்தைகள், நண்டு என்று எத்தனையோ உணவுகள். புரதங்கள்.எனவே கடல் பற்றிய ஆய்வும் புரிதலும் கிழக்காசியாவிற்கு இன்றியமையாதது.

மனிதனின் அபரிதமான தொழில் வளர்ச்சி அவனது வாழ்வை மெல்ல, மெல்ல சிதைக்கத் தொடங்கியுள்ளது. வளர்ச்சி என்று சொல்லிவிட்டு சிதைக்கும் என்றால் பொருந்தவில்லையே? ஆனால் உண்மையில் நமது எரிவாயுக்கள் காற்று மண்டலத்தில் சென்று பாதிப்பதால் நமது பருவக்காற்றின் திசை மாறிவிடுகிறது. மீத்தேன், ஃபிரியோன் போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டுவிட்டன. மண்ணிலிருந்து கிளம்பும் கரியமில வாய்வு கடலின் அமிலச்சத்தைக் கூட்டுகிறது. இவற்றின் விளைவுகள் எப்படியிருக்கும்? பூமி மண்டலம் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு சூடேறத்தொடங்கிவிட்டது. இச்சூட்டால் கடல் சார்ந்த சில நிகழ்வுகள் மாற்றம் கொள்ள ஆரம்பித்துள்ளன. உதாரணமாக தென்மேற்குப் பசிபிக்கில் தொடங்கும் எல்நினியோ எனும் வெப்ப நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களின் வலசை போதலைக் கட்டுப் படுத்துகிறது. ஸ்பானிஷ் மொழியில் எல் நினியோ என்றால் பாலகன் ஏசு என்று பொருள். ஏன்? பெரு நாட்டின் கடல் சார்ந்த மக்கள் மீன் விளைச்சலை நம்பியே வாழ்கின்றனர். கிறிஸ்துமஸ்க்கு முன்னால் எல் நினியோ நீரோட்டம் அக்கரைகளுக்கு வந்து சேரும் இந்த வெப்பமாற்றத்தைத் தாங்காத மீன்கள் கடலின் ஆழத்திற்கும் பிற திசைகளுக்கும் சென்றுவிடும். எனவே மீன் சாகுபடி அங்கு நின்று போகும். எனவே ஏசு பாலகன் வரும் நேரமிது என்பதைக் குறிக்க இந்த நீரோட்டத்தை எல் நினியோ என்றழைத்தனர். தென் அமெரிக்காவில் தோன்றிய முதல் தேவாலயத்தைக் கண்ணுறும் வாய்ப்பு "பாய்த்தா" எனும் பெரு நாட்டுக் கிராமத்தில் கிடைத்தது!கடலின் வளத்தைச் சேதப்படுத்தாமல் எப்படி நித்ய சாகுபடி செய்வது என்பதே இன்றையக் கடலியல் ஆய்வு. எப்படி நமது நடவடிக்கைகள் கடலைப் பாதிக்கிறது? அதை எப்படி அளந்து அறிவது? மண்ணில் பல உயிரினங்களை பூண்டோடு அழித்துவிட்டோம். அதுபோல் கடற் சாகுபடி மூலம் மீன் இனங்களையும் அழித்து விட்டோமா? அவ்வினங்கள் சுய மீள்ச்சி பெறும் முன் அவைகளைச் சாகுபடி செய்துவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன? போன்ற பல கேள்விகள்.

