பேசும் படம் - உடல் மொழிப் படம்!

இப்படியொரு படம் வந்திருப்பது இத்தனை நாள் எனக்குத் தெரியாது. அந்தக்காலங்களில் நான் இந்தியாவுடன் அதிகத் தொடர்பில்லாமல் ஜப்பானில் இருந்தேன். பொதுவாக இந்தியாவிலிருக்கும் போது கமலின் படங்களைத் தவறவிடுவதில்லை. அவருடைய ரசனை, கலை ஈடுபாடு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் சினிமா என்பதை உண்மையான, உயர்வானதொழிலாகக் கொண்டு, தொழில் நேர்த்தியுடனும், ஈடுபாடுடனும் செயல்படும் மிகச் சில நடிகர்களில் கமல் முதலிடத்தில் இருக்கிறார்.

இது பேசும்படம் என்றாலும் பேசாப்படம். உண்மையான பேசாப்படங்களின் சக்கிரவர்த்தி சார்லி சாப்லிணைத் தன் குருவாகக் காணும் கமல்ஹாசனால்தான் இம்மாதிரி தீவிரக் கலை முயற்சியில் ஈடுபடமுடியும். கொஞ்சம் கூடப் பேசாமல், 'அந்த நாள்' படத்திற்குப் பிறகு பாட்டு, கூத்து என்று இல்லாமல் உலக தரத்திற்கு ஒரு தமிழ் படம் வந்திருக்கிறது. இது பேசாப்படம் என்பதால் தமிழ்ப் படமென்று சொல்லிவிடமுடியாது. இது ஒரே சமயத்தில் ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழி வாழும் இடங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது 1988-ன் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது. Cannes jury என்றழைக்கப்படும் சர்வ தேச திரைப்படக்குழு இப்படத்தை மிகவும் புகழ்துரைத்துள்ளது. இப்படம் பற்றிய குறிப்பு விக்கிபீடியாவில் உள்ளது! மேலும் இப்படம் IMDb எனும் திரைப்படக்கிட்டங்கியில் பத்துக்கு 9.3 மதிப்பெண் பெற்றுள்ளது! சாபு சிரில் தேர்வில் முதல் பத்து சிறந்த இந்தியப் படங்களில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் இப்படத்தைக் காண இங்கே சுட்டவும்!

கமலஹாசனின் மிகையற்ற நடிப்பு. அமலாவின் இயல்பான காதல், நகைச்சுவை வெளிப்பாடு, அடக்கமான இசை, திறமைமான இயக்கம் இவைதான் இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். படம் கடைசியில் சோகமாக முடிவது இப்படத்தை நம் மனத்தில் பதிய வைக்கிறது. பேசாப்படமென்றாலும் கேமிரா அமைத்திருக்கும் விதம், காட்சிகளைக் கொண்டு செல்லும் விதம் இவை மூலம் இப்படம் பேசத்தான் செய்கிறது. இப்படியொரு அற்புதமான முயற்சி எப்படி எனக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போனது? அமலா சாயலில் ஸ்ரீதேவி போல் உள்ளார்.

நகைச்சுவை என்றால் இப்படித்தான் இயல்பாக இருக்க வேண்டும். செய்கைகள் மூலம் எவ்வளவு சொல்லிவிட முடிகிறது! உடல் மொழி என்பது உண்மைதான்!!

1 பின்னூட்டங்கள்:

ஜோ / Joe 5/28/2008 12:38:00 PM

கண்ணன் சார்,
இந்த படத்திற்கு மொழி தேவையில்லை என்றாலும் கூட இந்த படம் முதலில் வெளிவந்தது கன்னடத்தில் 'புஷ்பக் விமானம்' என்ற பெயரில்.