நெஞ்சம் மட்டுமா? கணினியும் மறப்பதில்லை!

இந்த வன்பொருள் அல்லது இயலி அல்லது Hard disc என்பதை முழுதாய் அறிந்தவர் யாரேனும் உண்டோ என்று தெரியவில்லை! ஏனெனில் அது மனம் போல் வேலை செய்கிறது. "நெஞ்சம் மறப்பதில்லை" என்றொரு படமெடுத்தார் ஸ்ரீதர்! அது பூர்வ ஜென்மக் கதை. போன ஜென்மத்தில் காதலித்துத் தோல்வியுற்றவர் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் அதை நினைவு வைத்துத் தொடர்வது போல் கதை. நமக்கெல்லாம் பூர்வ ஜென்ம நினைவுகள் வருவதே இல்லை. ஆனாலும் சிலரைப் பார்த்தால் உடனே பிடித்துவிடுகிறது. சிலரைப் பார்த்தவுடன் மனது சொல்லிவிடும் 'தள்ளி நில்லு' என்று? ஏனப்படி! பூர்வ ஜென்ம நினைவுகள் அப்படி-இப்படி ஒட்டிக் கொண்டு 'corrupted file' போல கொஞ்சச் சேதியைத் தருவதால் என்று சொல்லலாம்!

எப்படி? இப்படியொரு ஞானோதயம்? என்று கேட்கிறீர்களா?

திடீரென்று எனது இயலியில் (hard disc) பை(folder) இருக்கும், கோப்புகள் (files) இருக்காது! யார் அழித்திருக்க முடியும்? வைரஸ்? இருக்கலாம், ஆனாலும் களைக்கல்லி (antivirus software) வைத்திருக்கிறேன். இருவழி சேமிப்பு எனும் ஒரு கோப்பு சேவி செய்த வேலை என்று நம்புகிறேன். எதுவாக இருந்தாலும்! ஆயிரக்கணக்கான கோப்புகள் சில நாட்களில் அம்பேல்!! மண்டை காய்ந்து விட்டது. ஆபத்ரட்சகனாக ஒரு செயலி (மென்பொருள்) வந்தது. அது தோண்டி, அகழ்வெடுத்து பல கோப்புகளை மீட்டெடுத்துத் தந்தது!

ஆச்சர்யம் என்னவெனில் இத்தனை குப்பை உள்ளே இருந்ததா? என்று சொல்லுமளவு குப்பைகளைக் கொண்டு வந்து மேலே கொட்டிவிட்டது. இந்த செயலி நாம் format செய்த இயலில் இருந்து கூட கோப்புகளை மீட்டுத் தருகிறது.

ஞானோதயம்:

Format செய்து விட்டால் புத்தம் புதிய இயலி போல் அவ்வளவு இடமும் நமக்குக் கிடைப்பது போல் கணினி ஒரு தோற்றம் தருகிறது. உண்மையில் சேதிகள் அழிவதே இல்லை. ஏதோ ஒரு வடிவில் உள்ளே உட்கார்ந்து கொண்டுதான் இருக்கின்றன!

இந்த format செய்தல் என்பதுதான் ஒரு ஜென்மம் போய் இன்னொரு ஜென்மம் என்று தோன்றுகிறது! நாம் reformated modules இந்தப் பிறவியில்! பழசு எல்லாம் அழிந்துவிட்டது..wait a minute! என்று நம்புகிறோம். ஆனால் உள்ளே இருக்கும் செய்தி அது பாட்டுக்கு இருக்கிறது! சிலருக்கு corrupted filesகளாக வெளியே வருகிறது. சிலருக்கு ஒன்றும் நினைவிற்கு வருவதில்லை. சிலருக்கு, இந்தச் செயலி செய்வது போல் பழசெல்லாம் அப்படியே மீண்டும் நினைவிற்கு வந்துவிடுகிறது recovered files போல!

இதுவரை சரி..ஆனால் இந்த நினைவுகள் செத்துப் போனவுடன் எங்கே போகின்றன? எப்படித் திரும்ப வருகின்றன? என்பதற்கு விளக்கம் தேவைப்படுகிறது.

