ஆலவட்டம்!

இன்று நானொரு நட்சத்திரம்! நன்றாகத்தான் இருக்கிறது! யாருக்குத்தான் நட்சத்திர அந்தஸ்து பிடிக்காமல் இருக்கிறது? நட்சத்திரம் என்னும் போது எல்லோரும் பார்க்கிறார்கள். பார்க்கும் போது கவனிக்கப்படுகிறோம் எனும் மகிழ்ச்சி.

கவன ஈர்ப்பு என்பது பிறந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. ஙே! என்று ஒரு அழுகை! உடனே தாயின் கவனம். தெருவில் காணாமல் போனால் ஓ! வென்று அழுகை! உடனே போவோர் கவனம் விழுந்துவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் 'உஸ்..உஸ்' எனும் போது காதலியின் கவனம் விழுந்துவிடுகிறது. வயதாகிப் போனால் 'லொக்கு, லொக்கு' எனும் போது இரக்கப்படும் யார் கவனமாவது விழுந்துவிடுகிறது! ஆக, கவன ஈர்ப்பு என்பது பிறப்பிலேயே நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது.

இப்படி வளர்ந்துவிடுவதால் நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையெனில் நமக்கு எரிச்சல் வந்து விடுகிறது! அதுவே கடுப்பாகி..எங்கெங்கோ இட்டுச் சென்று விடுகிறது. கவன ஈர்ப்பிற்காகக் கொலை செய்வோர் கூட உண்டு. வலையில் கூட வன்முறை செய்வோருண்டு!

அது ஒரு அளவில் பெரிய அடிக்ஷன் ஆகி மகிழ்விற்காக எழுதுவது என்பது போய் மற்றவர் கவனத்திற்காய் எழுத வேண்டிய நிலை வந்துவிடுகிறது. மற்றவர் கவனிக்கிறார்கள் என்னும் போதே பலருக்கு உடல் நெளிய ஆரம்பிக்கும். ஒரு கூச்சம். சொல்ல வருவதை ஒழுங்காய்ச் சொல்வோமா? என்ற உதறல்! சொல்லுகின்ற விஷயம் ரொம்பவும் பெர்சனாலாக இல்லாமல் பொது நலம் பற்றி அமையுமோ? என்ற கவலை! கடைசியில் நமது பெர்சனல் டயரி எனும் வலைத்தளம் ஒரு திண்ணையாக ஆகிப்போக, சில நேரங்களில் சின்ன பத்திரிக்கை அலுவலகமாக மாறிப் போகிறது! பிறகு பத்திரிக்கை தர்மம், அரசியல் நடுவு நிலமை இன்னபிற வந்து நம்மை யார் என்று காட்டிக் கொள்ள, கண்டுபிடிக்க உதவ வேண்டிய இந்த மின்னெழுத்து மீண்டும் முகமூடியணிந்து மிஸ்டர் பொதுஜனமாக மாறிப்போகிறது.

எந்தக் கவனமும் பெறாமல் எழுதுவதற்கு மௌனமாகவே இருந்துவிடலாமே! என்று சொல்வோருமுண்டு. இறைவனே 'சும்மா' கிடக்கப் பிடிக்காமல்தான் இத்தனை வம்புகளையும் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறான், இல்லையா? எனவே பின்னூட்டமில்லாத வலைப்பதிவு உப்பில்லா சாம்பார் போல! எனவே பின்னூட்டத்திற்காகவும் எழுத வேண்டியுள்ளது! சிலர் இதே வேலையாக நண்பர்களை கூட்டி வைத்து கும்மாளம் அடிப்பதுமுண்டு. வலைப்பதிவு இளைஞர்களுக்கு நல்ல பொழுது போக்கு. வயதான, ஓய்வு பெற்றோருக்கு ஒரு இலவசத் திண்ணை. உட்கார்ந்து கொண்டு வம்பளக்கலாம். கேட்க யாராவது ஒருவராவது கிடைக்காமல் போய்விடுவாரா என்ன?

நட்சத்திரம் ஆகும் போது, முகம் மிகவும் பரிட்சயமாகிவிடுகிறது. அதனால் பழகாமலே தோழமை கூட வந்துவிடுகிறது. ஏப்ரலில் இந்தியா போயிருந்தபோது சுஜாதா மறைவு - இரங்கல் கூட்டத்திற்குப் போயிருந்தேன். முதலில் பார்த்தது நடிகர் பார்த்திபனை. இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே? என்ற உந்தல். சரி, எப்படியும் நம்ம நண்பர் கூட்டம்தான் என்று நினைத்து ஒரு 'ஹலோ!' சொல்லி வைத்தேன். அவரும் நட்பாக 'ஹலோ!' சொன்னார். பாதிக் கூட்டத்தில்தான் உதித்தது பார்த்திபன் ஒரு நட்சத்திரமென்று. என் மருமான் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் அளித்து வருகிறான். இவன் கோயிலுக்குப் போனால், யாரென்று தெரியாமலே இவனை உள்ளே விட்டு விடுகின்றனர். பழகிய முகம்! எனும் பாவம். இவையெல்லாம் அனுகூலங்கள்.

