வாழ்வின் விளிம்பு நிலைப் பேச்சு

முனைவர் Randy Pauschக்கு புற்றுநோய் இருப்பது கண்டறிந்து இன்னும் சில மாதங்களே உயிர் வாழ்வார் என்று அமெரிக்கா அறிந்த போது அவருக்கு இதுவரை கிடைக்காத கவன ஈர்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் வேலை பார்க்கும் Carnegie Mellon University, University of Virginia வில் கட்டக் கடைசியாக மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையை மீண்டும் The Oprah Winfrey Show நடத்தி இருக்கிறார். அவ்வுரையைக் கீழே கேட்கலாம்.

இது சாவைப் பற்றிய பேச்சல்ல, வாழ்வைப் பற்றிய பேச்சு என்று ஆரம்பித்து தனக்கு வேண்டியது இரக்கமல்ல தான் இங்குள்ளோரை விட திட காத்திரமாக இருக்கிறேன் என்று தண்டால் எடுப்பது அமெரிக்கக் கனவின் நிகழ்வு. இது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். கடைசி மூச்சுவரை எப்படி வாழ்வை நல் எண்ணங்களுடன் எதிர் கொள்ள வேண்டும் என்பதற்கான பாடம்.

தனக்கு வாழ்வு தந்த தாய் தந்தையர் பற்றி சிலாகித்துப் பேசுகிறார், 'அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்' எனும் தமிழ் முது சொல்லிற்கிணங்க!

வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய, ஆனால் நடைமுறைச் சிக்கலுடையன எனச் சிலவற்றைச் சொல்கிறார். அவை:

1. பொய் பேசாதிருத்தல்,
2. நன்றி உணர்வுடன் இருத்தல்,
3. தவறு செய்தால் மன்னிப்புக் கோருதல்,
4. செய்த தவறிலிருந்து எப்படி நிவர்த்தி என யோசித்தல் இப்படி.

வாழ்வின் பொருள் என்னவென்று மானுடம் மறந்து போன நிலையில் மனித உணர்விற்கு முக்கியத்துவம் தாருங்கள் என்கிறார் முனைவர் போஷ். வாகனம் போன்ற ஆடம்பரங்கள் எவ்வளவு சொன்னாலும் அனிச்சைப் பொருள்கள். ஆயின் மானுடம், மனித உணர்வுகள் அதை விடப் பெரியன என்கிறார்.

இந்த நீண்ட பேச்சில் ஒரு வார்த்தை கூட கடவுளை வம்பிற்கு இழுக்கவில்லை. வாழ்தல் எவ்வளவு சிறப்புடையது, அதை எப்படி வாழவேண்டும். நம் கனவுகளை மெய்படுத்த எப்படி உழைக்க வேண்டும் என்று இருத்தலியல் போக்கில் பேசிச் செல்வது பின் நவீனத்துவ பாணியில் அமைந்துள்ளது. இவரிடமிருந்து சமகால இந்தியர்கள் கற்றுக் கொள்ள எவ்வளவோ உள்ளது.

வாழ்வில் தடைக் கற்கள் என்பவை உண்மையில் தடை செய்ய வருவதில்லை. நாம் செய்யும் செயலில் உண்மையில் நமக்கு கட்டற்ற ஆர்வம் இருக்கிறதா எனச்சோதனை செய்யவே வருகின்றன என்பது அவரது பிரபலக்கூற்று. டாக்டர் அப்துல் கலாம் போல் இவரும் நம்மைக் கனவு காணச் சொல்கிறார். அக்கனவை மெய்படுத்த உழைக்கச் சொல்கிறார். அதன் பின் நம் கர்மா வளைந்து கொடுக்கும் என்கிறார். இவர் திடீரென்று நமது 'கரும வினை' பற்றிப் பேசிவிடுவதால் சொல்ல வேண்டியிருக்கிறது. "கருமத்தைச் செய்! பலனை எதிர்பாராதே!" எனும் கீதையின் சொல் இவரது பேச்சில் ஒலிப்பது தற்செயல் என்று தோன்றவில்லை.
Quote:
"The brick walls are there for a reason. The brick walls are not there to keep us out; the brick walls are there to give us a chance to show how badly we want something. The brick walls are there to stop the people who don't want it badly enough. They are there to stop the other people!" - from The Last Lecture

Randy Pausch's Update page!

8 பின்னூட்டங்கள்:

இராஜராஜன் 6/20/2008 10:58:00 PM

வணக்கம்

அறியதந்தமைக்கு நன்றி
நச்சயம் தெவையான கருத்துக்கள்

நன்றி

Karthigesu 6/21/2008 10:51:00 AM

"தடைக் கல்லும் நமக்கோரு படிக் கல்லப்பா!" என வைரமுத்து எழுதியது போலத்தான். முன்பே நாம் அறிந்து வைத்துள்ள அறிவுரைதான் என்றாலும் புதிய முறைகளில் அவை சொல்லப்படும்போது புதிய அர்த்தப் பரிமாணங்களும் நிகழ்கின்றன.

புற்று நோய்க்குப் புதிய புதிய மருந்தெல்லாம் கண்டு பிடித்திருப்பதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் சிலரின் நிலையை terminal என்று தீர்மானித்துவிடுகிறார்கள்.

வாழ்வு நிச்சயமற்றது என்ற உணமையை எந்த அறிவியல் துறையும் முறியடிக்கப் போவதில்லை என்பது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்தானே!

ரெ.கா.

