ஒளி படைத்த கண்ணினாய் வா!

ரூ.99 கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வசதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏற்பாடு என்றொரு செய்தியை வாசித்தேன். ஜெர்மனியில் வாழ்ந்த காலங்களில்தான் இந்த மிகப்பெரிய விமானக் கட்டண மாற்றம் நிகழ்ந்தது. இங்கிலாந்தின் சில விமானக் கம்பெனிகள் நினைத்துப் பார்க்கமுடியாத அளவு குறைந்த விமான கட்டணத்தில் பயணத்தை வழங்கின. ஐரோப்பா போன்ற செலவு மிகுந்த பிரதேசத்தில் இதுவொரு அற்புதமாகத் தோன்றியது. ஒருமுறை ரெயினேர் எனும் ஐரிஷ் கம்பெனி அவர்களது சுதந்திர தினத்திற்கு இலவசமாக பயணிகளை டப்பிளினுக்கு அழைத்துச் சென்றது! இது என்ன பொருளாதாரம்? இதை எப்படி சாதிக்க முடிகிறது? அமெரிக்காவில் கூட இவ்வளவு மலிவு கிடையாது. ஆனால் ஐரோப்பாவில் முடிகிறது. சென்ற முறை ஜெர்மனி சென்ற போது என் ஐரோப்பிய பயணங்களை ஏர்பெர்ளின் மூலமாகச் செய்தேன். அவ்வளவு கச்சிதமான பயணம். நல்ல உணவு. படிக்கப் புத்தகம் (சும்மா இல்லே! பிளேபாய் ஆக்கும்!!), சொகுசான பயணம். பஸ்ஸில் போவதைவிட, ரயிலில் போவதைவிட மலிவு.

இது இப்போது இந்தியாவிற்கு வந்திருக்கிறது. இந்தியா போன்ற விரிந்த தேசத்திற்கு மிகவும் உகந்த முறையிது. மார்ச்சில் இந்தியா வந்திருந்த போது, குறைந்த விடுமுறை என்பதால் விமானத்திலேயே பயணப்பட்டேன். அவ்வளவு சௌகர்யமான பயணம்! விமானங்களெல்லாம் புத்தம் புதுசு! ஒரு சத்தமில்லை. சின்ன ஸ்நாக் கொடுத்தார்கள். ஒரு கம்பெனி உள்ளே ஏலம் விட்டார்கள். சுவாரசியமாக இருந்தது. இந்தியாவை மூன்றாம் உலகு என்று இனிமேலும் சொல்ல முடியாது. என்ன! விமானக் கட்டணம் குறைவுதான், பிற வரிகள்தான் விலையைத் தூக்கிவிடுகின்றன. அப்படியும் வெளிநாட்டுப் பயணங்களை ஒப்பிடுகையில் இது மலிவே!

உள்நாட்டில் பயணப்படும் பயணிகள் மிகவும் பதிவிசாக நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் பயணிகள், குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து செல்லும் பயணிகள் கொத்தவால் சாவடிக் கும்பல்போல் நடந்து கொள்கின்றனர். இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்துதானே, இவர்களை விமான சிப்பந்திகளும் நடத்துவார்கள். இது மிகத்துல்லியமாகத் தெரிகிறது. சென்ற முறை இந்தியா போனபோது, சோல், தாய்பெய், பேங்காக், வழியாக சென்னை பயணம். சோல்-தாய்பெய் no problem! தாய்பெய்-பேங்காக் no problem! பேங்காக்-சென்னை? பிரச்சனை விமான நிலையத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது! விமானத்தில்தான் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறதே? ஆனால் ஏறுமிடத்தில் ஒரே கும்பல். ஏதோ பஸ்ஸில் ஏறி முன்னால போய் சீட் போடற மாதிரி. அவர்கள் இந்தந்த வரிசை இப்போது வரவேண்டுமென்று அழைத்தாலும் ஒரே கொத்தவால் சாவடி கும்பல்தான். Naturally, அந்த விமானப் பயணத்தில் சிப்பந்திகள் இந்தியர்களை நடத்தும் விதம் பள்ளி ஆசிரியை மாணவர்களை நடத்துவது போலிருந்தது. டீச்சர் முகத்தில் எப்போதும் ஒரு சிடு, சிடுப்பு இருக்குமே! அதுபோல். தண்ணீர், பழரசம் தவிர வேறு எதையும் கண்ணால் கூட காண்பிக்க மாட்டேன் என்கிறார்கள். இந்தியர்கள் மீது அவ்வளவு பயம்.

