பாலர் மீதான பாலியல் வன்முறை

சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (பெனடிக்ட் 16) அமெரிக்கா வந்திருக்கும் செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. அவரது அமெரிக்கப் பயணத்தின் போது மிக முக்கிய நிகழ்ச்சியாக அவர் அமைத்துக் கொண்டது அமெரிக்கப் பாதிரிகளால் பாலியல் வன்முறைக்குள்ளான பாலர்களின் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொல்வது என்பது. சுமார் 1200 பாதிரிகள் இக்குற்றத்திற்கு ஆட்படுகின்றனர். இவர்கள் வன்முறைக்குள்ளான குழந்தைகளை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஐம்புலன் அடக்கம் கொண்டிருக்க வேண்டிய சமய நெறியாளர்களே இவ்வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்றால், சாதாரணக் குடிமகனைக் கேட்க வேண்டாம். அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு80,000 வன்முறைப் பதிவுகள்! பதிவு பெறாத வன்முறைச் சம்பவங்கள் இன்னும் ஏராளமாய் இருக்குமென்று AACAP ஒரு கணக்கு சொல்கிறது.

பெற்றோர்களின் மனோநிலை எப்படி இருக்குமென்று சொல்ல வேண்டியதில்லை. எப்படி இந்த கள்ளமறியாப் பிஞ்சு உடல்களை துவம்சம் செய்ய முடிகிறது! என்று அழத்தான் முடிகிறது. பெரும்பாலான் நேரங்களில் பெற்றோர் இதை ஒரு குற்றமென காவல்துறையினரிடம் பதிவு செய்வதில்லை. ஜெயகாந்தனே தனது அக்னிப்பரிட்சையில் கங்காவின் தாய் அவளுக்கு நீராட்டி இவள் புனிதமானவள் என்று ஆறுதல் படுத்தவே முயல்கிறாள் என்று எழுதுகிறார். யாரிடம் கூறி முறையிடமுடியுமென்ற ஒரு சமூக வெட்கம்.

பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தைகளின் மனோநிலை பின் எப்படி இருக்கும்? வாழ்நாள் முழுவதுமான ஒரு குற்ற உணர்வு, ஒரு நீசத்தனம், வன்முறைப்பட்ட உடற் காயங்கள் வேறு. இது பெண் குழந்தைகளுக்குத்தான் ஏற்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. வன்முறைக்குள்ளாகும் ஆண் சிறுவர்களும் அதிகம். இந்தியா போன்ற நாட்டில் பெண் குழந்தைகளைவிட ஆண் சிறுவர்களே வன்முறைக்கு அதிகம் ஆளாகின்றனர். பள்ளியில் படிக்கும் காலங்களில் தலித் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஹாஸ்டல் இருக்கும். சின்னப் பையன், பெரிய பையன் என்று எல்லா ரகத்திலும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படியும் கல்வி தந்துவிட வேண்டும் எனும் அரசின் முனைப்பு. மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது உறுதி. ஆனால், பல சிறுவர்கள் பெரிய மாணவர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் உறுதி. அக்காலத்தில் இதையொரு வேடிக்கை கலந்த உரையாடலாகக் கேள்வியுற்றதுண்டு. கொழுக்கு, மழுக்கென்று இருந்த என் சிறு வயது உடல் பலரை இம்சைப் படுத்தி இருப்பது என் அனுபவத்திற்கு வரும் போதுதான் தப்பித்து வருவது எவ்வளவு கடினமென்று உணர்ந்தேன். வேடிக்கை என்னவெனில், பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்கின்ற காலத்தில் ஒருமுறை ஒரு பேராசிரியர் தன் பாலியல் ஆசையை உடல்மொழி மூலமாகக் காண்பித்ததுதான் வெட்கக்கேடு! தமிழகத்தின் நிலமை ஒரு ஆபத்தான நிலமை. ஏனெனில் சங்கம் தொடங்கி இன்றைய சினிமாப்பாடல்வரை காதல் என்பதே முதன்மையாக இருக்கிறது, கலவி பற்றி சுற்றி வளைத்து எப்போதும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சினிமாப் படம் என்பது செக்ஸ் என்ற விஷயத்தை ஒரு உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. ஆனால், சமூகமோ ஒரு கட்டுபட்டியான கட்டுப்பாடுகள் நிறைந்ததாக உள்ளது. பலன் பல ஆண்களும், பெண்களும் ஒரு மாபெரும் பாலியல் அவதியில் உள்ளனர். அதன் வெளிப்பாடு பாலர் பாலியல் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும், என் வாழ்வில் ஏற்பட்டது போன்ற ஒரு சில முயற்சிகளாவது நேர் பட்டிருக்கும். ஆனால், இவை பற்றிப் பேசுவது என்பது சமூக வெட்கக்கேடான விஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூச்சம் போகும் போதுதான் தமிழகத்தில் இம்மாதிரி வன்முறைகள் முறையாகப் பதிவாகி, இதன் உளநிலை ஆராயப்படும்.