சேதிகள் என்றும் அழிவதில்லை என்பது நோபல் பரிசு ஆய்வு. கருங்குழியில் (black hole) விழுந்த சேதிகூட அழிவதில்லை என்றுதான் சொல்கிறார்கள்! எனவே நமது பிறப்புச் சேதிகளும் அழிவதில்லை. கண்ணன் கீதையில் சொன்னது போல் உயிர் போன பின் 'புதிய சட்டை' போட்டுக் கொள்கிறது. அதன் பூர்வ ஜென்ம பலா, பலன்களுக்கு (கன்மம்) ஏற்ப புதிய வாழ்வை அமைத்துக் கொள்கிறது. ஆனாலும் சுட்டு எரிக்கும் போதும் நினைவு மட்டும் எப்படித் தப்புகிறது?

நினைவு என்பது என்ன என்று முதலில் ஆராய வேண்டும்! நினைவை நெருப்பு அழித்து விட முடியுமா? நீர்தான் அள்ளிக் கொண்டு போய்விட முடியுமா? நடைமுறை வாழ்வு 'அப்படி இல்லை' என்று அனுபவ பூர்வமாகச் சொல்கிறது. எனவே இந்த நினைவு என்பது வேறொரு பரிமாணத்தில் சேமிக்கப்படுகிறது போல் தோன்றுகிறது. அதாவது இந்த வலைப்பதிவை நான் என் கணினியில் பதிப்பித்தாலும், Blogger serverல் சேமிக்கப்பட்டு உங்களுக்கு வாசிக்கக் கிடைப்பது போல்! என் கணினி அழிந்தாலும் என் வலைப்பதிவு மட்டும் அப்படியே நிற்கும் (Blogger server அழியும்வரை, at least). அது போல்தான் நினைவுகளும்! நான் யோசிக்கிறேன் என்றாலும் ஏதோவொரு active link என்னையும், நினைவு சேமிப்புக் கிட்டங்கியையும் இணைத்து, யோசிக்க வைக்கிறது! ரொம்பக் கதை! போல் தெரிகிறதா? இது ஒரு speculation தான். ஆனாலும் possible speculation.

ஆனால் நான் முன் சொன்ன உதாரணத்தில் நினைவுகள் hard disc-ல் எங்கோ ஒளிந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னேன். அது கணினியைப் பொருத்தவரை உண்மை. அது 'அசித்'. நாமோ 'சித்' எனவே parellels இருந்தாலும் செயற்பாட்டில் வித்தியாசம் இருக்கலாம்! அதனால்தான் பாரதி மிக வியந்து "சித்தினை அசித்துடன் இணைத்தாய்
அங்கு சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்!" என்று பாடுகிறான். வருகின்ற காலங்களில் holgraphic memory என்றொன்று வருமாம். அப்படியெனில், சேமிப்பு என்பது வேறொரு வெளிக்குப் போய்விடுகிறது என்றாகிறது! இப்படித்தான் நம் நினைவுகளும் வேறொரு பரவெளியில் தேங்கி நிற்கிறது போலும்.

இந்த அர்த்தத்தில் "நாராயணன்" எனும் நாமத்தை மீள் பார்வை செய்தால் புதிய ஒளி கிடைக்கிறது. இப்பதத்தின் பொருளாக "நிலையான பொருட்களுக்கு இருப்பிடமாக இருப்பவன் என்றொரு விளக்கம் தருவர். நினைவுகள் அழிவதில்லை என்று கண்டோம். அவை நிலையானவை. ஆக, அவை நாராணனிடம் குடி கொள்கின்றன என்று தெரிகிறது. எனவேதான் கடவுளிடம் 'பொய் சொல்ல முடியாது!' என்பது. எல்லா வண்டவாளமும் அவரிடம்தான் குடிகொள்கின்றன. அவர் Super Administrator. அவருக்கு சகலரின் database க்கும் Full access உண்டு. எனவேதான், நம் கையாலாகத்தனத்தை உணர்ந்து 'சரணாகதி' செய்வதே ஒரே வழி என்று நம் பெரியோர் கண்டு சொல்லினர். பின்ன? அவரிடம் பொய் சொல்ல முடியாது! நம்ம வண்டவாளம் முழுவதும் தெரியும். அவர் நினைத்து அருள் செய்தால் உண்டு. நாம் ஏதோ பெரிய புண்ணியம் பண்ணிவிட்டோமென்று அவரிடம் சவுடால் அடிக்க முடியாது. ஏனெனில் இந்த ஜீவன் தோன்றிய காலத்திலிருந்து அது செய்திருக்கும் அட்டூழியங்களின் database access அவர் ஒருவரிடம்தான் உள்ளது. எனவே மறுபேச்சுப் பேசாமல் 'சரணாகதி' செய்வதே உசிதம்.