இந்தியாவில் 'முதல் உலக' தொழில் நுட்பம் வந்தாகிவிட்டது. அத்தொழில் நுட்பத்துடன் இணைந்து போகும் சமூக நாகரீகம் இன்னும் வந்து சேரவில்லை. இந்தியா மூன்றாம் உலக நாடு அல்ல.விமானங்கள் நேரத்தில் பறக்கின்றன. விமான நிலையத்தில் முன்பு போன்ற தேவையற்ற சிவப்புநாடாக் கெடுபிடிகளில்லை. இரயில் சொன்ன நேரத்திற்கு வருகிறது. எந்த போகி எங்கு நிற்குமென்று முன்னமே தெரிகிறது. வீட்டிலிருந்தவாறே இரயில் பயணத்தைச் சீர்செய்து கொள்ளமுடிகிறது. பெரிய சொகுசு பேருந்துகளெல்லாம் வந்திவிட்டன. பால் கிடைக்கிறது, மோர் கிடைக்கிறது, நெய் கிடைக்கிறது, ஹார்லிக்ஸ், போர்விட்டா, நூடுல்ஸ், தானியங்கள் (காலையுணவு) வெளி நாட்டில் கிடைக்காதது என்ன கிடைக்கவில்லை இந்தியாவில்?

ஏழ்மையைக் கணக்கில் கொள்ளமுடியாது. ஏழ்மை அமெரிக்காவிலும் இருக்கிறது. வீடற்ற அநாதைகள் பிரான்சில், ஜெர்மனியில், ஜப்பானில், கொரியாவிலுண்டு. ஆனால் அங்கெல்லாம் ஒரு சமூக ஒழுங்கு இருக்கிறது. அச்சமூக ஒழுங்கு அரசாங்கம் கொண்டு வருவதல்ல. மக்களாக தங்கள் சௌகர்யத்திற்கு ஏற்படுத்திக் கொண்டது. உதாரணமாக பஸ் வந்து நிற்கிறது என்றால் காட்டுக் கும்பலாக ஏற முற்படாமல் வரிசையாக நின்று ஏற வேண்டும் என்பது இங்கிலாந்தில் எழுதாச் சட்டம். பஸ்ஸில் போகும் போது ஒருவருக்கொருவர் மெலிதாகப் பேச வேண்டுமென்பது ஜெர்மனியில் எழுதாச் சட்டம். சிவப்பு விளக்கு எரியும் போது வீதியைக் கடக்கக்கூடாது என்பது அங்கு எழுதாச் சட்டம். இது மக்களுக்கு மக்களால் உருவாக்கிக்கொண்ட பாதுகாப்பு.

குப்பை இல்லாத இந்தியா!
கூளம் இல்லாத இந்தியா!
சாக்கடை பாயாத வீதிகள்!
கழிப்பிடமற்ற இடத்தில் விலங்குகள் போல் கழிக்காத இந்தியா!
சுவற்றில் நோட்டீஸ் ஒட்டாதே! என்ற அறிவிப்பு இல்லாத இந்தியா!
ஊரில் சடங்கு என்றால் காலையிலேயே ஊரைக் கலக்கும் லவுட் ஸ்பீக்கர் இல்லாத இந்தியா!
இரவுப் பயணம் என்று சொல்லிவிட்டு ஒரு சினிமாவை ஓடவிட்டு சத்தமாகப் பிராணனை வாங்காத இந்தியா!
பஸ்ஸில் போய்க்கொண்டு இருக்கும் போதே பளிச்சென்று வெளியே எச்சல் துப்பாத இந்தியா!
தெருவில் உந்து வண்டிகளைத் தவிர ஆடுமாடு, கழுதை, பன்றி இவை வந்து போகாத இந்தியா!

