வேதவியாசருடன் கைகோர்த்துக் கொண்டு

நாம் பிறந்தவுடன் செய்யும் முதல் காரியம் வீரிட்டு அழுவது! காரணம் ஒன்றுமே தெரியாத உலகில் இப்படி பிறந்து விட்டோமே, கை தூக்க ஆளுண்டா? என்ற கவலயில்தான் அந்த அழுகை. நல்ல வேளையாக நாம் தனியாகப் பிறப்பதில்லை. அன்னை என்பவள் கூடவே இருக்கின்றாள். அன்னைக்குத் துணையாக தாதி. தாதிக்குத் துணையாக டாக்டர். டாக்டரிடம் கேட்டால் 'என் கையில் என்ன இருக்கிறது! எல்லாம் இறைவன் செயல்!" என்று கையை மேலே தூக்கிவிடுகிறார். ஆக, உண்மையாக நாம் பிறந்தவுடன் நமக்குத் துணை இறைவன்தான். அதே போல் இறக்கும் போதும் ஒரே துணை இறைவன்தான். ஆனால் இடையில் ஒரு பட்டாளமே நமக்கு நண்பர்கள், உறவுகள் என்று வந்து போகின்றன. ஆயினும் எல்லோர் அடிமனத்திலும் ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். நமக்கு உற்ற துணைவன் யார் என்று.

வேதவியாசர் மகாபாரதம் நடக்கும் போது இருக்கிறார். கண்டதை அப்படியே காட்சிப்படுத்துகிறார். அப்படிக் காட்சிப்படுத்திய கதையே பெரிய 'மகாபாரமாகிப்போச்சு' என்று சொன்னால் எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்திருப்பார். ஒன்று விடாமல் எழுதியிருப்பார். இன்றளவும் மகாபாரதத்திற்கு நிகரான ஒரு இதிகாசம் உலகில் இல்லை. நம்மிடம் கையில் வந்தது வெறும் இலட்சம் கிரந்தம்தான். காணாமல் போனது அதிகம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய காப்பியத்தை எழுதிவிட்டு முகவாயில் கையை வைத்து வியாசர் உட்கார்ந்து விட்டாராம். என்னடா? கதை? என்று கேட்டால், "ஆமா! என்னத்தை எழுதிக் கிழிச்சேன்?" என்று அலுத்துக் கொண்டாராம். காரணம், பாரதம் எழுதியது அர்ஜுனன் பராகிரமத்தைச் சொல்லவோ, வீமனின் தோள் வலிமை சொல்லவோ அல்ல. கண்ணன் என்னும் கரிய தெய்வத்தைப் பற்றிச் சொல்லத்தான். இங்கு கருமை என்பது பெருமை என்ற பொருளில் ஆண்டாளால் கையாளப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகதையை ஒழுங்காகச் சொன்னாரா? என்றால், 'இல்லை' என்பதுதான் உண்மை. வள, வளவென்று ஆயிரம் உபகதைகள்!

எனவேதான் வியாசரும் தன்னைக் கைதூக்கிவிட கிருஷ்ணனிடம் மன்றாடுவதாக ஒரு மிக அழகிய தோத்திரம் உள்ளது. குல்கர்னி என்பவர் பாடியிருக்கிறார் கேளுங்கள். இப்பாடல் அப்படியே தமிழில் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனாலும் புரிகிறது. கேளுங்கள்!!

3 பின்னூட்டங்கள்:

R.Devarajan 6/16/2008 07:39:00 PM

'ஸ்ரீ வேத வ்யாஸ கராவலம்ப ஸ்தோத்ரம்' -
மத்வ ஸம்ப்ரதாயம் சார்ந்தது. மத்வ ஸ்துதியுடன் தொடங்குகிறது.
பகவானின் பத்து அவதாரங்களையும் போற்றுகிறார் 'யதுபதி ஆசார்யர்' எனும் துறவி.
கீத கோவிந்தத்தில் ஜயதேவ கவி செய்தது போலவே கண்ணபிரானுக்குப் பின் ஆஸுர மோஹனார்த்தமாக அவதரித்த புத்த பகவான் துதிக்கப் படுகிறார் இங்கும்.
பின்னர் பர வாஸுதேவரும், வ்யூஹ வாஸுதேவரும்.,
பிறகு ஸ்ரீ ரங்கம், வேங்கடகிரி,உடுப்பி (பாஜக க்ஷேத்ரம்),ஸ்ரீ முஷ்ணம். காஞ்சீபுரம், பண்டரீபுரம்,பிந்து மாதவர் போன்ற அர்ச்சைத் திருமேனிகள்.
எல்லாம் வ்யாஸ பகவான் செய்ததாகவே பாவனை.
பின்னர் ஜைமினி, ஔடுலோமி, காசக்ருத்ஸ்னர் போன்ற சீடர்கள் அவரைப் போற்றுவதாக வர்ணனை.
இறுதியில் லோகாயத பந்தங்களிலிருந்து மீட்பு வேண்டும் கோரிக்கை.
அனைத்துமே மன நெகிழ்வைத் தரும் விதமாக இனிய பண்களில் அமைந்துள்ளன.
சிற்றஞ்சிறு காலைப்பொழுதில் கேட்கத்தக்க இனிய துதி நூல்.
தேவராஜன்

நா.கண்ணன் 6/16/2008 08:14:00 PM

மிக்க நன்றி தேவராஜன் அவர்களே! வியாசரைக் கிருஷ்ண வியாச! என அழைப்பதுண்டுதான். யோசித்தேன். வியாசகர் காலத்தில் அர்ச்சாவதாரத் திருமேனி பற்றி, அதுவும் காஞ்சி தேவராஜன் பற்றி, புத்தரை ஒரு அவதாரமாக் காண்பது இவையெல்லாம் கொஞ்சம் குழப்பின. ஆயினும், இது கேட்க வேண்டிய ஸ்தோத்திரம் என்பதால் சந்தேகங்களுடன்தான் வெளியிட்டேன். நல்லவேளை, தலைப்பு மிகச் சரியாகப் பொருந்துகிறது பாருங்கள். அப்படித்தான் விழுந்தது!இப்படி உங்களையும் சத் சங்கத்தில் இணைத்துவிட்டான். அவன் செயல் அதிசயம்!

R.DEVARAJAN 6/17/2008 01:45:00 AM

கண்ணன் ஸ்வாமிக்கு,
'வ்யாஸாய விஷ்ணுரூபாய..............
வாசிஷ்டாய நமோ நம:!!'
'வாசிஷ்டன்' எனும் பெயர் வ்யாஸ தேவருடையது தான்.
விஷ்ணு வடிவாகவே அவரை வணங்குவதும் வைதிக மரபு சார்ந்தது தான்.
இத்துதியில் 'simhaasya maanava vapu:' எனும் தொடர் 'நரங்கலந்த சிங்கமாய்..'
என்ற அருளிச்செயல் வரியை நினைவு படுத்துகிறது.
த்வைத மரபும் ஸ்ரீ பாஞ்சராத்ரத்தை ஒட்டி அமைந்தது தான்.
ஒருங்குறியில் வடமொழிச் சொற்கள் சீராக அமைவதில்லை.பல இடங்களில் பொருட்சுவையைச் செவ்வனே விளக்க இயலவில்லை.
தேவராஜன்