ஆனால், கண்ணில் படுகின்ற பழம்தானே கல்லடியும் படுகின்றது!! கவனத்திற்கு ஆசைப்படுவோர் கல்லடிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நம்மால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்ன செய்ய? வாழ்வு விசித்திரமானது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

விமானம் பறக்கும் போது வழித்தடம் விடுகிறது. ஆனால் கிருஷ்ண பருந்து ஆலவட்டம் போடும் போது வழித்தடம் போடுவதில்லை. அப்படியொரு வாழ்வு வாழ்ந்துவிடமுடியுமா? 'நான்' என்ற நிழல் கூடவே விழாமல். முழுவதும்..ஒரு ஸ்படிகம் போல். உள்ளே வாங்கி இறுக்கிக் கொள்ளாமல்..வந்தவாறே வெளியே அனுப்பிவிட்டு..நிம்மதியாக..! ம்..இதுவொரு ஆசைதான். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியுமென்று தோன்றவில்லை. ஏனெனில் நட்சத்திர அந்தஸ்து வந்தவுடன் வாங்கிக் கொண்டுவிட்டேனே! இந்த ஆலவட்டத்தை ஜே.கிருஷ்ணமூர்த்தி அதிகம் பேசுவார். மாயமனிதன் போல் நாம் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் உலகை வேடிக்கை பார்ப்பது. சிலருக்கு அது சாத்தியமாகத்தான் இருக்கிறது. என்னைப் போல சிலருக்கு கருத்தொன்று வந்தால் மாற்றுக்கருத்து உண்டென்றால் சொல்லாதவரை தூக்கம் வராது! பல நேரங்களில் என்னை நான் என் உரத்த சித்தனைகளின் மூலமாகவே அறிந்து கொள்கிறேன். மௌனமாக இருந்து உட்புகுந்து அறிதல் ஒரு உத்தி எனில் உரத்தசிந்தனையும் ஒரு உத்திதான். என்ன, இரண்டாவது மார்க்கம் உங்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியும். உங்கள் உரத்த சிந்தனையை மற்றவர் தவறாகப் புரிந்து கொள்ளலாம், உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்கலாம். இருந்தால் என்ன? அது கூட்டுக் குடும்பத்தில் வாழ்தல் போல. எப்போதும் ஜனநடமாட்டத்துடன். தனித்திருந்து அறிதல் என்பது சந்நியாச மார்க்கம் போல. உலகை விட்டு விலகிப் போய் தன்னையறிதல். என்னைப் பொருத்தவரை இணையம் என்பது மானுடத்தை அச்சாகப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நம் அழகு என்னவென்று இங்கு வந்தால் தெரிந்துவிடும்!

இனி ஒருவாரம், பின்னோட்டத்திற்காக எழுதப் போகிறேன். முடிந்தவரை ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒவ்வொரு வலைப்பதிவும் ஒவ்வொரு விதம். 'பறவைகள் பல விதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்று கண்ணதாசன் சொன்னது போல், இவ்வுலகைக் காணும் வெவ்வேறு ஜன்னல்கள் வலைப்பதிவுகள். ஒவ்வொன்றின் வழியாகப் பார்க்கும் போதும் உலகம் வெவ்வேறு விதமாக கண்ணில் படுகிறது. இதனால்தான் என் வலைப்பதிவை "க" வின் உலகம் என்கிறேன். என்னுலகம், என் கவனங்கள் என்னவென்று ஒரு வாரம் கூட வந்து பாருங்கள்!

தமிழ் மணத்திற்கு நன்றி. மேடையிலிருக்கும் என்னைக் கவனிக்கும் உங்களுக்கும்தான்!

