நூறாண்டு காலம் வாழ்க!

இம்முறை இந்தியா சென்றிருந்த போது நீண்ட காலமாகப் பார்க்கமலிருந்த என் சித்தியைக் கண்டு வந்தேன். அவருக்கு 90 வயதைத் தாண்டிவிட்டது. நான் உள்ளெ நுழைந்ததும் என் அண்ணி, 'சரி, நீங்க கிட்ட போய் நில்லுங்க! உங்களை அடையாளம் தெரியுதா? பார்க்கலாம்!" என்றார், "கோபி வந்திருந்தான். அவனைப் பார்த்து ஸ்ரீதர் எப்ப வந்தேன்னு கேட்டா. ஸ்ரீதர் வந்திருந்தா ரங்கனா? என்கிறாள்! நிச்சயம் உங்களை அடையாளம் தெரியாது என்றாள்"

வயதாக, வயதாக மூளையின் பரப்பில் பீடா அமிலாய்ட் எனும் வேதிமம் படிகிறது. இது ஞாபக சக்தியைக் குறைக்கிறது. Alzheimer's disease எனும் வியாதிக்கு மிக முக்கிய காரணம் "neurofibrillary tangles" எனு முடிச்சுகள் மூளையில் விழுவதாகும். நினைவு எப்படி மூளையில் படிகிறது என்பது இன்னும் புரியாத புதிர்.

ஆனால், நான் கிட்ட போய் நின்றதுதான் தாமதம், சித்தி, "கண்ணா! எப்ப வந்தே!நன்னா இருக்கியா?" என்று கேட்ட தொணி ஏதோ நாலு நாள் ஊருக்குப் போய்விட்டு வரும் குழந்தையிடம் ஒரு அன்னை கேட்கும் வாஞ்சையில் இருந்தது. ஒரு நொடியில் நானும், சித்தியும் திருப்புவனம் போய் விட்டோம். என் பள்ளிப் பருவம். சித்தி அன்புடன் நெய் தோசை வார்த்துத் தருவாள். வாழைக்காய் வதக்கல் என் சித்தியைப் போன்று வேறு யாரும் செய்ய முடியாது! எனக்காகவே செய்வாள்! எப்படி, என் அண்ணி தோற்றுப் போனாள்? எப்படி என் சித்தியால் வயதைக் கடந்தது போல், ஞாபக மறதியெனும் வியாதியையும் கடக்க முடிந்தது? இறைவனுக்குத் தான் வெளிச்சம். சித்தி 8 குழந்தைகள் பெற்று 6 குழந்தைகளைப் பறிகொடுத்தவள். எனவே அக்காவின் குழந்தைகள் (அதாவது நாங்கள்)தான் அவள் குழந்தைகள். தாயினும் சாலப் பரிந்து அன்பு செய்வாள். அவள் காலத்திய ஆயுட்காலம் முப்பதோ, நாற்பதோ! அதனால்தான் அந்தக் காலத்தில் பால்ய விவாகம் நடந்தது. 30 வயதிற்குள் பாட்டி ஆகிவிடுவார்கள். என் அம்மாவிற்குக் கல்யாணம் ஆகும் போது 16 வயது. அடுத்த வருடமே அக்கா பிறந்துவிட்டாள்.

ஆனால், வேதம் மனிதருக்கு ஆயுசு நூறு என்று சொல்கிறது. "வேத நூற் பிராயம் நூறு மனிசர்தான் புகுவர்" என்பது திருமாலை. இப்படி நூறுவயசு வாழ்ந்த பெரியவர்களுண்டு. ஸ்ரீராமானுஜர் 120 வருடங்கள் வாழ்ந்தார். அவருக்குப் பின் வந்த ஆச்சாரியர்கள் எல்லாம் சதம் போட்டவர்கள். ஆனால், அத்வைதம் உலகிற்குத் தந்த சங்கரன் அதிக நாள் வாழவில்லை. திருவாய்மொழி தந்த வள்ளல் சடகோபனோ 30 தாண்டவில்லை. நம் பாரதிகூட 39 வயதில் இறந்துவிடுகிறார். இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கூட நம் ஆயுட்காலம் 50க்கு குறைவாகவே இருந்தது.

