பூவுலகைப் பேணுவோம்!

[நான் இப்படியொரு கட்டுரை எழுதியிருக்க வேண்டும்! நேரமில்லை. சிவராமன் அழகாக பிரச்சனையைப் படம் பிடித்து வழி சொல்லியிருக்கிறார். எனது கூடுதல் சிந்தனைகள் அடைப்புக்குறிக்குள். படங்கள் என் சேர்ப்பு.]

ஜி. சிவராமன்


ஏறத்தாழ 350 கோடி ஆண்டுகளுக்கு முன், இந்தப் பூவுலகில் குடிவந்தவர்கள் நாம். கிளாமிடாமோனஸ் (Chlamydomonas) என்னும் ஒரு செல் உயிரியிலிருந்து,


பூஞ்சைகள்,
குறுஞ்செடி,
புல்,
பூண்டு,
குறுமரம்,
மரம்,
வனம்,
நத்தை,
நண்டு,
நாரை,

என எண்ணற்ற நம் மூத்த உயிர்களின் ஊடே பரிணாமம் பிரசவித்த பாலூட்டியாய் "மனித விலங்கு" அன்று பிரவேசித்திருக்கலாம்.

பகுத்தறிவின் பயனாய், ஆளுமைத்திறனால், கொஞ்சம் கொஞ்சமாய் உலகை வசப்படுத்தி, காட்டு உயிர்களைக் கட்டுப்படுத்தி மனித விலங்கின் ஆளுமை பேரளவில் கூடி, இன்று மனிதன் "பூவுலகின் தாதா" ஆகிவிட்டான் என்றால் அது மிகையாகாது. தன் அன்றாட வாழ்வின் வசதிக்காக, நாளும் இப்புவியைச் சுரண்டும், சீரழிக்கும் வேகம், ஒரு நாள் புவியின் பெருங்கோபத்தைச் சந்திக்க வழிவகுத்து வருகிறது. சென்ற காலத்து சுனாமியும், நர்கீஸும் அவற்றின் சொற்ப முன்னோடிகள் தாம்.


எல்லா வளமும் ஆற்றலும் எடுத்துத்தரும் இப் புவியின் ஒரு கூறாய் இருந்து நாமும் சுகித்து, நம் சந்ததிக்கும் இவற்றை விட்டுச் செல்ல மெனக்கிடுதல் காலத்தின் கட்டாயம். கடைசி அறைகூவலும் கூட. "சுற்றுச்சூழல்" அக்கறைகள் என்றாலே, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு, ஒரு சில மேதாவிகள் மட்டும் மேவாய்க்கட்டையை சொரிந்து கொண்டு நட்சத்திர விடுதிகளில் விவாதிக்கும் விஷயம் என்று தான் நம்மில் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். வைரமுத்து சொன்னதுபோல, "ஊரை பற்றி எரியும் நெருப்பு தன் சட்டைப் பைக்கு எட்டாதவரை எட்டிப்பார்க்காத இனம் - நாம்'' என இருப்பதில் அர்த்தமில்லை. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல்கோரின் "Inconvenient Truth" என்னும் ஆவண குறும்பட கூற்றுப்படி மயிலாப்பூரும் தற்போது வரிந்துகட்டிக்கொண்டு வளரும் சென்னையின் ஞ.ங.த. கணினி நகரங்களும் முல்லைத் தீவாய், கச்சத்தீவாய் பிரியும் சாத்தியம் அதிகம்தான். [நமது அரசியல் கட்சிகளின் சூளுரைகளில் இது நாள் வரை சூழல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது நமது மெத்தனத்தைக் காட்டுகிறது. மக்கள் விழிப்புற்றால் தவிர இதற்குத் தீர்வில்லை]

"மழை மறுக்கிறது, மான்சூன் பொய்க்கிறது,
வேனில் கொதிக்கிறது, நீர் வற்றுகிறது,
நிலம் நகர்கிறது, கடல் உள்வாங்குகிறது,
வானத்தில் ஓட்டை..."

