அறை எண் 305 ல் கடவுள்

கடவுளைப் பற்றி ஆயிரம் கதைகளுண்டு. அவையெல்லாம் புராணங்கள் எனபடுகின்றன. இக்கதைகள் சினிமா என்ற ஊடகம் தோன்றியவுடன் அங்கும் பரவலாகப் பேசப்பட்டன. ஹரிதாஸ், ராமதாஸ், பக்தமீரா, ஔவையார், திருவிளையாடல், கலியுகக் கண்ணன், இப்போது அறை எண் 305 ல் கடவுள். கதைகள் இல்லையெனில் வாழ்வின் சுவாரசியம் குறைந்துவிடும். உலகில் எத்தனையோ பாத்திரங்கள் அதில் கடவுளையும் ஒருவராகப் பார்த்து ரசிப்பதில் மனிதனுக்கு ஒரு சந்தோஷம்.

இது முழுநீள நகைச்சுவைப் படம் என்கிறார்கள். ஆனாலும் கடவுளை முழுநீளக் காமெடியனாகக் காட்ட ஒரு தயக்கம். ஏன்னா, 'சாமி கண்ணைக் குத்தும்' ங்கற பயம். எனவே கொஞ்சம் காமெடி, கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் பகுத்தறிவாதம் இப்படிப் போகிறது படம். ஹரிதாஸ் படம் பார்த்த காலம் வேறு. இந்தப் படம் வந்திருக்கும் காலம் வேறு. அது படம் பார்த்தால் தெளிவாகப் புரிகிறது. இந்த இடைக்காலத்தில் சுய மரியாதை இயக்கம் வந்து வெகுவாக நமது கடவுட்புரிதலை மாற்றிவிட்டது (ஒரு பாமர நோக்கில்). விஞ்ஞானம் வெகுவாக முன்னேறி முன்பு 'கடவுள் செய்கை' என்று நம்பியிருந்ததை 'மனிதனால் செய்யமுடியும்' என்று காட்டிவிட்டது. இல்லையெனில் படத்தில் இப்படி தைர்யமாக சாமி ஆடுவதை, தீமிதி நடப்பதைக் கேலி செய்ய முடியாது (ஏன் அப்படியே ஆடு பலியிடுவதையும் கிண்டல் செய்திருக்க வேண்டியதுதானே?).

முந்தைய கதைகளில் நிறைய பிராமணத்துவம் இருக்கும். இப்போது பாமரத்தனம் இருக்கிறது. ஆனாலும் கடவுளைப் பற்றிய புரிதலில் அதிக முன்னேற்றம் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. எப்படிப் போட்டாலும் சொன்னதைத்தான் திரும்பச் சொல்ல வேண்டியுள்ளது! என்ன இப்போது கொஞ்சம் வறட்டு அறிவுஜீவித்தனம் கூடியிருக்கிறது. முன்பு ஜீவ தத்துவம், பர தத்துவம், அத்வைதம் என்று பேசியிருப்பார்கள் இப்போது அதற்குப் பதில் குவாண்டம் தியரி, சைக்காலஜி, நியூராலஜி என்று பேசுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். படத்தில் ஒரு மேற்கோள் வருகிறது. விளக்கிற்கு அருகிலிருக்கும் பல்லிக்குத் தெரியாது மின்சாரம், என்று. அது இப்படத்தை எடுத்தவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில் கடவுள் சப்ஜெக்ட் அந்த மாதிரி.

படம் பெரும்பாலும் தத்ரூபமாக திருவல்லிக்கேணி சூழலைப் பட பிடித்திருக்கிறது. இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் இப்படி செட்டு இல்லாமல் எடுக்கப்பட்டிருக்க முடியாது. இதுவே இப்படத்தை தேசிய, சர்வ தேச விருதுகளுக்குத் தள்ளலாம். உபநடிகர் பட்டாளமே இறக்கப்பட்டிருக்கிறது (சின்னத்திரையிலிருந்தும்). கதாநாயக, நாயகிகளுக்குக் கொடுக்கும் சம்பளத்திற்குப் பதில் கிராபிக்ஸ்க்கு கொடுக்கலாம் என்பது புதிய போக்காக உள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒன்று. எல்லோரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக டெல்லி கணேஷ் கதாபாத்திரம்! பாடல்கள் எளிமையாக நன்றாக உள்ளன. சிறப்பாக குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா! பாடல். அதுவே படத்தின் அடிநாதமாகவும் உள்ளது.

தமிழர்கள் அதிகம் குறை சொல்லுபவர்கள். மற்றவற்றில் குறை கண்டு, குறை கண்டு தங்கள் குறைகளை வளர்த்துக் கொள்கின்றனர். இந்த மனோபவத்தை படம் சாடுகிறது. ஜனத்தொகை நெருக்கடியில், பொருளாதார நெருக்கடியில் தமிழன் வாழ்வைத் தொலைத்துவிட்டு அல்லாடிக் கொண்டு இருப்பதை படம் நக்கலடிக்கிறது. சுற்றுப்பயணம் போகும் போது ஜன்னலுக்கு வெளியே உள்ளதில்தான் சுவாரசியம் இருக்கும். வாழ்வும் அப்படி இருக்க வேண்டும் என்கிறது படம். நாம் ஒரு சுற்றுப்பயணி. வாழ்வை ரசித்துப்பழக வேண்டும் என்பதும், நமது குறைகளுக்கு கடவுளை இடிப்பதை விட்டு, நம்மை முன்னேற்றிக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், அசிங்கம் பார்க்காமல் எந்தத் தொழிலாக இருந்தாலும் செய்து பழக வேண்டும் என்பதும் ஆழமான புத்திமதிகள். 100 கோடியைத் தாண்டிவிட்ட இந்தியாவின் ஜனத்தொகை பாரமா? இல்லை வளமா? என்பதைத் தீர்மானிக்க இத்தகைய உளநோக்கு மிக முக்கியம். 'என்ன இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' எனும் பழைய பாடல் வரிகளை மீண்டும் கேட்டு புத்துணர்ச்சி பெற வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.

மற்றபடி கடவுள் எனும் சித்தரிப்பில் நிறையக்குறை உள்ளது. கடவுள் நேரில் தோன்ற வேண்டும் என எதிர்பார்க்கும் மனோநிலையே ஆன்மீகத்தின் அடித்தட்டு மனோநிலை. அடுத்து, கடவுள் என்பவர் ஏதோ பெரிய அதிகாரி என்பது போல் காட்டுவது அடுத்த மடத்தனம். அதுவும் இந்த காலெக்சி (வின் மண்டலம்) சக்தியைச் சின்ன கிரிஸ்டலில் வைத்துக் கொண்டு, அதற்கு வேல்டேஜ் பிரச்சனையுள்ள சென்னை மின்சாரத்தில் ரிசார்ஜ் செய்வது போன்ற அபத்தங்கள் ஹாலிவுட படம் பார்த்துவிட்டு அரைகுறையாக வாந்தி எடுப்பது போல. தமிழகத்தில் எக்காலத்திலும் விஞ்ஞானம் சரியாகப் புரிந்து கொள்ளப்படும் என்று தோன்றவில்லை. அதனால்தான் பெரியாரையே சாமி போல் ஆக்கிவிட்டனர் தமிழர்கள்.

'அந்தக் காலத்தில் பிரசாதம் தொன்னையில் கொடுப்பார்கள், இப்போது பிளாஸ்டிக் கப்பில்' என்று அங்காலாய்த்துவிட்டு non-biodegradable plastic cup-ஐ அப்படியே தெருவில் கடாசுவதைக் கடவுளும் அனுமதித்துச் சிரிப்பது அபத்தம். கொஞ்சம் கூட சூழலறிவு இல்லாத கடவுளாகத்தான் இவர்களால் சித்தரிக்க முடியும். ஏனெனில் இவர்களுக்கு விஞ்ஞானமும் தெரியாது, மெய்ஞானமும் தெரியாது.

'திருப்பதிக்கு அல்வா தருபவர்கள்' தமிழர்கள் என்று நம்மவரின் கேடித்தனத்தை மெச்சும் போக்கு என்ன வித்த்தில் ஆரோக்கியமானது? இவ்வளவு புத்திமதி சொல்லி என்ன பயன்? "கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதியதை வைத்துக் கொண்டு கடவுளை திருவல்லிக்கேணியில் அலைய விட்டுப் பார்க்கிறார்கள். தமிழ் உளவியலின் பெரிய முரண்பாடுகளைப் படம் பிடிக்கும் இப்படம் தனிமனித ஒழுங்குகளையும் அப்படியே சித்தரிக்கிறது. அதிகமான காசு வரும் போது வரும் குடும்பச் சண்டைகள், காசை ஒரு பொருட்டாக மதிக்காத மத்தியதர மனோநிலை! ஒருபடி மேலே போய், கதாநாயகியை விபச்சாரியாகக் காட்டி, விபச்சாரி கூட காசைப் பெரிதாக மதிப்பதில்லை, என்று ஒரு குண்டைப் போட்டிருக்க வேண்டாம். இது டூ மச்சுன்னு சங்கருக்குக்கே தெரியும்.