ஆனால் அம்மை ஒழிப்பு, கொசு ஒழிப்பு என பொதுச் சுகாதாரமும், மருத்துவ வசதிகளும் கூடக்கூட மனிதர் ஆயுட்காலமும் கூடத் தொடங்கியது. சமீபத்திய ஒரு கணக்கின் படி 80,000 அமெரிக்கர் 100 வயதோ அல்லது அதற்குக் கூடுதலாகவே வாழ்வதாகத் தெரிகிறது. 2040-ல் இது 580,000 எனும் எண்ணைத் தாண்டி விடுமாம். அன்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது இந்தக் காலக்கட்டத்தில் மனிதர்கள் குறைந்தது 140 வயது வாழ்வர் என்பது உறுதி என்று சொன்னார்கள். மனித வாழ்வை இப்படிக் கூட்டிக் கொண்டே போகமுடியும் என்றே அறிவியல் சொல்கிறது.

இந்த நூற்றாண்டின் மில்லியன் டாலர் ஆராய்ச்சி, "நமக்கு ஏன் வயதாகிறது" என்பதுதான்! யயாதி போல் பிள்ளையிடன் வயதை இனிமேல் கடன் வாங்க வேண்டி வராது என்று தோன்றுகிறது. எல்லோரும் ஆரோக்கியமாக இன்ப, துன்பங்களை நீண்ட காலம் சுகிக்கலாம். இதனால்தான் வேலை ஓய்வு வயதை ஜெர்மனியில் 60 லிருந்து 65க்கு தள்ளிப் போட்டுள்ளார்கள். இது 70 ஆகலாம். ஓய்வு பெற்ற பின்னும் நீண்ட ஆயுள் உறுதி. இதனால் அங்கெல்லாம் 40 வயதுக்காரரை 'என்ன இளைஞரே' என்று அழைப்பதுண்டு. ஆனால் நம்ம ஊரிலோ கல்யாணமாகி ஒரு குழந்தை பெற்றுவிட்டாள் அவள், "மாமியாகி", நாற்பது வயதைத் தாண்டியவுடன் 'பாட்டி' ஆகிவிடுகிறாள். வயதானவர்கள், 'கிருஷ்ணா! ராமா! என்று பஜனை செய்யத்தான் லாயக்கு' என்று நாம் நம்புகிறோம். இந்த மனோநிலை மாற வேண்டும். ஓய்வு பெற்ற அறிஞர்களை ஊக்குவித்து பல நல்ல காரியங்கள் செய்ய அழைக்கலாம். உதாரணமாக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களெல்லாம், தாங்கள் கற்ற கல்வியை ஒலிக்கோப்புகளாத் தரவிழையலாம். அவைகளை எண்ம வடிவில் சேமித்து பொதுச் சேவைக்கு வழங்கலாம். உ.ம், மண்ணின் குரல் இயக்கம்.

ஞாபக மறதி வராமல் காக்க சில எளிய பயிற்சிகள் செய்யலாம். உதாரணமாக, வலது கைக்காரர்கள் இடது கையால் பல் விளக்கலாம். இது புதிய பயிற்சி என்பதால் மூளை உடனே புதிய நரம்புச் சேர்க்கைகளை உருவாக்குகிறது. அடுத்து, கண்ணை மூடிக்கொண்டு நுகரலாம். கண்ணை மூடியவுடனேயே ஒரு புதிய உலகம் நம் உணர்விற்கு முன் வருகிறது. தூங்கும் போதுதான் கண்ணை மூடுவேன் எனும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சிகரெட் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். யோகாசனம் பயிலலாம். ஏனெனில் யோகத்தில் உடலின் சமன்சீர்பாடு முக்கியப்படுகிறது. காய்,கனிகள் அதிகம் உண்ணலாம். இனிப்பைக் குறைத்து, எண்ணெய் பதார்த்தங்களைக் குறைத்து, நொறுக்குத் தீனியைக் குறைத்து...அதாவது எதெல்லாம் வாய்க்கு ருசியாக இருக்கிறதோ அதிலெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று பொருள். பிரச்சனை இல்லாத பொருட்கள்: நெல்லிக்கனி, எலுமிச்சை, திராட்சை, வெங்காயம், தக்காளி, காரெட், அவகாடோ, கீரை போன்றவை. இவைகளைக் கூடுதலாக சாப்பிட்டுப் பழக வேண்டும். பொதுவாக இந்தியர்கள் இவ்வகை உணவுகளை என்றோ அடையாளம் கண்டு பயன்படுத்தி வந்தனர். இப்போ எல்லோரும் பிட்சாவிற்கும், ஹேம்பர்க்கருக்கும் மாறிவிட்டதால் பழைய சாப்பாட்டுமுறை மறக்கப்பட்டுவிட்டது. அகத்திக்கீரை, முருங்கக்கீரை, பாசிப்பருப்பு போன்றவை குடல் புண்களை ஆற்ற வல்லவை. என்ன..மீண்டும் பாட்டி சொல் மிக்க மந்திரமில்லை! என்று மாற வேண்டியதுதான்.