பாலியல் வன்முறை செய்பவர்க்கு வெட்கம், நாணம் போன்ற எந்தக் குணங்களும் கிடையாது. அவர்களது இச்சையைப் போக்கிக் கொள்ள வேண்டும்! அதற்காக என்னமும் செய்வார்கள். இல்லையெனில் பாதிரியார் இதில் ஈடுபடுவாரா? அன்யாங்க் என்ற இடத்தில் (கொரியாவில்) இரண்டு பெண் குழந்தைகளை இம்சைப்படுத்திவிட்டு ஒரு முரடன் கொன்று விட்டான். அப்போதுதான் இப்பிரச்சனை பற்றி கொரியாவில் அதிகப் பேச்சு அடிபட்டது. விசாரித்ததில்தான் தெரிந்தது அவனுக்கு பல்வேறு வகையான பாலியல் ஆசைகள் உண்டென்று. அவை தீர்க்கப்படும்வரை அவன் இத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பான் என்று.

எனவே பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளை வெகுளியாக வளர்க்காதீர்கள். அந்நிய மனிதர்களிடம் கவனமாகவே பழகச் சொல்லுங்கள். குடித்துவிட்டு நிற்பவன் பக்கமே அண்ட விடாதீர்கள். பெரும்பாலான சம்பவங்களில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சமூகக் கட்டுப்பாடு என்பது தளர்ந்து விடுகிறது. அதன் பயனாய் குற்ற உணர்வு கிஞ்சித்தும் இருப்பதில்லை. ஏதாவது ஆபத்து என்றால் குழைந்தைகளை சத்தம் போட்டுக் கத்தச் சொல்லுங்கள். நாம் அடக்கி, அடக்கி வைப்பதால் தேவையான சமயத்தில் கூட அவர்கள் சத்தம் போட மறுத்துவிடுகின்றனர். அவர்களுக்கு அவர்கள் உடல் மீது ஒரு அபிமானத்தை உண்டு பண்ணுங்கள். "ஊனுடம்பு ஆலயம்" என்று திருமூலர் சொல்வது போல் நமது உடல் ஒரு அரிய பொக்கிஷம் அதை கண்டவர் உதாசீனப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்ற மனோநிலையை உருவாக்குங்கள். இது கல்யாணமான பின்பு கூட கணவன் துஷ்பிரயோகம் செய்ய நினைத்தால் (ABCD படம் பாருங்கள் என்னவென்று புரியும்) தடுக்க உதவும்.

நல்ல நண்பர்கள் என்று சிலரை வைத்துக்கொள்ளுங்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றி பேசிப் பழகுங்கள். இம்மாதிரி சம்பவம் நிகழ்ந்தால், தைர்யமாக எதிர்த்துப் போராடுங்கள்.எதிர்க்குரல் கொடுக்காத வரை இவ்வன்முறை சமூகத்தில் குறையாது!

10 பின்னூட்டங்கள்:

எம்.ரிஷான் ஷெரீப் 5/08/2008 05:55:00 PM

அன்பின் நா.கண்ணன்,

// பள்ளியில் படிக்கும் காலங்களில் தலித் சிறுவர்களுக்கென்று தனியாக ஒரு ஹாஸ்டல் இருக்கும். சின்னப் பையன், பெரிய பையன் என்று எல்லா ரகத்திலும் மாணவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எப்படியும் கல்வி தந்துவிட வேண்டும் எனும் அரசின் முனைப்பு. மாணவர்களுக்கு கல்வி கிடைப்பது உறுதி. ஆனால், பல சிறுவர்கள் பெரிய மாணவர்களின் பாலியல் வன்முறைக்கு ஆளாவதும் உறுதி. //

தலித் மாணவர்கள் மட்டும் தான் இப்படி நடந்துகொள்வார்களென்று இல்லை.சமூகத்திலுள்ள எல்லா சாதியினரும் தான் நண்பரே !

நா.கண்ணன் 5/08/2008 05:59:00 PM

ஓ! அந்த அர்த்ததில் எழுதவில்லை. நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் ஆண் பிள்ளைகள் சேர்ந்து இருந்து, உண்டு, படுத்து இருக்கும் வாய்ப்பு அம்மாதிரி ஹாஸ்டலில்தான் கிடைத்தது. நீங்கள் சொல்வது போல், இவ்வாய்ப்புக் கிடைக்கும் போது எங்கும் இது நிகழலாம். இது பொதுவான மானுடப் பிரச்சனை.

சரவணன் 5/09/2008 02:53:00 AM

சிந்திக்க வைக்கும் பதிவு, பாலர் பற்றி பேசும்போது அன்னையரையும் நினைவில் கொள்வோம் அன்னையர் தினம் நெருங்கி வருகிறது இந்த அன்னையர் தின பதிவை படியுங்கள்

http://kaipullai.blogspot.com/2008/05/blog-post_08.html

சரவணன்

யாத்திரீகன் 5/09/2008 04:59:00 AM

தற்போதைய சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று, அதை வெளிப்படையாக எழுதியதற்கு வாழ்த்துக்கள் முனைவரே ...