நாமெல்லோரும் reformated modules!

ஒவ்வொரு ஜென்மதில் நாம் செய்யும் நல்ல, கெட்ட காரியங்கள் வெவ்வேறு folders, files களாக சேமிக்கப்பட்டு, உயிர் போகும் போது reformat செய்யப்படுகின்றன.
Reformat ஆனாலும் இச்சேதிகள் அழிவதில்லை. எங்கோ அப்படியே உள்ளன. சில நேரம் நமக்கே இந்த database access கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் சித்திகளை 'முக்காலம் உணர்தல்' என்று சொல்கிறோம்! பெரும்பாலோருக்கு இக்காலமே உணரப்படாமல் இருப்பதுதான் உண்மை :-)

என் கணினில் நான் கண்ட குப்பை போல், ஜென்ம ஜென்மாந்திரக் குப்பைகள் நம்மிடமுள்ளன. இதை 'வாசனை' என்று இந்தியர்கள் சொல்கிறார்கள். பூர்வஜென்ம வாசனை என்பதை நிரூபிக்கும் நிகழ்வுகள் நம் கண்முன் நடந்து கொண்டுதான் உள்ளன!

இறைவன் என்பவனே இந்த mega databaseஆக உள்ளான். அந்த கிட்டங்கிக்குப் பெயர் "நாராயணன்" என்பது.

பூரணத்திலிருந்து கொஞ்சம் பகுதியை எடுத்தாலும் பூரணம், பூரணமாகவே இருக்கிறது என்று சொல்வது போல். அவனிடமுள்ள சேதிகளை அவ்வப்போது, ஒவ்வொரு பிறவியிலும் நாம் அணுகினாலும் (access), பூரணத்துவம் இதனால் குறைவதில்லை. எனவேதான் பாரதி யாருக்கும் நாம் இனி அடிமை இல்லை! இல்லை! என்று சொல்லிக் கொண்டு வருபவன் "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்!" என்கிறான்.

அடிமை செய்தல் என்பது சரணாகதி. நமது கையாலாகத்தனத்தை உணர்தல். கையறு நிலமை. பிரம்மாண்டத்தைப் பார்த்து சிறுதுளி சேர்ந்து கலக்க விரும்புதல். தோன்றிய இடத்திற்கே மீண்டும் பயணப்படும் சால்மன் மீன்கள் போல் நாம் தோன்றிய இடத்திற்கு மீண்டும் போகும் மார்க்கம்தான் 'சரணாகதி'.

இவ்வளவு ஞானமும், எனது hard disc கோளாறினால் கிடைத்தது. சேர்த்து வைத்த குப்பையிலிருந்து தோண்டி எடுத்த குப்பை என் கணினியில் கிடக்கிறது. எந்தக் குப்பையும் இல்லாமல் முற்றும், முழுவதுமாக தூர்க்கப்பட்ட கிணறு, சுத்தப்படுத்தப்பட்ட ஜீவனை 'நித்யசூரிகள்' என்று சொல்வர். எங்கு சேதிகளின் சுற்று (circulation of information) இல்லையோ அவ்விடத்திற்குப் பெயர் "வைகுந்தம்" என்பது! அங்கு நம் பாவ, புண்ணியங்கள் அழிந்து நமது கணக்கு "0". சேமிக்க ஒன்றுமில்லை, நினைக்கவும் ஒன்றுமில்லை. அது அவன் இடம். அங்கு அவன் நான். நான் அவன்.