அடுத்த நூற்றாண்டில் எல்லோரும் சதம் போட்டால் சூழலுக்கு என்ன ஆவது? ஒரு ஆயுட்காலத்தில் நாம் கபளீகரம் பண்ணும் உணவு, செய்யும் சூழல் தீங்கு இவைகளை நினைத்தால் நீண்ட ஆயுள் தேவைதானா? என்றிருக்கிறது. இந்தியத் தத்துவங்களெல்லாம் 'இனியொரு பிறவி வேண்டாம்' என்று மன்றாடுகின்றன. வைணவத்தில் உடல் என்பதையே பாம்பு போல் காண் என்கிறார்கள். இது விட்டால் தேவலை என்று இருக்க வேண்டுமாம். இந்த நோக்கிலும் பொருள் இருக்கிறது. ஆயுள் கூடக் கூட சுக போகங்களில்தான் மனது போகிறது. அதற்கு காசு வேண்டியிருக்கிறது. அதனால் சூழல் பாதிப்பு இருக்கிறது.

பாதிப்பேருக்கு எதுக்கு வாழ்கிறோம்? என்றே புரிவதில்லை. வாழ்விற்கு அர்த்தம் சொல்ல வந்தவைதான் சமயங்கள். அவைகளுள் இக்கேள்விக்கான பதிலிருக்கலாம். கண்டு பிடிக்க வேண்டும்.

நல் வாழ்வு வாழ்ந்து, நமக்கும், பிறருக்கும் பயனளிப்பதாக நம் வாழ்வு அமையும் போது, அமைத்துக் கொள்ளும் போது, "இன்னுமோர் நூற்றாண்டு இரும்!" என வாழ்த்துவதில் தவறில்லை.

உபரி வாசிப்பிற்கு:

114-Year-Old Man Takes Longevity Keys to the Grave

Toward Immortality: The Social Burden of Longer Lives

115-year-old Woman's Brain in Tip-Top Shape

2 பின்னூட்டங்கள்:

Anonymous 6/12/2008 08:57:00 PM

அரிய விஷயம் எழுதியிருக்கிறீர்கள். இப்படி ஒன்று எங்கோ படித்தேன்: "We work hard to keep ourself healthy so that we can live our lives bedridden for an extra twenty years."

"அதாவது எதெல்லாம் வாய்க்கு ருசியாக இருக்கிறதோ அதிலெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்று பொருள்."

இதை நான் பலமுறை யோசித்ததுண்டு. உடலுக்குத் தீமையான பொருள்களை தின்னும்படி நம் உணர்வு உந்துவது ஏன்? பரிணாம வளர்ச்சி விதிகளுக்கு எதிராகவல்லவா இருக்கிறது?

"பிரச்சனை இல்லாத பொருட்கள்: நெல்லிக்கனி, எலுமிச்சை, திராட்சை, வெங்காயம், தக்காளி, காரெட், அவகாடோ"

நோயிருந்தால் தள்ளி வைக்கும்படி சித்த வைத்தியம் சொல்லும் உணவுகளில் தக்காளி இருக்கிறது என்று நினைக்கிறேன். இனிப்புநீர் வியாதிக்காரரகளுக்கு திராட்சை ஆகாது என்றும் சொல்லுகிறார்கள்.

ரெ.கா.

நா.கண்ணன் 6/12/2008 09:03:00 PM

அன்பின் ரெ.கா: எதையுமே பொதுமைப் படுத்த முற்படும் போது விதி விலக்குகள் வந்து விடுகின்றன. எனவே எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளும் சில உணவு சிலருக்கு அலர்ஜியாகப் போய்விடலாம். தக்காளி அந்த வகை!

நாவிற்கு ருசியாக உணவுப் பதார்த்தங்களை மனிதன் செயற்கையாக உருவாக்குகிறான். உதாரணமாக விலங்குகள் இறைச்சியை உண்ணுகின்றன. ஆனால் மனிதன் அதை வாட்டி (கிரில்) உண்கிறான். வாட்டும் போது புற்றுநோய் காரணிகள் புகுந்து விடுகின்றன. அதே போல் எண்ணையில் பொரித்து உண்ணும் உணவுகள், ஒரிஜினல் நெய் மிட்டாய் போன்றவை செயற்கையானவை. இதுதான் பிரச்சனையை உருவாக்குகிறது. இது பரிணாம விதிக்குள் அடங்காது தானே?