என்று புலம்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தனிநபராகிய நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் எப்படி பங்களிக்க முடியும் என்று பார்க்கலாம். [Think Globally, Act locally என்பது சூழல் மேற்கோள்]

வீட்டிலுள்ள ஒரு குண்டு பல்பை அகற்றிவிட்டு இ.ஊ.க. என்னும் பல்பை போடுவதன் மூலம் ஒரு வருடத்துக்கு 75 கிலோ கார்பன் - டை - ஆக்ஸைடை தடுக்கலாம். புவி வெப்பமடைதலுக்கு இந்த கார்பன் கழிவுதான் தலையாய காரணம்.


கைக்கு எட்டும் தூரத்துக்கெல்லாம் வண்டியைக் கிளப்பாமல், வேக நடையில் செல்வது உலகுக்கும் நல்லது, உடலுக்கும் நல்லது. 45 நிமிட நடைப்பயணம் 1 கிலோ கார்பன் - டை - ஆக்ஸைடில் இருந்து உலகைக் காக்கும். 100 கலோரியைச் செலவழித்து உடலைக் காக்கும். [பெருகிவரும் மத்திய வர்க்க நுகர்வுப் பயன்பாடு மாற்றப்பட வேண்டும். நகரங்களில் நடமாடும் ஊர்திகளின் எண்ணிக்கை குறைய வேண்டும். சூழல் வரிகள் கூட வேண்டும். சிங்கப்பூரை உதாரணமாகக் கொள்ளலாம்]


உங்கள் பயணம் பெரும்பாலும் பொது வாகனத்தில் அமைவது (பேருந்து, மின்சார ரயில்) சிறப்பு. பெரிய சொகுசு காரில் தனி ஆவர்த்தனம் செய்வது உங்களுக்கு வியர்க்காமலிருக்கக் கூடும். ஆனால் உலகையே வியர்க்க வைக்கிறது. கூட்டாகப் பயணிப்பது இதைத் தடுக்கும். [வசதிகள் கூடிய பொது வாகனப் பயணம் என்பதே இந்தியாவின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஜனத்தொகை கூடிய ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இது நடைமுறை]


அன்றெல்லாம் கடைக்குப் போகும்போது பழங்கள் வாங்க கூடை, காய்கறி வாங்க தனிப் பை, கிழங்கு வாங்க துணிப் பை என பயணித்தோம். ஆனால் இன்று நாம் "பிளாஸ்டிக் பைகளில்" அள்ளி வருவதால், மறுசுழற்சியற்ற பிளாஸ்டிக்குகள் உலகை "மக்க" வைக்கின்றன. "மஞ்சப் பை"க்கு மாற மனசு மறுக்கிறதென்றால், அழகியல் பொருந்திய துணிப் பைகள், நார் பைகளைப் பயன்படுத்துங்கள். ["Plastic free cities" என்பது நடைமுறையில் வரவேண்டும். உம். சாமுண்டீஸ்வரி கோயில், மைசூர்]


வீட்டில் குளிக்க வெந்நீரைப் பயன்படுத்துவதில் அதிகம் மின்சாரம் செலவாகிறது. வெந்நீர் உடலுக்குக் கெடுதி, வெதுவெதுப்பான நீரைக் குளிர் காலத்தில் மட்டும் பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் குளிர்நீரே உடலுக்கு நல்லது. உங்கள் வீட்டு, அலுவலக குளிர்சாதனப் பெட்டியில் வெளி வெப்பநிலைக்கு 2 டிகிரி மட்டும் குறைவாக வையுங்கள். வெளியில் 30 டிகிரி என்றால் 28 டிகிரியில் "சுகமாய்" இருக்க இயலும். இதன்மூலம் ஏறத்தாழ ஒரு நபர் 1 டன் கார்பன் கழிவைத் தடுக்க முடியும்.


ஒரு மரம் தன் வாழ்நாளில் 1 டன் கார்பனை உறிஞ்சிவிடும். புவி வெப்பமடைதலை குறைக்க முதல் வழி, வீட்டைச் சுற்றி அல்லது பிளாட்டைச் சுற்றி மரம் வளர்ப்போம். உங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களின் டயர் காற்றைச் சரிபார்த்து சீராக வையுங்கள். இதன்மூலம் 3 சதவீத "மைலேஜ்" ஐ கூட்டி கார்பன் கழிவைத் தடுக்க முடியும்.

மேலே சொன்ன எல்லாம், செய்யத் தேவை முனைப்பு, அக்கறை, மெனக்கெடல் மட்டுமே. அப்படிச் செய்ய மறுத்தால் உங்கள் பேரனுக்கோ பேத்திக்கோ "ஓர் ஊரில் ஒரு பூமி இருந்துச்சாம். அங்கே நிறைய மரம் செடி, காக்கா இருந்துச்சாம்'' என நிலவிலிருந்து கொண்டு கதை சொல்ல வேண்டியிருக்கும்.நன்றி: தினமணி


INCONVENIENT TRUTH (Movie)


8 பின்னூட்டங்கள்:

ஆயில்யன் 6/05/2008 11:49:00 AM

//எல்லாம், செய்யத் தேவை முனைப்பு, அக்கறை, மெனக்கெடல் மட்டுமே//

நம்மால் செய்ய இயலக்கூடிய விஷயங்கள்தான்!

ஆனால் இன்னும் கூட நம் நாட்டு மக்களுக்கு இது எங்கயோ அமெரிக்காவுலயோ அண்டார்டிக்காவுலயே நடக்கற விஷயம் நமக்கென்னு அலட்சியபடுத்துதல்தான் அதிகம் இருக்கு!

நா.கண்ணன் 6/05/2008 11:55:00 AM

இந்திய உளவியல் வித்தியாசமாக உள்ளது. இவர்களுக்கு தனிமனித ஒழுங்கு என்பது "தர்மம்" எனப் போதிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆனால் சமூக ஒழுங்கு என்பது இப்படிப் போதிக்கப்படுவதில்லை. இதில் நமது தத்துவமும், சமயங்களும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. விளைவு? இவன் நாளுக்கு இரண்டு முறை குளித்து, பட்டையடித்து கோயிலுக்குப் போகிறான். கோயிலில் தரும் பிளாஸ்டிக் தொன்னையை அப்படியே கடாசி விடுகிறான். 1. பிளாஸ்டிக் உபயோகிக்கக் கூடாது என்று தெரிவதில்லை, 2. அதைப் பொறுப்பின்றி கடாசக்கூடாது என்று தெரிவதில்லை!

Anonymous 6/06/2008 05:07:00 PM

Tamil has influence on Japanese: Consul

Times of India Chennai

TIMES NEWS NETWORKChennai: For centuries, Tamil culture and traditions have had a major influence on the Japanese way of life, Kazuo Minagawa, Consul-General of Japan, said at a function this week.
Cultural ties with India, more importantly with Tamils, have been continuing since ancient times, said the Japanese Consul, speaking at the passing out ceremony of nautical science cadets of the Vel’s Academy of Maritime Studies and Vel’s Academy of Maritime Education and Training in the city.
It was the sea-faring Tamil traders, who took several voyages to South-East Asian countries which not only helped in improving economic relations but also helped in spreading the culture. “Much of Japanese culture was similar to Tamil culture,” he said.
Commending the efforts taken by New Delhi and Tokyo in improving bilateral relations in various areas, the diplomat pointed out that sea was a crucial link not only for transporting major goods like oil and food items across continents but also in building strategic economic and cultural ties.
Elaborating on the various opportunities available in the maritime industry, Captain K Vivekanand, director, Vels Group of Maritime Colleges, said there was a huge demand for sailors and maritime officers globally.

timeschennai@timesgroup.com

Karthigesu 6/07/2008 11:51:00 AM

மக்களின் மனப்பான்மை மாறவேண்டும் என்பது ஒரு ஆசைதான். நடக்குமா என்பதில் சந்தேகம் உண்டு. அரசாங்கங்கள்தான் சட்டம் ஏற்படுத்தி அவற்றை முறையாக அமல் படுத்தவும் வேண்டும். பொது மக்கள் மனப்பான்மை மாறுவதும் சட்டங்களை இயற்றி ஆள்வதன் மூலம்தான் நடக்கும். (மீண்டும் மீண்டும் சிங்கப்பூர்.)