ஏன் உருவாகவில்லை இன்னும்? மக்கள் யாருக்கோ காத்திருக்கிறார்கள். யாரும் செய்யப் போவதில்லை. கலைஞர் ஆட்சி, கலைஞர் குடும்பத்திற்கே! அமிதாப் சினிமா அடுத்து அபிஷேக்கிற்கே! எல்லோருக்கும் அவரவர் குடும்பமே பிரதானம். பின்? நாம்தான் செய்ய வேண்டும். முடியாதா?

பெரு ஏழை நாடுதான். தெருக்கள் சுத்தமாக உள்ளன. கம்போடியா ஏழை நாடுதான் வீதிகளில் குப்பை இல்லை. பிலிபைன்ஸ் ஏழை நாடுதான், அடுத்தவர் வீட்டுச் சுவரில் போஸ்டர் ஒட்டுவதில்லை. எங்கிருந்து வருகிறது சுத்தம்? நாகரீகம்? நாமாக உருவாக்கிக் கொள்வதுதான். நம்ம ஊரிலோ வேலைக்குப் பஞ்சமில்லை. தெருவுக்குத்தெரு சங்கங்கள் அமைத்து சந்தா வசூலித்து தெருவைச் சுத்தம் செய்யுங்களேன்? வேலை கொடுத்தமாதிரியும் ஆகிறது, தெருவும் சுத்தமாகிறது!

எல்லா இடத்திலும் ஆடுமாடுகள் போல் கழிகிறார்களா? அதற்கும் வழி இருக்கிறது! காசு வசூலிக்காத கழிப்பிடங்களைக் கட்டி லாபம் சம்பாதிக்க முடியும்? எப்படி? உண்மையில் கழிவு என்றாலும் அதிலும் சக்தி இருக்கிறது. மாட்டுச் சாணத்தில் கோபார் வாயு உருவாக்க முடியுமென்றால் மனிதக் கழிவிலிருந்து உருவாக்க முடியாதா என்ன? முடியும்! சீனாவில் செய்து காட்டியிருக்கிறார்கள். ஆக, எது பிரச்சனை என்று சொல்கிறோமோ அதையே மூலதனமாக மாற்ற முடியும்.

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்குப் போயிருந்த போது அவ்வளவு சுத்தமாக இருந்தது. சின்ன வேலை செய்திருக்கிறார்கள். அதை plastic free zone என்று மாற்றிவிட்டார்கள். என்ன மாயம்? ஏன் நம் குழந்தைகளுக்கு பாடத்திட்டத்தில் சூழல் ஒழுங்கு பற்றி போதிக்கக் கூடாது? பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் போதே சாக்லெட் தின்றுவிட்டு காகிதத்தை அப்படியே வெளியே வீசக்கூடாது என்று சொல்லித்தந்தால் குழந்தை கற்றுக் கொள்ளாதா என்ன? எத்தனை குடும்ப ஒழுக்கங்களை நாம் கற்றுக் கொள்கிறோம். பொய் பேசுவதில்லை, குடிப்பழக்கமில்லை, சிகரெட் குடிப்பதில்லை, பிற மாந்தரை சகோதரிபோல் நடத்துவது..இப்படி எத்தனை! ஒவ்வொரு இந்தியனும் தன் குடும்ப அளவில் மிகவும் ஒழுக்கமுள்ளவனாக வளர்க்கப் படுகிறான். ஆனால் அவனுக்கு சமூக ஒழுங்கு என்றும் போதிக்கப் பட்டதில்லை. கன்பூசியஸ் என்ற பெரியவர் தனி மனித ஒழுங்கு, சமூக ஒழுங்கு இவையிரண்டையும் சரிவிகிதத்தில் சேர்த்து வழிமுறைகள் சொல்லியுள்ளார். அது 40 வருடங்கள் முன் மூன்றாம் உலக நாடாக இருந்த கொரியாவை இன்று முதல் உலக நாடாக மாற்றி இருக்கிறது.