24 பின்னூட்டங்கள்:

திகழ்மிளிர் 5/05/2008 03:47:00 PM

வாழ்த்துக்கள்

/கவன ஈர்ப்பு என்பது பிறந்தவுடன் ஆரம்பமாகிவிடுகிறது. ஙே! என்று ஒரு அழுகை! உடனே தாயின் கவனம். தெருவில் காணாமல் போனால் ஓ! வென்று அழுகை! உடனே போவோர் கவனம் விழுந்துவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் 'உஸ்..உஸ்' எனும் போது காதலியின் கவனம் விழுந்துவிடுகிறது. வயதாகிப் போனால் 'லொக்கு, லொக்கு' எனும் போது இரக்கப்படும் யார் கவனமாவது விழுந்துவிடுகிறது! ஆக, கவன ஈர்ப்பு என்பது பிறப்பிலேயே நமக்கு இயல்பாக வந்துவிடுகிறது./

/கண்ணில் படுகின்ற பழம்தானே கல்லடியும் படுகின்றது!! கவனத்திற்கு ஆசைப்படுவோர் கல்லடிக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நம்மால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்ன செய்ய? வாழ்வு விசித்திரமானது. எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்./

அருமையான வரிகள்

நா.கண்ணன் 5/05/2008 03:50:00 PM

நன்றி திகழ்மிளிர்.

SP.VR. SUBBIAH 5/05/2008 03:56:00 PM

./////ஒவ்வொரு வலைப்பதிவும் ஒவ்வொரு விதம். 'பறவைகள் பல விதம், அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்று கண்ணதாசன் சொன்னது போல், இவ்வுலகைக் காணும் வெவ்வேறு ஜன்னல்கள் வலைப்பதிவுகள். ஒவ்வொன்றின் வழியாகப் பார்க்கும் போதும் உலகம் வெவ்வேறு விதமாக கண்ணில் படுகிறது. இதனால்தான் என் வலைப்பதிவை "க" வின் உலகம் என்கிறேன்.////

அருமை!

கயல்விழி முத்துலெட்சுமி 5/05/2008 03:59:00 PM

நட்சத்திர வாழ்த்துக்கள்...ஒவ்வொருவருக்கும் இருக்கும் கவனிக்கப்படவேண்டுமென்ற ஆசையை சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள்..

நா.கண்ணன் 5/05/2008 04:04:00 PM

நன்றி திரு.சுப்பையா:

பருப்பொருள் உலகம் பல படி நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அளவில் பிரபஞ்சமாக, அதனுள் அண்டமாக, அதனுள் மண்டலங்களாக, அதனுள் கிரகங்களாக, கிரகங்களுள் நீர், நிலையாக, வெவ்வேறு திணைகளாக! திணைகளுள் மனிதர்களாக. மனிதருள் எண்ணமாக. எண்ணத்துள் மீண்டுமொரு பிரபஞ்சமாக! விந்தை! ஒன்று கண்ணில் படு பிரபஞ்சம். மற்றொன்று உளவயப் பிரபஞ்சம்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! இறைவா!

நா.கண்ணன் 5/05/2008 04:08:00 PM

நன்றி கயல்விழி:

ஒரு திண்ணை என்று வரும் போது சிலரது மேலாண்மை இருக்கும். சிலருக்கு சிலர் முன் பேசவே வராது. அதிலும் பால் வேறுபாடு வேறு. ஆயின் தமிழ்மண அரங்கில் எல்லோரும் நட்சத்திரமாகலாம். எல்லோரும் மகிழ்வுடன் கலந்து கொள்ளலாம். இங்கு கூடுதல் சுதந்திரம். கூடுதல் கவன ஈர்ப்பு! வலைப்பூ வெல்க!!

koothanalluran 5/05/2008 05:49:00 PM

முனைவரே

வாழ்த்துகள். சமீபத்தில் சென்னை வந்ததாக அறிந்தேன். சந்திக்க நினைத்தேன் காலம் கை கொடுக்கவில்லை

பேரரசன் 5/05/2008 05:51:00 PM

ஆலவட்டம் என்றால் என்ன என்று சற்று முன் வரை எனக்கு தெரியாது,

நட்சத்திர வாழ்த்துக்கள் அய்யா ....

நா.கண்ணன் 5/05/2008 05:56:00 PM

கூத்தலூரான்:

கவலை வேண்டாம். அடுத்தமுறை தனியாக ஒரு வலைப்பதிவர் கூட்டம் செய்வோம். ஒருவரையொருவர் அறிந்துகொள்ள அது உதவும். சிங்கப்பூரில் அத்தகைய கூட்டமொன்றில் கலந்து கொண்டேன். புதிய நண்பர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அது இருந்தது. நிச்சயமாக அடுத்த வலைப்பதிவாளர் கூட்டத்தில் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கலந்து கொள்வேன். இம்முறை தமிழ் மரபு அறக்கட்டளை வேலையாகவும், வீட்டு வேலையாகவும் அலைய வேண்டியதாகிவிட்டது. வலைப்பதிவாளர்கள் பற்றிய எண்ணமிருந்தும் நான் வருவதை வேண்டுமென்றே முன்னம் சொல்லவில்லை. மன்னிக்க.