நா.கண்ணன் 6/21/2008 11:56:00 AM

Life is a perspective! என்று தோன்றுகிறது. வாழ்வு நிலையுள்ளதுதான். அநாதியானதுதான். நாராயணன் என்ற பதத்திற்கு 'நித்ய வஸ்துக்களின் கூட்டத்திற்கு இருப்பிடமாக உள்ளவன்' என்று பொருள். வாழ்வை, ஜீவனை நித்ய வஸ்து என்றுதான் நம்மவர் கணக்கிடுகின்றனர்.

உயிரியல் ரீதியில் பார்த்தாலும் கூட செல் தனது ஓட்டத்தைப் பாரம்பரியம் எனும் சமாச்சாரத்துள் நித்யமாக்கிவிடுகிறது. போஷ் என்ற தனிநபர் இறக்கலாம், ஆனால் அவரது மரபு வழி, வழியாய் ஓடிக்கொண்டிருக்கும்.

நமக்கு எப்படிப் பார்க்க வேண்டுமென சாவு சொல்லித்தருகிறது. பிறப்பு போல் சாவும் ஒரு நிகழ்வு, அவ்வளவுதான்.

Karthigesu 6/21/2008 02:05:00 PM

"போஷ் என்ற தனிநபர் இறக்கலாம், ஆனால் அவரது மரபு வழி, வழியாய் ஓடிக்கொண்டிருக்கும்."

அவர் திருமணமே செய்து கொள்ளாமல் அல்லது பிள்ளைகள் இல்லாமல் இறந்தால் மரபு வழி முடிந்துவிடும் அல்லவா? அவருடைய தம்பி, தங்கைகள் இருந்து தொடர்ந்தாலும் அவரின் இந்த ஓரிழை அறுந்தபடிதானே!

அமீபா தொடர்ந்து தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டு இறக்காமல் இருக்கிறது. அப்படியும் உணவுச் சங்கிலியில் மேலே உள்ள ஒன்று ஒரு அமீபாவைத் தின்று விட்டால் தொடர்ச்சி அறும்.

உயிர் என்பதும் பிறப்பு என்பதும் சாவு என்பதும் intriguing விஷயங்கள்.

ஒரு perspective என்று சொல்லுகிறீர்கள். மாயை என்று வேதாந்தமும் சித்தாந்தமும் சொல்லுகின்றன. சரிதான் போலும். எல்லாம் ஒரு கருத்தாக்கம்தான்.

நன்றி.

ரெ.கா.

நா.கண்ணன் 6/21/2008 02:20:00 PM

Nature எனும் ஆங்கில அறிவியல் சஞ்சிகை தனது 125ம் ஆண்டுவிழாவை நடத்திய போது 20ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த விஞ்ஞானிகளை அழைத்து பேச வைத்தார்கள். கார்ல் சாகன் எனும் அமெரிக்க விஞ்ஞானியும் பேசினார். மனிதர், புளோட்டோ கிரகத்திலிருந்து பூமியை எடுத்த போட்டோவைக் காட்டி இதில் பூமி எங்கிருக்கிறது தெரிகிறதா? என்று கேட்டார். முன்பு நான் திருச்சி அகில இந்திய வானொலிக்கான அறிவியல் நிகழ்ச்சியில் சொன்னேன் "அண்டத்தில் பூமி ஒரு சுண்டைக்காய்" என்று. அது போல் அவர் காட்டிய படத்தில் பூமி சுண்டைக்காய். இந்த சுண்டைக்காய் சமச்சாரத்திற்குள்தான் செங்கிஸ்கான், ஹிட்லர், இரண்யகசிபு, ஸ்ரீலங்கா கற்பழிப்பு இன்னோரன்ன விஷயங்கள் நடக்கின்றன. நமது நன்மைகளும், தீமைகளும், இரசிப்பும், மெத்தனமும், இலக்கியமும், வன்முறையும்...எல்லாம் இந்த சுண்டைக்காய்க்குள். முடிக்கும் போது கார்ல் சாகன் சொன்னார், 'மனிதனுக்கு அடக்கம் என்பது அவசியம் வேண்டுமென்று".

எதற்குச் சொல்கிறேன் என்றால் 'life is simply a perspective' என்பதைக் காட்டத்தான். போஷ்க்கு பிள்ளையில்லை என்றால் ஒன்றும் ஆகாது. அவன் ரெண்டுவிட்ட தம்பிக்குப் பிள்ளையிருந்தால் போதும், அந்த ஜீன் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். ஜீவன் நித்யம். மரணம் வெறும் நிகழ்வு.

ஆயில்யன் 6/21/2008 03:29:00 PM

//வாழ்வில் தடைக் கற்கள் என்பவை உண்மையில் தடை செய்ய வருவதில்லை. நாம் செய்யும் செயலில் உண்மையில் நமக்கு கட்டற்ற ஆர்வம் இருக்கிறதா எனச்சோதனை செய்யவே வருகின்றன//

நல்ல சிந்தனையாக...!

நல்லா இருக்கு!

நன்றிகளுடன்....!

ஜீவா (Jeeva Venkataraman) 6/22/2008 09:10:00 AM

நானும் பதிவிட்டிருந்தேன், இச்செய்தியை, கர்மா என்கிற tag உடன்!
கூடுதல் விளக்கங்களுக்கு நன்றி!

நா.கண்ணன் 6/22/2008 09:27:00 AM

ஜீவா: நன்றி. உங்கள் தளத்திலிருந்து போஷின் தற்போதைய உடல்நிலை சொல்லும் பக்கத்தின் தொடுப்பை எடுத்துள்ளேன். President Bush இவருக்கு தனிப்படக் கடிதம் எழுதியுள்ளார். தனிமனித உயிருக்கு எந்த மதிப்புமில்லாத இந்தியாவிலிருந்து வெளிநாடு வந்து வாழும் போது இங்கு உயிர்கள் மதிக்கப்படுவது மகிழ்வாக உள்ளது.