தன்வயமாகும் மொழிகள்!

நேற்று Animal Planet TV பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவின் கருநாகம் பற்றிய ஆவணம். அதில் இரண்டு இருளர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதில் ஒருவர் அடுத்தவரிடம் கேட்கிறார் "கண்ணாடி விரியனுக்கும், நாகத்திற்கும் என்ன வித்தியாசமென்று?" பதில்,

"இந்த வட்டமான மார்க்கு நாகப்பாப்பிலே இருக்காது. அது கட்டுவிரியனுக்கு மட்டும் இருக்கும்" என்று. இங்கு Mark/marking எனும் ஆங்கில வார்த்தை எங்கோ மலையில் காட்டுவாசிகளாக வாழும் இருளர்களிடம் புகுந்து தமிழாகிவிட்டது. அவரைப் பொறுத்தவரை மார்க்கு என்றால் பாம்பின் மேலுள்ள குறி என்று பொருள். அவருக்கு குறி மறந்து வருகிறது.

"சாருக்கு ஒரு கலர் வாங்கிட்டு வா!" என்று கிராமத்தார் சொன்னால் இங்கு soft drink என்று பொருள்.

மாட்டுப்பொங்கலுக்கு கொம்பிலே 'கலர்' அடிக்க வேண்டுமென்றால் வர்ணம் பூச வேண்டுமென்று பொருள்.

"அதோ போகுது பாரு பிகரு" என்றால் Figure என்று பொருளல்ல, பெண் என்று பொருள். அதாவது அவள் வடிவழகே அவளுக்கு உருவகமாக வருகிறது! எப்படி? தமிழ் வார்த்தை கொண்டல்ல! ஆங்கிலம் கொண்டு.

இப்படி இன்னும் எவ்வளவோ வார்த்தைகள். மொழிகள் தொடர்ந்து கலக்கின்றன. அன்று ஜெர்மனியில் நடக்கும் இலக்கிய சந்திப்பு பற்றிய அழைப்பிதழ் வந்தது. அதில் "மதிய போசனம்" என்றிருந்தது. "போஜனம்" எனும் சமிஸ்கிருத வார்த்தை தமிழாகி நூற்றாண்டுகளாகிவிட்டன. இது போல் இன்று ஆங்கிலம் தமிழாகி வருகிறது. இன்னும் ஒரு நூற்றாண்டிற்குப் பின் "கலர்" ஆங்கிலமென்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்.

இது தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மட்டுமென்றில்லை. சில நூற்றாண்டுகளாக ஆங்கிலத்தைப் பல மொழிகள் தன்வயமாக்கி வருகின்றன. ஆங்கிலமோ பல நூற்றாண்டுகளாக பிற மொழிச் சொற்களை ஆங்கிலமாக்கி வருகிறது.

மொழி ஓர் கலப்பினம்!

1 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/30/2008 04:06:00 PM

லெஃப்ட், ரைட் எல்லாம் தமிழாகி ரொம்பக் காலமாச்சு:-)