மணம்சாரா உறவு! புதிய சவால்!

வருடா வருடம் எங்கள் ஆய்வகத்தில் ஒரு நாள் அலுவலங்களில் ஆண் பெண் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும், ஊழல் என்பது பற்றியும் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இது பற்றி நாம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று எங்கள் ஆய்வகம் நம்புகிறது. இக்கல்வியில் நாம் பதிவு செய்து கொள்ளாவிடில் அது கவனிக்கப்படுகிறது. பொதுவாக ஆசிய நாடுகளில் ஆண், பெண் உறவு என்பது காலம் ,காலமாக ஆற்றுப் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இப்போது பெண்கள் அதிக அளவில் வேலைக்குப் போக ஆரம்பித்ததும், இந்த ஆற்றுப்படுத்துதல் ஒரு புதிய சோதனைக்கு உள்ளாகிறது. ஏனெனில் ஒரு நாளில் ஒரு பெண் தன் கணவனுடன், குடும்பத்துடன் இருக்கும் நேரத்தை விட காசு சம்பாதிக்க வேண்டும் எனும் நிர்பந்தத்தால் அலுவகத்தில்தான் அதிக நேரத்தைச் செலவழிக்கிறாள். அலுவலகத்தில் ஆண், பெண் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். தன் கணவனை விட ஒரு பெண்ணிற்கு அருகில் வேலை செய்யும் சகாவின் குண நலன்கள் மிக நன்றாகத் தெரியும். இது உண்மை. எங்கு நெருக்கம் இருக்கிறதோ அங்கு உறவு வளரும் வாய்ப்பும் அதிகம். ஆனாலும் இங்கு நாம் ஒரு மனக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆயினும் ஆய்வகங்களில் பல நேரம் இரவில் வேலை செய்ய நேரிடும். பொதுவாக இரவில் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். அப்போதும் ஒரு நிதானம் தேவைப்படுகிறது. மேலும், மனிதன் தவிர பிற பாலூட்டிகளில் பல தார உறவு என்பது இயற்கையாக அமைந்துள்ளது. இந்தப் பின்னணி வேறு மனிதனை சங்கடத்தில் உள்ளாக்குகிறது.

பொதுவாக ஆணிற்கும், பெண்ணிற்கும் இயற்கையான ஈர்ப்பு இருக்கிறது. இது பருவமடையும் முன்பே எல்லோரிடமும் ததும்பி வழிவதை அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். ஆயினும் நாம் தொடர்ந்து நம்மை நாம் ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். இதுவொரு சமூக ஒழுங்கு. சமூகம் குழப்பமில்லாமல் நடைபெற உதவுகிறது.

தூரக்கிழக்கு நாடுகளில் இப்படி மணம் சாரா உறவுகள் பற்றி அதிகமாக சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் வருகின்றன. உலகிலேயே எங்குமில்லாத அளவு கொரியாவில் "லவ் மோட்டல்" எனும் சின்னச் சின்ன லாட்ஜுகள் உண்டு. சில லாட்ஜுகள் அப்பட்டமாக சிறுசுகளின் பாலியல் இச்சைக்கு விருந்திட அமைந்துள்ளன. ஒரு முறை நான் கண்டது, ஒரு லாட்ஜில் வளைத்து, மடக்கூடிய நாற்காலி அமைத்து அதை எப்படிப் பாலியல் பயனுக்கு உபயோகப்படுத்துவது என்று விளக்கப்படம் போட்டு வைத்திருந்தார்கள். சொல்ல வேண்டாம்! அந்த மோட்டலுக்கு பெரிய குயூவே நின்றிருந்தது (ஜோடியுடன்தான்). இந்தச் சூழலும் எதிர்மறையாக உள்ளது. ஒரு புறம் சமூகம் மணம் சார உறவை சாத்தியப்படுத்தும் வசதிகளைச் செய்து தருகிறது. இன்னொரு புறம் கற்பு நெறி பற்றி விவரணப்படம் போடுகிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டின் பெரிய சவால்களில் இந்த அலுவலக உறவு என்பது பிரதானப்படுகிறது!

0 பின்னூட்டங்கள்: