சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!

உங்களில் எத்தனை பேருக்கு சரித்திர நாவல் பிடிக்குமோ தெரியாது, எனக்குப் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் தாத்தா தொடர்ந்து கல்கி வாங்குவார். ராஜாஜி மீதொரு அபிமானம். அப்போது ஆசிரியர் கல்கி "பொன்னியின் செல்வன்" என்ற சரித்திர நாவலை எழுத்திக் கொண்டிருந்தார். அது வெளி வந்து அலையெல்லாம் ஓய்ந்த காலத்தில் வீட்டில் கிடந்த பைண்ட் வால்யூம்களைப் புரட்டத் தொடங்கினேன். அப்படியே பொன்னி நதி பாயும் நதி தீரத்திற்கு என்னை இட்டுச் சென்றுவிட்டது அந்நாவல். அந்தக் கோடை விடுமுறை இந்நாவலால் களிப்புற்றது. அதன் பின் விடுமுறை வந்துவிட்டால் போதும் திருப்புவனம் நூலகத்தைக் குடைய ஆரம்பிப்பேன். சங்கரன் என்ற பக்கத்து வீட்டுப் பையன்தான், சாண்டில்யனை அறிமுகப்படுத்தினான். விடலைப் பருவம். கனவுகள் மிகுதியான பருவம். சாண்டில்யனின் வருணனை என் கனவுகளுக்குத் தீனி போட்டது. யவன ராணியை முடித்துவிட்டு அவளுக்காக அழுதிருக்கிறேன்.

காலம் ஓடிவிட்டது. நான் ஒரு எழுத்தாளன் என்றாகி, நல்ல இலக்கியங்கள் பரிட்சயமான பின் இந்த நாவல்களில் இருந்த அபிமானம் முற்றிலும் மாறிவிட்டது. அபிப்பிராயம் மாறினாலும் இன்னும் அந்த வெகுளியான கற்பனை கொள்ளும் மனது அப்படியே உள்ளதால், நண்பர் திவாகர் தனது திருமலைத் திருடன் சரித்திர நாவலை அனுப்பி விமர்சிக்குமாறு சொன்னவுடன் மகிழ்வுற்றேன். என்னை விமர்சிக்கவோ அல்லது மதிப்புரை வழங்கவோ சொன்னால் நான் என்றும் அதைத் தட்டுவதில்லை. ஏனெனில், வேலைப்பளுவை ஒதுக்கிவிட்டு வாசிக்க முடியாத இக்காலக்கட்டத்தில் இம்மாதிரி வேண்டுதல்கள் என்னைக் கட்டாயம் புத்தகம் வாசிக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன. எனவே தட்டுவதில்லை. சமீபத்தில் சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் கதைத் தொகுப்பை வாசித்து மதிப்புரை வழங்கினேன். அதுவும் ஒரு நல்ல அனுபவம்.திருமலைத்திருடன் வாசிக்க இன்னொரு முக்கிய காரணம் அது வேங்கடம் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது இராமானுஜர் பற்றிப் பேசுகிறது. சோழர் காலத்துக்கதை. திருவேங்கடம் சைவக் கோயிலா? இல்லை வைணவக் கோயிலா என்று அந்தக் காலத்தில் ஒரு கேள்வி எழுகிறது. இவ்விரு நெறிகளும் நேரடியாக மோதிக்கொண்ட காலக்கட்டம். இம்மோதல்களை உருவாக்கியது யார்? அதன் அரசியல் பின்னணி என்ன? இக்கேள்வி ஸ்ரீராமானுஜர் முன் வைக்கப்பட்டபோது அதற்கான விடையை அவர் எப்படித் தந்தார்?

சம்பிரதாயமான குருபரம்பரைக் கதையில் இராமானுஜர் வேங்கடவன் சந்நிதியில் பல்வேறு தெய்வங்களின் ஆயுதங்களை வைத்துவிட்டு, அவன் யாரோ? அவனே காட்டட்டும் என்று விட்டு விடுவார். விடிந்தால் வேங்கடவன், சங்கு சக்கரதாரியாக நிற்பான். ஹி..ஹி..இதை எப்படிங்க நம்பறது? என்று அவராகக் கேட்டுக் கொண்டு வடநாட்டு இளவரசியை உருவாக்கி அவள் சாளுக்கிய குருவின் மூளைச் சலவையால் கோயிலுக்குள் புகுந்து இருக்கின்ற சங்கு சக்கரத்தை எடுத்து குழப்பம் பண்ணிவிட்டு, மீண்டும் இராமானுஜர் வந்த பிறகு சங்கு சக்கரத்தை வைத்து விடுவதாகக் கதை!