>>> இவை பற்றிப் பேசுவது என்பது சமூக வெட்கக்கேடான விஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூச்சம் போகும் போதுதான் தமிழகத்தில் இம்மாதிரி வன்முறைகள் முறையாகப் பதிவாகி, இதன் உளநிலை ஆராயப்படும் <<<

நீங்கள் சொல்வது மிகச்சரி, பாதிக்கபடுவதை விடுங்கள், நீங்கள் கூறுவதைப்போல் முயற்சி மட்டும் நடந்திருந்ததை சொன்னால் அதை செய்ய முயன்றவரை விட, அதனால் பாதிக்கப்பட்டவரையே இச்சமூகம் தவறாய்/கேலியாய் பேச முயலும் .. அத்தகைய நிலை மாறுமா ?

பாலியல் கல்வி என்றாலே, கலவி பற்றிய கல்வி என்ற range-க்கு கூச்சல் போடும் கூட்டம் இருக்கும் வரையில் மாற்றம் .. வெகு நாள் ஆகும் ..

Anonymous 5/09/2008 09:47:00 AM

இது முன்னர் எழுதிய பதிவோ?
//சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (ஜான் பால் II)//
இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இறந்தே ஆண்டுகளாகிறதே...

நா.கண்ணன் 5/09/2008 12:54:00 PM

ரெங்கராசு: தவறை சுட்டியமைக்கு நன்றி. திருத்தப்பட்ட பதிப்பு வலையேறிவிட்டது. இது நடந்தது போன மாதம்தான் (ஏப்ரல் 2008)

Anonymous 5/09/2008 03:26:00 PM

நன்றி பேரா. அவர்களே. தமிழகத்திலும் இலங்கையிலும் கூட பல அருட் தந்தையினர் பாலியல் கொடுமை புரிந்துள்ளனர் அது இன்றளவும் தொடர்வது வெளிப்படை. முன்பெல்லாம் ஆலயத்துக்குச் செல்ல வற்புறுத்தும் பெற்றோர் தற்போது ஆலயத்துக்குச் செல்லும் போது பிள்ளைகளை தம்முடனேயே கூட்டிச் சென்று வருகிறார்கள். வெளிப்படையாக கதைக்க வேண்டிய விதயம். அருட்தந்தையர் மட்டுமல்லாமல் பொதுவினரும் ஆலயங்களை தமது வேட்டை நிலங்களாக ஆக்கியியிருப்பதுவும் கவனிக்கப்பட வேண்டும்.
சிறு குறிப்பு://பெனடிக்ட் 16// என்பதை தமிழில் 16வது ஆசீர்வாதப்பர் எனலாம்

நா.கண்ணன் 5/09/2008 03:37:00 PM

அட! ஆச்சர்யமாக இருக்கிறதே! ரெங்கராசு என்று பெயர் வைத்துக் கொண்டு கிறிஸ்தவச் சொல்லாடல்களை முறையாகச் சொல்லித்தருகிறீர்களே! Benediction என்பது இறைஞ்சுதல், தொழுதல், வேண்டுதல் என்று பொருள் படுகிறது. எனவே ஆசீர்வாதம் என்பதைவிட அவர் நமக்காக இறைஞ்சுகிறார் என்று பொருள்படும் 16வது இறைஞ்சர் என்று சொல்லிப் பார்க்கலாம். இவர் ஜெர்மானியர். தைர்யமானவர். இவர் திடுதிப்பென்று நிகழ்ச்சி நிரலை மாற்றி கொடுமையுற்ற பெற்றோரைக் காண்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை!

பாலியல் வன்முறையின் அடிக்கோடு. வல்லமையுடையவன் முன் ஏதலன் நிற்பது. ஏதும் செய்யவியலாது என்று நிற்கும் ஒருவனை பாதிப்பது இச்செயலாகும். எனவே இதன் மனத்தாக்கம் அதிகம்.

துளசி கோபால் 5/09/2008 07:07:00 PM

அருட்தந்தையர் ஒருபக்கம்ன்னா வெறும் அருளே இல்லாத தந்தையர்
சிலர் ஈனத்தனமா இப்படி நடந்துக்கறாங்க.

ஆஸ்த்ரியா சம்பவம் தெரிஞ்சு, அப்படியே ரத்தக் கொதிப்புக் கூடிப்போச்சு.

மனநோய் வந்திருக்கும் பெண்கள் சிலர் இதுபோல தங்கள் தகப்பனாலும் நெருங்கிய உறவுகளாலும் சீரழிக்கப்பட்டவர்கள்தான்(-:

நா.கண்ணன் 5/09/2008 07:20:00 PM

துளசி: உண்மைதான். இது அருட்தந்தைகள் பற்றிய பதிவல்ல. முன்னுதாரணமாக அது இந்த மாதத்தில் வந்து நின்றது. அவ்வளவுதான். ஆனால், இது அடிப்படையான கலவி உளவியல் பற்றிப் பேசுகிறது. ஜெயகாந்தன் "மிருகம்" என்றொரு கதை எழுதியிருக்கிறார். அது சகோதர-சகோதரி உறவு பற்றியது.