துளசி கோபால் 5/05/2008 05:59:00 PM

ஆஹா..... நீங்களா?

ஆல வட்டம் என்னங்க? உங்களுக்குப் பரிவட்டம் கட்டி வரவேற்கின்றேன்.

துளசி வாசம் வீசுதா?

ஜொலிக்கணும் ஆமா....:-)))

நா.கண்ணன் 5/05/2008 06:01:00 PM

ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய The flight of an eagle எனும் புத்தகம் என்னை மிகவும் பாதித்த புத்தகம். ஸ்படிகம் போல் வாழ்தல். கிஞ்சித்தும் கைவராத வாழ்வு..ம்ம்ம் அதற்கு அவர் பருந்தை உதாரணம் காட்டுவது அழகு. பருந்தின் சுவடு மண்ணில்தான் விண்ணில் கிடையாது. ஆல வட்டம் என்றால் கூட எழுதாத ஓர் வட்டம்தான் அது!

நா.கண்ணன் 5/05/2008 06:10:00 PM

துளசி!!

//ஜொலிக்கணும் ஆமா....:-)))//

பயமா இருக்கு! இங்கு கலக்கல் மன்னர்கள் அதிகமுண்டு. தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில், ஜில் ரமாமணி சொல்வது போல், "அவங்க அந்த மேடையிலே ஆடினாங்கன்னா, நான் இங்க, ஒரு ஓரத்திலே ஆடிட்டுப் போறேன்" என்று சொல்லத் தோன்றுகிறது. முதல் முறை கேட்டபோது அதிக வேலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்போது சமாளிக்கக் கூடிய அளவு வேலை. நல்ல வேளையாக இன்று இங்கு விடுமுறை. அதுதான்.

நீங்களோ துளசி. உங்கள் அகத்திலிருக்கும் துளசிகாந்தனிடம் எனக்காக ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள். அப்புறம் அவன் பாடு!

Madura 5/05/2008 06:47:00 PM

மனசுல பட்டதை ஒளிவு மறைவு இல்லாம அப்படியே எழுதிருக்கீங்க :) அப்படி அத்தனையையும் வெளியில் வைப்பதுவும், ஒரு வகை விமோச்சனம் தானே! அதுக்குத்தான் ப்ளாக். கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம், மாதிரி, இது ப்ளாக் யோகம்! :) நீங்களே பாருங்க எவ்வளவு அழகா மனசை திறந்து அத்தனையும் சொல்லீட்டீங்கன்னு! இப்ப மனசு லேசாகி பருந்து போல பறக்கணுமே!

நட்சத்திர வாழ்த்துக்கள்! :)

மலைநாடான் 5/05/2008 07:01:00 PM

அசத்தலான ஆரம்பம். தொடருங்கள். வாழ்த்துக்கள்!

ஜீவி 5/05/2008 07:11:00 PM

அழகாக முன்னோட்டம் போட்டிருக்கிறீர்கள்; சுயபார்வை பாராட்ட வேண்டிய அம்சம். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

நா.கண்ணன் 5/05/2008 07:27:00 PM

அட! பிளாக்யோகம். புதுசா இருக்கே! இந்தப்பிரயோகம். நான் மின்னுலகை ஒரு திணையாகக் கண்டிருக்கிறேன். அது "மனமும், மனம் சார்ந்த உளப்பரப்பு" என்பேன். அதுவொரு யோக மார்க்கமும் கூட என்று காண்பித்த மதுராவிற்கு நன்றி.

ஆயில்யன். 5/05/2008 07:31:00 PM

நட்சத்திர வாழ்த்துக்கள்

//ஒரு திண்ணை என்று வரும் போது சிலரது மேலாண்மை இருக்கும். சிலருக்கு சிலர் முன் பேசவே வராது. அதிலும் பால் வேறுபாடு வேறு. ஆயின் தமிழ்மண அரங்கில் எல்லோரும் நட்சத்திரமாகலாம். எல்லோரும் மகிழ்வுடன் கலந்து கொள்ளலாம். இங்கு கூடுதல் சுதந்திரம். கூடுதல் கவன ஈர்ப்பு! வலைப்பூ வெல்க!!//

நாம் நினைத்தை எழுத இங்கு நமக்கு சுதந்திரம் அதே நேரத்தில் பலரின் ஈர்ப்பினையும் எளிதில் பெற உதவுகிறது இந்த நட்சத்திர திண்ணை என்பது மிகச்சரியே:)

பத்மா அர்விந்த் 5/05/2008 08:22:00 PM

கவனத்தைக் கவர்ந்த பதிவு. அதிக பட்ச கவனம் தரும் சில உபத்திரங்களும் உண்டுதானே. வாழ்த்துக்கள் கண்ணன்.