இந்தியா உலகிற்குத் தந்திருக்கும் பெரிய கொடை புலால் மறுத்தல் என்பது. கொல்லாமை. எல்லா உயிர்களுக்கும் வாழும் சம உரிமை! அது இன்று காட்டுத்தீ போல் உலகெங்கும் பரவி வருகிறது. 700 கோடிப்பேரை கொல்லாமை நெறியில் கொண்டு வந்த இந்தியாவால் குப்பை போடாமல் தடுக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள்! இந்த 700 கோடிப்பேரும் நாளை ஆளுக்கொரு ஹேம்பர்க்கர் வாங்கிச் சாப்பிட்டால் அது உலகச் சூழலை எப்படி பாதிக்குமென்று. அமெரிக்க மெக்டொலால்டு ஹேம்பர்க்கருக்காக பிரேசில் நாட்டுக் காடுகள் தரை மட்ட மாகின்றன. காடுகள் அழியும் போது மழை வளம் குறைகிறது. மழை வளம் குறையும் போது வறட்சியும், பாலையும் உருவாகின்றன. ஆக இந்த 700 கோடியும் நாளையே கொல்லாமை நெறி தவறி கொல்லத்தொடங்கினால் உலகில் மாடுகளும், பன்றிகளும், கோழிகளும் நடமாடாது! காடுகள் அழிந்து கடும் வறட்சி உண்டாகும். இதையுணர்த்தி நம்மை ஆயிரம் ஆண்டுகளாக நெறிப்படுத்திய சீலர்களை எப்படி வணங்குவது. இதைச் செய்து காட்டிய இந்தியாவால் சுற்றம், சூழலை சுத்தமாக வைத்திருக்க முடியாதா?

பாரதி பாடியது போல் "போகின்ற பாரதம்", "வருகின்ற பாரதம்" என்று பாட வேண்டும் போல் தோன்றுகிறது. ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

இந்தியாவை 2020-ல் முதல் உலக நாடாக மாற்றிவிட வேண்டும். கனவு காணுங்கள் என்கிறார் கலாம். நான் இந்தியாவை இன்றே முதல் உலக நாடாகத்தான் பார்க்கிறேன். தேவை இன்னும் கூடுதல் கல்வியறிவும், சமூகப் பழக்கங்களும்தான். அது இல்லாதவரை எவ்வளவு செல்வம் வந்தும் இந்தியா மூன்றாம் உலக நாடு போல் தோற்றமளிக்கும்.

12 பின்னூட்டங்கள்:

மஞ்சூர் ராசா 5/07/2008 10:41:00 PM

நீங்கள் சொல்வது உண்மைதான்.

அரபு நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் அந்நாடுகளில் ஒழுங்காக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு செல்ல விமானம் ஏறியவுடன் அவர்கள் தொடங்கிவிடுகிறார்கள். அதே போல விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும் எச்சில் துப்புவதும், குப்பையை கண்ட இடத்தில் போடுவதும் என தொடங்கி விடுகின்றனர்.

இந்தியாவிலுள்ள அதீத சுதந்திரமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதற்கான விழிப்புணர்வை வளர்க்கவேண்டும்.

Anonymous 5/08/2008 12:18:00 AM

Nice Post !
You should use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.

அமர பாரதி 5/08/2008 06:35:00 AM

இந்த பதிவை படிக்கும் போதே எவ்வளவு ஆதங்கத்துடன் எழுதி இருப்பீர்கள் என்று உணர முடிகிறது. வறட்டு கவுரவமும் கேனத்தனமான விதன்டாவாதமும் நம்மவர்களை விட்டு செல்வதற்கு வெகு தூரம் செல்ல வேண்டும். பண்பாடு இல்லாத சுயநலம் பிடித்த மக்களை என்ன செய்ய முடியும்? மனிதனை மனிதனாக மதிக்கும் சாதாரன உணர்வுகளுக்கு கூட நம்மிடம் பஞ்சமாகி விட்டது.