உதாரணமாக கொரிய, ஜப்பான் போன்ற நாடுகளில் ஜெல்லி மீன் என்பது பெருந்தொல்லையாகிவிட்டது. ஏன் திடீரென்று இவ்வினம் பெருகிவிட்டது? மீன்களை கொள்மேற் சாகுபடி செய்துவிடும் போது மீன்கள் செய்துவந்த உயிரியல் பணியை நிரப்பஜெல்லி மீன்கள் வருகின்றன. அல்லது அதைக் கட்டுப்படுத்தும் காரணி இல்லாததால் அவை பெருகிவிடுகின்றன என்பது போல் ஆய்வுகள் காரணங்களைச் சுட்டுகின்றன. எனவே system's approach to ocean management என்பது புதிய துறை! எப்படி ஒன்றோடொன்று தொடர்புடையன, அவைகளை எப்படிப் புரிந்து கொள்வது, எப்படி அளந்து நெறிப்படுத்துவது இப்படிப் பல கூறுகள் கொண்ட துறை. அடுத்த கூட்டத்தொடர் கேனடாவிலுள்ள வாங்கூவர் எனும் நகரில். அது போது இத்துறையை உள்வாங்கிக் கொள்ள ஒரு பட்டறை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

7 பின்னூட்டங்கள்:

ஆயில்யன். 5/06/2008 08:33:00 PM

//கடலின் வளத்தைச் சேதப்படுத்தாமல் எப்படி நித்ய சாகுபடி செய்வது என்பதே இன்றையக் கடலியல் ஆய்வு. எப்படி நமது நடவடிக்கைகள் கடலைப் பாதிக்கிறது? அதை எப்படி அளந்து அறிவது? மண்ணில் பல உயிரினங்களை பூண்டோடு அழித்துவிட்டோம். அதுபோல் கடற் சாகுபடி மூலம் மீன் இனங்களையும் அழித்து விட்டோமா? அவ்வினங்கள் சுய மீள்ச்சி பெறும் முன் அவைகளைச் சாகுபடி செய்துவிட்டால் அதன் விளைவுகள் என்னென்ன? போன்ற பல கேள்விகள்///

மற்ற உயிரினங்களை அழித்து நாம் வாழ்ந்தோம்! இனியாவது மற்ற உயிர்களோடு வாழ்ந்து பார்ப்போம் கேள்விகளுடனே தொடங்கும் விஷயங்கள் கண்டிப்பாய் நல்ல விடைகளினை வெளிச்சமாய் காண்பிக்க ஆய்வுகள் உதவும்!

//இத்துறையை உள்வாங்கிக் கொள்ள ஒரு பட்டறை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.//

முன்கூட்டிய வாழ்த்துக்களுடன்

வடுவூர் குமார் 5/06/2008 09:04:00 PM

ஹூம்,நாங்கலெல்லாம் கரையில் நின்றே ஹோ! என்று பார்க்கபழக்கிட்டோம்.
வான்வெளி போல கடல் கூட அளக்கமுடியாத (இன்றும்) இருப்பது ஆச்சரியம் தான்.

நா.கண்ணன் 5/07/2008 07:35:00 AM

குமார்: ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்று சொல்லி வந்தோம். இன்றும் ஆப்பிரிக்காவின் பலம், அதன் கனிம வளங்களே. மேலும் அங்கு காணும் biodiversity ஆச்சர்யமானது. ஆப்பிரிக்காவைப் போல் பல ஆப்பிரிக்காவை உள்ளடக்கக் கூடியது கடல். உலகின் 2/3 பாகம் கடல்தானே! கடலுள் வாழ் முடியுமா? என்பதும் எங்கள் ஆய்வகத்தின் futuristic ஆய்வு. சாம்சுங் கம்பெனி கடல் நகர அமைப்பைப் பற்றி இப்போதே திட்டமிட்டு வருகிறது. கடலிலிருந்து methane hydrate எனும் உரைவடிவ எரிவாயு கிடைக்கிறது. மாங்கனீஸ் எனும் கனிமம் கிடைக்கிறது. என்ன இல்லை? அங்கு? ஆனால் space போல் இதுவும் சாவால் நிறைந்த பிரதேசம். எங்கு சவால் உண்டோ அங்கு கண்டுபிடிப்புகள் உண்டு என்பது நிச்சயம்.

துளசி கோபால் 5/07/2008 09:07:00 AM

கடலுக்கடியில் ஒரு அற்புத உலகம் இருக்கு.

பார்க்கப் பார்க்கத் தெவிட்டாதது.