20 பின்னூட்டங்கள்:

Thamizth Thenee 6/28/2008 11:54:00 AM

திரு கண்ணன் அவர்களே உங்கள் எண்ணங்களை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒப்புக் கொள்கிறேன்,ஒவ்வொன்றும் உணர்ந்து சொல்லப்பட்டவை
நெருப்பாலும் அழியாது நீராலும் முழுகாது ,காற்றாலும் தொலையாது
பஞ்ச பூதங்களாலும் நம் உடலைத்தான் அழிக்க முடியுமே தவிற உள்ளத்தை, உள்ளதை அழிக்க முடியாது


இதுதான் விசித்திரம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

வடுவூர் குமார் 6/28/2008 01:45:00 PM

உங்கள் கணினி கோப்புகள் போய் திரும்ப கிடைத்ததும் ந்ல்லதுக்குத்தான் இல்லாவிட்டால் இம்மாதிரியான பதிவை படிக்க எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ??
ஏதோ ஷட்டில்காக் மாதிரி இங்கும் அங்கும் அடித்துவிளையாடிய மாதிரி இருக்கு.

நா.கண்ணன் 6/28/2008 01:55:00 PM

நன்றி குமார். இத்தகைய வாசகர் கிடைக்க வேண்டுமே! அதுவே பூர்வ ஜென்ம புண்ணியம் :-)

நா.கண்ணன் 6/28/2008 01:56:00 PM

தேனியாரே! மிக்க நன்றி.

இராஜராஜன் 6/28/2008 01:56:00 PM

வணக்கம் திரு கண்ணன்

சில கேள்விகள்

நினைவு என்பது என்ன?

நாம் இருக்கும்போது நினைவு எவ்வாறு இருக்கின்றது, இரந்தபின் எவ்வாறு இருக்கின்றது?

மனம் என்றால் என்ன?

ஒருவரை பார்த்தவுடன் பிடிக்கின்றது அல்லது பிடிக்கவில்லை என்பது முற்பிறவி சார்ந்தது எனில் இப்பிறவியில் யாரை புதிதாய் சந்திக்கின்றோம் ?

ஆன்மா உடல் எனும் சட்டையை அணிகிறது எனில் ஆன்மா எவ்வாறு உருவாகிறது ?

விளக்க இயலுமா

நான் ஆத்திகமா அல்லது நாத்திகமா எனும் கும்மிக்குள் வர விரும்பவில்லை,

தேடிக்கொண்டு இருக்கின்றேன்........

நன்றி

Kailashi 6/28/2008 01:57:00 PM

//சுத்தப்படுத்தப்பட்ட ஜீவனை 'நித்யசூரிகள்' என்று சொல்வர். எங்கு சேதிகளின் சுற்று (circulation of information) இல்லையோ அவ்விடத்திற்குப் பெயர் "வைகுந்தம்" என்பது! அங்கு நம் பாவ, புண்ணியங்கள் அழிந்து நமது கணக்கு "0". சேமிக்க ஒன்றுமில்லை, நினைக்கவும் ஒன்றுமில்லை. அது அவன் இடம். அங்கு அவன் நான். நான் அவன்.//

அருமையான ஒப்பீடு கண்ணன் தங்களது மடல்களை விடாமல் படித்து வருபவன் அடியேன்.

சீவனில் உள்ள சுழியான ஆணவம் போனால் சீவனே சிவன் அதுவே முக்தி நிலை என்று உணர்ந்து அனைவரும் மும்மலம் நீக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பதிவு.

வளர்க தங்கள் தொண்டு.

நா.கண்ணன் 6/28/2008 02:09:00 PM

ராஜராஜன் என்பதற்கேற்ப பெரிய, பெரிய கேள்விகள் எல்லாம் கேட்கின்றீர்கள். நான் சிற்றறிவினன். எனினும் முயலுதல் தவறில்லை. குழந்தைகள் சிறுவீடு கட்டுதல் போல்!