சட்டத்தால் இவர்களை திருத்த முடியும். ஆனால் அந்த சட்டம் போடும் அரசாங்கமே இப்படிப்பட்ட மக்களால் தானே நடத்தப்பட்டு வருகிறது. பிறகு எப்படி வரும் மாற்றம்?

SP.VR. SUBBIAH 5/08/2008 09:00:00 AM

////ஏன் உருவாகவில்லை இன்னும்? மக்கள் யாருக்கோ காத்திருக்கிறார்கள். யாரும் செய்யப் போவதில்லை. கலைஞர் ஆட்சி, கலைஞர் குடும்பத்திற்கே! அமிதாப் சினிமா அடுத்து அபிஷேக்கிற்கே! எல்லோருக்கும் அவரவர் குடும்பமே பிரதானம். பின்? நாம்தான் செய்ய வேண்டும். முடியாதா?///

சரியான கேள்வி!
அதற்கு இங்கே உள்ள தனிமனிதத் தன்னலம் போகவேண்டும்!

துளசி கோபால் 5/08/2008 09:03:00 AM

ரொம்ப டச்சிங் டச்சிங்.

ஒரே ஃபீலிங்ஸாதான் இருக்கு.

தனிமனிதன் தன்னளவில் திருந்தினா நாடே திருந்திரும்.

ஏன் செய்யலை என்றதுதான் கேள்வி.

பி.கு: இனி கோயம்பேடு மார்கெட் என்று எழுதுங்க. புதிய தலைமுறைக்கு(ம்) விளங்கண்ணுமுல்லே?

நா.கண்ணன் 5/08/2008 09:58:00 AM

துளசி:

அதை வெறும் செண்டிமெண்டலா மட்டும் எழுதவில்லை. அப்துல் கலாம் திட்டம் இப்போது புரிகிறது. இப்போதுள்ள அரசியலை நினைத்து நாம் கண்ணீர் விடக் கூடாது. இன்னும் 20 வருடத்தில் வரப்போகிற தலைமுறையைச் சரியாக தயாரித்துவிட்டால், கூனல் நிமிர்ந்துவிடும். ஆக ரொம்ப pragmatic எழுதியதுதான்.

இப்ப, கொத்தவால் சாவடிங்கறது இல்லையா?

நா.கண்ணன் 5/08/2008 09:59:00 AM

மஞ்சூர்:

இந்தியா அதி வேகமாக முன்னேறி வருகிறது. அத்துடன் போட்டி போடுமளவு இன்னும் சமூக நளினம் வளரவில்லை. ஆனால், காலப்போக்கில் வந்துவிடும்!

நா.கண்ணன் 5/08/2008 10:06:00 AM

Dear Roshini: Thank you for the widget!

ஜீவா (Jeeva Venkataraman) 5/08/2008 10:16:00 AM

தங்களைப் போன்ற பெரியோர்களின் சரியான வழிநடத்துதல் இருப்பின், வளமான பாரதம் உருவாகிடும் என்பதில் ஐயமில்லை. இரத்தினப் பதிவிற்கு நன்றிகள்!

Albert Fernando 5/08/2008 10:22:00 AM

கண்ணன்,

உண்மையில் உங்களின் எண்ண அதிர்வுகள்
வெளிப்படுத்தும் சிதறல்கள் தமிழகத்தில்/இந்தியாவில்
இன்றே, இப்போதே ஒவ்வொருவரின் காதில் ரீங்காரமிட‌
வேண்டிய சேதி!


>>>>>சீனாவில் செய்து காட்டியிருக்கிறார்கள். ஆக, எது பிரச்சனை என்று சொல்கிறோமோ அதையே மூலதனமாக மாற்ற முடியும். <<<<


இதனை அடிமட்டத்திலிருந்து ஏற்படுத்த வேண்டும்.
அதற்கும் ஒரு இயக்கமாக இயங்கினால் மெல்ல‌
மெல்ல பலன் எதிர்பார்க்கலாம்.