நிறையத் தெரிந்து கொள்ளலாமென வாசிக்கப் போய் நிறைய அலச வேண்டிய நிர்பந்தத்திற்கு இந்நாவல் என்னை இட்டுவிட்டது. வேங்கடம் பற்றி, இராமானுஜன் பற்றி நிறைய புரிந்தும், புரியாமலுமான பல அபிப்பிராயங்கள் உலவுகின்றன. எனவே இவை பற்றிய ஒரு விளக்கத்தைத் தரும் வாய்ப்பாக இதை நான் எடுத்துக் கொண்டு, நான் மட்டுறுத்தும் மின் தமிழில் ஒரு தொடராக எழுதத் தொடங்கினேன். மேலும், தமிழ்.வலையில் எழுதும் காலத்திலிருந்து சைவ சித்தாந்திகளுடன் ஒரு தொடர் உரசல் இருந்து கொண்டே வந்தது. இந்த நாவலும் அவ்வுரசலை இன்னும் கூர்மைப் படுத்தியது. எனவே அது பற்றியும் பேச வேண்டியதாகிப் போனது!

இப்படியே, அலசி, அலசி அது 7 கட்டுரைகள் கொண்ட தொடராகிப் போனது. எனவே அதை இங்கு வெளியிட முடியாது. தனியாக ஒரு வலைப்பக்கம் உருவாக்கி அதை வலையேற்றி விட்டேன். வாசிக்க நேரம் பிடிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழேயுள்ள முகவரிக்குச் செல்க:

திவாகரின் திருமலைத் திருடன் - ஓர் அலசல்!

உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக இங்கு இடலாம். பதில் சொல்கிறேன்.

13 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 5/09/2008 07:16:00 PM

//என்னை விமர்சிக்கவோ அல்லது மதிப்புரை வழங்கவோ சொன்னால் நான் என்றும் அதைத் தட்டுவதில்லை//

இதை நினைவில் வச்சுக்குவேன்:-))))

நா.கண்ணன் 5/09/2008 07:21:00 PM

ஓகோ! அப்ப விரைவில் ஏதோவொன்று வெளிவரப்போகிறதோ?

SP.VR. SUBBIAH 5/09/2008 09:00:00 PM

///யவன ராணியை முடித்துவிட்டு அவளுக்காக அழுதிருக்கிறேன்.///

இளஞ்செழியனையும், டைபீரியசையும் ம்றக்க முடியமா?

பூவழகிக்காக அழுததில்லையா நீங்கள்?

kannabiran, RAVI SHANKAR (KRS) 5/10/2008 10:58:00 AM

திருமலைத் திருடன் நாவலை முதலில் நான் நியூயார்க் நூலகத்தில் தான் எடுத்து வாசித்தேன்!

முதல் நான்கைந்து பாகங்களின் சுண்டி இழுக்கும் கதைக் களன் போகப் போகக் குறைந்து விடும்!

திவாகர் அவர்களின் வலையுலக எழுத்தின் தனிப்பட்ட ரசிகன் நான்! ஆனால் இந்த நாவலில் கதை அமைப்பைக் கட்ட அவர் தவறி விட்டார் போலும்!

மாறாக இராமானுசர் சங்கு சக்கரங்களை எப்படி அளித்தார் என்பதை மாய மந்திரமாக அல்லாமல் இன்றைய மக்கள் நம்புகிற மாதிரியாகச் சொல்ல வேண்டும் என்ற விழைவே அதில் அதிகம் தென்படும்! இதனால் கதை அமைப்பு ஒட்டாது போய் விடுகிறது!

அதற்கு திவாகர் ஒரு கட்டுரை செய்திருக்கலாம் என்பது அடியேன் தாழ்மையான கருத்து!

அற்புதங்கள் நடந்ததை இக்கால மக்களும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொன்றும் நாவலாய் விரியத் துவங்கினால்...

சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தது, அப்பர் அப்பூதியடிகள் மகனை உயிர்ப்பித்தது, மணிவாசகருக்கு நரியைப் பரியாக்கியது, ஆண்டாள் அரங்கனை மணந்தது, அருணகிரி கிளியாய் மாறியது, யேசுநாதர் மூன்றாம் நாள் மீண்டது என்று லிஸ்ட்டு போயிக் கொண்டே இருக்கும்! ஒவ்வொன்றையும் கதைக்களன் அமைத்து நாவலாக்கத் துவங்கினால், அதில் justification element will pop up and kill the just element of any novel!

நா.கண்ணன் 5/10/2008 11:06:00 AM

மிகச் சரியாகச் சொன்னீர்கள்! சமய உணர்வு என்பதோர் அதீத மனநிலை. அப்போது 'அழுவன், தொழுவன், ஆடிக்களித்திருப்பன், தொழுவல் வினையால் நாணிக்காண்பன்' என்பதெல்லாம் சகஜம். இது schizophrenic mentality போல் தோன்றும். ஆனால் அவர்கள் பயித்தியமில்லை. இப்படித்தான் இந்த அற்புதங்களும். நிஜத்தை நிஜமாகக் காண வேண்டும். மெய்நிகர் என்றால் அதை அந்தப் புலத்தின் தன்மை கொண்டுதான் காண வேண்டும். வலுக்கட்டாயமாக rationalize செய்ய முற்படும் போது ஒரு நிகழ்வின் கவித்துவம் அழிந்துபட்டுப் போகிறது.

