ஆடிப்பழகு!

பி.பி.பி கேளிக்கை எனும் தொலைக்காட்சியில் கொஞ்ச நாளாக நடனம் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். சூப்பர் புரோகிராம் என்றுதான் சொல்ல வேண்டும். நடனம் என்பதுதான் எவ்வளவு அழகான கலை. நம்மவூரில் ஏதோவொரு காரணத்திற்காக அது தேவதாசிகளின் வழக்கு என்றும் பின்னால் கூத்தாடிகள் என்று இகழப்பட்ட சினிமாக்காரர்களின் கேளிக்கை என்றும் ஆகிப்போனது. இப்போது புகழ் பெற்று சாஸ்தீரிய நர்த்தனம் எனப்படும் பரதம் கூட தேவதாசிகளின் குலச்சொத்தாகவே இருந்தது! ஆடல்வல்லான் என்று இறைவனையே கூத்தனாக உருவகிக்கும் தமிழகத்தில் நடனம் என்பதற்கு உண்மையான சமூக மதிப்பில்லாமல் இருப்பது முரண்நகை.

இதுவொரு மத்திய வர்க்க மனோநிலையாக இருக்கலாம். ஒரு சபைக் கூச்சம். ஒரு வெட்கம், இக்கலையை வளர்க்கவிடாமல் முடக்கி இருக்கலாம். எனினும் இப்போது காலம் மாறுகிறது. சமூக விழுமியங்கள் தலை கீழாய் மாறிவிட்டன. தாசிகளின் நடனம் உயர் வர்க்கப் பழக்கமாகிவிட்டது. அங்கொரு மைக்கேல் ஜாக்சென் என்றால் இங்கொரு பிரபுதேவா என்றாகிவிட்டது. குழந்தைகளை நடனமாட உற்சாகப்படுத்துங்கள். நீங்களும் கூச்சப்படாமல் நடனமாடுங்கள். நடனம் மிக நல்ல உடற்பயிற்சி. அது உங்களை இளமையாக வைத்திருக்கிறது.

சினிமா தவிர பிற பொழுது போக்கு அம்சங்களை உற்சாகப்படுத்துங்கள். சினிமா உண்மையில் உங்களை சோம்பல்படுத்துகிறது. அதில் உங்கள் பங்களிப்பென்று ஏதுமில்லை. ஆனால் பாடலில், நடனத்தில் நீங்கள் பங்கேற்கிறீர்கள். அது உங்களை வளப்படுத்துகிறது. ஒவ்வொரு அபார்ட்மெண்டிலும் நடனமாட ஒரு அரங்கு உருவாக்குங்கள். இப்போதெல்லாம் கல்யாண நிகழ்வில் சின்ன டிஸ்கோ உண்டாமே? ஒரு வீடியோ பார்த்தேன். நல்ல சேதிதான்!


0 பின்னூட்டங்கள்: