எங்கே வந்துவிட்டோம் இப்போது!

ஏதோ பிறந்தோம்! வாழ்ந்தோம்! என்று பலர் இவ்வுலகில் வந்து பிறந்து, இறந்து, மீண்டும் பிறந்து காலத்தைப் போக்குகின்றனர். ஆனால், நாம் வாழும் காலத்தின் மாற்றங்களை, நிகழும் அதிசயங்களை, அதன் வளர்ச்சியை எத்தனை பேரால் கண்டு கொள்ளமுடிகிறது? ஏதோ எல்லாம் அதுவாய் நடப்பது போலவும், இவ்வளர்ச்சி இயல்பானது என்பது போலல்லவோ பலர் நடந்து கொள்கின்றனர்.

20-21ம் நூற்றாண்டுதான் எவ்வளவு சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது! ஒரு பொற்காலத்தில் அல்லவோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

கீல் நகரில் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு வந்து அப்பாடா! என்று ஈசி சேரில் சாய்ந்த போது, நண்பன் ஒருவன் ஹேம்பர்க் நகர வீதியிலிருந்து அழைத்தான். அவன் பயணப்பட்டுக் கொண்டே அழைத்தான். நியூயார்க்கிலிருந்து ஹேம்பர்க் வந்து ஒருவாரம்தான் ஆகிறது. பெருவீதியிலிருந்து அவன் வீட்டிற்குப் போவதற்கான வழி தெரியவில்லை. 90 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனக்கு தொலைபேசி வருகிறது. "கண்ணா! வழி சொல்லு! வீட்டிற்கு எப்படிப் போவது?". ஆகா! பாருங்கள் வேடிக்கையை!! இதை 40 வருடத்திற்கு முன் எண்ணிப் பார்த்திருக்க முடியுமோ? அவனுக்கு நான் ஈசி சேரில் படுத்துக் கொண்டே வழி சொல்லி வீடுவரை கொண்டு வந்து விட்டேன். சுத்தமான நிகர்மெய் (விர்ச்சுவல்) அனுபவம்!

நிகர்மெய் என்பது உங்களுக்கு எப்படியோ? கொரியாவில் வாழும் எங்களுக்கு இது நடைமுறை! எஞ்சினியர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் வந்து வேலை பார்க்கும் பலர் தங்கள் குடும்பங்களுடன் வாழ்வதில்லை. காரணம் குழந்தைகளுக்கான கல்வி வசதி (ஆங்கிலக்கல்வி) இங்கு இருப்பதில்லை. ஆனால், தினப்படி வாழ்வு தகவல் புரட்சியை நம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. தினம் யாகூ அரட்டை, வாய்ப் (VOIP) தொலைபேச்சு, முடிந்தால் வீடியோ சாட். நிகர்மெய் வாழ்வு!

ஒரு வருட Gap year நிகழ்வாக என் பெண் இந்தியா சென்றாள். 10 மாதங்கள் முடிந்து இப்போது இங்கிலாந்திற்கு மேற்படிப்பிற்குச் செல்கிறாள். இந்த இடைப்பட்ட காலங்களில் தொழில் புரட்சி இல்லையெனில் எப்படி வாழ்ந்திருப்போம் என்று யோசிக்க முடியவில்லை. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கலந்து ஆலோசித்து, கவலை வரும் போது போக்கி, மகிழ்ச்சியான சேதிகளை உடனுக்குடன் பகிர்ந்து கொண்டு. மெய்நிகர் வாழ்வு!

மார்ச்சில் இந்தியா போயிருந்தபோது, கொரியாவிலிருந்தே எனது பயணங்கள் அனைத்தையும் முன்னவே பதிவு செய்து, டிக்கெட்டு வாங்கி...அடேங்கப்பா! வேர்த்து, விருவிருத்து வரிசையில் நின்று வசவு வாங்கி ரிசர்வ் செய்யும் காலங்களெல்லாம் காணாமல் போய்விட்டனவே? இந்தியாவிலும்தான் எவ்வளவு வசதி? வீட்டிலிருந்து கொண்டே கைப்பேசி வழியாக காய்கறி கூட வாங்கிவிட முடிகிறதே!