என்ன நம்ம குமரன் இன்னும் இக்கட்டுரையை வாசிக்கவில்லையோ?

துளசி கோபால் 5/10/2008 11:27:00 AM

மதிப்புரைக்கு ஆள் ரெடின்னா அதுக்காகவே இனியாவது நல்லதா ஒண்ணு எழுதணும் நான்.

ஆசை இருக்கு தாசில் பண்ண கதைதான் என்னோடது:-))))

யோசிச்சால்.....'சட்டியில் இருப்பது..... வரும்'

நா.கண்ணன் 5/10/2008 12:05:00 PM

எழுதுங்க, எழுதுங்க நம்ம மலேசிய மீனா இப்படித்தான் கூச்சப்பட்டாங்க. அவங்க கதையொண்ணு இப்ப சென்னை இலக்கியச் சிந்தனை வட்டத்தின் பரிசு பெற்றிருக்கிறது!

ஆமா, யாரும் நான் விரிவாக இராமானுஜரைப் பத்தி எழுதியிருக்கிற திவாகரின் திருமலைத் திருடன் - ஓர் அலசல்! என்ற இணைப்புக் கட்டுரையை வாசிக்கவே இல்லை போலுள்ளதே! அதுபற்றி யாரும் இங்கு பின்னூட்டமிடவில்லையே! அதிலே பல வுசாரசியமான விஷயங்கள் இருக்கே!

துளசி கோபால் 5/10/2008 02:33:00 PM

இணைப்புக்கட்டுரையை இப்பத்தான் வாசித்தேன்.

தி.தி.தி படிக்கும் ஆவல் வரலை.

விமரிசனமே போதுமுன்னு இருக்கு.

100 தடா....(வேணாம்.அவ்வளோ நெய் உடம்புக்காகாது) ஒரு தடா சக்கரைப்பொங்கல் அனுப்பலாமான்னு இருக்கு.

அக்காரவடிசலும் வேணாமுன்னு நானே தீர்மானிச்சதுதான்:-))))

துளசி கோபால் 5/10/2008 02:34:00 PM

ம்ம்ம்ம்ம்ம்ம்............

சொல்ல மறந்துட்டேனே.....
சாண்டில்யன் பிடிக்காது. கல்கிதான் எனக்குச் சரி.

குமரன் (Kumaran) 6/10/2008 10:58:00 AM

கண்ணன் ஐயா. உங்கள் மதிப்புரையை 'மின் தமிழில்' படித்துவிட்டு திவாகர் ஐயாவின் வலைப்பதிவில் பல கட்டுரைகளைப் பிரதியெடுத்துப் படித்தேன். இந்த இடுகையை இன்று தான் படிக்க முடிந்தது. நியூயார்க் நூலகத்தில் இந்தப் புதினம் இருக்கின்றதென்றால் எங்கள் ஊரிலும் இருக்க வாய்ப்புண்டு. தேடிப் பார்க்கிறேன். இல்லாவிட்டால் இரவிசங்கரிடமே கேட்கவேண்டும்.

இந்த நாவலை இந்தியாவிலிருந்து தருவித்துக் கொள்ள முடியுமா என்று திவாகர் ஐயாவிடமும் கேட்டிருக்கிறேன். அவர் என் மின்னஞ்சல் முகவரியைக் கேட்டிருக்கிறார். தரவேண்டும்.

நா.கண்ணன் 6/10/2008 11:06:00 AM

மிக்க நன்றி, குமரன். "அனந்தாழ்வான்" வைபவம் படிப்பவருக்குப் புரியும் வேங்கடத்தில் என்ன நடந்தது என்று! திவாகர் இன்னும் வைஷ்ணவத்தில் ஆழங்காட்படவில்லை, இல்லையெனில் ரத்த்தம், சாம்பல் இவைகளை வேங்கடவன் திருமேனியில் பூச மனம் வந்திருக்காது. எல்லோரையும் போல் இராமானுசர் அவரையும் கவர்ந்துள்ளார். ஆனால் இன்னும் ஆஸ்ரயிக்கவில்லை. அதுதான் குறை. வேங்கடவன் குறை தீர்ப்பான்.

குமரன் (Kumaran) 6/12/2008 05:37:00 AM

அனந்தாழ்வான் வைபவத்தை இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன் ஐயா. நன்றி.

நா.கண்ணன் 6/12/2008 06:31:00 AM

குறிப்பாக, வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தில் இந்த நாவலுக்கான சேதி அடங்கியுள்ளது.