இந்த non-biodegardable ப்ளாஸ்டிக்கை சமாளிக்க தொழில் நுணுக்கம் வளராமல் இருப்பது ஏன்? இந்தியாவில், தமிழகத்திலேயே இந்த ப்ளாஸ்டிக் பைகளை வெட்டி சாலைகள் அமைக்குமுன் கீழே போட்டு மூடினால் மெத்து மெத்தென்று இருக்கும் என ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருப்பதாகப் படித்திருக்கிறேன். என்ன ஆயிற்று? மேலும் டிகிரேடபல் ப்ளாஸ்டிக்கும் இருக்கிறதாமே!

ரெ.கா.

நா.கண்ணன் 6/07/2008 12:01:00 PM

தமிழகத்தில் சூழல் சுத்தம் என்பது மிகப்பெரிய ஆதயமுள்ள தொழில். இது யாருக்கும் இன்னும் புரியவில்லை. யாராவது வேலை தர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சுத்திகரிப்புத் தொழில்களை இளைஞர்கள் வியாபாரமாகச் செய்யலாம்.

மனிதக் கழிவு என்பது 'சக்தி'. மீத்தேன் உருவாக்கும் வசதியுள்ள கக்கூசுகளைக் கட்டிவிட்டால் எல்லோரும் உபயோகிக்கும் போது எரிவாயு கிடைக்கும். அதை தொழிற்சாலைகளுக்கு விற்கலாம். இலவசக் கக்கூசுகள் கட்டும் போது சூழல் மாசு குறையும்.

சாக்கடை நீரைச் சுத்தம் செய்யும் தொழிலும் லாபகரமானதே.

தமிழகத்தின் "பிரச்சனைகள்" என்று உதாசீனப்படுத்தும் எல்லாவற்றிலும் பணம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. யார் கண்டுகொள்ளப் போகிறார்களோ!

பிளாஸ்டிக் பயன்பாடு வெறித்தனமாக நுகர் கலாச்சார வெளிப்பாடு. ஜெர்மனியில் இப்போது எல்லோரும் சாக்குப்பை உப்யோகிக்கிறார்கள். நாம் சாக்குப்பையை விட்டு விட்டு பிளாஸ்டிக் உபயோகிக்கிறோம்?

"தத்துவம் என்ன? தகவேலோ எம்பாவாய்?"

கயல்விழி முத்துலெட்சுமி 6/07/2008 01:39:00 PM

வெளிநாட்டினர் எதாயாவது கண்டுபிடிப்பார்கள் பின்னர் அதையே சரியில்லை என்று ஒதுக்கிவிட்டு நாங்க மாறிட்டோம் என்று சொல்வார்கள்.. நம்மவர்கள் அப்பத்தான் அதை உபயோகிக்க ஆரம்பித்திருப்பார்கள்.. விடமுடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகவும் ஆகியிருப்பார்கள்.இந்த ப்ளாஸ்டிபைகலாச்சாரம்..கிராமத்தின் மூலை முடுக்குகளிலும் பரவி இருப்பது பயங்கரமான விசயம்.

நா.கண்ணன் 6/07/2008 01:47:00 PM

முக்கியமானதொரு உண்மையைத் தொட்டுச் செல்கிறீர்கள். இந்தியப் பண்பாடு சூழல் நட்புறவு கொண்ட பண்பாடு. ஆனால், ஐரோப்பிய வருகைக்குப் பின், தொழில் புரட்சிக்குப் பின் முழுமையாக மேற்குலக சிந்தானா வழியில் சென்றுவிட்டோம். அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து விரைவாகத் திருத்திக் கொண்டு வருகிறார்கள். நம் கதைதான் "உள்ளதும் போச்சுடா! நொள்ளைக் கண்ணா!" கதையாகிப் போச்சு!

வேளராசி 6/08/2008 09:47:00 PM

நாக்பூரில் ரவி எனும் தமிழர் மண்ணில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் கேரிபேக்குகளை தமது ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து இப்பொழுது சந்தைபடுத்தி வருகிறார்.
velarasi@gmail.com