தாலேலோ! பாட வாருங்கோ தங்கையரே! தாய்மாரே!

மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ,
அன்னமே தேனே அழகே அரிவையரே
சொன்னமே மானே தோகையரே தாலேலோ.
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே
மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ,


நல்லா இருக்கா? பாடணும் போல இருக்கா? கருப்பம் பற்றிப் பேசிவிட்டு மழலை இன்பம் பேசவில்லையெனில் எப்படி? இந்த பாட்டு வரிகள் யாரைச் சுட்டுகிறது என்று நினைக்கிறீர்கள்? ஒரு பெண்ணை. தமிழ்த்தாய் ஈன்ற தைர்யமான பெண்ணை. தமிழ் உள்ளளவும் நம் சிறார் பாடி மகிழ பாவைப்பாட்டு பாடிய கோதையை. ஆம் இது ஆண்டாளுக்குப் பாடிய தாலேலோ!

முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே
வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ,
"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!!
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ,

கொஞ்சு தமிழில் யாரோ பாடிய தாலாட்டு. இப்புத்தகத்தை நான் ஆழ்வார் திருநகரியில் கண்டெடுத்தேன். திருஞான முத்திரக்கோவை பதிப்பகத்தார் வீட்டில். 1928 வெளிவந்த புத்தகம். இப்போதுதான் மறுபதிப்பு காண்கிறது. எப்படி? மின்பதிப்பாய்! ஆம், இப்புத்தகம் மதுரைத்திட்ட சேகரத்தில் இருக்கிறது! முழுப்பாடலுமறிய அங்கு போய் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

சரி, கையிலே முழுப்பாட்டும் வந்தாச்சு, மெட்டுக்கட்டி பாடிப்பாருங்கோ. நல்லா மெட்டமைஞ்சு போச்சுன்னா, எனக்கு சின்ன மின்னஞ்சல் அனுப்புங்கோ. நாம அதை தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் வெளியிடுவோம். நிஜமாத்தாங்க சொல்லறேன்.

இந்தக் காலத்து பாடகர் நிலமையைப் பாருங்க. திரும்பத்திரும்ப நாலு சாகித்ய கர்த்தாக்களின் பாட்டையே திரும்பத்திரும்ப. இவர்களது ஆக்க சக்தி எவ்வளவு குறைந்துவிட்டது எனத்தெரிய வேண்டுமெனில் சுமாராக ராஜாஜி எழுதிய 'குறையொன்றுமில்லை' பாடலை வரிஞ்சு வாரிக் கட்டிக் கொண்டு ஒவ்வொரு பாடகரும்..ஏதோ இதைப்பாடவில்லையெனில் 'சாமி கண்ணக்குத்தும்' என்பது போல்...ரொம்ப பயப்பட்டுப் பாடுகிறார்கள். இது மிகச் சாதரணமான சாகித்யம். எம்.எஸ் பாடியதால் பிரபலமாகிவிட்டது. அவர் கல்லைப் பேச வைப்பவர், சொல்லைச் சொக்க வைப்பவர். அதுதான் மேஜிக். எம்.எஸ் அம்மா ராஜாஜிக்கு நிரம்ப கடன் பட்டு இருக்கிறார். அதனால் அவரது சுமாரான ஒரு பாட்டை சூப்பர் ஹிட்டாக்கிவிட்டார். அதற்காக பாடுவதற்கு வேறொரு பாடலும் இல்லை என்பது போல் நம் கலைஞர்கள் இதையே எத்தனை சிடிக்களாகத்தருவர்?

இதோ புத்தம் புதிதாய் ஒரு சாகித்யம். கோதை மேல் கொஞ்சு தமிழில்?

உங்களில் யாருக்கு இதைப்பாடும் பாக்கியம் இருக்கிறது?

"வேதம் அனைத்திற்கும் வித்தாகும் கோதை சொல்" மண்ணில் நிலைக்கும் என்பதற்கு அவள் திருப்பாவையே சாட்சி. அவள் மேலுள்ள இத்தாலாட்டைப் பாடுபவர் கோதை போல் மண்ணில் புகழ் பெற்று நிலைத்துவிடுவர். சாகித்யமில்லாமல் தவிக்கும் இசைக் கலைஞர்களே, இதோ! ஓர் பொக்கிஷம், கண் முன் கிடக்கிறது. எடுத்து அனுபவியுங்கள். மற்றொருக்கும் இன்னமுதைப் பருகிடத்தாருங்கள்.

ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி
சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி.

7 பின்னூட்டங்கள்:

அறிவன்#11802717200764379909 5/11/2008 10:10:00 PM

மிகச் சரி.
சமீபத்தில் அப்பரின் மாதர்பிறைக் கண்ணியானை பாடலை விஜய் சிவா பாடிய பாடல் வீடியோ வடிவில் பார்க்கக் கிடைத்தது.
திருமுறைகளும் பிரபந்தப் பாடல்களிலும் எண்ணற்ற அழகிய பாடல்கள் இருக்கின்றன என்பதை பல பாடகர்கள் மேடைப்பாடகர்கள் நினைவில் இல்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

Anonymous 5/12/2008 12:20:00 AM

இவ்வகை பாடல்கள் மெட்டுக்களோடு வெளியிடப்பட்டால் நன்றாக விற்பனையாகும் என்பதை என் ஜெனரெஷன் சார்பாக நான் சொல்றேன்! கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், குழந்தையை, கடவுளாய் பார்ப்பதில் யாருக்கும் தடையிருக்காது, தமிழ் கொஞ்சம் கடினமாயிருந்தாலும், ஜுஜுபி, குஜுபி, என்று கொஞ்சுவதை விட, இப்படி கொஞ்சுவதில் பெருமை இருக்கும் - அட்லீஸ்ட், அயல்நாடு சென்ற தமிழச்சிகளுக்கு - எத்தனை நாள் தான், "Mary Had a little lamb, McDonald Farm" பாட்டே பாடுறது - அதுவும் நல்லாதான் இருக்கு. :) ஆனா வெரைட்டி வேண்டும், நல்ல தமிழ் தாலாட்டுக்கள், விரும்பப்படும் விரைவில், கிராமியமும் கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

nayanan 5/12/2008 01:13:00 AM

அன்பின் நண்பர் கண்ணன்,

அருமையான இதமான கட்டுரைகள்.
இந்த மீனவாரத்தில் உங்கள் கட்டுரைகளும் செய்திகளும் இதமாக இருந்தன.

ஆலவட்டம், கடலே கடலே முதல் பல கட்டுரைகளையும் சுவைத்துப் படித்தேன். ஆலவட்டம் மிக நன்றாக இருந்தது.
பர்மா, கர்ப்பம், அம்மா என்று நிறைய தொட்டிருக்கிறீர்கள்.

தாலேலோ மிக மிக அருமை.

மோகமுள் ஒன்று கூட இந்தப் பக்கம் வரவில்லை என்பது வருத்தம் :-)

அன்புடன்
நாக.இளங்கோவன்

துளசி கோபால் 5/12/2008 06:42:00 AM

எனக்குப் பாடவராது. ஆடமட்டுமே வரும்.

யாராவது பாடுனா நான் ஆடவா? :-))))

இப்போதைய பாடகிகள் யாராவது பாடி இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம்.

யாருக்குக் கொடுத்து வச்சுருக்கோ?

நா.கண்ணன் 5/12/2008 08:26:00 AM

நன்றி சிலம்புச் செல்வரே! மோகமுள் பற்றி ஒரு பின்னூட்டத்தில் கோடி காட்டியுள்ளேன். முடிந்தவரை வித்தியாசமான விஷயங்கள் பற்றி ஒவ்வொரு நாளும் பேச வேண்டுமென நினைத்து உருவாக்கினேன். நம் மீது கவனம் படும் போது நல்ல எண்ணங்களை/விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது நல்லது. இல்லையா?

நா.கண்ணன் 5/12/2008 08:29:00 AM

நன்றி மதுரா: இது உண்மையான பாடகர்கள் கண்ணிலும் பட வேண்டும். இதை எப்படியாவது அழகிய பாடற் தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்ற ஆசை.

நா.கண்ணன் 5/12/2008 08:40:00 AM

அப்படிப் போடு அருவாள! துளசி! நீங்க நல்லா ஆடுவீங்கண்னு எனக்கு இப்போதான் தெரியும். நீங்க எனது மூன்றாம் கண் போய் பாருங்க, நான் ஆடும் ஆட்டத்தைக் காண :-)