எப்படி உன்னால் முடியும் தம்பி
என்று சென்னையில் உதயமூர்த்தி போன்றோர் துவங்கிச் செயல்படுவதுபோல‌
வழிநடத்தக் கூடிய தன்னார்வ அமைப்புகள் இதை முன்னெடுத்துச்
செல்லவேண்டும்!

சென்னையில் ஒரு பிரபலமான அமைப்பு ஒன்று உண்டு. வங்கி அலுவலர் ஒருவரால் துவக்கப்பட்ட இயக்கம்.
இப்போது அரசாங்கம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்க இவர்களுக்கு
நிதி உதவி செய்கிறது!
அதேபோல இதற்கும் ஒருவழி செய்ய வேண்டும்.

கடந்தமுறை தமிழகம் சென்றபோது ஒரு வேதனையான காட்சி
கண்டேன். 15 வருடங்களுக்கு முன்பாக கிராமப்புறங்களில் அரசால்
கழிவறைகட்டிக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 50,000 செலவில்!
அவை பயன்படுத்தபப்டாமல் குட்டிச்சுவர்களாக முட்புதர்மண்டிக்கிடக்கிறது.நம் குடிமக்களோ எப்போதும்போல் திறந்தவெளியிலேயே இன்னும் கழிப்பிடத்தைநாடிச்செல்லும் அவலம்!?

அரசைக் குறைசொல்வதா?கிராம மக்களைக் குறைசொல்வதா? தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் இப்படிக் கட்டிக்கொடுக்கப்பட்ட அவ்வளவு கட்டிடங்களும் பாழ்!
எப்போது மக்கள் விழித்தெழுவார்களோ அதுவரை நீங்கள் சொல்வது போல மூன்றாம் உலக நாடாகவேதான் இருக்குமோ என்னவோ!?
ஆல்பர்ட்.

நா.கண்ணன் 5/08/2008 10:25:00 AM

ஜீவா: ஒரு காசிற்கு இரண்டு பக்கம். இந்தியர்களும் மனிதர்கள்தானே. அவர்களிடமும் குறைகளுண்டு. ஆனால் அவர்களின் ஆற்றல் இக்குறைகளைவிட அதிகம். அது பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. எப்போதும் குறை கண்டு கொண்டே இருக்கிறோம். திருப்புவனம் கிராமத்தில் பாலகனாக உலாவிய காலத்திலிருந்து இன்று வெகு முன்னேறிய இந்தியாவைக் கண்ணுறும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. நான் இந்தியாவின் மிக முக்கிய வளர்ச்சிக்கட்டத்தில் வாழ்ந்திருக்கிறேன், அதன் வளர்ச்சியில் பங்காற்றியிருக்கிறேன் என்று எண்ணும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நமது சின்னச் சின்ன மன மாற்றங்கள்தான் இந்தியாவை மெல்ல, மெல்ல மாற்றி அதையொரு பூஞ்சோலையாக மாற்றும்.

நா.கண்ணன் 5/08/2008 10:32:00 AM

ஆல்பர்ட்: இந்தியா ஆரம்ப காலக்கட்டத்திலிருந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதுதான் நம் பலம். எனவே கிடைக்கின்ற போதெல்லாம் நம் சாதனைகளைச் சொல்லி தெம்பூற்ற வேண்டும். எம்.எஸ்.உதயமூர்த்தியின் "எண்ணங்கள்" புத்தகம் என்னை மிகவும் மாற்றிய புத்தகம். ஊடகத்தின் வழியாக இப்படி நல்ல சேதிகள் வரும் போது மனிதன் மாறுகிறான். தனி மனிதன் மாறும் போது இந்தியா மாறுகிறது.

மனிதக் கழிவிலிருந்து மீத்தேன் வாயு எடுத்து காசைக் காட்டிவிட்டால் போதும், அதற்கப்புறம் ஒரு பயல் வயக்காட்டுப் பக்கம் போக மாட்டான்!