ஹைய்யோ..... என்ன மாதிரி வர்ணங்கள்.......

நா.கண்ணன் 5/07/2008 09:29:00 AM

கடலைப் பற்றிய புரிதலை விட பீதியே அதிகம் இருக்கிறது. அன்று ஒரு ஆவணத்தில் ரே மீன்கள் எவ்வளவு இனிமையானவை என்று காட்டினார்கள். ஆனால் நமக்கு ஞாபகம் வருவதெல்லாம் Jaws படம்தான்! கடலுள் ஆயிரம் அற்புதங்கள் உள்ளன. இந்தோனீசியா Coral Triangle என்றொரு பெரிய திட்டம் வகுத்துள்ளது. அதன் மூலம் இவ்வழகிய உயிரினங்களை பாதுகாக்கத் திட்டம். கன்னியாகுமரியில் வெடி வைத்துத் தகர்ப்பதாகக் கேள்விப்பட்டபோது மனது துடித்தது. ஆயில்யன் சொல்வது போல் "எத்தனை கோடி இன்பம்" என்று ரசிக்கத்தெரியாமல் கொன்று குவிக்க எப்படி மனம் வருகிறது?

நா.கண்ணன் 5/18/2008 09:31:00 AM

கடலின் அற்புதங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். படித்ததும் சில மாதங்களுக்கு முன் படித்த காலஞ்சென்ற விஞ்ஞானி ஞானி (scientist sage) ஆர்த்தர் கிளார்க்கின் “The Deepe Range” என்னும் அறிவியல் புனைவு நினைவுக்கு வந்தது. இந்த நூலை கிளார்க் 1968-இல் எழுதியுள்ளார். ஆனால் கதை நிகழும் காலம் 2021. இதன் பின்னட்டை blurb இங்கு தருகிறேன்:

Since the beginning of time the sea has worked its will on humanity, and for as long man has struggled against its awesome power. But in the 21st century man believed the battle finally won: the sea, mankind’s age-old enemy, has finally been conquered. Professionals like Walter Franklin now patrolled the infinite savannahs of the oceans, harvesting from the plankton prairies a crop which fed the world. But like the other great frontier, space, the sea had still not yet yielded all its secrets....

கடலுக்குள் உள்ள இந்த அகன்ற புல்வெளிகளில் ப்ளாங்க்டன் உற்பத்தி செய்து ஆங்கே திமிங்கிலங்களை மேயவிட்டு மாட்டு மந்தைகள் போல் வளர்க்கிறார்கள். நிலப்பிரதேசங்கள் வறண்டு போன நிலையில் கால்நடைகள் இல்லாமல் போகின்ற ஒரு எதிர்காலத்தில் திமிங்கிலங்களே தலையாய இறைச்சி உணவாகப் பயன்படுகின்றன. கடலுக்குள் பிரம்மாண்டமான தொழுவங்கள் அமைத்து வளர்க்கிறார்கள். பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் அறுக்கும் பதப்படுத்தும் இடங்களாக இருக்கின்றன.

இந்தக் கதை எழுதும் கரு ஜேக்ஸ் குஸ்டோவின் எழுத்துக்களிலிருந்து தாம் பெற்றதாகவும் கிளார்க் கூறியுள்ளார்.

திமிலங்களை உணவு மிருகங்களாக வளர்க்கும் திட்டங்கள் பற்றி உங்கள் மாநாட்டில் பேசப்பட்டதா? இப்போது திமிங்கிலங்கள் பாதுகாக்கப்பட்ட பிராணிகளாகத்தானே பேசப்படுகின்றன?

ரெ.கா.

நா.கண்ணன் 5/18/2008 09:33:00 AM

பேரா.ரெ.கார்த்திகேசுவின் பின்னூட்டம் ஏதோவொரு தொழில்நுட்பக் கோளாறால் நேரடியாக பதிப்பிக்க முடியவில்லை. எனவே நான் அதை இங்கு பதிப்பித்துள்ளேன். என் பதில் அடுத்த தனிப்பதிவாக!