அப்படி, இப்படி என்று சொதப்பி ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். படம் தமிழகத்தில் ஓடாது என்று கௌளி சொல்கிறது. தமிழகத்துத் தமிழர்கள் நம்ம பல்லி ஜோஸ்யம் சரியா என்று சொல்லட்டும்.

4 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 6/03/2008 08:29:00 AM

படம் பார்த்த மறுநாள் மனசுலே நின்னது எதுன்னா.....

அந்த ஏழைத்தாய் 'குறையொன்றுமில்லை' பாடுவதும், பையன் கிருஷ்ணர் வேசத்தில் ஆடுவதும்ட்தான்.

காலையில் சாமி கும்பிடும்போது திடீர்ன்னு இந்தக் காட்சி மனசுலே வந்து , எனக்குத் தாங்காம அழுகை வந்துருச்சு.


பொழுதண்ணிக்கும் சாதி பத்திப் பேசிக் காழ்ப்புணர்வைத் தீயாக் கொட்டும் அன்பர்கள் இதை எப்படி உணர்ந்துருப்பாங்க?

(-:


சொல்ல மறந்துட்டேனே.....
எனக்கு மகாவிஷ்ணுன்னு சொன்னால் என் டி ஆர் தான். பிரகாஷ் ராஜுக்கு கிருஷ்ணன் வேசம் பொருந்தலைன்னு நினைக்கிறேன்.

நா.கண்ணன் 6/03/2008 08:36:00 AM

உண்மை துளசி. அந்தப் பாடல் பாடப்பட்ட விதமும் எடுக்கப்பட்டவிதமும் அற்புதமாய் உள்ளன. "சும்மாக் காசு கேட்டா அது பிச்சை. நான் பாடறேன் நீங்க காசு போடுங்க" என்று சொல்லிப் பாடுவதும் அதைக் கிருஷ்ணரே ரசிப்பதும் அருமை. ஆனால் இந்தக் கௌரவம் உண்மையிலேயே பிச்சைக்காரர்களிடம் இருந்தால் 'அதைத் தொழிலென' மதிக்கலாம்.

என்.டி.ஆர் கிருஷ்ணனாக பரிமளிப்பதற்குக் காரணம், அந்த மந்தகாசம், சாந்தம். பிரகாஷ்ராஜிடம் இந்த இரண்டும் கிடையாது. மேலும் இதுவரை வில்லனாகவே பார்த்துப் பழகிய ஒரு முகத்தை இந்தியாவின் தனிநிகர் தெய்வமாகப் பார்ப்பது மிகவும் கடினம். அதனால்தான் படம் ஓடாது என்றேன். எப்படி ஓடியதாம்?

Karthigesu 6/07/2008 11:36:00 AM

“கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” கதையிலேயே இந்தக் கருத்தாக்கம் கையாளப்பட்டு விட்டது அல்லவா? குறையொன்றுமில்லையாயினும் புதிதொன்றுமில்லை என்றும் சொல்லலாம்.

இருக்கட்டும். கொரியாவில் இருந்து கொண்டு எப்படி உங்களால் இந்தப் புத்தம் புதிய படங்கள் எல்லாம் பார்க்க முடிகிறது?

ரெ.கா.

நா.கண்ணன் 6/07/2008 11:43:00 AM

அன்பின் ரெ.கா: கடவுளை மலினப்படுத்துவது போல் தோன்றுகிறது. கக்கூஸைக் கழுவ வேண்டும் எனும் சுய ஒழுங்கு நீதிகளைச் சொல்ல ஒரு கடவுள் அவசியமில்லை. இந்தியா தவிர பிற நாடுகளில் தன் கையைச் சுத்தம் செய்ய இன்னொருவரை நாடும் பழக்கமில்லை. சின்னச் சின்ன ஒழுக்கங்களைச் சொல்லக்கூட கடவுளைக் கூப்பிட வேண்டிய அபாயகரமான சூழல் தமிழகத்தில் இருப்பது appaling!

ஆன்லைன் சினிமா வந்து ரொம்ப காலம் ஆகுதே! நண்பர் வீட்டில் குழந்தைகள் "எங்க மாமா" படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். முகவரி கிடைத்தது. எல்லாப்படமும் பார்க்கலாம். மிகப் புதியவை தவிர!