40 வருடங்களில் எத்தனை மாற்றம். திருப்புவனம் கிராமத்தில், அவசரத் தகவல் என்றால் அது தந்திதான். (அதனால்தான் தினத்தந்தி! இந்தப் பேரை இனிமேல் மாற்றி வைக்க வேண்டும்!). தந்தி வருகிறது என்றால் நிச்சயம் அது இழவுச் சேதியாகத்தான் இருக்கும். எனவே யாருக்கும் தந்தி வருவது பிடிக்காது. எப்போதாவது ஒரு கார்டு வரும். அதன் மூலையில் மஞ்சள், குங்குமம் தடவி இருக்கும். மங்களமான சேதி என்பது படிக்கும் முன்னமே தெரிந்துவிடும். எங்கள் வீட்டில் தொலைபேசி கிடையாது. எங்கள் இரட்டை அக்கிரகாரத்தில் கிருஷ்ணய்யர் வீட்டில் மட்டுமே தொலைபேசியுண்டு. ஆத்திரம், அவசரம் என்று போனால்...வெட்கமாகவும், அழுகையாகவும் வரும்..ஓசி கேட்டுப் பேச வேண்டுமே என்று. யாராவது பேசினால் அடுத்த தெருவிலிருந்து சேதி வரும். டிரங்க் கால் என்றால் 3 நிமிடப்பேச்சே தாளிச்சுவிடும்!

எங்கே வந்துவிட்டோம் இப்போது!

5 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 6/01/2008 08:40:00 AM

இன்னும் இருக்கே!!!
வளர்ச்சியை சொல்கிறேன்.

இலவசக்கொத்தனார் 6/01/2008 09:50:00 AM

என்ன திடீர் கொசுவர்த்தி/ :))

நா.கண்ணன் 6/01/2008 09:54:00 AM

இன்னும் இருக்கிறது! இதுவே மாயாஜாலமாக இருக்கிறது. தெருவில் நடந்து கொண்டே பேசிக்கொண்டு போகிறார்கள். முன்பெல்லாம் "ஏதோ பயித்தியம்" என்று சொல்வோம். இப்போது காதிலே என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு முடிவு செய்ய வேண்டியுள்ளது. அன்றொருவன் கக்கூஸில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தான்.

உலகம் ரொம்பத்தான் மாறிப்போச்சு! :-)

Anonymous 6/02/2008 04:55:00 PM

அன்பு கண்ணன்,
கக்கூசில் பேப்பர் படிப்பது, டிரான்ஸிஸ்டர் கேட்பது என்பதில் இருந்து இன்று பேசுவது வரை வந்து விட்டோம்.(அப்பா பேப்பர் நாறுது என்று தந்தை¨யை கடுப்பேத்துவோம்)டெலிபோனுக்கு அப்ளை பண்ணி விட்டு வருடக் கணக்கில் காத்திருந்ததும் ஒரு காலம்.தகவல் பரிமாற்றத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்தியா பொருளாதார அனுகூலமாக மாற்ற முயலவில்லை என்பது விசனம்.
அன்புடன்
ஸ்ரீனி
சித் அசித் பற்றி கேட்ட£ர்கள்;எழுதவில்லை.அந்த அளவிற்கு எனக்கு விற்பன்னத்தனம் உண்டா என்ற சந்தேகத்தில் வந்த தயக்கம்

நா.கண்ணன் 6/02/2008 05:04:00 PM

கணினி சார் தகவற்துறை முன்னேற்றம் என்பது வாயைப் பிளக்க வைக்கிறது! உத்தமம் எனும் அமைப்பு 'மின் மஞ்சரி' என்றொரு மின்னிதழைக் கொண்டு வருகிறது. அதன் ஆசிரியன் நான். ஸ்ரீர்ரங்கம் மோகன ரங்கன் என்பவர் இதை மிக அழகாகச் சொல்லியுள்ளார். இதழ் வந்தவுடன் இணைப்பு தருகிறேன். அதில் இப்படி வருகிறது "திரு ராமகிருஷ்ணன் தலைவர். அவருக்கு ஒரு கனவு. VR ஐயும் MULTIMEDIA வையும் இணைத்து கடவுள் சாக்ஷத்காரம் என்பதை ஒரு புரொக்ராமாகச் செய்துவிட வேண்டும் என்று".

சித், அசித் விஷயம்? பேசினால் தானாக வருகிறது! என்ன தயக்கம்? "ஆள்கின்றான் ஆழியான்! ஆரால் குறையுடையோம்?"