நா.கண்ணன் 5/05/2008 08:31:00 PM

பத்மா! வாங்க!

நல்லவேளையாக ஆரோக்கியமான, தேவையான அளவு கவனம் பெற்று நாம் வாழ்கிறோம். இந்த பப்பராட்சி துரத்துகின்ற கவனம் விபத்துகளில் கொண்டு போய் முடிந்துவிடுகிறதே! (டயனா). வரப்போகின்ற ஒரு பதிவில் ஒரு வேடிக்கை காட்டுகிறேன். சுஜாதா இரங்கல் கூட்டத்திற்கு நானும் ஸ்வேதாவும் சென்றிருந்தோம். மனுஷ்யபுத்ரன் அழைத்திருந்தார். முதல் வரிசையில் பிரபங்களுடன் அமர்ந்திருந்தோம். இந்தப் பத்திரிக்கைக்காரர்களுக்கு நாங்கள் "ஏதோ பிரபலமென்று" தோன்றிவிட்டது (ஸ்வேதாவை நடிகை என்று நினைத்தார்களோ என்னவோ!) ஒரே பிளாஷ்தான் கடைசி வரையில். உண்மையில் மனதார இரங்கல் செய்யப் போய், கமல் வந்தால் ஒரு கும்பல், வைரமுத்து வந்தால் ஒரு கும்பல், கனிமொழி வந்தால் ஒரு கும்பல் என்று இந்த ஊடக விற்பன்னர்கள் மேடையைச் சூழ்ந்து கொண்டது மட்டுமல்ல. ஒரு இலக்கிய சூழலை, ஒரு இரங்கல் கூட்டத்தைக் கொச்சை படுத்திவிட்டனர். அதிகக் கவனம் ஒன்றுக்கும் லாயக்கில்லை!

பத்மா அர்விந்த் 5/05/2008 09:03:00 PM

நேற்று மல்லிகை செடிகளை வெளியே கொண்டு வைக்கும் போது ஸ்வேதாவின் நினைவுதான். எழுதுங்கள் கண்ணன். மல்லிகை பூவும் சரஸ்வதியும் உடனே எனக்கு ஸ்வேதாவின் நினைவினை மீட்டு வருகின்றன.

குமரன் (Kumaran) 5/05/2008 10:54:00 PM

ஐயா. வழக்கம் போல் இந்த விண்மீன் வாரத் தொடக்கத்திலும் மிகச் சுவையாக எழுதியிருக்கிறீர்கள். சுவைத்துப் படித்தேன்.

தமிழ்மண விண்மீன் வார வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் 5/06/2008 05:34:00 AM

வாழ்த்துக்கள் கண்ணன்.

தருமி 5/08/2008 01:47:00 AM

கண்ணன்,
எல்லோரும் மிக மரியாதையாய் முனைவர் .. அது .. இது.. என்றழைக்கும்போது 'என்னப்பா கண்ணா! எப்படியிருக்கிறாய்?' என்று கேட்கவேண்டுமென்ற ஆவலை ஏறக் கட்டிவிட்டு நானும் எல்லோரையும் போல ..

நட்சத்திர வாழ்த்துக்கள்.

முதல் பதிவே மின்னுகிறது. மனித மன ஆழங்களை இன்னும் அளப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

//வயதான, ஓய்வு பெற்றோருக்கு ஒரு இலவசத் திண்ணை. உட்கார்ந்து கொண்டு வம்பளக்கலாம். கேட்க யாராவது ஒருவராவது கிடைக்காமல் போய்விடுவாரா என்ன?//

அப்போ, கிடைக்கும் அப்டிங்கிறீங்க ..ம்ம்... சரி... காத்திருக்கிறேன்!! :)

நா.கண்ணன் 5/08/2008 09:51:00 AM

அன்பின் தருமி சார்:

நீங்கள் எப்படி என்னை முனைவர் என அழைக்க முடியும்? எப்போதும் உங்களுக்கு நான் "என்னப்பா! கண்ணன்"தானே! மின் தமிழில் ஒரு இழை ஓடிக்கொண்டிருக்கிறது! என் வாழ்வில் புலம் பெயர்வு எப்படி நேர்ந்தது என்று! அதில் நம் அமெரிக்கன் கல்லூரிக் கதை கொஞ்சம் வருகிறது! நம் கல்லூரிக் குழப்பங்களுக்கிடையில் வந்து சென்றதற்கு நன்றி.