/நினைவு என்பது என்ன?/

இது உண்மையில் மில்லியன் டாலர் கேள்வி. அறிவியல் முயன்று கொண்டு இருக்கிறது. இன்னும் சரியான பதில் இல்லை.

ஆன்மீகத்தில் இருக்கிறது. சிந்தனை ஓட்டத்தின் சுவடு மனம் என்று தோன்றுகிறது.

யாரையும் நாம் புதிதாய் பார்ப்பதில்லை. இப்பிரபஞ்சமே ஒன்றுடன் ஒன்று அநாதியாய் தொடர்பில் இருக்கிறது. இதை கற்றை இயல் (குவாண்டம் பிசிக்ஸ்) ஒத்துக் கொள்கிறது. ஒரு பிரபஞ்சம் அழிந்து மீண்டும் தோன்றும் போது அவை, அவை அப்படி, அப்படி இருந்த படியே பிறப்பிக்கப்படுகின்றன என வேதாந்தம் சொல்கிறது. எனவே ஒரு சுழற்சியில், ஒரு புள்ளியில் நாம், நம் பிறப்பு. "நான்" என்பது பொய் என்று இதனால்தான் சொல்வது. "நான்" என்பது வெறும் அனுபவ உணர்வே. அதற்கு ஸ்தூல வடிவம் கிடையாது. அதுவொரு இயக்கத்தின் தற்காலிக வெளிப்பாடு.

/ஆன்மா எவ்வாறு உருவாகிறது ?/

ஆன்மா உருவாவதில்லை. அது என்றும் உள்ளது. அபார சித் அறிவான இறைவன் ஆன்மாவிற்கு 'உடல்' எனும் புகலிடம் தந்து இப்பிரபஞ்சத்தை உணர்த்துகிறான். உணரும் போது "நான்" உருவாகிறது.

சித், அசித், ஈஸ்வரன் மூன்றும் நிலையானவை. அழிவதில்லை. ஈஸ்வரன் மட்டும் நிலைத்து நிற்க மற்றவை தோற்றுருக் கொள்கின்றன, சுழற்சியில் அகப்படுகின்றன.

ஏதோ..மனதில் பட்டது..

நா.கண்ணன் 6/28/2008 02:09:00 PM

கைலாஷி: மிக்க நன்றி.

Varun 6/28/2008 02:59:00 PM

ஆம் நீங்கள் சொல்லியது உண்மை வன்தட்டில் உள்ள கோப்புக்கள் அழிவதில்லை நாம் format செய்யும்போது கோப்புக்களுடைய முகவரி அழிக்கப்படுகின்றது.அதனால்தான் கோப்புக்கள் புலப்படுவதில்லை (கோப்புக்களை வன்தட்டில் வைத்து எடுப்பது Address இல் தங்கியுள்ளது). பிற்பாடு எனது வலைப்பதிவில் வரிவாக ஒரு பதிவிடுகின்றோன்.

நா.கண்ணன் 6/28/2008 03:09:00 PM

வருண்: பதிலிடுங்கள். வன்தட்டில் உள்ள சேதி உருமாறுகிறதே ஒழிய அழிவதில்லை போலிருக்கிறது. அதனால்தான் அந்த ஆன்ம analogy!

வல்லிசிம்ஹன் 6/28/2008 03:14:00 PM

எங்கள் வீட்டுப் பெரியவர்கள் (சொன்ன)சொல்லும் புத்திமதி இதுதான்.
நல்ல வார்த்தைகளும் அழியாது. கெட்ட வார்த்தைகளும் அழியாது.

எல்லாக் கர்மவினைகளும் அவ்வாறே என்று.
சப்தம் வேறுபடாமல் திரும்பும் என்று.

அதனாலேயே எச்சரிக்கையோடு இருப்பது சாத்தியமானது.

உங்கள் பதிவு அப்படியே எல்லாவற்றையும் நினைவுக்குக் கோண்டுவருகிறது

நா.கண்ணன் 6/28/2008 03:24:00 PM

திடீரென்று ஒரு நாள் தோன்றியது. என்னைச் சுற்றிய பிரபஞ்சம் என்னால் மாற்றமடைகிறது என்று. நமது செயலால் உலகம் மாற்றவுறுவது அனைவரும் அறிந்ததே. செயல் எண்ணத்தின் பாற்பட்டது. எண்ணமோ மனதின் பாற்பட்டது. மனமோ சுயம்புவாக, சுதந்திரியாக இருக்கிறது! மனது ஒருமுகப்படும் போது (தியானம், இறைச்சிந்தனை etc.) நல் விளைவுகள் தோன்றுகின்றன. என்னால் உலகு மற்றமுறுவது இப்படி என்று உணர்ந்தேன். கூடிய மட்டும் வன்முறைச் சிந்தனைத் தவிர்த்து, நற்சிந்தனை கூட்டி செயல்படும் போது மனதும் அமைதிப்படுகிறது. உலகமும் அமைதிப்படுகிறது.

Anonymous 6/28/2008 11:07:00 PM

அணுவினுள்ளே தோன்றி மறையும் நிலையில்லா அடிப்படை
துகள்களில் ஒன்று? ஆன்மா. ஆன்மா பெருவெளியில்
கரையும் போது இறப்பு என்கிறோம். கடனை நிறைவேற்ற திரும்ப திரும்ப ஆன்மா பிறப்பெடுக்கிறது.(Leela- Play - the way it will always be) நாம் இறக்கும் தருவாயில்எதை நினைக்கிறோமோ அதாகத் திரும்பி வருகிறோம் என்கிறது கீதை? நம்மிடம்
பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். காலமான ஒருவர்,
மீண்டும் அதே குடும்பத்தில் திரும்ப வந்ததாக! ஆன்மாவின்
கடைசி விருப்பம் நிறைவேறியதாக எடுத்துக் கொள்ளலாம்!

ஜீவா (Jeeva Venkataraman) 6/28/2008 11:43:00 PM

படித்தேன், சுவைத்தேன்!

நா.கண்ணன் 6/29/2008 06:03:00 PM

//அணுவினுள்ளே தோன்றி மறையும் நிலையில்லா அடிப்படை துகள்களில் ஒன்று? ஆன்மா.//

Nanotechnology வளர்ச்சியுறும் போது இது இன்னும் தெளிவு பெறும்.

ஆனால் ஆன்மாவை என்னால் ஒரு பருட்பொருளாக எண்ணமுடியவில்லை. அது 'சித்'. அரூபமானது. அதுவொரு இயக்கம் (a process). ஓர் அறிவு. கீதையில் ஆன்மாவை "உடலின் ஈஸ்வரன்" என்கிறான் கண்ணன்.

ஊழிதோரும் உழன்று தவிக்கும் அது, சரணாகதியால் நிலை பெறுகிறது என்பது நம் பெரியவர்கள் வாக்கு.

நா.கண்ணன் 6/29/2008 06:04:00 PM

நன்றி ஜீவா!

Anonymous 6/29/2008 11:20:00 PM

//ஆனால் ஆன்மாவை என்னால் ஒரு பருட்பொருளாக எண்ணமுடியவில்லை. //
ஆன்மா கோபி. பெருவெளி கண்ணன்?

நா.கண்ணன் 6/29/2008 11:26:00 PM

//ஆன்மா கோபி. பெருவெளி கண்ணன்?//

:-)

ஆன்மாவின் சொரூப லட்சணம் பற்றிச் சொல்லும் போது அவனை "சேஷபூதன்" என்று சொல்வது வழக்கம் (தொண்டன்)

பரந்தாமன் புருஷோத்தமன். அவன் முன் நாமெல்லோரும் கோபிகைகள்.

அதுதான் ஆன்ம லட்சணம்!

குமரன் (Kumaran) 7/03/2008 02:52:00 AM

பெரும் தத்துவ விசாரணையே நடந்துவிட்டதே ஐயா. :-) நன்றாக இருந்தது.

நா.கண்ணன் 7/03/2008 07:48:00 AM

Kumaran: You are like a Honey Bee, you would certainly visit where there is honey! Thanks. BTW, congratulations on Kannan pAttu 100!